முதல் பார்வை: வெள்ளைப்பூக்கள்

By உதிரன்

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிராக உரக்கப் பேசும் படமே 'வெள்ளைப்பூக்கள்'.

ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான விவேக் அமெரிக்காவில் இருக்கும் மகனுடன் ஓய்வுக்காலத்தைக் கழிக்க அங்கு செல்கிறார்.  மக்கள் நடமாட்டமே இல்லாத அமைதி சூழ் உலகு அவருக்குப் புதிதாக இருக்கிறது. மகன் தேவ் உடன் பேசும் விவேக் மருமகள் பெய்ஜி ஹெண்டர்சனுடன் பேசாமல் தன் வேலையை மட்டும் பார்க்கிறார். அமெரிக்காவில் இருக்கும் மற்றொரு தமிழரான சார்லியின் அறிமுகப் படலத்துக்குப் பிறகு அவரும் விவேக்கும் சகஜமாகப் பழகி அமெரிக்காவில் இஷ்டம் போல் உலா வருகிறார்கள்.

இந்நிலையில் திடீரென்று விவேக்கின் பக்கத்து வீட்டுப் பெண் மோனா கடத்தப்படுகிறாள். அதற்கடுத்த சில நாட்களில் கார்லோஸ் என்ற பள்ளிச் சிறுவன் கடத்தப்படுகிறான். இந்தக் கடத்தலுக்கு யார் காரணம் என்று கண்டுபிடிப்பதற்கு முன் அடுத்த பெரிய அசம்பாவிதம் நடக்கிறது. இதனால் அதிர்ச்சியின் எல்லைக்கே செல்லும் விவேக் தகப்பனாகவும், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியாகவும் குற்றம் நடந்தது எப்படி? ஏன்? யாரால்? என்பதைக் கண்டுபிடிக்கிறார்.

'வெள்ளைப்பூக்கள்' படத்தின் மூலம் அட்டகாசமான வருகையை உறுதிப்படுத்தியுள்ளார் இயக்குநர் விவேக் இளங்கோவன்.  ஒரு க்ரைம் த்ரில்லர் படத்துக்குரிய சிறப்பான அம்சங்களில் திரைக்கதையை உருவாக்கி ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

காமெடியாகப் பார்த்தே பழக்கப்பட்ட விவேக் இதில் கதையின் நாயகன்.  'நான் தான் பாலா', 'எழுமின்' உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக விவேக் நடித்திருந்தாலும் 32 வருட சினிமா கெரியரில் அவருக்குப் பேர் சொல்லி பெருமையைத் தேடித் தரும் படமாக 'வெள்ளைப்பூக்கள் இருக்கும்'. 

ஒரு வீட்டில் பெற்றோரைக் கொன்று, சிறுமியைப் பாலியல் வன்முறை செய்து கழுத்தை நெரித்துக் கொன்ற கொலையாளியைக் கண்டுபிடிக்கும் காவல்துறை அதிகாரியாக அறிமுகமாகும் போது ஒரு ஜெர்க்கை ஏற்படுத்துகிறார். தந்தையாக கலங்கும்போதும், போலீஸ் மூளையை வைத்து தனக்குள் கேள்வி கேட்டு விடைகளைத் தேடிப் புறப்படும்போதும் விவேக்குள் இருக்கும் நடிகனைக் கண்டுகொள்ள முடிகிறது.

சார்லி மிகச்சிறந்த உறுதுணைக் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.  விவேக்கின் மகன் அஜய் கதாபாத்திரத்தில் தேவ், கதாபாத்திரத்தின் தேவை அறிந்து யதார்த்தமாக நடித்துள்ளார். பூஜா தேவரியாவுக்குப் படத்தில் முக்கியத்துவம் இல்லை. பெய்ஜி ஹெண்டர்சன் தன் இருப்பைப் பதிவு செய்கிறார்.

ஜெரால்டு பீட்டரின் கேமரா இதுவரை பார்க்காத அமெரிக்காவையும், சியட்டல் நகரின் அழகையும் கண்களுக்குள் கடத்துகிறது. ராமகோபால் கிருஷ்ணராஜின் பின்னணி இசை கதைக்களத்துக்கு வலுவூட்டும் அம்சம்.  பிரவீன் கே.எல். விவேக்- சார்லி உரையாடலில் மட்டும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.

அமெரிக்க வாழ் மக்களுக்கு மத்தியில் தன்னுடைய நாளை எப்படிக் கழிப்பது என்ற சிந்தனையில் விவேக் நாட்களை நகர்த்துகிறார். ஆனால், அது படத்தின் ஆதாரப் பிரச்சினை அல்ல.  அடுத்தடுத்து நடக்கும் கடத்தல், கொலை மட்டுமே படத்தின் மையம். அந்த மையத்தைத் தொட்ட பிறகும் படம் கொஞ்சம் நிதான கதியில் செல்வது ஏன் என்று தெரியவில்லை. கடத்தப்பட்ட கார்லோஸ் என்ன ஆனார் என்பதும் தெரியவில்லை.  ஆனால், இவை படத்துக்கு எந்த விதத்திலும் பாதகமாக அமையவில்லை.

குற்றம் எப்படி நடந்தது? ஏன் நடந்தது? என்பதைக் கண்டுபிடித்தால் அது யாரால் நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியும் என்று செல்லும் புலனாய்வுப் பாணி சுவாரஸ்யம் சேர்க்கிறது. துணைக் கதையை சொன்ன விதமும், அதன் திரைக்கதை உத்தியும் அபாரம். இந்த இரண்டு அம்சங்களே படத்தைத் தாங்கிப் பிடிக்கின்றன.

மலரும் மொட்டுகளை அழித்துவிடாதீர்கள். குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தவிர்க்க 'வெள்ளைப்பூக்கள்' சுதந்திரமாய் பூக்கட்டும் என்று சமூக அக்கறையுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் விவேக் இளங்கோவன். நல்ல தரமான சினிமா பார்க்க நினைப்பவர்களும், வித்தியாசமான அனுபவத்துக்குத் தயாராக இருப்பவர்களும் வெள்ளைப்பூக்களை மலரச் செய்ய திரையரங்கு செல்லலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்