ஷங்கருக்கு மிஷ்கின் வழங்கிய 25 பரிசு; மணிரத்னம் காலில் விழுந்து அழுத மோகன் ராஜா: ஷங்கர் 25 விழாவில் நடந்த சுவாரஸ்யங்கள்

By ஸ்கிரீனன்

ஷங்கர் திரையுலகுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதையொட்டி, மிஷ்கின் நடத்திய விழாவில் நடைபெற்ற சம்பவங்களை இயக்குநர் வசந்தபாலன் வெளியிட்டுள்ளார்.

திரையுலகில் இயக்குநராக ஷங்கர் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனைக் கொண்டாடும் வகையில் இயக்குநர் மிஷ்கின் தன் வீட்டில் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். அதில் மணிரத்னம், வசந்தபாலன், பாலாஜி சக்திவேல், லிங்குசாமி, கெளதம் மேனன், பாண்டிராஜ் உள்ளிட்ட தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வு குறித்து, எந்தவொரு தகவலுமே இதுவரை வெளியாகவில்லை. முதன்முறையாக இந்த விழாவில் என்ன நடந்தது என்பதை இயக்குநர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வசந்தபாலன் தெரிவித்திருப்பதாவது:

''போன வருடம் எங்கள் குரு இயக்குநர் ஷங்கரின் 25-வது ஆண்டு வெற்றி திரைப்பயணத்தை அவரின் உதவி இயக்குநர்கள் அனைவரும் கொண்டாடினோம். அது போல இயக்குநர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்று இயக்குநர் லிங்குசாமி விரும்ப…இயக்குநர் மிஷ்கினுடன் மேலும் பல இயக்குநர்களும் இணைந்து இந்த விழாவை நடத்தத் தயாரானார்கள்.

கடந்த ஏப்ரல் 20-ம் தேதி இரவு மிஷ்கினின் அலுவலகத்தில் மாலை 6.30 மணிக்கு கேக் வெட்டி விழா தொடங்கியது.மிஷ்கினின் அலுவலகமே ஒரு சினிமா கவிதை. அதற்குள் இயக்குநர்கள் பாக்யராஜ் சார்,மணிரத்னம் சார்,பார்த்திபன் சார், கௌதம், ரஞ்சித், பாண்டிராஜ், சசி, பாலாஜி சக்திவேல்,மோகன் ராஜா, அட்லி, ராம், மாரி செல்வராஜ், எழில் நான் உட்பட இன்னும் பல இயக்குநர்கள் சூழ அந்த மரகத இரவைக் கொண்டாடினோம்.

உலக இயக்குநர்களின் புகைப்படங்களும் உலக இலக்கியங்களும் சூழ்ந்துள்ள ஒரு சின்ன அறையில் இசையும் பாடல்களும் நிறைந்து வழிந்தது. ஒவ்வொரு இயக்குநரும் மணி சாரை வணங்கி ஷங்கர் சாரைப் புகழ என அந்த இடம் கந்தர்வ வனமானது. கௌதம் இளையராஜாவின் பாடலை பாடத் தொடங்க மிஷ்கின்,லிங்குசாமி, பாண்டிராஜ் நடனமாட மொத்த இடமும் இசையில் கொந்தளித்தது.

மணி சாரை மோகன் ராஜா கட்டிப்பிடித்துக் காலில் விழுந்து கண்ணீர் விட்டு அழ….என்னவென்று சொல்வது பள்ளித்தோழர்களின் ரீ-யூனியன் போல ஆனது. மிஷ்கின் ஷங்கர் சாரை உட்கார வைத்து 25 வருடங்களைப் போற்றும் வகையில் 25 விதமான கிஃப்ட்களை வழங்கினார். கிஃப்ட் கவரைப் பிரிப்பதற்கு முன்பு அது என்னவிதமான கிஃப்ட் என்று கண்டுபிடித்தால் 2000 ரூபாய் பரிசு.

பாண்டிராஜ் ஒரு பரிசை அடையாளம் கண்டு 2000 ரூபாய் பரிசு பெற்றார். ஷங்கர் சார் “என்ன உட்கார வெச்சு மணப்பெண் போன்று நலுங்கு பண்றியே மிஷ்கின்” என்று வெட்கத்தில் சொல்ல கூட்டம் சிரித்து மகிழ்ந்தது. 26-வது கிஃப்ட் என்ன என்று மிஷ்கின்  கேட்க கூட்டம் பலவாறு பதில்களை கூறியது. மிஷ்கின் “ஷங்கர் சாரை முத்தமிடுவது” என்று கூற கூட்டம் இன்னும் அன்பில் உருகியது. அனைத்து இயக்குநர்களும் ஷங்கர் சாரை வணங்கி இறுகத் தழுவி முத்தமிட்டனர். இறுதியாக மணி சார் ஷங்கர் சாரை கட்டித்தழுவி முத்தமிட்டார்.

எத்தனை கோடிகளும் தர முடியாத தருணம். எத்தனை கோடி கண் வேண்டும் அதைக் காண……

ஷங்கர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் 

இயக்குநர் என்றவன் யார் ?

அவனுக்கு என்ன சக்தியிருக்கிறது என்பதை மணி சார் வார்த்தைகளில் கேட்க மகுடிக்கு மயங்கி அத்தனை இயக்குநர்களும் அவர் காலில் விழுந்தோம். ’நாயகன்’ எப்படி எடுத்தேன் . ’அக்னி நட்சத்திரம்’ முதல் கடல் எப்படி எடுத்தேன் என்ற தேவ ரகசியத்தை பிரம்ம முகூர்த்தத்தில் என்னிடமும் ராமிடமும்  பகிர்ந்து கொண்டார்.

ஆகா இறைவன் வரம் தந்தது போன்று இருந்தது.

யார் தருவார் இந்த கணத்தை இந்தத் தருணத்தை

ஆகா ஆகா நான் இருப்பது சொர்க்கத்திலா என்று என்னை நான் கிள்ளிக்கொண்டேன்.

இந்த இடத்தில் இயக்குநர் சிகரம் பாலசந்தர் சார், பாலு மகேந்திரா சார், பாரதிராஜா சார், மகேந்திரன் சார் இல்லை அதான் ஒரு குறை என்று மணி சொல்ல அந்த அத்தனைப் பேரையும் சேர்த்து தான் சார் நீங்க என்று நான் சொல்ல லிங்கு என்னை முத்தமிட்டான்.

இறுதியில் ஷங்கர் சார் ஏற்புரை வழங்கினார்.

பாலசந்தர் ஷாரின் 100 படங்களுக்கு முன், இயக்குநர் மணி சாரின் சாதனைகளுக்கு முன்பு, இந்த சாதனையெல்லாம் ஒன்றுமில்லை. இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

உங்கள் அத்தனை பேரின் அன்பிற்கு இணையாக வேறு எதுவுமில்லை என்று கூறினார். அரங்கமெங்கும் அன்பின் நட்பின் நதி ஓடிக்கொண்டிருந்தது. யாருக்குதான் பெரிய இயக்குநர் என்ற எந்த கர்வமில்லை. அனைவரும் பள்ளிச் சிறுவர்களாக தங்கள் ஆசிரியரைப் பார்ப்பதைப் போல இயக்குநர் மணி சாரையும் ஷங்கர் சாரையும் வணங்கிவண்ணம் இருந்தனர். அது தான் பேரின்பம் பெரும் தருணம்.

விடிய விடிய இசையும் பாட்டும் தொடர்ந்தது. வாழ்நாள் முழுக்க யாரும் மறக்கமுடியா இரவு. உன்னதமான நாள்''.

இவ்வாறு வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்