அப்பவே அப்படி கதை
அப்பாவைக் கொன்றவர்களைப் பழிவாங்குகிற மகனின் கதை, வருடத்துக்கு ஐம்பது படங்களாவது வந்துவிடும். நேர்மையான போலீஸ் அதிகாரியை, வில்லன் கொன்றுபோடுகிற படங்கள், வருடத்துக்கு நாற்பதாவது ரிலீசாகின்றன. இந்த சகோதரர் செய்த கொலைகளையெல்லாம் அந்த சகோதரர் செய்தார் என்று மாட்டிக்கொள்கிற கதைகள், முப்பதுக்கும் மேற்பட்ட படங்கள் வந்துவிடுகின்றன. இரண்டு சகோதரர்களும் ஒருவரையொருவர் தெரிந்துகொண்டு, இணைந்து பழிவாங்குகிற சினிமாக்கள், ஆண்டுதோறும் இருபதாவது வெளியிடப்படுகின்றன. ஆனால், இதிலெல்லாம் பக்கம்பக்கமான வசனங்கள் இருக்கும். ‘ஆய் ஊய்’ என்று தொடைதட்டிப் பேசுகிற சவால்கள் இருக்கும். கத்தி இருக்கும். ரத்தம் தெறிக்கும். வன்முறை பாயும். இவையேதும் இல்லாத, ஆனால் அப்பாவைக் கொன்றவர்களைப் பழிவாங்குகிற கதையைச் சொன்னவிதத்திலும் அதற்கு எடுத்துக்கொண்ட பகீரத விஸ்வரூபத்திலும் தனித்துத் தெரிகிறார்கள் ‘அபூர்வ சகோதரர்கள்’.
இன்ஸ்பெக்டர் சேதுபதி நேர்மை ப்ளஸ் கறார்க்காரர். தர்மராஜ், சத்தியமூர்த்தி, நல்லசிவம், பிரான்சிஸ் அன்பரசு நால்வரும் கூட்டாகச் சேர்ந்து கெட்டதெல்லாம் பண்ணுகிறவர்கள். அவர்களைத் தூக்கி உள்ளேபோடுகிறார் சேதுபதி. வெளியே வந்தவர்கள், சேதுபதியைக் கொல்லுகிறார்கள். அவரின் மனைவிக்கு விஷம் கொடுக்கிறார்கள். கர்ப்பிணியான அவர் மனைவி தப்பிக்கிறார். அவருக்கு குடிசையில் உள்ள பெண்மணி அடைக்கலம் கொடுக்கிறார்கள். அங்கே குழந்தை பிறக்கிறது. குழந்தைகள் பிறக்கின்றன. இரட்டைக்குழந்தைகள்.
அந்தக் கும்பல் மீண்டும் துரத்துகிறது. அதில் ஒரு குழந்தையுடன் தப்பிக்கிறார் அம்மா. இன்னொரு குழந்தை காப்பாற்றிய அந்தப் பெண்ணிடம். இரட்டையர்கள், பிரிந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக வளர்கிறார்கள். இவர்களில் அம்மாவிடம் வளருபவன் கொஞ்சம் குள்ளம். ஜெமினி சர்க்கஸில் பஃபூன். பெயர் அப்பு. அங்கே வளர்ப்பு அம்மாவிடம் வளருபவன் ராஜா. கார் மெக்கானிக்.
உற்சாகமும் கொண்டாட்டமுமாக பொழுதுகள் கழிகின்றன. ‘எல்’ போர்டு காரில் வந்து ராஜாவின் காரை இடிக்கிறார். இந்த இடிதடியில்தான் பிறக்கிறது காதல். சர்க்கஸ் ஓணரின் மகள் படிப்பு முடிந்து வருகிறார். படிப்புடன் அங்கே காதலும் வளர்ந்திருக்கிறது. அப்பா எதிர்ப்பார் என்று தெரிந்து, பதிவுத்திருமணம் செய்ய முடிவு எடுக்கிறார். அதற்கு அப்புவை நாடுகிறார். அவரோ, தனக்கும் அவளுக்கும் திருமணம் என நினைத்து, காதல் வளர்க்கிறார்.
ஆனால், சாட்சிக் கையெழுத்துக்கு மட்டுமே எனத் தெரிகிறது. உடைந்து போகிறார். ‘மாப்பிள்ளை என்ன... என் புள்ள மாதிரி குள்ளமா?’ என்கிறார் அப்புவின் அம்மா. இன்னும் நொறுங்கிப்போகிறார். தற்கொலை செய்துகொள்ள முனைகிற அப்புவை அம்மா காப்பாற்றி, அப்பாவை நாலுபேர் கொன்றதையும் விஷம் கொடுத்ததையும் விஷம் குடித்ததால், குள்ளமாகிவிட்டதையும் சொல்ல... அங்கே விழித்துக்கொள்கிறார் அப்பு. அப்பாவைக் கொன்றவர்கள் யார் என்பதை அறிகிறார். அவர்களை ஒவ்வொருவராக வித்தியாசமான முறையில் கொல்லுகிறார்.
இவையெல்லாம் மெக்கானிக் ராஜா மீது சந்தேகம் கொள்ளவைக்கிறார். போலீஸ்... ராஜாவைத் துரத்திக்கொண்டே இருக்கிறது. ஒருகட்டத்தில், அம்மாவும் வளர்ப்பு அம்மாவும் சந்திக்கிறார்கள். இரட்டையர்களும் சந்திக்கிறார்கள். எல்லா விவரமும் அறிந்து, மிச்சசொச்ச வில்லனைப் பழிவாங்குகிறார்கள். இதுதான் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் கதை.
‘அல்வா’ என்று சொன்னால் தித்திக்குமா? ‘ஜிகர்தண்டா’ என்று பேப்பரில் எழுதிப்பார்த்தால், ஜில்லுணர்வு கிடைத்துவிடுமா? அப்படித்தான் இதுவும். கதையைச் சொல்லும்போது ‘என்ன பெருசா...’ என்று நினைக்கலாம். படமாகப் பார்க்கும் போது அல்லாவின் சுவையும் ஜிகர்தண்டாவின் குளுமையும் கிடைக்கப்பெறுவோம்.
அப்பா சேதுபதி ஒரு கமல். மெக்கானிக் ராஜா ஒரு கமல். குள்ள அப்பு ஒரு கமல். நாசர், டெல்லிகணேஷ், ஜெய்சங்கர், நாகேஷ் இவர்கள்தான் வில்லன்கள். அம்மா ஸ்ரீவித்யா. வளர்ப்பு அம்மா மனோரமா. கமலுக்கு ஜெய்சங்கர் மகள் கெளதமிதான் காதலி. சர்க்கஸ் முதலாளியின் மகள் ரூபினி. அவரைத் திருமணம் செய்துகொள்பவர் ஆனந்த். மெக்கானிக் ராஜாவைத் துரத்தும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜனகராஜ். அவரின் உதவியாளர் ஆர்.எஸ்.சிவாஜி. அவ்வளவுதான் கதாபாத்திரங்கள்.
குள்ள அப்புவும் குள்ள அப்பு ஒவ்வொருவரையும் கொல்லுவதும்தான் சுவாரஸ்யம். கதை என்னவோ பழிவாங்குகிற கதைதான். ஆனால், படம் முழுக்க வலிக்கச் சிரிக்கச் சொல்லியிருப்பார்கள். வார்த்தைகளில் ரவுசு பண்ணும் கிரேஸி மோகனை இந்தப் படத்தின் மூலமாகத்தான் திரையுலகிற்குக் கொண்டுவந்தார் கமல். படம் நெடுக வசனங்கள், காட்சிகள் என கைத்தட்டல்களை அள்ளிக்கொண்டே இருக்கும். கால்களை அப்படி இப்படிச் செய்து குள்ளம் போல் காட்டினாலும் கைகள், உள்ளங்கை நெல்லியெனத் தெரியும் என்பதற்காக, குள்ள அப்பு, கையில் கழி ஒன்று வைத்திருப்பார். மடக்கியபடியே கைகளை வைத்திருப்பார். அவருடைய பற்கள் முதற்கொண்டு, வளர்ச்சியற்றதைக் குறிப்பதாகவே அமைக்கப்பட்டிருக்கும். அதேபோல் மெக்கானிக் ராஜா கமலின் ராஜ்கபூர் மீசை, ரொம்பவே ஈர்த்தது.
‘இவர்தான் என் கூடப் படிச்சார்’
‘பின்னே நீ ஏன் குறைச்சலாப் படிச்சே’
******
‘கபடநாடகவேடதாரி’
‘இத்துணூண்டு உடம்பிலேருந்து எவ்ளோ பெரிய வார்த்தை’
***************************
‘நான் பாத்து வளர்ந்த பொண்ணுடா’
‘அப்புறம் நீ பாத்து நான் மட்டும் ஏன் வரலை’
***********************
‘மீட்டருக்கு மேல போட்டுக்கொடுங்க சார்’
‘யோவ்... நானே மீட்டருக்குக் கீழேதான்யா’
***********************
‘முளைச்சு மூணு இலை விடல.’
‘இன்னும் நான் முளைக்கவே இல்லப்பா’
*****************************
‘வயசு என்ன?’
‘27’
‘எது... அந்த 26க்குப் பிறகு வருமே அந்த இருபத்தி ஏழா?’
‘பேரு என்ன?’
‘அப்பு’
‘அதுவும் அரைகுறைதானே’
************************
இப்படி படம் நெடுக வார்த்தை (ஜால) விளையாட்டுகள்தான். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்த படம் ‘அபூர்வ சகோதரர்கள்’. இதில் ‘அபூர்வ’ என்பது சிறிய அளவிலும் ’சகோதரர்கள்’ என்பதும் பெரிதாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த ‘அபூர்வ’தான், படத்துக்குப் பெரிய பலம். கதை, திரைக்கதையில் பஞ்சு அருணாசலத்தின் உழைப்பு அளப்பரியது. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு. பாடல்கள் வாலி எழுதியிருந்தார். சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கியிருந்தார். இளையராஜாதான் இசை. எல்லாப் பாடல்களுமே சூப்பர் ஹிட்.
குள்ள அப்புவுக்கு வில்லன்களைக் கொல்லும் பெரிய வேலை. அதேபோல், ‘உன்ன நினைச்சேன் பாட்டுப் படிச்சேன்’ என்ற சோகப்பாடல். கூடவே ‘புதுமாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா’ பாடல். ‘ராஜா கைய வைச்சா ராங்கா போனதில்ல’, ‘வாழ வைக்கும் காதலுக்கு ஜே’, ‘அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ’ என்று எல்லாப் பாடல்களும் தெறிக்கவிட்டன.
சென்னை பாஷையில் வூடுகட்டும் கலைஞர்களில், கமலும் ஒருவர். சட்டம் என் கையில், சவால் போல இதிலும் மெட்ராஸ் பாஷையில் மெக்கானிக் ராஜா கமல் டாப்கியர் போட்டிருப்பார்.
’தர்ம’ராஜ், ’சத்திய’மூர்த்தி, ’நல்ல’சிவம், பிரான்சிஸ் ’அன்பரசு’ என வில்லன்களுக்குப் பெயர் வைத்திருப்பார் கமல். நான்கு வில்லன்களில் மெயின் வில்லன் நாகேஷ். இந்தப் படத்துக்குப் பிறகுதான், மீண்டும் பிஸியானார் நாகேஷ். இதில்தான் சந்தானபாரதியின் தம்பி ஆர்.எஸ்.சிவாஜி, நன்றாக அடையாளம் காணப்பட்டார். ஜனகராஜின் மாஸ்டர்பீஸ் ரோல்களில் இதுவும் ஒன்று.
நுணுக்கி நுணுக்கி கதையை திரைக்கதையாக்கியிருப்பார் கமல். படத்தைத் தூக்கிச் சுமக்கிறவர் குள்ள அப்புதான். படம் பார்த்துவிட்டு வெளியே வந்தவர்களிடம், படம் பார்த்தவர்களிடம், ‘படம் எப்படி இருக்கு’, ‘படம் போரடிக்குதா’, ‘பாட்டெல்லாம் நல்லாப் பண்ணிருக்காங்களா?’, ‘ஆக்டிங் ஃபைட்டிங்லாம் சூப்பரா இருக்கா?’ என்று கேட்கப் பல கேள்விகள் இருக்கும். ஆனால் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வந்தவர்களிடம், ‘கமல் எப்படிப்பா குள்ளமா நடிச்சாரு?’ ‘கேமிரா டிரிக்கா? ஒரு சீன்லதான் அப்படி வருவாரா?’ என்றெல்லாம் அப்பு குறித்த கேள்விகளே ஆயிரக்கணக்கில் இருந்தன. அந்த அத்தனைக் கேள்விகள் இன்று வரை கேள்விகளாகவே இருக்கின்றன என்பதுதான் ஆச்சரியம்.
‘அபூர்வ சகோதரர்கள்’, வெள்ளிவிழா கண்டு வசூலை வாரிக்குவித்தது. இன்றைய இளம் ரசிகர்களுக்கு வெள்ளி விழா என்றால் தெரியாது. அதாவது 175 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி, 200 நாட்களையும் கடந்து ஓடியது. அதுவும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடியது.
’அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் கதை முதலில் வேறுமாதிரியாக திரைக்கதையாக்கப்பட்டிருந்தது. அதில் மனோரமாவுக்கு பதிலாக காந்திமதி நடித்திருந்தார். படம் எடுத்த சில ஆயிரம் அடியில் நிறுத்தப்பட்டு, ‘இது சரிப்படாது’ என்று முடிவு செய்த கமல், பஞ்சு அருணாசலத்தின் உதவியை நாடினார். கதைக்கு பட்டி, டிங்கரிங்கெல்லாம் பார்த்துக் கொடுத்தார் பஞ்சு. படம் வெளியாகி, வெற்றிகரமாக 75 நாளைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் போது, காந்திமதியும் கமலும் ஆடிப்பாடும் ‘உங்க அம்மாவோட காலைத் தொட்டுக் கும்பிடணும் டோய்’ என்கிற பாடல், இடைவேளையில் ஒளிபரப்பப்பட்டது. இதற்காகவும் கூட்டம் எகிறியடித்து வந்தது.
1989ம் ஆண்டு, ஏப்ரல் 14ம் தேதி ரிலீசான ‘அபூர்வசகோதரர்கள்’ படத்தை குடும்பத்துடன், குழந்தைகளுடன், நண்பர்களுடன் என்றெல்லாம் கூட்டம்கூட்டமாக வந்து பார்த்தார்கள். இதோ... படம் வெளியாகி இன்றுடன் 30 வருடங்களாகிவிட்டன.
இன்னும் அனுமானங்களாகவும் யூகங்களாகவுமே இருக்கின்றன அப்புவின் ரகசியங்கள். அப்பு தி கிரேட்!
அப்புவுக்கும் அப்புவுடன் உழைத்த அனைத்துக் கலைஞர்களுக்கும் ரெட்கார்பெட் வரவேற்பு. ரகசியம் காத்த யூனிட்டாருக்கு கம்பீரமான ராயல் சல்யூட்!
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago