பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: மாணவர்கள், பெற்றோர்களுக்கு இயக்குநர் அமீர் வேண்டுகோள்

By ஸ்கிரீனன்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரவுள்ள சூழலில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இயக்குநர் அமீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (ஏப்ரல் 19) காலை 9.30 மணிக்கு வெளியாகவுள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in இணையதளங்களில் இருந்து அறியலாம். இதுதவிர பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமும், பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு குறுந் தகவல் மூலமும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படவுள்ளன.

இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் குறித்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார் இயக்குநர் அமீர்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பேசியிருப்பதாவது:

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமையவும் வாழ்த்துகள். அதே சமயம், இந்தத் தேர்வில் தோல்வியடைந்திருந்தாலோ, அல்லது எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காவோ யாரும் தவறான முடிவை எடுக்கக் கூடாது.

வாழ்க்கையில் உங்கள் எதிர்காலத்தை முடிவு செய்ய கல்வி ஒரு காரணியாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆனால், அதே நேரத்தில் கல்வி மட்டுமே உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியும் என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால் இந்த சமூகத்தில் வெற்றியடைந்தவர்கள், பிரபலமானவர்கள், சாதனையாளர்கள் அனைவருமே தங்களுடைய வாழ்க்கையில் கல்வியை முழுமையாக முடித்தவர்கள் என்று சொல்ல முடியாது.

வேறு ஏதோ ஒரு திறமையின் மூலம் இந்த சமூகத்தில் உங்களை வந்து சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அது போலவே, உங்களிடமும் வேறு யாரும் எதிர்பார்க்காத ஒரு திறமை ஒளிந்திருக்கலாம். அந்த திறமையின் மூலம் இந்தச் சமூகத்தில் மிகப்பெரிய சாதனையைக் கூடச் செய்யலாம். இந்தத் தேர்வு ஒரு பின்னடைவை கொடுத்துவிட்டது என்று எந்த தவறான முடிவையும் எடுத்துவிடாதீர்கள். பயந்துவிடாதீர்கள், வாழ்க்கையே போய்விட்டது என்று பதட்டமடையாதீர்கள். எதுவும் உங்களை விட்டு போகவில்லை என்பதுதான் நிதர்சனம்.

பெற்றோர்களுக்கும் ஒரு வேண்டுகோள். பிள்ளைகள் தோல்வியை தழுவ விட்டார்கள், மார்க் குறைவாக வாங்கிவிட்டார்கள் என்பதற்காக உலகமே இல்லாமல் போய்விட்டது, தலையில் மண் அள்ளி போட்டுவிட்டாயே என்று அச்சமூட்டாதீர்கள். அதுபோல வேலைகள் வேண்டாம். அன்பாக இருங்கள். ஆறுதலாக இருங்கள், நண்பனைப் போல இருங்கள். அதைவிடுத்து இந்த விஷயத்தில் கண்டிப்பான அப்பா - அம்மாவாக இருக்க நினைக்காதீர்கள். இந்த விஷயத்தில் சமூகத்தில் பணம் பண்ணனும் என்ற ஒரு இயந்திரமாக பிள்ளைகளை உருவாக்காதீர்கள். நல்ல மனிதர்களாக உருவாக்க வேண்டும் என்று நினையுங்கள். அதுவே சரியானதாக இருக்கும்.

மாணவர்களே.. உங்களிடம் கொடுக்கப்பட்டு இருக்கும் உயிர் விலைமதிக்க முடியாதது. அது இன்னொரு முறை உங்களுக்கு கிடைக்காது. அற்ப விஷயங்களுக்காக உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள். வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது, விபத்து ஏற்பட்டுவிட்டால் அதிலிருந்து மீண்டு அடுத்த கட்டத்துக்குப் போவோம். அதற்குப் பிறகு வாகனமே ஓட்ட மாட்டோம் என்று இருக்கிறோமா.. இல்லை. அடிபட்ட இடத்தை சரிசெய்து, மீண்டும் நம் பயணத்தைத் தொடர்வோம் அல்லவா. அதுபோலத்தான் இந்த வாழ்க்கை என்ற ஓட்டப் பந்தயத்தில் இந்த ப்ளஸ் 2 மார்க் என்பது. இதுவே உங்களுடைய முடிவு அல்ல.ஆகையால் இந்த பின்னடவை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

இதைக் கடந்து போய், மீண்டும் ஒருமுறை பரீட்சை எழுதலாம். நாளைய சமூகமே உங்களால் உருவாக்கப்படலாம். உலகமே உங்களுடைய செயல்பாடுகளுக்காக காத்திருக்கக் கூடியதாக இருக்கிறது. அதனால், தவறான முடிவை எடுக்கக் கூடாது என்பத தான் என்னுடைய நோக்கம். ஒவ்வொரு வருடமும் இந்த தேர்வு முடிவுகள் வரும் போது பதட்டமாக இருக்கிறது. யாரோ ஒரு மாணவர் தற்கொலை பண்ணிக் கொண்டார் என்று கேட்கும் போது, இந்தக் காரணத்துக்காகவா விலை மதிக்க முடியாத உயிரைக் கொடுக்கணும்? என்று நினைக்கிறேன்.

உங்களால் நிச்சயம் சாதிக்க முடியும். வெற்றியடைய முடியும். அதனால் நம்பிக்கையுடன் இருங்கள். இதுவே உங்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கை அல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தைரியமாக இருங்கள். சாதிக்கப் பிறந்தவர்கள் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். விலை மதிக்க முடியாத உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அமீர் பேசியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்