''இளையராஜா சார், உதயகீதம் படத்துல எல்லாப் பாட்டையும் செம ஹிட்டாக்கிக் கொடுத்தார். முக்கியமா, ஒரேயொரு பாட்டுக்கு, ரொம்பநேரம் எடுத்துக்கிட்டாரு’’ என்று ‘உதயகீதம்’ படத்தின் இயக்குநர் கே.ரங்கராஜ், தன் நினைவுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.
எண்பதுகளில், மிகப்பெரிய வெற்றி பெற்று, வெள்ளிவிழாவைக் கொண்டாடிய மிக முக்கியமான திரைப்படம் ‘உதயகீதம்’. கோவைத்தம்பியின் மதர்லேண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் பாரதிராஜாவின் சிஷ்யர்களில் ஒருவரான கே.ரங்கராஜ் இயக்கினார்.
1985ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப்புத்தாண்டின் போது வெளியானது. கிட்டத்தட்ட படம் வெளியாகி, 34 வருடங்களாகிவிட்டன.
இந்தப் படத்தின் அனுபவம் குறித்து இயக்குநர் கே.ரங்கராஜ், பிரத்யேகமாக நமக்குப் பேட்டி அளித்தார்.
‘’என்னோட முதல்படம் ‘நெஞ்சமெல்லாம் நீயே’. அடுத்து, ‘பொண்ணு புடிச்சிருக்கு’ படம் பண்ணினேன். ’மண்வாசனை’ படத்துக்குப் பிறகு ரேவதி நடிச்ச படம் இது. அதையடுத்து கோவைத்தம்பியின் ‘உன்னை நான் சந்தித்தேன்’ படத்தை இயக்கினேன். சிவகுமார், சுஜாதா, மோகன், ரேவதி நடிச்சிருந்தாங்க. மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ’அடுத்தபடத்தையும் நீங்களே பண்ணுங்க’ன்னு கோவைத்தம்பி சொன்னார். அதுதான் ‘உதயகீதம்’.
ஆர்.செல்வராஜ் சொன்ன கதையை ஓகே பண்ணினோம். தூக்குத்தண்டனைக் கைதி ஒருத்தன். அவனை ஒரு பொண்ணு லவ் பண்றா. போராடி, கல்யாணமும் பண்ணிக்கிறா. முதலிரவுல அவனைக் கொல்ல முயற்சி பண்றா’ன்னு சொன்னாரு. இதுவரைக்கும்தான் சொன்னாரு. இதுக்குப் பிறகு நாங்க கதையை டெவலப் பண்ணினோம். அது நல்ல திரைக்கதையா டிராவலாச்சு.
கோவைத்தம்பி சாருக்கு ’உ’ சென்டிமென்ட் உண்டு. அதனால, ‘உன்னை நான் சந்தித்தேன்’, ‘உதயகீதம்’னு வரிசையா டைட்டில் வைச்சோம். அதேபோல முதல் படத்துலயே மோகன்தான் ஹீரோ. கோவைத்தம்பிக்கும் செட்டானாரு. மோகன், எல்லாருக்குமே நல்லா ஸிங்க் ஆகக்கூடியவர் அவர். அதேபோல ரேவதி, ‘உன்னை நான் சந்தித்தேன்’ படத்துல சிறப்பாப் பண்ணிருந்தாங்க. அதனால அவங்களையே ‘உதயகீதம்’ படத்துலயும் பயன்படுத்தினோம்.
‘உதயகீதம்’ கதை பண்ணும்போது ஒரு டவுட்டு வந்துச்சு. ‘அவனே தூக்குத்தண்டனை கைதி. இன்னும் சிலநாள்ல சாகப்போறான். அப்படியிருக்கும் போது, அந்தப் பொண்ணு ஏன் மெனக்கெடணும்? எதுக்காக அந்தப் பொண்ணு கேரக்டர் கொல்ல முயற்சி பண்ணனும்?னு கேள்வி வந்துச்சு. ஆனாலும் அதை பலப்படுத்துற விதமா, ஒரு டயலாக் வைச்சோம். ‘நீ வேற ஒருத்தர் மூலமா சாகறதுக்கு நான் விடமாட்டேன்’னு சொல்லுவார் ரேவதி. இது கேரக்டரைப் பலப்படுத்திருச்சு.
கவுண்டமணியோட காமெடி படத்துக்கு பெரிய பலம். அதுலயும் தேங்காய் வெடிகுண்டு மேட்டர் செம ஹிட்டாச்சு. நகைச்சுவைப்பகுதியை ஏ.வீரப்பன் எழுதியிருந்தார். மோகன், ரேவதி, லட்சுமின்னு எல்லாருமே நடிப்பை போட்டிபோட்டுக்கிட்டு கொடுத்தாங்க.
படத்தின் வெற்றிக்கு முதலும் முழுமையானவர் இளையராஜா சார். எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்தார். ‘சங்கீதமேகம்’, தேனே தென்பாண்டி மீனே’, ‘உதயகீதம் பாடுவேன்’, மானே தேனே கட்டிப்புடி’, ‘பாடுநிலாவே’, ‘எல்லோரும் பாட்டுப் பாடுங்கள்’னு எல்லாப் பாட்டுமே மிகப்பெரிய ஹிட்டாச்சு. முக்கியமான ஒரு விஷயம்... பொதுவா ஒரு பாட்டுக்கு ரொம்பநேரம்லாம் எடுத்துக்கமாட்டார் இளையராஜா. ஆனா, ‘பாடுநிலாவே’ பாட்டுக்கு ரொம்பநேரம் எடுத்துக்கிட்டார். ஜெயிலுக்குள்ளேருந்து மோகன் பாடுவாரு. காம்பவுண்டுக்கு வெளியே இருந்துக்கிட்டு ரேவதி பாடுவாங்க. இந்த ரெண்டுபேரும் ‘பாடுநிலாவே’ பாட்டுல பேசிக்குவாங்க. சரணம், பல்லவி, அனுபல்லவின்னெல்லாம் எங்கெல்லாம் சேர்க்கணும், என்னென்ன இன்ஸ்ட்ரூமெண்ட்டெல்லாம் சேர்க்கணும்னு ரொம்பவே இன்வால்வ்மெண்ட்டோட, ரசிச்சு ரசிச்சுப் பண்ணினார் இளையராஜா. இதை மறக்கவேமுடியாது.
‘உதயகீதம்’ படத்தோட, மனோபாலாவோட ‘பிள்ளைநிலா’ வந்துச்சு. சத்யா மூவீஸோட கமல் நடிச்ச ‘காக்கிசட்டை’யும் எஸ்.ஏ.சந்திரசேகரோட ரஜினி நடிச்ச ‘நான் சிகப்புமனிதன்’ படமும் ரிலீசாச்சு. எல்லாப்படமும் சூப்பர்ஹிட்டு. எல்லாப்படமும் நல்ல வசூல். இதுல ‘உதயகீதம்’ 200 நாள் ஓடுச்சு.
அப்போ, அமைச்சரா இருந்த க.ராஜாராம்க்கு படத்தைப் போட்டுக்காட்டினோம். இடைவேளைல, ‘என்னய்யா, இப்படி இடைவேளையை விட்டுட்டீங்க. அந்தப் பொண்ணு ஏன் இப்படிச் செஞ்சா? படத்தை உடனே போடுங்க’ன்னு சொன்னாரு. அந்த அளவுக்கு படத்தோட ஒன்றிப்போயிருந்தார். இதெல்லாம் மறக்கவே முடியாது.
85ம் வருடம் வந்த படம். 34 வருஷம் கழிச்சு, இன்னமும் மக்கள் மனசுல ‘உதயகீதம்’ இருக்குங்கறதே சந்தோஷமாவும் பெருமையாவும் இருக்கு’’ என்று சொல்லிப் பூரிக்கிறார் இயக்குநர் கே.ரங்கராஜ்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago