மறக்கமுடியாத கதாபாத்திரங்கள், நாவலிலும் சினிமாவிலும் நிறையவே உண்டு. நாவலில் எழுத்தாளர்கள், கதாபாத்திரங்களாகவே எழுத்தின் மூலம் வாழ்ந்துகாட்டியிருப்பார்கள். அதேபோல், சினிமாவில் சம்பந்தப்பட்ட நடிகர் - நடிகைகள், அந்தக் கேரக்டராகவே வாழ்ந்திருப்பார்கள். அப்படி, திரையுலகில் நம் கண்முன்னே ஆதர்ஷ தம்பதியாக வாழ்ந்துகாட்டியவர்கள் சிவாஜியும் பத்மினியும். அந்தப் படத்தில் சிவாஜி தெரியமாட்டார். பத்மினியைப் பார்க்கமுடியாது. பிரஸ்டீஜ் பத்மநாபனும் சாவித்திரியும்தான் தெரிவார்கள்; ஒளிர்வார்கள். அந்தப் படம்... 'வியட்நாம் வீடு’.
எண்ணற்ற படங்களிலும் கதாபாத்திரங்களும் தன் ஆகச்சிறந்த நடிப்பை வழங்கியவர் சிவாஜி. 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் நடிகர்திலகம். அதில் டாப் டென் என்றொரு பட்டியல் போட்டால், அதில், வியட்நாம் வீடு பிரஸ்டீஜ் பத்மநாபனும் வந்து கம்பீரமாக, கெளரவமாக உட்கார்ந்துகொள்வார்.
பிரஸ்டீஜ்தான் முக்கியம் என்று அப்படியொரு மரியாதையுடனும் ஒழுக்கத்துடனும் வாழ்ந்துவருபவர் பத்மநாபன். அவரின் அன்பு மனைவி சாவித்திரி. ஆனால் அவருடைய மகன்கள் வேறுமாதிரி. மனைவி சொல் மீறாத மகன், பணமே பிரதானம் என இருக்கும் மருமகள். ஊதாரித்தனமாக கடனெல்லாம் வாங்கித் திரியும் இன்னொரு மகன். மகளும் உண்டு. செல்லமகள்.
வேலையை நேசித்துச் செய்வார் பிரஸ்டீஜ் பத்மநாபன். குடும்பத்தை சுவாசித்து வருவார். எப்போதும் கண்டிப்பு. அதன் பின்னே அப்படியொரு அன்புப்பூரிப்பு. சாதாரண நிலையிலிருந்து, அம்மாவின் கடும் உழைப்பால், அத்தையின் வளர்ப்பால், படித்ததையும் பண்பட்டதையும் உழைத்ததையும் உயர்ந்ததையும் பெருமிதம் பொங்கச் சொல்லிக் கொண்டிருப்பார் பத்மநாபன். அத்தை இன்னொரு அம்மா. அத்தையின் மகளையே மணம்புரிந்திருப்பார். அவள்தான் சாவித்திரி.
அலுவலகத்திலும் கறார்தான். உடன் வேலை செய்யும் பலருக்கும் பத்மநாபனைப் பிடிக்கும். அதேசெய்யும் ஒருசிலர், அவர் மீது கோபத்தில் குமுறிக்கொண்டிருப்பார்கள். இதையெல்லாம் தாண்டித்தான், இனிக்க இனிக்க வாழ்ந்துகொண்டிருப்பார் பிரஸ்டீஜ்.
இப்படியும் அப்படியுமாக, சண்டைச்சத்தத்துடன் இருக்கிற வீட்டுக்கு, ‘வியட்நாம் வீடு’ என்று பேர்வைத்திருப்பார்.
ஒரு வீடு எப்படி இருக்கணும், எப்படி இருக்கக் கூடாது, வீட்டின் தலைவன் எப்படி இருக்கணும், எப்படி வாழணும், வாழ்வதற்கு பொன்னோ பொருளோ தேவையா? கெளரவம் எனப்படும் பிரஸ்டீஜ் அவசியமா? என்பதையெல்லாம் சொல்வதுதான் வியட்நாம் வீடு.
குடும்பம் பற்றியும் அதன் குதூகல சோகங்கள் குறித்தும் எத்தனையோ படங்கள் வந்திருக்கலாம். இன்னும் என்னென்னவோ சொல்லி, நம்மை நெகிழப் பண்ணியிருக்கலாம். ஆனால் அத்தனையும் தாண்டி தனித்துவத்துடன் கம்பீரமாகவும் கெளரவமாகவும், அழகுடனும் அடக்கத்துடனும் நிற்கிறது வியட்நாம் வீடு.
இது, சிவாஜி ஸ்பெஷல் படம். அதுமட்டுமா? சிவாஜிக்கே ஸ்பெஷல் படம் இது!
சொந்த வீடு என்பதுதான் எல்லோரின் ஆசையும் லட்சியமும். அப்பா இழந்து, அம்மாவையும் பறிகொடுத்து, அத்தையால் வளர்க்கப்பட்டு, அப்படி வளர்ப்பதற்காகவே அத்தை தன் வீட்டையே விற்று உயர்த்துகிறாள். பல வருடங்கள் ஓடிவிட்ட நிலையில், அதே வீட்டை வாங்கி, கிரகப்பிரவேசம் செய்யும் காட்சியில் இருந்து படம் விரிகிறது. கிரகப்பிரவேசமும் வீட்டுக்கு சண்டையும் யுத்தமும் சத்தமுமாக இருக்கிற வியட்நாம் பேரையே சேர்த்து வியட்நாம் வீடு என்று வைப்பதில் இருந்து, டைட்டில் ஆரம்பித்து முடியும் போதிருந்து, ஏதோ படம் பார்க்கிறோமா அல்லது ஓர் பிராமணரின் வீட்டுக்குள் நுழைந்துவிட்டோமா என்று தோன்றும் அளவுக்கு, ஒவ்வொரு பாத்திரப் படைப்பும், அப்படியொரு நேர்த்தியும் நெகிழ்வுமாக வளர்கிறது.
பிரஸ்டீஜ் பத்மநாப ஐயர், சிவாஜி. அவரின் மனைவி பத்மினி. பெயர் சாவித்திரி. அவர்களுக்கு ஸ்ரீகாந்தும் நாகேஷும் மகன்கள். முதல் பையனுக்கு கல்யாணமாகிவிடுகிறது. ரெண்டாவது பையன் படித்துக் கொண்டே இருக்கிறான். மூன்றாவதாக மகள். அன்பு மகள். சிவாஜியின் அத்தையும் உடன் இருக்கிறார்.
நேர்மை, டிஸிப்ளின், ஹானஸ்ட், பர்பெக்ஷன், பிரஸ்டீஜ் என்று எல்லாமாகவும் இருக்கிற சிவாஜி, மன்னிக்கணும்... பிரஸ்டீஜ் பத்மநாபன்... அப்படியொரு உழைப்பாளி. மிகப்பெரிய வெள்ளைக்காரக் கம்பெனியில் உத்தியோகம். வேலை விஷயத்தில் கறார் காட்டுபவர். வீட்டிலும் பசங்களிடம் சரியாக இருக்கச் சொல்லி, பர்பெக்ஷன் எதிர்பார்ப்பவர்.
பல் தேய்க்காமல் காபி குடிப்பார் நாகேஷ். படுக்கையில் இருக்கும் மனைவிக்கு காபி எடுத்துப் போய்க்கொடுப்பார் ஸ்ரீகாந்த். எட்டுமணிக்குத்தான் எழுந்திருப்பாள் மகள். ஆபீஸ் ஆடிட்டிங் பரபரப்பில் இருப்பார் பத்மநாபன். மகளின் தோழிகள் அரைகுறை ஆடைகளில் வருவார்கள். அவர்களுக்கு அட்வைஸ் சொல்லி அனுப்பிவிட்டு ஃபைல் பார்க்கும்போது, அம்மா லாண்டரி என்பார் ஒருவர். கணவரின் ஃபைலை வெடுக்கெனப் பிடுங்கி, பின்னால் எழுதியிருக்கும் லாண்டரி லிஸ்ட்டைப் பார்த்து காசு கொடுப்பார் மனைவி. அது வாங்கிட்டு வாங்க, இது வாங்கிட்டு வாங்க என்று மனைவி சொல்ல தலையாட்டிக் கொண்டே வருவார் ஸ்ரீகாந்த். அதைப் பார்த்து நக்கலாக தலையாட்டிக் கொண்டே இருப்பார் சிவாஜி. இத்தனைக் களேபரங்களுடன் வியட்நாம் வீட்டின் ஒவ்வொரு நாளும் விடிகிறது; முடிகிறது.
அடுத்து... ஈட்டிக்காரனிடம் பணம் வாங்கி டிமிக்கி கொடுத்துக்கொண்டே இருக்கும் நாகேஷ். சட்டைப்பையில் இருந்து பணம் களவாடுவதும் அப்பாவின் கையெழுத்தையே போட்டு ’செக்’கில் பணம் எடுக்கும் திருட்டுத்தன நாகேஷ். படிக்கச் செல்லும் வழியில் காதலிக்கும் மகள். அலுவலகத்தில் தன் மனைவியின் போனைக் கூட பேசாமல், ‘என்னடீ இது, மேனர்ஸ் இல்லாம, ஆபீஸ் டயத்துல போன் பேசிண்டு’ என்று எரிந்துவிழுகிற சிவாஜி. வீட்டு விஷயங்களை அடுத்த வீட்டுக்குச் சொல்லும் மருமகள் ரமாபிரபா என்று குடும்பத்தின் ஒவ்வொரு ஜீவன்களும் ஒவ்வொரு திசை நோக்கி ஓடுவதை அழகாகச் சொல்லிக்கொண்டு போகிற திரைக்கதை, படத்தின் நாடகத்தன்மையையெல்லாம் மறக்கடித்துவிடும். நாடகமாக வந்து பிறகு படமாக்கப்பட்டதுதானே இது!
அமைதியாவும் கொஞ்சம் ஆர்ப்பாட்ட ஆர்ப்பரிப்பாகவும் போய்க்கொண்டிருக்கிற குடும்பத்தில் ஒரு சிக்கல். பத்மநாபன் ஓய்வு பெறுகிறார். என்னதான் பென்ஷன் வந்தாலும், வேலைக்குப் போகாத நபர் மீது காட்டுகிற ஏளனப்பார்வையை அப்படியே தோலுரித்துக் காட்டியிருப்பார்கள். ஹாலில் உள்ள சோபா மேலே மகனின் அறைக்குப் போய்விடும். மருமகள் மதிப்பதில்லை. மகனும் மதிப்பதில்லை. ஒருகட்டத்தில் இது வேலைக்காரனுக்கும் தொற்றிக்கொள்ளும். அந்த வலிகள் மொத்தமும் பார்க்கிற ரசிகர்களின் மனங்களில் கடத்தப்பட்டிருக்கும். கனமாக்கி ரணமாக்கி இம்சித்துவிடும். வியட்நாம் வீடு பார்த்திருக்கிறீர்கள்தானே. ஒவ்வொரு காட்சியின் மூலமாக, நம்மை குடும்ப உறுப்பினராகவே ஆக்கியிருப்பார் இயக்குநர் மாதவன்.
தனிக்குடித்தனம், ஆசை, ஆடம்பர வாழ்க்கை என்றெல்லாம் ஆசைப்படும் ரமாப்பிரபா, கணவனை லஞ்சம் வாங்கத் தூண்டுகிறாள். வாங்குகிறான். உடல்நலமில்லாமல் இருக்கும் சிவாஜி, ரேடியோவில் கிரிக்கெட் கமெண்ட் கேட்கும் ஸ்ரீகாந்த், ஆத்திரம் தாங்காமல் ரேடியோவை உடைக்கும் தங்கை, ’போடி போ. உனக்கும் நாளைக்கி கல்யாணமாகி, புருஷனைப் பறிகொடுத்து, மூளியா இங்கே வந்து நிக்கணும், பாத்துக்கோ’ என்று சொல்ல, சிவாஜி ஆவேசமாகி, அடிவெளுத்துவிடுவார். ஆனால் காட்சி அத்துடன் முடியவில்லை. அப்படியே அம்மாவின் படத்துக்கு அருகில் போய் நின்றுகொண்டு, ‘அம்மா, சின்ன வயசிலேயே புருஷனைப் பறிகொடுத்துட்டு, சமையல் வேலை பாத்து என்னைக் காப்பாத்துனியே. இப்போ என் குழந்தையை அந்த மாதிரி நிலையைச் சொல்றாம்மா எம் புள்ள’ என்று கலங்குவாரே...’ கொன்னுடுவார் மனுஷன்.
சுந்தரம் கதை வசனம். இதன் மூலம்தான் வியட்நாம் வீடு சுந்தரம் என்றானார். அப்படியொரு கதை, அப்படியொரு யதார்த்த வசனம். காட்சிப்படுத்தலில் அப்படியொரு எளிமை. கதை முழுக்க இனிமை. காட்சியை ரசித்து ரசித்து செதுக்கியிருப்பார் வியட்நாம் வீடு சுந்தரம். அதை ரசித்து ரசித்து, ரசிக்க ரசிக்கப் படம் பண்ணியிருப்பார் பி.மாதவன். வசனங்கள் ஒவ்வொன்றும் ஷார்ப்.
‘என்னடீ... சமையக்கட்டு கான்பரன்ஸ் போடுறேளா?’
‘’உம்புள்ளைக்கு பத்துரூபாயோட மதிப்பு தெரியாதுடி. ஏன்னா அவன் சாவித்திரி பெத்தபுள்ள. நான் சமையக்காரி பெத்தபுள்ள’.
‘நீங்க என் பையனை காலேஜ்லேருந்து சஸ்பெண்ட் பண்ணிருக்கப்படாது. டிஸ்மிஸ் பண்ணிருக்கணும்’
‘சிரிக்கச் சிரிக்கப் பேசலாம்டா. அடுத்தவா சிரிக்கறாப்ல நடந்துக்கப்படாது’.
‘ஏண்ணா. கண்ணாடி குத்திட்டு வந்திருக்கேளா. வலிக்கறதா’.
’இல்லடி... குளுகுளுன்னு இருக்கு’
‘படிப்பை விட்டுட்டு தொழிலாளியாகறோமேன்னு பாக்கறியா. தொழிலாளிகள்தாண்டா நம்ம நாட்டின் முதுகெலும்பு’.
‘வாய்ப்பு கிடைக்கறப்போ வாழ்க்கையை சீர்படுத்திக்கோ. ஆடம்பரமா இருக்கறதுக்கு நினைக்காதே’.
‘இப்படி படம் நெடுக வசனங்கள். வாழ்க்கையைச் சொல்லும் வேதங்கள்.
ஆபரேஷன். ஆஸ்பத்திரி. வீட்டில் இருந்து கிளம்பி வாசலுக்கு வருவார். ‘வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ’ என்று பாடி முடிக்க, ‘சாவித்ரி... ஆஸ்பத்திரி வரைக்கும் வாடீ’ என்பார் சிவாஜி. தியேட்டரே கைத்தட்டிக்கொண்டே அழும் கலவை அது!
சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்த படம். 1970ம் ஆண்டு, ஏப்ரல் 11ம் தேதி ரிலீசானது. படம் வந்து 49 வருடங்களாகிவிட்டன. தலைமுறைகளே மாறிவிட்ட நிலையில், வாழ்வியலே புத்தாடை உடுத்திக்கொண்டு நவீனக்குடை பிடித்துப் போகிற உலகில், எப்போதும் பார்க்கலாம் வியட்நாம் வீடு.
இசை, மாமா என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட கே.வி.மகாதேவன். மைலேடி என்றொரு பாடல் இளசுகளுக்கானது. ரவுசுத்தனமானது. நாகேஷுக்கான பாடல். அந்த பாலக்காட்டுப் பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா’வையும் காட்சியையும் சிவாஜியின் சேஷ்டைகளையும் பத்மினியின் வெட்கம் கலந்த, வெட்கம் மறந்த நளினங்களையும் மறக்கவே முடியாது. திருமண நாள் விழாவுக்காக ஒரு பாட்டு. ஆஹா... அந்தக் காட்சியைப் பார்க்கும்போதெல்லாம், ஏதோ நாமே வாழ்ந்துவிட்ட நிறைவும் நெகிழ்வும் நிம்மதியும் மனதை நிறைத்துக்கொள்ளும். விம்மச் செய்துவிடும். அழவைத்துவிடும். ஆனந்த அழுகை!
கண்ணதாசனின் பாடல் வரிகள், படத்துக்கு மகுடம். ஆஹா ஆஹா... பாலக்காடு பாட்டின் வரிகள் துள்ளவைத்துவிடும். உலகத்திலே என்ற பாடலில், ஜானகிக்கும் ராமனுக்கும் சரிதம் கண்டது இந்நாடு. அந்த சரித்திரத்தில் உங்களுக்கும் கிடைக்குமொரு பொன்னேடு’ என்று அந்தத் தம்பதியின் தாம்பத்ய வாழ்வின் உன்னதத்தைச் சொல்லியிருப்பார்.
‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ பாடல்... சொல்லவா வேண்டும். ’என் தேவையை யாரறிவார்?’ என்று சிவாஜி பாடுவார். பத்மினிக்கு திக்கென்றாகிவிடும். ‘அடப்பாவி மனுஷா. நீயே உலகம்னு உன்னையே நினைச்சிக்கிட்டிருக்கேனே’ என்று அதிர்ந்து கலவரமாகிப் பார்ப்பார். ‘உன்னைப் போல் தெய்வமொன்றே அறியும்’ என்று மனைவியை தெய்வத்துக்கு நிகராகச் சொல்ல கண்ணதாசனால் மட்டுமே முடியும். அதைக்கேட்டு... பெருமிதமும் அப்பாடா என்கிற நிம்மதியுமாக ஒரு பார்வையும் சிரிப்பும் கலந்து காட்டுவாரே ரியாக்ஷன். பத்மினிம்மா... சான்ஸே இல்லை.
ஸ்லாங் எனப்படும் பாஷையை மாற்றிக் கொள்ளலாம். லேசாக பாடி லாங்வேஜில் கவனம் செலுத்தலாம். ஆனால் பிராமண மனிதராக, அச்சுஅசல் போல் அப்படியே பிறந்திருப்பார் இதற்காகவே! மழுங்கச் சிரைத்த மீசை இல்லாத முகம், பட்டையாகக் கண்ணாடி, விபூதிப்பட்டை, பரபரதுறுதுறு பேச்சுகள், காதோரத்தில் துளிர்விட்டிருக்கும் முடிக்கற்றை, கையையும் முகத்தையும் உதட்டையும் வைத்துக்கொண்டு அவர் பண்ணுகிற சேஷ்டைகள், கோபங்கள், துக்கங்கள்... எல்லாமே ஓர் பிராமணரை, பிராமணத் தகப்பனை அப்படியே நினைவுபடுத்திவிடும். இந்தப் படம் பார்த்துவிட்டு, பிரஸ்டீஜ் பத்மநாபனில், என் அப்பா தெரிகிறார், மாமா தெரிகிறார், தாத்தா தெரிகிறார் என்று சொல்லிப் பூரித்த பிராமணக் குடும்பங்கள் உண்டு. சிவாஜியின் படங்களில், மறக்கமுடியாத சரித்திரம் இந்தப் படம்.
பாலக்காட்டு பக்கத்தில் பாடலின் நிறைவில் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக கைத்தட்டுவார் சிவாஜி. அதுவொரு ஸ்டைல். திருமண நாள் விழாவில் ஊஞ்சலில் அமர்ந்தபடி, பத்மினி பாடுவதைக் கேட்டு, நெக்குருகிக் கரைந்து அவளில் காணாமலே போய், நிம்மதியாக வயதானவரைப் போலவே கைத்தட்டி தலையசைப்பாரே... அபாரம்!
அதுமட்டுமா? ரிடையர்ட் ஆகிவிட்டேன் என்றதும் காட்டுகிற ரியாக்ஷன். இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் பையனைக் கைது செய்யும்போது, ஜட்ஜ் சம்பந்தியிடம் ‘சம்பந்தி, இங்கே நம்மாத்துல பிரஸ்டீஜ்தான் போயிடுத்துன்னு நெனைச்சேன். ஜஸ்டிஸும் போயிடுத்து’ என்பார். ‘இந்தாடி பாலிஸி... என் பசங்க மெச்சூர்டு ஆயிட்டாங்களோ இல்லியோ, இது மெச்சூர்டாகும்’ என்று மனைவியிடம் கொடுக்கிற பாலிஸி பத்திரங்கள். அத்தை, முன்னாடி ஒரு ஆயிரம் ரூபா கொடுத்தேனோள்யோ. இந்தா... இந்த ஆயிரத்தையும் வைச்சுக்கோ. நீ முந்திண்டா நோக்கு, நான் முந்திண்டா நேக்கு’, ‘தாத்தா தாத்தா, அந்த மண் சட்டியை உடைக்காம பத்திரமா வைச்சுக்கோ தாத்தா. என் அப்பா உனக்கு இப்போ கொடுத்த இந்த சட்டிலதான் அவருக்கு நாளைக்கிக் கொடுக்கணும்னானாம்’ ’தராசு முள்ளுக்கு தட்டுகள்கிட்ட பாரபட்சம் இருக்கமுடியாதோண்ணோ’ என்று எத்தனை வசனங்கள். அத்தனை இடங்களிலும் வலிக்க வலிக்க கைத்தட்டினார்கள். மனம் வலிக்க வலிக்க, பார்த்துக்கொண்டே அழுதுகொண்டே கைத்தட்டினார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு வரி, ஒரு வார்த்தை, ஒரேயொரு பெயர்... மனைவி பெயர் சாவித்திரி. அதை சாவித்ரி... சாத்ரி... சாவித்ரீ... என்றெல்லாம் சொல்கிற அழகு இருக்கே... அதாண்டா சிவாஜி என்று கொண்டாடியது தமிழகம். இன்றைக்கும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. ஓவர் ஆக்டிங்பா என்றெல்லாம் சொல்லுவார்கள். ஆனால் வியட்நாம் வீடு பாருங்கள்... கடைசி வரை ஒருகாட்சியில் கூட, சிவாஜியே தெரியமாட்டார். பிரஸ்டீஜ் பத்மநாபன்தான் தெரிவார்.
பத்மினி மட்டும் என்னவாம். சாவித்திரியாகவே, திருமதி பத்மநாபனாகவே வாழ்ந்திருப்பார். மடிசார் கட்டு, புடவைத் தலைப்பை இழுத்துவிட்டுக்கொள்ளும் லாகவம், கண்களை உருட்டி உருட்டிப் பேசுகிற பாவனை, கைகளை ஆட்டி ஆட்டி பேசுகிற உடல்வாகு, நீண்ட நெடிய கூந்தல், வெடுக் சுருக் துறுக் நறுக் பளிச்செனப் பேசுகிற படபட பட்டாசு ப்ளஸ் சாந்த சொரூப சேஷ்டைகள், டிப்பிக்கல் மாமி தோற்றார். சாவித்திரியாகவே வாழ்ந்திருப்பார் பத்மினி.
வீடுன்னு இருந்தா வாசல்னு இருக்கத்தானே செய்யும் என்பார்கள். ஒவ்வொரு வீடும் அவசியம் பார்க்கவேண்டிய படம்... பார்த்துக்கொண்டே இருக்க வேண்டிய படம்... வியட்நாம் வீடு. வாழ்வியலைச் சொல்லும் படம். வாழ்க்கையைச் சொல்லும் பாடம்!
70ம் ஆண்டு சிவாஜியின் 9 படங்கள் வெளியாகின. என்னென்ன தெரியுமா? ஜனவரி 14ம் தேதி பொங்கல் திருநாளில், 'எங்க மாமா’ ரிலீசானது. ஜெயலலிதா உடன் நடித்திருப்பார். ஏ.ஸி.திருலோகசந்தர் இயக்கியிருப்பார்.
அடுத்து, பிப்ரவரி 6ம் தேதி ‘தார்தி’ என்ற பெயரில் ‘சிவந்த மண்’ படத்தில் இந்திப் பதிப்பு வெளியானது. பிப்ரவரி மாதம் 20ம் தேதி, ஜெமினி தயாரிப்பில், எஸ்.எஸ்.வாசன் இயக்கத்தில் ‘விளையாட்டுப்பிள்ளை’ ரிலீசானது. கே.பாலசந்தர் இயக்கத்தில் சிவாஜி நடித்த ஒரேபடமான ‘எதிரொலி’, ஜூன் மாதம் 27ம் தேதி ரிலீசானது.
அடுத்து, ஆகஸ்ட் மாதம் 15ம் தேதியில் பி.மாதவன் இயக்கத்தில் ‘ராமன் எத்தனை ராமனடி’ வெளியானது. அக்டோபர் 29ம் தேதி தீபாவளி வெளியீடாக சிவாஜிக்கு இரண்டு படங்கள் வெளியாகின. ‘எங்கிருந்தோ வந்தாள்’, ‘சொர்க்கம்’ என இரண்டு படங்கள் ரீலீசாகி வெற்றி பெற்றன. நவம்பர் 27ம் தேதி ‘பாதுகாப்பு’ திரைப்படம் வெளியானது.
இதில் சிவந்தமண் ஸ்ரீதர் படம். எங்கமாமாவும் எங்கிருந்தோ வந்தாள் திரைப்படமும் ஏ.ஸி. திருலோகசந்தர் இயக்கிய படங்கள். ‘பாதுகாப்பு’ ஏ.பீம்சிங் டைரக்ஷன். இந்த மூன்று படங்களிலும் சிவாஜிக்கு ஜோடி ஜெயலலிதா. சிவந்த மண் படத்தில் காஞ்சனா நாயகி.
‘எதிரொலி’ பாலசந்தர் படம். ‘சொர்க்கம்’ டி.ஆர்.ராமண்ணா படம். ’ராமன் எத்தனை ராமனடி’ பி.மாதவன் இயக்கம். இந்த மூன்று படங்களிலும் கே.ஆர்.விஜயா நாயகி. ’விளையாட்டுப்பிள்ளை’ எஸ்.எஸ்.வாசன் படம். ‘வியட்நாம் வீடு’ பி.மாதவன் படம். இந்த இரண்டு படங்களிலும் பத்மினியே நாயகி.
அந்த வருடம் வந்த 9 படங்களில், எங்கமாமா, எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம், ராமன் எத்தனை ராமனடி, வியட்நாம் வீடு ஆகிய படங்கள் நூறுநாட்களைக் கடந்து ஓடிய வெற்றிப் படங்கள்.
இதோ... 1970ம் ஆண்டு, ஏப்ரல் 11ம் தேதி, இந்தநாளில்தான்... இன்றைக்குத்தான் ‘வியட்நாம் வீடு’ ரிலீசானது. கிட்டத்தட்ட படம் வெளியாகி
பிரஸ்டீஜ் பத்மநாபனும் சாவித்திரியும் தம்பதியாக நீடுழி வாழ்ந்துகொண்டே இருப்பார்கள். பிரஸ்டீஜ் பத்மநாபனையும் சாவித்திரியையும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துவோம்!
முக்கிய செய்திகள்
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago