சீயான் வெற்றி மந்திரம்: விக்ரம் ஆக ஆறு எளிய வழிகள்

By க.நாகப்பன்

இன்று - ஏப்.17: நடிகர் விக்ரம் பிறந்த நாள்

விக்ரம் சினிமாவில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து 29 வருடங்களைக் கடந்துவிட்டார். 'ஐ' விக்ரமின் 50-வது படம். தற்போது 'கடாரம் கொண்டான்', 'மகாவீர் கர்ணா' படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய்- அஜித், தனுஷ் - சிம்பு, விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன் என்ற வரிசையில் விக்ரமுக்குப் போட்டி யார்? என்ற கேள்வி தவிர்க்க முடியாதது.

மேம்போக்காக சூர்யா என்றோ, பிற நடிகர்களையோ நாம் ஒப்பிட்டுச் சொல்வது பொருத்தமாக இருக்காது. அப்படி மற்ற நடிகர்களோடு விக்ரமை ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள், நிச்சயம் விக்ரம் கடந்து வந்த பாதையைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

விக்ரம் கடந்து வந்த பாதை

லயோலா கல்லூரியில் முதுகலைப் பட்டப் படிப்பை முடித்த விக்ரம் 'என் காதல் கண்மணி' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். ஸ்ரீதர் இயக்கத்தில் 'தந்துவிட்டேன் என்னை', பி.சி.ஸ்ரீராம் இயக்கத்தில் 'மீரா', எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் 'காவல் கீதம்' ஆகிய படங்களில் நடித்தும் விக்ரம் என்ற நடிகனை தமிழ் சினிமா கண்டுகொள்ளவில்லை.

தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வந்த விக்ரம் டப்பிங் கலைஞராகக் கூட தன்னை தகவமைத்துக்கொண்டார். 'அமராவதி' படத்தில் அஜித்துக்கும், 'காதலன்', 'மின்சார கனவு' படங்களில் பிரபுதேவாவுக்கும், 'காதல் தேசம்', 'விஐபி', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படங்களில் அப்பாஸுக்கும் குரல் கொடுத்தவர் விக்ரம்தான்.

பொதுவாக சினிமாவில் மிகப் பெரிய திருப்புமுனையோ, ஒரு நடிகன் மீது கவன ஈர்ப்பு குவிவதோ எப்போது நடக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

விக்ரமுக்கு அந்த கவன ஈர்ப்பு கிடைக்க ஒன்பது வருடங்கள் ஆனது. 1990-ல் ஹீரோவாக அறிமுகமான விக்ரம், 1999-ல் வெளியான 'சேது' படத்தின் மூலம்தான் கதாநாயகனுக்கான அங்கீகாரம் கிடைத்தது. கல்லூரி இளைஞனாகவும், மனநிலை பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்திலும் விக்ரம் தன் அசாத்திய நடிப்பை வழங்கினார்.

100 

'சீயான்' விக்ரம்

'அதிர்ஷ்டம் அல்ல. தன்னம்பிக்கை மட்டுமே கைகொடுக்கும்' என்று சினிமாவிலேயே தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்ததால்தான், 'சேது'வுக்குப் பிறகு 'சீயான்' விக்ரமுக்கான வாய்ப்பு வெளிச்சங்கள் பிறந்தன.

'தில்', 'காசி', 'ஜெமினி', 'தூள்', 'சாமி', 'பிதாமகன்', 'அந்நியன்' என்று தன் விக்ரம் கமர்ஷியல் விஸ்வரூபம் எடுத்தார்.

தரணியின் 'தில்' கமர்ஷியல் ஹீரோவாவுக்கான களத்தை அமைத்துக் கொடுத்தது. பார்வையற்ற மாற்றுத் திறனாளியாக நடித்த 'காசி' படத்தை தமிழ் ரசிக குடும்பங்கள் கொண்டாடின.

'ஜெமினி', 'தூள்', 'சாமி' படங்கள் அதிரடியான விக்ரமை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது.

வெட்டியான் சிந்தனாக பிதாமகனில் விக்ரம் நடித்தது மிகப் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தது. சூர்யா காமெடி கதாபாத்திரமாகவே மனதில் நிற்க, விக்ரம் நடிப்பு பரவலாக பேசப்பட்டது.

விக்ரம் ஓடி வருவதும், கோபப்படுவதும், வெறி கொண்டு வில்லனைத் தாக்குவதும் இமை கொட்டாமல் பார்த்தனர். சிறந்த நடிகனுக்கான தேசிய விருதை விக்ரம் பெற்றார்.

பரிசோதனைக் கூடம்

'அந்நியன்', 'தெய்வத்திருமகள்', 'ஐ' என்று தன் அடுத்த கட்ட பாய்ச்சலிலும் நடிகனாக தன்னை தொடர்ந்து நிரூபித்துக்கொண்டிருக்கிறார்.

'சாமுராய்', 'மஜா', 'பீமா', 'தாண்டவம்', 'ராவணன்', '10 எண்றதுக்குள்ள', 'ஸ்கெட்ச்', 'சாமி ஸ்கொயர்' படங்கள் விக்ரமுக்கு மிகப்பெரிய சறுக்கல்களாக அமைந்தன. ஆனாலும், தன்னை ஒரு பரிசோதனைக் கூடமாக பயன்படுத்திக்கொள்வதில் விக்ரம் தயக்கம் காட்டியதே இல்லை. அதனால் தான், 'ஐ' படத்தில் மாறுபட்ட உடலமைப்புகளில் வித்தியாசம் காட்டி ஆச்சர்யப்படுத்திய விக்ரம் இப்போது 'மகாவீர்  கர்ணா' என்ற சரித்திரப் படத்தில் கர்ணணாக நடிக்க தன்னை ஒப்புக் கொடுத்திருக்கிறார்.

தீராக் காதல்

ஒரு நடிகன் இரண்டு நிலைகளில் தன் நடிப்புத் திறமையை இந்த உலகுக்கு பரிபூரணமாக வெளிப்படுத்த நினைக்கிறான். அது நடிப்பு என்பதை மறக்கடிக்கும் அளவுக்கு கதாபாத்திரமாகவே மாறுவது. உடலை வருத்திக் கொண்டு கதாபாத்திரத்தின் தன்மையை உணர்த்துவது. இந்த இரண்டு நிலைகளிலும் விக்ரம் அசாதாரணமாக கடந்துவந்திருக்கிறார். அதற்குக் காரணம் சினிமா மீது விக்ரமுக்கு இருக்கும் தீராக் காதல்.

'தெய்வத் திருமகள்' படத்தில் எனக்கு பாப்பா பொறக்கப் போகுது என்று இன்னொரு குழந்தையாக மாறி குதூகலத்துடன் சொல்லும்போதும், நிலாவைப் பார்த்து உருக்கமுடன் பேசும் போதும், கோர்ட் காட்சியில் நிலாவுடன் சைகையில் பேசும் போதும் கிருஷ்ணா என்ற கதாபாத்திரமாகவே மாறி நம்மை கலங்கடித்துவிடுகிறார்.

உடலை வருத்திக்கொண்டு நடிப்பதிலும் விக்ரம் தனித்துவம்தான். 'அந்நியன்' திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் , விக்ரமை கொடூரமாக சித்திரவதை செய்யும் காட்சிகளில் அம்பி அந்நியனாக மாறுவது முக்கியமான காட்சி.

'ஐ' படத்தில் பாடி பில்டர், மாடல், கூனன் என்று உடலை சிதைத்து விக்ரம் நடித்த விதம் அர்ப்பணிப்பின் உச்சம்.

100 

சினிமாவில் சாதிக்க நினைப்பவர்களுக்கு விக்ரம் சொல்ல விரும்புவது:

ஈகோ இல்லாத பண்பு: ஹீரோ எப்படி டப்பிங் பேசுவது என்று இல்லாமல் கிடைத்த வேலைகளை செய்தது.

காத்திருத்தல்: அவசரப்படாமல் பொறுமையாகக் காத்திருப்பது.

தீராக் காதல்: விடாமுயற்சியைக் கைவிடாமல் வாய்ப்பு வேட்டை நடத்தியது.

தொழில் பக்தி: கிடைத்த வாய்ப்பை முழுமையாக, உண்மையாக பயன்படுத்திக்கொள்ளும் விதத்தில் உழைப்பது

அர்ப்பணிப்பு: கதைக்கு, கதாபாத்திரத்துக்கு தேவையானதை செய்ய ரிஸ்க் எடுப்பது.

சவாலை ஏற்றுக்கொள்வது: கதாபாத்திரம் கடினமானதாக இருந்தாலும், அந்த சவாலை ஏற்றுக்கொண்டு அதற்குள் ஊடுருவிச் சென்று அதன் தன்மை உணர்ந்து முழுமையாக மாறுவது.

இதனால் தான் பாலா, ஷங்கர், மணிரத்னம், தரணி, ஹரி, லிங்குசாமி , விஜய் என்று வெரைட்டியான இயக்குநர்களின் படங்களில் விக்ரமால் நடிக்க முடிந்தது.

ஓவ்வொரு படத்தின் கதாபாத்திரமும் விக்ரமுக்குப் போட்டிதான். அதனால்தான், சேது, சிந்தன், கிருஷ்ணா, லிங்கேசன் என்று ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தன்னை தொடர்ந்து நிரூபிக்கிறார்.

தந்தை வினோத் ராஜ் உடன் விக்ரம்.50 

நடிப்பு என்பது நம்மை உணரவைப்பது. இங்கே ஒவ்வொரு நடிகனுக்கும் ஒவ்வொரு மாதிரியான பயிற்சிகள் உள்ளன.

மிகச் சிறந்த நடிப்பின் அடையாளம் அது நடிப்பு என்பதை மறக்கடிப்பதே. தன் முழு திறத்தையும் நடிப்புக்கென அர்ப்பணிப்பவர்களே இந்த நேர்த்தியை கற்கிறார்கள். அந்த நேர்த்தியை விக்ரம் கைவரப்பெற்றிருக்கிறார்.

மிகச் சிறந்த நாயகனாக சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்பதே விக்ரம் அப்பா வினோத் ராஜின் ஆசை. கடைசிவரை ஒரு துணை நடிகராகவே விக்ரம் அப்பாவால் சினிமாவில் வலம்வர முடிந்தது. அப்பா கனவு கண்டதை விக்ரம் நனவாக்கினார்.

வெற்றிகரமான ஒரு ஃபெர்பாமிங் நடிகரான விக்ரம் முன்பு ராவணனாக நடித்தார். இப்போது தமிழ், மலையாளம், இந்தி எனும் மும்மொழிகளில் உருவாகும் மகாவீர் கர்ணா படத்தின் மூலம் கர்ணனாக நடிக்கிறார்.

நடிகர் திலகம், சிம்மக் குரலோன் சிவாஜிக்குக் கிடைத்த பெரும்பேறு விக்ரமுக்கும் கிடைக்கட்டும். தமிழ் சினிமாவில் சிவாஜிக்குப் பிறகு கர்ணனாக அவதரித்த விக்ரமின் இந்த வெற்றிப் பயணம் தொடரட்டும்...

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நடிகனகாவே பிறக்க ஆசைப்படுகிறாராம் விக்ரம். அப்படியே ஆகக் கடவது என்று நாமும் வாழ்த்துவோம்!

- க.நாகப்பன் | தொடர்புக்கு nagappan.k@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்