மகேந்திரன் எனும் மகத்தான படைப்பாளியும் ரஜினியிஸமும்

By க.நாகப்பன்

சினிமாவின் மீது தீராக் காதல் கொண்ட அத்தனை பேருக்கும் ஆதர்சமாக இருப்பவர் மகேந்திரன்.  சினிமாவில் ஒரு வெற்றிப் படம் கொடுத்த இயக்குநர் கூட அந்த இடத்துக்கு வந்த கதையை மாய்ந்து மாய்ந்து சொல்வது வழக்கம். வறுமையின் பின்னணி, பசியின் கொடுமை அல்லது வசதியான வாழ்க்கை, வேலையை விட்டு சினிமாவைத் தேர்ந்தெடுத்தற்கான காரணம் என தான் கடந்து வந்த பாதை குறித்து சிலாகித்துச் சொல்வார்கள். என்னுடைய இந்தப் படம் தமிழ் சினிமாவில் பத்து வருடங்களுக்குப் பேசும் படமாக இருக்கும் என்று சத்தியம் செய்யாத குறையாக அடித்துச் சொல்பவர்களும் அநேகம்.  ஒரு படத்துக்கே ஓவர் பில்டப் தருகிற வியாபார உலகம் சினிமா. அங்கே தன்னை விற்கத் தெரிந்தவர்களே ஜாம்பவன்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

ஆனால், இயக்குநர் மகேந்திரன் இந்த சினிமாத்தனமான நபர்களுக்கு மத்தியில் ஒரு குறிஞ்சி மலர் என்று சொல்லலாம்.  ஒரு முறையல்ல... இரு முறை அவரை நேர்காணல் செய்யும் வாய்ப்பும் பேரனுபவமும் எளியவன் எனக்குக் கிட்டியது. அந்த அனுபவத்திலும் அவர் அணுகிய விதத்திலும் சொல்ல வேண்டுமென்றால் மகேந்திரன் சார் மென் மனசுக்குச் சொந்தக்காரர். துளியும் மிகைத்தன்மை இல்லாமல் பேசக்கூடிய யதார்த்தத்தின் வார்ப்பு அவர்.

கடந்த 5 வருடங்களுக்கு முன்பு, 'முள்ளும் மலரும்' திரைப்படம் வெளியாகி 35 ஆண்டுகள் கடந்த நிலையில் அந்தப் படத்தை தமிழ் சினிமா உலகம் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட ஊடகங்களில் கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில் இயக்குநர் மகேந்திரனை சந்தித்துப் பேசினேன்.  தமிழ் சினிமாவின் சத்யஜித்ரே மகேந்திரன் என்று சினிமா ஆர்வலர்கள் போற்றுவதை அவரிடத்தில் பெருமையுடன் பகிர்ந்த போது, ''நல்ல சினிமா எடுக்காத குற்ற உணர்வில் இருக்கிறேன். இது தன்னடக்கம் அல்ல. என் நிஜமான வாக்குமூலம்'' என்று சொன்னவர் மகேந்திரன். ஆனால், அவர் தான் தமிழ் சினிமாவில் அழியாத, சாகாவரம் பெற்ற படங்களைக் கொடுத்தார்.

ரஜினிக்குள் இருக்கும் மகா நடிகனைக் கண்டுகொண்டவர் நீங்கள். 'முள்ளும் மலரும்', 'ஜானி' படங்களின் மூலம் அவருக்கான ராஜபாட்டையை வகுத்துக் கொடுத்தவர். 36 படங்களுக்கு கதை, வசனம் எழுதி 12 படங்கள் இயக்கி தமிழ் சினிமாவை உற்று கவனிக்க வைத்த ஆளுமையான நீங்களே இப்படிச் சொல்லலாமா? நீங்கள் இயக்கிய படங்களில் உங்களுக்குத் திருப்தியில்லையா என்று கேட்டால், கண்களைச் சுருக்கிச் சிரித்தார். அந்த மகேந்திரனை நீங்கள் அருகிருந்து பார்த்திருந்தால் ரஜினியின் மேனரிஸம் எங்கிருந்து எப்படி வந்திருக்கும் என்று உங்களால் உறுதி செய்திருக்க முடியும்.

மகேந்திரன் சினிமாவுக்கு விரும்பி வந்தவர் அல்ல. அது ஒரு விபத்து என்று அவரே சொல்லியிருக்கிறார். அவருக்கு நடந்தது கட்டாயக் கல்யாணம்தான் என்றாலும் அவர் பிடிக்காத, கொடுமைக்கார கணவனாக நடந்துகொள்ளவில்லை. சினிமா என்ற காதலிக்கு அவர் பேரன்பையும், கருணையும், நேசத்தையும் அள்ளிக் கொடுத்தார். அவருக்கும் சினிமாவுக்குமான உறவு எல்லையற்ற மகோன்னத உணர்வுடனே கடைசி வரை இருந்தது. அதனால்தான் 'மோகமுள்' மீண்டும் மலரும் என்று தனக்கே உரிய பாணியில் திரைக்கதையை உருவாக்கினார். சத்யராஜ் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் ஒரு படம் இயக்குவதற்கும் பேச்சுவார்த்தை நடந்து அது கைகூடாமலே போனது காலத்தின் இழப்புதான்.

ரஜினியிஸம்

rajini mahendranjpeg100 

சிவாஜி ராவ் ஆக இருந்தவரை ரஜினியாக மாற்றியவர் பாலசந்தர்தான். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அந்த ரஜினிக்கு நடை, உடை, பாவனை உள்ளிட்ட உடல்மொழியில், உச்சரிப்பில் தனித்துவம் ஏற்படுத்தி, ரஜினிக்குள் இருக்கும் மகா நடிகனை அடையாளப்படுத்தியதில் இயக்குநர் மகேந்திரனுக்குப் பெரும் பங்கு உண்டு. ரஜினியின் அந்த அடையாளம் இன்று ரஜினியிஸமாக, சூப்பர் ஸ்டார் பிம்பமாக வளர்ந்துள்ளது.

இதன் பின்னணி என்ன?

ரஜினி நடித்த 'ஆடுபுலி ஆட்டம்' திரைப்படத்துக்கு வசனம் மகேந்திரன். பெங்களூரில் படப்பிடிப்பு நடைபெற்ற போது ரஜினிக்குள் இருக்கும் சினிமாவின் மீதான கனலை அப்படியே மகேந்திரனிடம் இறக்கினார். அதனால் ஆச்சர்யப்பட்டும் அகமகிழ்ந்தும்போன மகேந்திரன் பின்னாளில் இயக்குநராக அறிமுகமாகும்போது 'முள்ளும் மலரும்' படத்தில் ரஜினிதான் நாயகனாக நடிக்க வேண்டும் என்று அடம்பிடித்தார். வில்லன் முத்திரை இருக்கும் ரஜினியை ஹீரோவாக நடிக்க வைப்பதற்கு தயாரிப்பாளர் தயங்கிய போது ரஜினி நாயகன் என்பதற்குச் சம்மதம் என்றால்தான் படத்தை இயக்குவேன் என்று உறுதி காட்டினார்.

இதுகுறித்து மகேந்திரனிடம் கேட்ட போது, ''ரஜினி எப்போதுமே என் நண்பர். அவர் சினிமா மீதான அவரின் கனவு பரந்து விரிந்தது. சாண்டில்யனின் ஜலதீபம் சரித்திர நாவலில் வரும் கடல் தளபதி கன்னோஜியைப் பற்றி வாசிக்கும் போது ரஜினி அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என யோசிக்கிறேன். அதுபோன்ற படங்களில் ரஜினி நடிக்கும்போது அமிதாப் பச்சனை எளிதில் கிராஸ் செய்வார்'' என்று தன் ஆவலையும், ரஜினி செல்ல வேண்டிய பாதையையும் அழகாக விவரித்தார். இப்போது கூட ரஜினி இதை பரிசோதனையாக முயற்சித்துப் பார்ப்பதில் தவறில்லைதான்.

உறுதுணைக் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தவர்

சினிமா யதார்த்தத்தின் பதிவாக இருக்க வேண்டும் என்று விரும்பியவர் மகேந்திரன். அதனால் தான் நாயகன், நாயகி என்று இருவரைச் சுற்றி மட்டும் எந்தக் கதையையும் அவர் உருவாக்கவில்லை. 'முள்ளும் மலரும்' படத்தில் சரத்பாபு, ஷோபா, படாபட் ஜெயலட்சுமி, வெண்ணிற ஆடை மூர்த்தி, சாமிக்கண்ணு உள்ளிட்ட எல்லோருமே ஜொலித்தார்கள். 'உதிரிப்பூக்கள்' சாருஹாசன் அதில் ஒற்றைப் பருக்கை. ''இந்த ஊரை விட்டு ஏன்பா போறீங்க'' என்று அஸ்வினி கேட்கும்போது, ''என்னை யாரும் இங்க இருக்கச் சொல்லலையேம்மா'' என்று வருத்த வார்த்தைகளில் கலங்க வைப்பார். உறுதுணைக் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் படைப்புகளில் மகேந்திரன் தன்னிகரற்று விளங்கினார்.

டூயட்களை வெறுத்தவர்

ஐ லவ் யூ சொல்வதுதான் தமிழ் சினிமாவின் ஆகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. டூயட் பாடல்கள் இல்லாமல் காதலைச் சொல்ல முடியாதா என்று ஒரு மூத்த படைப்பாளியாக விமர்சனம் செய்தவர் இயக்குநர் மகேந்திரன். அதே சமயத்தில் 'கை கொடுக்கும் கை' படத்தில் தாழம்பூவே டூயட் பாடலை வைத்ததற்காக வருத்தம் தெரிவித்தார். ஆனால், இசையை மையப்படுத்திய 'ஜானி' படத்தின் மூலம் மறக்க முடியாத மனதை வருடும் பாடல்களைக் கொடுத்தார். ராஜாவும் இசையில் தனி ராஜாங்கம் நடத்தி இருந்தார். 'உதிரிப்பூக்கள்' படத்தின் அழகிய கண்ணே பாடல் இப்போதுவரை மென்சோகத்தின் உச்சமாக உள்ளது.

பாலு மகேந்திரா- மகேந்திரனின் ஒத்த அலைவரிசை

'முள்ளும் மலரும்' படத்தின் ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா.  கன்னடத்தில் 'கோகிலா' படத்தை இயக்கிய பாலு 'முள்ளும் மலரும்' படத்துக்குப் பிறகுதான் தமிழ்ப் படங்களை இயக்கினார். பாலுவுக்கும் டூயட் பாடல்கள் பிடிக்காது. பொது இடத்தில் காதலிப்பது போன்ற காட்சிகளை வைக்கமாட்டார். 'வீடு' படத்தில் பானுசந்தர் - அர்ச்சனாவுக்கு இடையேயான காட்சிகளில் யதார்த்தக் காதலைப் பதிவு செய்திருப்பார். மான்டேஜ் பாடல்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். 'அழியாத கோலங்கள்' படத்தில் ஷோபாவின் கதாபாத்திரம் தனித்துவமானது. வகுப்பறைக்குள் புதிதாக வந்த ஷோபா, ''என் பேரு இந்து. உங்க பேரைச் சொல்லுங்கம்மா'' என்று வெட்கமும், தயக்கமும், படபடப்புமாகக் கேட்பார். அந்த சாயலை நீங்கள் 'முள்ளும் மலரும்' வள்ளியிடம் பார்க்கலாம்.  'உதிரிப்பூக்கள்' படத்தில் மிகையில்லாத, அசலான குழந்தைத்தன்மையோடு இருக்கும் குழந்தைகளைப் பார்க்க முடியும். அதன் நீட்சியாக 'நீங்கள் கேட்டவை' படத்தில் பூர்ணிமாவின் குழந்தைகளைப் பார்க்கலாம். மகேந்திரனின் திரை மொழியும், பாத்திரப் படைப்பும் பாலு மகேந்திராவையும் ஈர்த்திருக்கிறது அதனால் தான் இருவரும் ஒத்த அலைவரிசையில் இயங்கினர் என்பதை மறுக்க முடியாது.

நடிப்பின் மூலம் மறுவருகை

12 படங்களில் தன் தடத்தைப் பதித்த மகேந்திரன் 'காமராஜ்' படத்தில் அவரது தொண்டராக சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதற்குப் பிறகு அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த 'தெறி' படத்தில் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து 'நிமிர்', 'மிஸ்டர் சந்திரமௌலி', 'பேட்ட' ஆகிய படங்களில் நடித்தார். கரு.பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் 'புகழேந்தி எனும் நான்' படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் மகேந்திரன் நடித்துள்ளார். இப்படம் மட்டும் இன்னும் வெளியாகவில்லை.

திடீரென்று ஏன் மகேந்திரன் சார் நடிகர் ஆனார் என்ற கேள்வி 'தெறி' படம் ரிலீஸான போது எழுந்தது. அப்போது இயக்குநரும் நடிகருமான என் நண்பர் ஓர் அழகான பதிலைச் சொன்னார். ''சினிமா என்பது எல்லா கலைகளையும், கலைஞர்களையும், படைப்பாளிகளையும் விழுங்கக்கூடிய ஆக்டோபஸ்.  மகத்தான ஆளுமைகளை, மூத்த படைப்பாளிகளை இன்றைய தலைமுறை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. அந்த வகையில் மகேந்திரன் சாரின் மறுவருகை நடிப்பால் நிகழ்ந்தது இளம் தலைமுறைக்கான தெரிவிப்புப் படலமாக இருக்கட்டும்'' என்றார். அது 100% ஏற்புடையது. 

ஆவணப்படமும் ஆவணக் காப்பகமும்

சினிமாவுக்கென்று ஆவணக் காப்பகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று பாலு மகேந்திரா கடைசி வரை வலியுறுத்திக் கொண்டே இருந்தார். . ஆனால், இன்னும் அந்தக் கோரிக்கை நிறைவேறவில்லை. தமிழ் சினிமா உள்ளவரை மகேந்திரன் சார் நினைவுகூரப்படுவார், அவரது படங்களின் மூலம் மகேந்திரன் சார் வாழ்ந்து கொண்டிருப்பார் என்று சொல்லிவிடலாம்தான். ஆனால், அது மட்டுமே அவருக்கான இறுதி மரியாதையாக இருக்காது. இயக்குநர் மகேந்திரன் குறித்து ஒரு ஆவணப் படத்தை தமிழ் சினிமா முன்னெடுப்பதும், ஆவணக் காப்பகத்தை நிறுவுவதுமே அவர் நமக்கு விட்டு வைத்திருக்கும் கடமைகள். படைப்பாளியை இழந்த நாம் படைப்புகளை இழக்காமல் இருக்க அதற்கான முயற்சிகளை எடுப்பது அவசர அவசியம்.

தொடர்புக்கு: nagappan.k@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்