தோல்வியும் வெற்றியும் கலந்துகட்டிய திரையுலகில், ஒரு ஹீரோ பத்து வருடங்கள் தாக்குபிடிப்பதே பெரியவிஷயம். நடிகையோ, ஐந்து வருடங்கள் நின்றாலே, ஆகச்சிறந்த சாதனைதான் இங்கே! ஆனால் கிட்டத்தட்ட 40 வருடங்களாக ஒரு நடிகை நிலைத்து நிற்கிறார் என்பது மிகப்பெரிய விஷயம். இன்றைக்கு தனியொரு மார்க்கெட் உலகத்தை கையில் வைத்துக்கொண்டு, கேரக்டரில் சிக்ஸர் மேல் சிக்ஸராக அடித்துக்கொண்டே இருக்கிற அவர்... ரம்யா கிருஷ்ணன்.
இந்தப் பேரைச் சொல்லும் போதே, கம்பீரமான நீலாம்பரியும் நினைவுக்கு வருவார். கிளாமரில் அசத்தி நடிப்பில் கலக்கிய ’பஞ்சதந்திரம்’ மேகியும் கண்ணுக்கு முன்னே வந்து நிற்பார். ‘இதுவே சாசனம். என் சாசனமே கட்டளை’ என்று சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டு, கர்ஜித்த ரம்யாகிருஷ்ணனின் முதிர்ந்த நடிப்புக்குப் பின்னே, 35 வருட சினிமா அனுபவம் இருக்கிறது.
சித்ராலயா கோபு ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். அந்தப் படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் நாயகன். ‘ஹீரோயின் சின்னப் பெண்ணாக இருந்தால் கேரக்டருக்குப் பொருத்தமாக இருக்கும்’ என்று சொன்னதைக் கேட்ட ஒய்.ஜி.மகேந்திரன், ஒருநாள்... பள்ளியில் படிக்கும் பெண்ணை அழைத்து வந்து கோபுவின் முன்னே நிறுத்தினார்.
‘இந்தப் பொண்ணு அந்தக் கேரக்டருக்கு சரியா இருக்கும்னு தோணுது. நீங்க பாத்துக்கோங்க சார்’ என்று ஒய்.ஜி.எம். சொல்ல, அந்தப் பெண்ணைப் பார்த்தார் கோபு. ‘இந்தப் பொண்ணு உங்களுக்கு நல்லாத் தெரிஞ்ச குடும்பத்தைச் சேர்ந்த பொண்ணுதான். கண்டுபிடிங்க பாக்கலாம்’ என்றார்.
இன்னும் உற்றுப் பார்த்தார் கோபு. ஆனால் கண்டறிய முடியவில்லை. ‘நம்ம சோ இருக்காரே. அவங்க அக்கா பொண்ணு. ஸ்கூல் போயிக்கிட்டிருக்கா’ என்று விளக்கினார்.
அந்தப் பெண்ணின் கண்கள் ஈர்த்தன. அவரின் குரலில் வசீகரம் இருந்ததை உணர்ந்தார் கோபு. அவளிடம் கேட்ட கேள்விக்கெல்லாம், கேள்விக்குத் தகுந்தாற்போல், முகபாவனைகளைக் கொண்டு வந்து பதிலளித்த போதே, இந்தப் பெண் இந்தக் கேரக்டருக்கு மட்டும் அல்ல, எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் பிரமாதப்படுத்திவிடுவார் என நம்பிக்கை கொண்டார் கோபு. ‘ஓகே’ என்றார்.
அப்படித்தான் அறிமுகமானார் ரம்யா கிருஷ்ணன். பிலிம்கோ தயாரிப்பில், சித்ராலயா கோபு இயக்கத்தில், ஒய்.ஜி.மகேந்திரனுடன் ஹீரோயினாக நடித்த அந்தப் படம் ‘வெள்ளை மனசு’.
கல்யாணக் கனவுகளுடனும் தாம்பத்ய ஏக்கங்களுடனும் இருக்கிற நாயகனுக்கு திருமணம் நடக்கிறது. ஆனால், கல்யாணம், தாம்பத்யம், செக்ஸ், குழந்தை பெற்றுக்கொள்ளுதல் என எதுவுமே அறியாதவளாக இருக்கிறாள் நாயகி. இந்த இரண்டுபேருக்கும் நடுவே நிகழ்கிற களேபரங்களை, கலகலவென சொல்லியிருப்பார் சித்ராலயா கோபு.
83ம் ஆண்டுக்குப் பிறகு 85ம் ஆண்டு, ரஜினி நடித்த ‘படிக்காதவன்’ படத்திலும் 86ம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில், ‘முதல்வசந்தம்’ படத்திலும் 87ம் ஆண்டு கமல் நடித்த ‘பேர்சொல்லும்பிள்ளை’ படத்திலும் என சின்னச்சின்ன கேரக்டரில் நடித்து வந்தார் ரம்யா கிருஷ்ணன். தமிழ்ப் படத்தில், தமிழ்பேசும் பெண்ணுக்கும் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பெண்ணுக்கும் எப்போதுமே முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதற்கு ஏற்ப, ரம்யா கிருஷ்ணனுக்கும் இங்கே கோடம்பாக்கத்தில் சிகப்புக் கம்பள வரவேற்பெல்லாம் வழங்கவில்லை.
இயக்குநர் கே.பாலசந்தர், தனது ‘வானமே எல்லை’ படத்தில் நல்ல கேரக்டரை வழங்கியிருந்தார். வழக்கம் போலவே மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இன்றைக்கு பிரபல நடிகை, படத்தில் ஒரேயொரு பாட்டுக்கு நடனமாடுவது என்பது ஸ்டைலாகவே ஆகிவிட்டது. ஆனால், ஒருவிதத்தில், இதைத் தொடங்கி வைத்தவரே ரம்யாகிருஷ்ணன் தான் என்கின்றனர் திரையுலகினர்.
திரைக்கு வந்து 8 வருடங்களாகிவிட்ட நிலையில், ஒரேயொரு பாடலுக்கு நடனமாடினார். அந்தப் பாட்டு மிகப்பெரிய ஹிட்டானது. கோயில், கல்யாண, பாட்டுக்கச்சேரிகளிலெல்லாம் அந்தப் பாட்டைத்தான் போடுவார்கள். அந்தப் பாடலின் ஆரம்ப இசையைக் கேட்டதுமே துள்ளிக்குதித்தார்கள் ரசிகர்கள். அந்தப்பாடல்... ‘ஆட்டமா தேரோட்டமா” பாட்டு. அந்தப் படம்... ‘கேப்டன் பிரபாகரன்’.
இந்தநிலையில், அக்கட தேசமான ஆந்திரம், ‘ரெட் கார்பெட்’ விரித்து ரம்யா கிருஷ்ணனை வரவேற்றது. ஆராதித்தது. கொண்டாடியது. அதுமட்டுமா? தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளிலும் வெற்றி பெற்ற நடிகை என பேரெடுத்தார். இது, ஸ்ரீதேவிக்கு அடுத்து அப்படிப் பேரெடுத்தவர்’ என ரம்யா கிருஷ்ணனைக் கொண்டாடினார்கள்.
என்.டி.ஆர்., சிரஞ்சீவி, நாகார்ஜூனா, வெங்கடேஷ் என ஆந்திராவின் டாப் ஸ்டார் நடிகர்கள் எல்லோருமே, ‘ரம்யா கிருஷ்ணன் கால்ஷீட் வாங்குங்க’ என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்திருந்தார். அந்தப் பக்கம், மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் என ரவுண்டு வந்தார். இந்தியில், அமிதாப், ஷாருக்கான், சஞ்சய்தத், கோவிந்தா என பலருடனும் நடித்தார். கன்னடத்தில், விஷ்ணுவர்தன், ரவிச்சந்திரன், உபேந்திரா என பிரபல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.
ரம்யாகிருஷ்ணனின் தமிழ்த் திரைப்பயணத்தில், 99ம் ஆண்டு மறக்கமுடியாத ஆண்டாக அமைந்தது. அந்தப் படத்தில் ரஜினிக்கு இணையான கேரக்டர். ரஜினியையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு வெயிட்டான கதாபாத்திரம். அந்த நீலாம்பரியை அவ்வளவு சீக்கிரத்தில் எவரும் மறந்துவிடமுடியாது. 83ம் ஆண்டு நடிக்கத் தொடங்கிய ரம்யா கிருஷ்ணனுக்கு, முழுமையான அங்கீகாரத்தை, ஆந்திராவும், கேரளாவும், மும்பையும் கர்நாடகாவும் கொடுத்த பிறகுதான், தமிழ்த்திரையுலகம் கொடுத்தது என்பது வேதனை.
அதனால் என்ன... என்பது போல், ‘அடிச்சுத்தூக்கு அடிச்சுத்தூக்கு’ என்று ரம்யா கிருஷ்ணன், வெளுத்துவாங்கினார் நடிப்பில்! கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு பிறகு கிடைத்த ‘படையப்பா’ வாய்ப்பை, அட்டகாசமாக, அநாயசமாகப் பயன்படுத்திக் கொண்டார்.
‘பாகுபலி’ கேரக்டர் அவர் நடிப்பின் உச்சம் என்று கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர், எல்லாத் திரைக்கலைஞர்களும் அனைத்து ரசிகர்களும்!
83ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி ரம்யா கிருஷ்ணன் அறிமுகமான ‘வெள்ளை மனசு’ ரிலீசானது. இதோ... 36 ஆண்டுகளாகிவிட்டன.
ரம்யாகிருஷ்ணனின் திரைப்பயணம் இன்னும் இன்னும் நீளட்டும். அவரின் புகழ் இன்னும் இன்னும் உயர்ந்துகொண்டே இருக்கட்டும்!
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago