எழுத்தாளர்களுக்கு இந்திய சினிமாவில் உரிய மதிப்பில்லை: நடிகர் ரமேஷ் அரவிந்த்

எழுத்தாளர்களுக்கு இந்திய சினிமாவில் உரிய மதிப்பு தரப்படுவதில்லை என்று நடிகர் ரமேஷ் அரவிந்த் கூறியுள்ளார்.

நடிகர் ரமேஷ் அரவிந்த் கன்னடத்தில் பல திரைப்படங்களை எழுதி, இயக்கியுள்ளார். மற்றவர்களது கதைகளையும் இயக்கியுள்ளார். தற்போது நடிகர் கமல்ஹாசன் எழுதியுள்ள உத்தம வில்லன் படத்தை இயக்கி வருகிறார். கமல்ஹாசனின் நீண்ட கால நண்பரான ரமேஷ் அரவிந்த், சதி லீலாவதி, பஞ்ச தந்திரம் உள்ளிட்ட திரைப்படங்களில் கமல்ஹாசனுடன் நடித்துள்ளார். அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது:

"இங்குள்ள முக்கியப் பிரச்சினையே எல்லாரும் எல்லோர் வேலையிலும் குறுக்கிடுவதுதான். ஓர் இயக்குநர், இயக்கத்தோடு சேர்த்து எழுத்தாளராகவும் இருக்கிறார், மற்ற வேலைகளையும் செய்ய விரும்புகிறார். அது தவறான ஒன்று என நினைக்கிறேன். ஒரு திரைப்படத்திற்கு பின்னால் இருக்கும் ஒவ்வொரு துறையிலும் திறமை வாய்ந்த பலர் உள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

ஒரு நல்ல எழுத்தாளர் இருந்தால் எழுதுவதற்கான வாய்ப்பை அவருக்கு கொடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, பணம் சம்பாதிக்க அவரது துறையிலும் தலையிட்டு, அதையும் தானே செய்ய முற்படக்கூடாது. எனது படங்களில், மற்ற துறைகளில் நான் தலையிடுவதில்லை. என்னை இயக்கச் சொன்னால், மற்றவைகளை பற்றிக் கவலைப்படாமல் இயக்கத்தை மட்டுமே சந்தோஷத்தோடு கவனிப்பேன்.

நான் இயக்குநராக இருப்பதால் மட்டுமே அனைத்திலும் அதிகாரம் செலுத்த வேண்டும் என நினைக்கக் கூடாது. அதே நேரத்தில், உங்களுக்கு என சிறந்த அணி ஒன்று அமைந்தால் தான், சிறப்பாக செயல்பட முடியும், ஏனென்றால் சினிமா எடுப்பது ஒரு கூட்டு முயற்சியே.

உத்தம வில்லை திரைப்படத்தை என்னால் அமைதியாக இயக்க முடிந்ததற்குக் காரணம், இசையை ஜிப்ரான் கவனித்துக் கொள்வார், எனவே அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை, அதே போல் உடையலங்காரத்துக்கான பணிகளை கவுதமி பார்த்துக் கொள்கிறார். அவை சிறப்பாகவே இருக்கும். எனவே அதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை"

இவ்வாறு ரமேஷ் அரவிந்த் கூறியுள்ளார்.

தற்போது உத்தம வில்லன் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணியில் ஈடுபட்டுள்ளார் ரமேஷ் அரவிந்த். திரைப்படம் இந்த வருட முடிவில் வெளி வரலாம் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE