இன்றைக்கு ஏதேனும் பிரச்சினையோ அத்துமீறலோ என்றால், ‘மீ டூ’ வந்துவிட்டது பெண்களுக்கு. முழுத்தீர்வையும் தருகிறதோ இல்லையோ, தைரியத்தைத் தந்திருக்கிறது. ஆனால் அன்றைக்கு அப்படியில்லை. அலுவலகத்தில் ஆணாதிக்க, அதிகார வர்க்கத்தின் தொல்லைகளைச் சமாளிக்க, மூன்று பெண்கள் சேர்ந்து அடிக்கும், அலப்பறைதான் ‘மகளிர் மட்டும்’.
யூனியன் பிரச்சினையால் ஸ்டிரைக். இதில் வேலை இல்லாமல் கணவன் வீட்டில் கைக்குழந்தையுடன் இருக்க, அலுவலகம் செல்கிறார் ஜானகி. குடிகார சைக்கிள் ரிக்ஷா ஓட்டும் புருஷனை சமாளித்து, அலுவலகத்தில் க்ளீனிங் ஒர்க் வேலைக்குச் செல்வதற்குள் பாப்பம்மாவுக்கு போதும்போதும் என்றாகிவிடுகிறது.
‘கையில இவ்ளோ பணம் கொடுங்க. இத்தனை பவுன் நகைகள் போடுங்க. நாங்களும் பையனை கஷ்டப்பட்டு படிக்கவைச்சிருக்கோம்ல’ என்று மாப்பிள்ளை வீட்டாரின் லிஸ்ட்டுகளைக் கண்டு ஆவேசமாகி, சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு வருகிறார் சத்யா.
சத்யா - ரேவதி. பாப்பம்மா - ரோகிணி. ஜானகி - ஊர்வசி. இதில் பொருளாதார ரீதியாக, சத்யா மேல்தட்டு. ஜானகி நடுத்தரக் குடும்பம். பாப்பம்மா விளிம்பு நிலை. இந்த மூவரும் வெளிநாட்டுக்கு ஆடைகள் தயாரித்து அனுப்பும் நிறுவனத்தில் வேலை பார்க்கின்றனர்.
அந்த அலுவலகத்தின் மேலாளர் பாண்டியன். சபலக்கேஸ். சமய சந்தர்ப்பம் என்று இல்லாமல், எல்லாப் பெண்களுக்கும் ரூட் போடுகிற ஜொள்ளு பார்ட்டி.
ரேவதியிடம் ஒருவகையில் அத்துமீறுகிறார். ஊர்வசியிடம் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி உரசுகிறார். ரோகிணியிடம் கட்டிப்பிடித்து அத்துமீறுகிறார். இந்த மூன்றுபேருக்கும் மூக்கன் என்கிற மேலாளர் பாண்டியனின் கொட்டத்தை அடக்கவேண்டும். அதற்கு முன்னதாக, மேனேஜருக்கு கூஜா பிடிக்கும் ஆள்காட்டி, மாதவியை (‘பசி’ சத்யா) தட்டி உட்கார வைக்கவேண்டும் என்பதே சிந்தனை.
ஒருகட்டத்தில், ஊர்வசியிடம் ஃபைல் எடுத்துவரச் சொல்கிறார் மேலாளர் பாண்டியன் (நாசர்). அந்த ஃபைலைக் காணோம். 'பசி' சத்யா எடுத்து ஒளித்து வைத்துக்கொள்கிறார். அதை ரோகிணி பார்த்துவிடுகிறார். எல்லார் முன்பும் இந்த விஷயத்தைப் போட்டு உடைக்கிறார் ரோகிணி. இதில் 'பசி' சத்யா மாட்டிக்கொள்கிறார். மூவரும் இன்னும் இணைகிறார்கள்.
அலுவலகத்தில், நாசருக்கு காபி போட்டுக்கொடுக்கும் பணியும் ஊர்வசியுடையது. இதில் எலி மருந்து டப்பாவும் சர்க்கரை டப்பாவும் ஒரேமாதிரி இருப்பதை, ஏற்கெனவே ரோகிணியிடம் சொல்லிக் குறைபட்டுக் கொண்டிருப்பார் ஊர்வசி. ‘கீழே இருக்கிற எலி மருந்து டப்பாவை, ஏன் டேபிள் மேல வைக்கிறே’ என்று திட்டியிருப்பார்.
இந்த நிலையில், நாசர் காபி கேட்க, அப்போது டேபிளில், எலி மருந்து டப்பா இருக்க, அதை சர்க்கரை என்று நினைத்து, காபியில் கலந்து நாசருக்குக் கொடுப்பார். நாசரின் சுழல் நாற்காலியில் கொஞ்சம் டேமேஜ். ஏற்கெனவே விழுந்திருப்பார். ‘இதை சரிபண்ணுங்க’ என்று திட்டியிருப்பார். ஆனால் சரி செய்திருக்கமாட்டார்கள்.
ஊர்வசி வைத்துச் சென்ற காபியை எடுக்க முனையும் போது அந்த சுழல் நாற்காலியால் விழுந்து மயங்கிவிடுவார் நாசர். காபி கோப்பை ஒருபக்கம், சிந்திய காபி ஒருபக்கம், நாசர் ஒரு பக்கம் மயக்கத்தில்... என்றிருப்பதைப் பார்த்த ரேவதி, மருத்துவமனைக்குக் கொண்டு செல்வார்.
இந்த விஷயம் ஊர்வசிக்கும் ரோகிணிக்கும் தெரியவந்து, அவர்களும் ஆஸ்பத்திரி செல்வார்கள். தீவிரவாதி சயனைடு சாப்பிட்டு செத்துப் போயிருக்க, போலீஸார் தீவிரவாதி உடலுடன் அங்கே வர, போலீஸைப் பார்த்து இவர்கள் பயப்பட, ‘ஸாரி இன்ஸ்பெக்டர். இறந்துட்டாரு இவரு’ என்று டாக்டர் சொல்ல, அது நாசரைத்தான் சொல்லுகிறார் என்று இந்த மூன்று பேரும் பதறிப்போவார்கள்.
அந்த பாடியை பிரேதப் பரிசோதனை செய்யும்போது காபியில் விஷம் கலந்தது தெரிந்துவிடும் என்பதால், பாடியைக் கடத்தத் திட்டமிடுவார்கள். இந்தக் களேபரத்தில், தீவிரவாதியின் உடலை எடுத்துக்கொண்டு வந்துவிடுவார்கள். அந்தத் தீவிரவாதி... நாகேஷ்.
ஒருவழியாக இது ஓய்ந்திருக்க, நாசருக்கு எலிமருந்து விஷயம் தெரியவரும். இதைவைத்தே மூன்று பேரையும் ப்ளாக்மெயில் செய்து அனுபவிக்க ப்ளான் போடுவார். அவரின் இந்த ப்ளானையே சாதகமாக்கிக்கொண்டு, அவரைப் பழிவாங்க இவர்கள் ப்ளான் போடுவார்கள்.
இறுதியில், என்னானது, இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி விழுந்ததா... என்பதை சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருப்பதுதான் ‘மகளிர் மட்டும்’.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்த படம். கதை, திரைக்கதை, வசனத்தை கமல்ஹாசன் கிரேஸிமோகனுடன் இணைந்து எழுதியிருப்பார். சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கம். இளையராஜாவின் இசையில் திருநாவுக்கரசின் ஒளிப்பதிவில் மிகச் சிறப்பான படம் என்று எல்லோரும் கொண்டாடிய படம் இது.
ரேவதி, ஊர்வசி, ரோகிணி என மூவரின் நடிப்புமே அசத்தல் ரகம்தான். அதிலும் அப்பாவித்தன ஊர்வசியும் வார்த்தைக்கு வார்த்தை கவுன்ட்டர் கொடுத்துக்கொண்டே இருக்கிற ரோகிணியும் நின்று நிதானித்து செயல்படுகிற ரேவதியும் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அமர்க்களப்படுத்திவிடுவார்கள். இதில் கூடுதல் ஸ்பெஷல்... பக்கா சென்னை பாஷையில் ரோகிணி கலக்கியெடுத்திருப்பார்.
‘என்ன தைக்கிறே?’ என்று 'பசி' சத்யா கேட்பார். ‘சல்வார் கமீஸ்’ என்பார். உயரம் ரொம்ப கம்மியா இருக்கு. இது சல்வார் கம்மீஸ். ஜப்பானுக்குத்தான் அனுப்பணும்’ என்பார்.
பட்டுப்புடவை வாங்க கடைக்குச் செல்வார் ஊர்வசி. ஒரேநிமிடத்தில் புடவையை செலக்ட் செய்வார். ஆச்சரியப்பட்டுப் போவார் கடைக்காரர். ‘இது எனக்கில்ல. இன்னொருத்தருக்கு’ என்பார். ‘அதானே பாத்தேன்’ என்பார்.
விஷம் கலந்து, அதனால் நாசர் இறந்துவிட்டதாக நினைத்து, வேறொரு பிரேதத்தை எடுத்து வரும் வேளையில், உடன் வேலை பார்க்கும் பெண்மணி, குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பார். ‘லீவு தரமாட்டேன், பணம் தரமாட்டேன்னு சொன்ன அந்த மேனேஜரை கழுத்தை நெரிச்சுக் கொல்லணும்’ என்பார் அவர். உடனே ரோகிணி, ‘நீ நெனைச்சே... இவங்க...’ என்று இழுப்பார்.
ஆஸ்பத்திரியில் இருந்து தீவிரவாதி பாடியைக் காணோம் என்று இன்ஸ்பெக்டர், மேலதிகாரிக்கு போன் செய்து தகவல் சொல்வார். வீட்டில், கட்டிலில் அமர்ந்து ‘என்னய்யா நீங்க?’ என்று திட்டுவார். அப்போது பாத்ரூமில் இருந்து குளித்துவிட்டு அவரின் மனைவி வருவார். ‘என்னாச்சுங்க’ என்பார். ‘பாடி மிஸ்ஸிங்’ என்பார். ‘நானும் அதைத்தாங்க தேடிட்டிருக்கேன்’ என்று சொல்ல, தியேட்டரே சிரித்துக் களைக்கும்.
ஆஸ்பத்திரி. ஸ்ட்ரெக்சரில் நாகேஷ் உடலை விட்டுவிட, அதை ஒரு முறுக்கு மீசை போலீஸ் பிடித்துவிடுவார். ‘மாட்டுனோம்டா’ என்று ஊர்வசியும் ரோகிணியும் பதைபதைத்து நிற்க, ‘என்னம்மா, பார்த்து வரக்கூடாதா’ என்று கீச்சுகீச்சுக் குரலில் சொல்லிவிட்டுப் போவார். அடுத்து, பெரிய டாக்டர் வி.எஸ்.ராகவனிடம் மாட்டுவார்கள். ‘ஏன் இந்தப் பக்கமா போறீங்க?’ என்று கேட்க, ‘நாங்க குறுக்கால போயிடுவோம்’ என்பார் ரோகிணி. ‘பணத்தைக் கொடுத்து சீட்டு வாங்கிட்டு படிச்சிட்டு வந்துடவேண்டியது’ என்று போகிற போக்கில் ஒரு குத்தல் என்று காமெடி றெக்கை கட்டி பறக்கும்.
இப்படி படம் நெடுக, வார்த்தை விளையாட்டுகளாலும் சின்னச் சின்ன காமெடிகளாலும் பெண்களுக்கு நேரும் டீஸிங்குகளையும் டார்ச்சர்களையும் பளீர் பொளேரெனச் சொல்லியிருப்பார்கள். கிரேஸி மோகனுக்கு ஸ்பெஷல் பொக்கே.
இறந்த நாகேஷை வைத்துக்கொண்டு அடிக்கும் லூட்டி, வயிற்றை சிரித்துச் சிரித்தே பதம் பார்க்கும். பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு செல்ல, பக்கத்தில் இருப்பவர்கள் பலரும் அந்த சுடுகாடு, இந்த சுடுகாடு என்றே டிக்கெட் கேட்பார்கள். ‘டிக்கெட் எடுத்தாச்சா?’ என்று நாகேஷிடம் கண்டக்டர் கேட்க, ‘அவரு எப்பவோ டிக்கெட் எடுத்துட்டாரு’ என்று ரோகிணி சொல்ல, ஆரவாரக் கைத்தட்டல். அது அடங்குவதற்குள், ரோகிணியின் கணவர் தலைவாசல் விஜய், தன் மனைவியின் தோளில் கைபோட்டிருக்கிற நாகேஷைப் பார்த்து ஆத்திரமாவார். அவர் போதைக்குப் பிணத்துடன் சண்டை போடுவார். பிணமாக இருந்தே அப்ளாஸ் அள்ளிக்கொள்வார் நாகேஷ்.
வில்லனாகப் பார்த்துப் பழகிய நாசர்தான் இதில் நாயகன். அதுவும் காமெடி நாயகன். ரேவதிக்குப் பட்டுப்புடவை பிடிக்கும் எனத் தெரிந்துகொண்டு, ஊர்வசியிடம் வாங்கிவரச் சொல்லுவதும் அங்கே நாசரின் மனைவி ரேணுகாவிடம் வத்திவைப்பதும், அதை ரேவதிக்குக் கொடுக்க, அவர் கடுப்பாவதும், பிறகு ரோகிணிக்குக் கொடுத்து அணைக்க முற்பட, ‘இன்னா சார், சினிமா டயலாக்லாம் வுடுறே’ என்று ரோகிணி எகிறுவதும், அப்போது அங்கே வந்த மனைவி ரேணுகாவிடம் நொந்து போய் புடவையைக் கொடுப்பதும் என இந்தத் தருணங்களில் நாசரின் நடிப்பும் அவரின் அசடு வழிதலும் பிரமாதம்.
இறுதியில், நிறுவனத்தின் முதலாளியாக கமல் வருவது சர்ப்ரைஸ். அலுவலகத்தில் இருக்கிற செவிட்டுக் கிழவனார், நிர்வாகத்தின் உளவுத்துறை என்பதும், குழந்தைகளுக்கு ஓர் அறையை அலுவலகத்தில் ஒதுக்குவதும், மேனேஜர் நாசருக்கு பனிஷ்மெண்ட் தருவதும், யூனியன் பிரச்சினையில் வேலையை இழந்த ஊர்வசியின் கணவருக்கும் குடித்துவிட்டு தொல்லை கொடுக்கிற ரோகிணியின் கணவருக்கும் நல்ல வேலைக்கு சிபாரிசு செய்து வைத்திருப்பதும் முத்தாய்ப்பாக, ரேவதியிடம், ‘என்னைக் கல்யாணம் செஞ்சிக்கிறீங்களா?’ என்று கமல் கேட்பதும் என சுபம் சுபமாக முடிந்து, தியேட்டரை விட்டு, சிரித்த முகத்துடன் வெளியே வந்தார்கள் ரசிகர்கள்.
ஊர்வசியின் அப்பாவித்தனம் ஒருபக்கம் கைத்தட்டல்களை அள்ளும். ரோகிணியின் மெட்ராஸ் பாஷையால் இன்னொரு பக்கம் விசில் பறக்கும். தமிழகத்தின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் வசந்தகுமாரியையும் திரையில் காட்டியிருப்பார்கள். மகளிர் மட்டும் பேருந்தை தொடக்கத்தில் காட்டி, டைட்டில் ஓட ஆரம்பிக்கும்.
‘மகளிர் மட்டும் அடிமைப்பட்ட...’ என்ற பாடல், ‘மொத்து மொத்துன்னு மொத்தணும் மொத்தணும்’, ‘கறவை மாடு மூணு காளை மாடு ஒண்ணு’ என்று எல்லாப் பாடல்களும் செம ஹிட்டு. இதில் சுவாரஸ்ய ஆச்சரியம்... படத்தில் ஒரே நாயகன். ஆனால் எஸ்.பி.பி, எஸ்.என்.சுரேந்தர், தீபன் சக்கரவர்த்தி என மூன்று ஆண் குரல்களும் பாடியிருக்க, மூன்று நாயகிகள் இருந்தாலும் பின்னணியில் ஒரே நாயகி எஸ்.ஜானகி, மூவருக்கும் விதம் விதமாகக் குரல் கொடுத்துப் பாடி அசத்தியிருப்பார்.
மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்தத் திரைப்படம், 94-ம் வருடம், பிப்ரவரி மாதம் 25-ம் தேதி வெளியானது. அதாவது, இன்றுடன் மகளிர் மட்டும் படம் வெளியாகி, 25 வருடங்களாகிவிட்டன.
இன்றைக்கும் தொலைக்காட்சியில் ’மகளிர் மட்டும்’ ஒளிபரப்பினால், குடும்பத்துடன் உட்கார்ந்து குதூகலிக்கிறார்கள் மக்கள். சிரித்துச் சிரித்து, இன்றைய டென்ஷனையும் ஸ்ட்ரெஸ்ஸையும் டிப்ரஷனையும் தொலைப்பதற்கான அருமருந்துகளில் ‘மகளிர் மட்டும்’ படமும் ஒன்று!
வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ’மகளிர் மட்டும்’ குழுவினருக்கு வாழ்த்துகள்!
முக்கிய செய்திகள்
சினிமா
59 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago