ஐக்கிய நாடுகள் அவையின் அந்த அறிக்கையை வாசிக்கும் யாருக்கும் துக்கம் தொண்டையை அடைக்கும். 2018-ம் ஆண்டு வரை சொந்த நாட்டை விட்டு பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்தவர்களின் எண்ணிக்கை சுமார் ஏழு கோடி பேர் என்கிறது ஐநா. அதில் இரண்டரை கோடி பேர் அகதிகளாகவே இருக்கின்றனர். அவர்களில் 51% பேர் குழந்தைகள். அதிலும் நம்மைக் கலங்கச் செய்யும் தகவல் இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களின் பெற்றோர்களிடமிருந்து பிரிந்து வேறொரு நாட்டுக்குப் தனியே பயணம் மேற்கொள்வதாகக் கூறுகிறது.
பல நாடுகள் அகதிகளுக்கு உதவிக்கரம் நீட்டினாலும் சில நாடுகள் அவர்களை அனுமதிப்பதில்லை. அகதிகளாக தஞ்சம் புகுந்த நாடுகளில் நிலவும் கலாச்சாரம், மொழி, சட்டங்கள், குடியுரிமை விதிமுறைகள் புரியாததால் இவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். சில சமயங்களில் வேறொரு நாட்டின் எல்லைப் பகுதியில் யாருக்கும் தெரியாமல் உள்ளே புகுந்துவிட முயற்சிக்கும்போது பிடிபட்டால் பலமான தாக்குதல்களும் உயிர்களும் நிகழ்கின்றன.
சொந்த மண்ணிலிருந்து வாசனை அறியாத அந்நிய மண்ணில் நுழைந்து உயிரையும் வாழ்வையும் தேடும் அகதிகளின் வாழ்க்கையை உலக சினிமா ஓரளவுக்குப் பேசியிருக்கிறது. ஆனால் வலிமிகுந்த இவ்வகைப் படங்கள், திரைப்பட விழாக்களில் இடம்பிடிப்பதில் கூட அந்த அகதிகளின் போராட்டத்தையே சந்திக்கின்றன. அறியப் படாத இவ்வகைப் படங்களுக்கான அறிமுகத்தை சென்னை லயோலா கல்லூரியின் லைவ் (LIVE-Loyola Institute of Vocational Education)கல்வித் துறை சர்வதேசத் திரைவிழா நடத்தில் திரையிடுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக வெவ்வேறு தலைப்புகளில் படவிழாக்களை நடத்திவரும் லைவ் இம்முறை, ‘புலம் பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் வாழ்க்கை’ என்ற கருத்தாக்கத்தில் உருவாகி உலக அளவில் கவனம் பெற்ற திரைப்படங்களைத் திரையிடுகிறது.
பிப்ரவரி 19 முதல் 22 வரை
livegif50
பிப்ரவரி 19-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை மூன்று நாட்கள் நிகழ இருக்கும் இந்த உலகப்பட விழாவில் 12 முழு நீள திரைப்படங்களும், ஏழு குறும்படங்களும் திரையிடப்பட இருக்கின்றன. இந்தியாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான கௌதம் கோஸ் (goutam ghose)இயக்கிய 'ஷங்காச்சில்' (Shankhachil)என்ற திரைப்படம் திரையிடப்படுவதுடன் அவர் இவ்விழாவில் முக்கிய விருந்தினராகவும் கலந்துகொள்கிறார். இலங்கையிலிருந்து இயக்குநர் சுஜீத், கேரளாவிலிருந்து இயக்குநர் மகேஷ் நாராயணன், ஜெர்மனி நடிகர் வசிலிஸ் கௌலகானியும் (vassilis koulakani) ஆகியோருடன் ஒவ்வொரு நாளும் ப்யூர் சினிமாவுக்காக தமிழ் திரைப்பட உலகில் போராடிவரும் இயக்குநர்கள், சிறந்த நடிப்புக் கலைஞர்கள் இப்பட விழாவில் தினசரி கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
ஷங்காச்சில்: (Shankhachil)
கௌதம் கோஸ் இயக்கிய இந்தப் படத்தின் கதை இந்தியா - பங்களாதேஷ் எல்லைப் பகுதியில் நடைபெறுகிறது. தங்கள் இளம் மகளின் சிகிச்சைக்காக ஒரு இஸ்லாமியக் குடும்பம், இந்து பெயர்களை தங்கள் அடையாளமாகக் கொண்டு கொல்கத்தாவிற்கு வருகிறது. அதனால் அவர்கள் அடையப்போகும் பிரச்சினைகளை உணர முடியாமல். இந்தக் கதையை நெஞ்சை உருக்கும் வகையில் திரையில் எடுத்துக் காட்டியுள்ளார் கௌதம் கோஸ்.
டேக் ஆஃப் : (Take off)
ஈராக் நாட்டில் 2014-ம் ஆண்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் ஏற்பட்ட கலவரத்தின்போது அந்த நாட்டின் அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரிந்து வரும் கேரள மாநிலத்தை சேர்ந்த செவிலியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. அவர்கள் எப்படி மீட்கப்பட்டனர் என்பதை மிகவும் புல்லரிக்கும் விதமாக திரைப்படம் உருவாக்கியிருக்கிறார் மகேஷ் நாராயணன்.
டெஸரிட்ட: (Desierto)
மெக்ஸிகோவிலிருந்து பல இளைஞர்கள் ஒரு குழுவாக ஒரு ஏஜென்டின் துணையுடன் அமெரிக்காவிற்குள் ஊடுருவ முற்படும்போது ஒரு அமெரிக்கன் தன்னை நாட்டின் பாதுகாவலனாக நினைத்துக்கொண்டு அந்த இளைஞர்களைக் குறி தவறாமல் சுட்டுத் தள்ளுகிறான். அவனுடைய முரட்டு நாயும் இந்தக் கோர தாக்குதலில் அவனுக்கு துணை நிற்கிறது. மயிர்க்கூச்செரியும்படியான காட்சி அமைப்புகளை கொண்டுள்ள இந்தப் படத்தை பிரபல இயக்குநர் ஜோனாஸ் க்யுரான் (Jonas cuaron)இயக்கினார். படம் 2015-ம் ஆண்டு வெளியானது.
தி லாஸ்ட் ஹால்ட் (the last halt)
இலங்கையிலிருந்து ஓர் இளம்பெண் தன் மேற்படிப்பைத் தொடரும் முடிவுடன் இங்கிலாந்து செல்கிறாள். தூரத்து உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கிக் கொண்டு மேற்படிப்பிற்கான முயற்சிகளை அவள் எடுக்கும்போது , அந்த உறவினர்கள் ஏதோ சிறு காரணத்திற்காக அவளைத் துரத்தி விட தன்னந்தனியே தவிக்கிறாள். ஆயினும் இலங்கையில் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று கொண்டிருக்கும் தன் பெற்றோர்களுக்கு தன உண்மை நிலைமையைச் சொல்லாமல், தான் நன்றாய் இருப்பதாய் கூறுகிறாள். ஏதாவது வேலை ஒன்று கிடைத்தால் அதன் மூலம் அந்த நாட்டில் முறைப்படி தங்கிப் படிப்பதற்கு முயற்சி செய்யலாம் என்று பலவாறு முயற்சிகள் எடுக்கிறாள். அவளுடைய எண்ணம் ஈடேறுமா என்பதை மிகவும் உணர்வுப்பூர்வமாக சித்தரிக்கிறது இந்தப் படம். இவற்றைத் தவிர இவ்விழாவில் பல படங்கள் நம் சிந்தனையைத் தூண்டும். நெகிழ வைக்கும். மனித நேயத்தை வளர்க்கும்.
இத்திரைப்பட விழா ஊடகம் மற்றும் சினிமாத் துறை படிப்புகளைச் சார்ந்த மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள முன்பதிவு செய்தல் அவசியம். 9789016557, 9500092712 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம். திரைப்படவிழா மடலை மின்னஞ்சலில் பெற live@loyolacollege.edu. மேலும் விவரங்களை www.loyolacollege.edu/live/FilmFestival.php என்ற இணைப்பில் அறிந்துகொள்ளுங்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago