மிருதங்கம் செய்யும் தொழிலாளியின் மகன் மிருதங்க வித்வானாக விரும்பினால் அவனுக்கு எதிராக பிரச்சினைகள் முளைத்தால் அதுவே 'சர்வம் தாளமயம்'.
படிப்பு என்றாலே அலட்சியத்துடன் இருக்கும் ஜீ.வி.பிரகாஷ் விஜய் பட ரிலீஸ் என்றால் மட்டும் உற்சாகமாகி டிரம்ஸ் வாசித்து தியேட்டரையே அதகளப்படுத்துகிறார். ஒருநாள் அப்பா செய்த மிருதங்கத்தை வித்வான் நெடுமுடி வேணுவிடம் கொடுப்பதற்காக மியூசிக் அகாடமி செல்கிறார். அங்கே நெடுமுடி வேணுவின் வாத்தியத் திறமையில் லயிக்கிறார். இலக்கே இல்லாமல் திரிந்த ஜீ.வி.பிரகாஷ் அந்தக் கணத்தில் இருந்து நெடுமுடி வேணுவிடம் மிருதங்க வாத்தியம் கற்றுக்கொள்ளத் துடிக்கிறார்.
ஆனால், அவரது சாதி அதற்குத் தடையாக இருக்கிறது. நெடுமுடி வேணுவின் உதவியாளர் வினீத் ஜீ.வி.பிரகாஷை வேணுவின் வீட்டுக்குள்ளே விடுவதற்குக் கூட அனுமதி தர மறுக்கிறார். இந்த சூழலில் சாதி வேறுபாடுகளைக் கடந்து மிருதங்கம் கற்றுக்கொள்வது சாத்தியமா, அதற்கு குரு சம்மதிப்பாரா, குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டுமே சொந்தம் என்று கொண்டாடும் கர்நாடக சங்கீதத்தை ஜீ.வி.பிரகாஷ் கைவரப் பெற்றாரா, மிருதங்கம் செய்யும் ஒரு குடும்பம் அதை வாசிப்பதற்கான சுதந்திரம் இங்கு இருக்கிறதா போன்ற கேள்விகளுக்கு திரைக்கதையால் பதில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராஜீவ் மேனன்.
கிராமங்களில் இன்னமும் கடைபிடிக்கப்படும் சாதிப் பாகுபாட்டையும், நகரங்களில் அது வேறுவிதமாக பின்பற்றப்படுவதையும் பின் சாதி மறந்த சமூகத்துக்கு நகரம் எப்படி வழிகோலுகிறது என்பதையும் இயக்குநர், ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் மிக சாமர்த்தியமாகப் பதிவு செய்துள்ளார்.
ஜீ.வி.பிரகாஷுக்கு 'சர்வம் தாளமயம்' 9-வது படம். ஆனால், நடிப்பில் முதலாவது படம் என்று கூட சொல்லலாம். விட்டேத்தி இளைஞனாக, ஜாலி கேலி செய்துகொண்டிருந்த ஜீ.வி. தன் பொறுப்பை உணர்ந்து கான்செப்ட் சினிமாவில் நடித்திருக்கிறார். விஜய் ரசிகனாக பீட்டர் கதாபாத்திரத்தில் அறிமுகமாகும் காட்சியில் ஜீ.வி. வழக்கமாகவே தெரிந்தார். சர்ச் காட்சியைத் தாண்டி பீட்டர் என்ற இளைஞனுக்கான கேரக்டர் ஸ்கெட்ச்சை கண்முன் நிறுத்திய விதத்தில் ஜீ.வி. தான் ஒரு நடிகன் என்பதை நிரூபித்திருக்கிறார்.
டீன் ஏஜ் முடிந்த இளைஞனுக்கு இருக்கும் குழப்பம், பெண் மீதான பருவ ஈர்ப்பு, எந்தக் குறிக்கோளும் இல்லாமல் திசை தெரியாமல் செல்லும் வாழ்க்கையின் தடுமாற்றம், இசை மீதான காதல், குருவின் மீதான தூய்மையான பக்தி, காதலி அருகிருந்தும் முழுமையடையாமல் இருக்கும் ஏக்கம், புறக்கணிப்பின் வலி என அத்தனை உணர்வுகளையும் பக்குவமாக வெளிப்படுத்துகிறார். ஜீ.வி.யின் நடிப்பில் இது பெஸ்ட் படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
சாதி எல்லாம் எனக்கு பிரச்சினை இல்லை, குரு - சிஷ்யன் என்ற பாரம்பரிய முறையும், ஒழுக்கமுமே கலையைக் கற்றுக்கொள்ள அடிப்படைத் தகுதிகள் என்பதை மிக லாவகமாகச் சொல்கிறார் நெடுமுடி வேணு. குருவாக, வழிகாட்டியாக ஜீ.வி.யை மெருகேற்றும் விதத்தில் தான் தேர்ந்த ஆசான் என்பதை நிறுவுகிறார். ஸ்கைப் போன்ற தொழில்நுட்பத்தில் இசைக் கலையைக் கற்றுக்கொள்ள முடியாது என்பதையும் மிக அழகாகப் பதிவு செய்கிறார். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் படத்தை ஒற்றை ஆளுமையாகத் தூக்கி நிறுத்துகிறார் நெடுமுடி வேணு.
''நீ ஒரு வேம்பு ஐயரோட வெற்றியைப் பார்த்துட்டுப் பேசுற, நான் நூறு வாத்தியக்காரனோட வறுமையைப் பார்த்துப் பேசுறேன்'' என்ற தகப்பனின் தவிப்பையும், பொருளாதார ஏற்ற இறக்கத்தின் நிதர்சனத்தையும், மிருதங்கம் செய்யும் தொழில் மீதான தன் உழைப்பையும் இளங்கோ குமரவேல் கதாபாத்திரம் நமக்கும் கடத்துகிறது. வழக்கத்தைக் காட்டிலும் நேர்த்தியான, நுட்பமான நடிப்பில் இளங்கோ குமரவேல் மிளிர்கிறார்.
ஆதிரா பாண்டிலட்சுமி ஜீ.வி.யின் அம்மாவாக பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். வினீத்தின் நடிப்பு அமர்க்களம். ஜீ.வி.யின் காதலியாக வரும் அபர்ணா பாலமுரளி மிகச்சிறந்த ஊக்க சக்தியாகத் தடம் பதிக்கிறார். திவ்யதர்ஷினி, பாலாசிங், மாரிமுத்து, சாந்தா தனஞ்செயன், சுமேஷ் நாராயணன் ஆகியோர் கதையின் போக்கில் கவனிக்க வைக்கிறார்கள்.
ரவி யாதவின் ஒளிப்பதிவு படத்துக்கு வலு சேர்க்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மாயா மாயா, எப்போ வருமோ எங்க காலம் பாடல்கள் ரிப்பீட் ரகம். பின்னணி இசையில் ரஹ்மான் ரசிக்க வைக்கிறார். வரலாமா பாடலுக்கு மட்டும் ராஜீவ் மேனன் இசையமைத்துள்ளார். அவரின் இசையறிவு ஈர்க்கிறது.
தாளத்தை அடிப்படையாக வைத்து கதை எழுதலாம். ஆனால், திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாவிட்டால் படம் போரடித்துவிடும். இசை நுணுக்கங்கள் ரசிகர்களுக்குப் புரியாவிட்டாலும் அலுப்பு ஏற்படும். இதன் சிரமங்களை உணர்ந்தே அழகான திரைக்கதையால் நம்மை கட்டிப்போடுகிறார் ராஜீவ் மேனன். குரு - சிஷ்யன் பாத்திர வார்ப்பில் அவரது உழைப்பு பளிச்சிடுகிறது.
அரசு இசைக்கல்லூரியில் இருக்கும் இட ஒதுக்கீடு, கிராமங்களில் இன்னமும் கடைபிடிக்கப்படும் இரட்டைக் குவளை, ரியாலிட்டி ஷோக்களின் நிலை ஆகியவற்றைத் தொட்டுச் சென்றிருப்பதும் இயக்குநரின் அக்கறையைக் காட்டுகிறது. லைவ் சவுண்டை மட்டும் படத்தில் பயன்படுத்தியதற்கு வாழ்த்துகள்.
தொடர்ந்து முட்டுக்கட்டை போடும் இசைக்கலைஞரும் ஒருகட்டத்தில் இசையின் லயத்தில் மனமாற்றம் அடைவதைக் காட்சிப்படுத்தி இருப்பதும் சிறப்பு. இனம், மதம், மொழி கடந்து ஜீ.வி. இசையைக் கற்க மேற்கொள்ளும் பயணத்தை ரியாலிட்டி ஷோவில் பயன்படுத்திக்கொண்ட விதம் ராஜீவ் மேனின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. விஜய் ரசிகர் என்பதற்கான முன்னெடுப்புகள், பயணத்துக்கான முன் தயாரிப்புகள், பயண அனுபவங்கள் என்று சில குறைகள் மட்டுமே உள்ளன. ஆனால், அது கதையின் போக்கில் காணாமல் போகின்றன.
இசை ரசிகராக இல்லாவிட்டாலும் கச்சிதமான, தரமான படம் பார்க்க நினைப்பவர்களுக்கு 'சர்வம் தாளமயம்' நல்ல அனுபவத்தைத் தரும்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago