திரையரங்கில் சட்ட விரோதமாக வீடியோ எடுத்தால் சிறை தண்டனை

By செய்திப்பிரிவு

திரையரங்கில் சட்ட விரோதமாக வீடியோ எடுத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்டத் திருத்த மசோதா விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.

வீடியோ பைரசியால் சினிமாத்துறையினர் பாதிக்கப்படுகின்றனர். எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் இந்த வீடியோ பைரசியை மட்டும் இன்னும் கட்டுப்படுத்த முடியவில்லை. குறிப்பாக, தமிழ் சினிமா இந்த பைரசியால் தவித்து வருகிறது.

சமீபத்தில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதியமைச்சர் பியூஷ் கோயல், வீடியோ பைரசி குறித்து சட்டம் இயற்றப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 1952-ம் ஆண்டு இயற்றப்பட்ட திரைப்பட சட்டப் பிரிவில் திருத்தம் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, திரையரங்கில் அனுமதியின்றி வீடியோ எடுப்பது, அதனைப் பிரதியெடுப்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தில் சார்பில், இதற்கான சட்ட மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE