முதல் பார்வை: வந்தா ராஜாவாதான் வருவேன்

By உதிரன்

கசப்பான சம்பவத்தால் பிரிந்து போன அத்தையை மீண்டும் வீட்டுக்குள் கொண்டுவரப் போராடும் மருமகனின் கதை 'வந்தா ராஜாவாதான் வருவேன்'.

மிகப்பெரிய நிறுவனத்தின் இயக்குநராக வலம் வரும் நாசர் மகளைப் பிரிந்ததால் நிம்மதி இழந்து தவிக்கிறார். பிரச்சினைகளை தனி பாணியில் தீர்க்கும் தன் பேரனிடம் அத்தையை வீட்டுக்குள் அழைத்து வருவதே நீ எனக்குத் தரும் 80-வது பிறந்த நாள் பரிசு என்கிறார். பேரன் சிம்புவும் தாத்தாவின் அன்பை உணர்ந்து அத்தையைப் பார்க்க வெளிநாட்டிலிருந்து சென்னை விரைகிறார். 20 வருடங்களுக்குப் பிறகு அத்தையைச் சந்திக்கிறார்.  அத்தையின் நிலை என்ன, அத்தையின் குடும்பம் எப்படி இருக்கிறது, வீட்டுக்குள் எந்த மாதிரி நுழைகிறார், அத்தையின் மனதை மாற்றினாரா, தாத்தாவுக்கு அவர் கொடுக்கும் பரிசு என்ன, சிம்புவின் காதல் என்ன ஆனது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

தெலுங்கில் ஹிட்டடித்த 'அத்தாரண்டிகி தாரேதி' படத்தை மறு ஆக்கம் செய்திருக்கிறார் சுந்தர்.சி. அவருக்கே உரிய கலகலப்பு படம் முழுக்கப் பரவவிடவில்லை. சென்டிமென்ட் காட்சிகளும் சோபிக்கவில்லை.

படத்தின் கதாபாத்திர கட்டமைப்புப்படி சிம்பு டியூன் ஆகவே சில காட்சிகள் தேவைப்படுகின்றன. எனக்கா ரெட் கார்டு பாடலுக்குப் பிறகே சிம்பு தன் கதாபாத்திரத்துக்குள் முழுமையாய் செல்ல முடிகிறது. அதற்குப் பிறகும் சிம்புவின் ரியல் இமேஜை வைத்து ரீல் கேரக்டருக்கு வசனம் எழுதியிருக்கிறார்கள். ''எவ்ளோ நாளாச்சுல்ல இந்த மாதிரி பன்ச் டயலாக் மாதிரி'', ''என்னை நம்பி கெட்டவங்க யாரும் இல்லை, நம்பாம கெட்டவங்க நிறைய பேரு இருக்காங்க'', ''எல்லார் லவ்வையும் சேர்த்துவைக்க நான் இருக்கேன் என் லவ்வை சேர்த்து வைக்க யார் இருக்கா, ஆளே இல்லை யார் கூட சேர்த்து வைப்ப'' என்ற வசனங்கள் அளவாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதால் ரசிக்க முடிகிறது. 

சிம்புவுக்கு படத்தில் ஒரு காட்சியில் மட்டுமே நடிக்க வாய்ப்பு. அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். டான்ஸ், பன்ச் டயலாக், பாவனை என்று சிம்பு எதிலும் குறை வைக்கவில்லை. ஆனால், அவரின் திரை ஆளுமை மீதான ஈர்ப்பு குறைந்திருக்கிறது. உடல் எடை விஷயத்திலும் அவர் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

ரோபோ ஷங்கர் கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தி சிரிக்க வைக்கிறார். அவரின் ஒன்லைனர்களுக்கு ரசிகர்கள் கரவொலிகளை அள்ளி வழங்குகிறார்கள். யோகி பாபு இரண்டாம் பாதியின் சில இடங்களில் சுவாரஸ்யம் சேர்க்கிறார். 

கேத்ரீன் தெரசாவுக்கு அதிக வாய்ப்பு இல்லை. சில வசனங்கள், ஒரு பாடல் என்று கொடுக்கப்பட்ட இடத்தில் நடித்து விட்டு ஒதுங்கிக்கொள்கிறார். மேகா ஆகாஷுக்கு நடிப்பு இன்னும் கைவரப் பெறவில்லை. சிம்புவுடனான காதல், மோதலில் மட்டும் ஹீரோயின் என்பதை நினைவுபடுத்துகிறார்.

பிரபு, ரம்யா கிருஷ்ணன், சுமன் ஆகியோரை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. நாசர் மகளைப் பிரிந்து வாடும் பாசத் தவிப்பை சில நுட்பமான அசைவுகளில் வெளிப்படுத்தி விடுகிறார். ராதாரவி வீணடிக்கப்பட்டுள்ளார். நான் கடவுள் ராஜேந்திரன், விடிவி கணேஷ், ராஜ்கபூர், மஹத், அமித் திவாரி, விச்சு விஸ்வநாத் ஆகியோர் தேர்ந்த பாத்திர வார்ப்புகள்.

கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவும், ஹிப் ஹாப் தமிழா ஆதியின்  பின்னணி இசையும் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன. பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. டைட்டில் பாடல் கூட ஏனோதானோவென்று கடந்து போகிறது.

''சிங்கத்தோட நின்னு செல்ஃபி எடுக்கணும்னு ஆசைப்பட்டா செல்ஃபி இருக்கும்... நீ இருக்க மாட்டே'', ''கெத்துதான் சொத்து'', ''உங்க மனசை மாத்த முடியுமான்னு தெரியலை. ஆனா என் மனசுல இருக்கிற உண்மை கண்டிப்பா ஜெயிக்கும்'', '' நீ வேஷம் போடுற ராஜா நான் பொறந்ததுல இருந்தே ராஜா'' என்ற செல்வபாரதியின் வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.

தெலுங்குப் படத்தின் ரீமேக் என்றாலும் பல சங்கதிகளை மாற்றி இருக்கலாம். குறிப்பாக மதுரையில் கல்யாண வீட்டில் இருக்கும் மஹத்தை சென்னைக்கு அழைத்து வரும் காட்சிகள் ரொம்ப நீளம்.  அத்தையை வீட்டுக்குள் அழைத்து வர நினைக்கும் சிம்பு யார் என்று அவரே கண்டுகொண்ட பிறகும் தன் பக்க நியாயத்தை ஏன் அவர் சொல்லவில்லை? ஏன் அத்தையின் அன்பைப் பெறவில்லை?

கேத்ரீன் தெரசாவின் காதலைச் சேர்த்துவைக்கப் போராடும் காட்சிகள் பெரிதாக இருப்பதால் படத்தின் மையம் ஆட்டம் காண்கிறது.  அதுவும் நாசர் செய்த காரியத்தை பிரபுவுடன் ஒப்பிட்டுப் பேசுவதெல்லாம் வலிந்து திணிக்கப்பட்ட செயற்கைத்தனம். காமெடி, பாட்டு, சண்டைக் காட்சிகள் என ஃபார்முலா மாறாமல் அடுத்தடுத்து வருவதால் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' டெம்ப்ளேட் சினிமா ஆகிவிடுகிறது.

 

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்