எல்லோருக்கும் பிடித்த நடிகராக இருப்பது என்பது சாதாரண காரியமல்ல. எம்ஜிஆரைப் பிடித்தவர்களுக்கு சிவாஜியும் சிவாஜியின் ரசிகர்களுக்கு எதிர்கோஷ்டியாகத்தான் இருந்தார்கள். கமல் ரஜினிக்கு, அஜித் விஜய்க்கும் கூட அப்படித்தான் இருக்கிறார்கள். இப்படியாக கோடு கிழித்து பிரிந்துகிடக்கும் ரசிகர்களுக்கு மத்தியில், வயது வித்தியாசமில்லாமல் எல்லோருக்கும் பிடித்தமானவராக இருக்கும் நாயக நடிகர்களில்... சிவகார்த்திகேயனும் ஒருவர்.
திருச்சியில் வாழ்ந்த குடும்பம், சிவகார்த்திகேயனுடையது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ள பிரான்மலைதான் சொந்த ஊர். அப்பா காவல்துறையில் ஜெயிலர் பணியில் இருந்தார். கறாரும் கண்டிப்பும் கூடவே கனிவும் கொண்டு குழந்தைகளை வளர்த்தார்.
பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கும் போதே ஒழுக்கமும் படிப்பும் கூடவே தனித்திறமையும் என வளர்ந்தார் சிவகார்த்திகேயன். படிக்கும் போதே மேடையேறினார். மேடையேறிய போதே அங்கு இருப்பவர்களின் மனங்களிலும் ஏறி உட்கார்ந்துகொண்டார்.
பிறகு, விஜய் டிவியில் காம்பியரிங் வந்த போது, பார்க்கிற மொத்த பேரின் கண்களையும் தன் பக்கம் ஈர்த்துக்கொண்டதுதான் சிவகார்த்திகேயனின் முதல் வெற்றி. மேடை பயமில்லாமல், கூச்சமேதும் இல்லாமல், டைமிங்ரைமிங்கில் கவுண்ட்டிங் கொடுத்து, கலாய்த்தெடுத்து, அப்ளாஸ்களை அள்ளிக்கொண்டே இருந்தார்.
ஆக, வெள்ளித்திரைக்குள் மின்னுவதற்கு முன்பே, சின்னத்திரையின் வழியே மிகப்பிரமாண்டமானதொரு இடத்தை நமக்குள் பிடித்திருந்தார்.
மெரினாவில் தொடங்கியது, சிவகார்த்திகேயனின் திரைப் பயணம். அடுத்தடுத்து மனம்கொத்திப்பறவை மாதிரியான படங்களும் எதிர்நீச்சல் மாதிரியான படங்களும் வெரைட்டி பியூட்டி காட்டினார்.
எல்லோருக்கும் பிடித்துப் போனவராகிவிட்ட சிவகார்த்திகேயனை இப்படியான படங்களில் ரசித்தார்கள். அதைவிட, ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’ சிவகார்த்திகேயனின், மார்க்கெட் வேல்யூவையும் அவரிடமுள்ள ஹ்யூமர் சென்ஸ் அதிரிபுதிரிகளையும் எகிறியடித்தன.
தடக்கென்று உயர்ந்துவிடவில்லை. கொஞ்சம்கொஞ்சமாக, வளர்ந்தார். நிறுத்தி, நிதானமாக அடியெடுத்து வைத்து இந்த உயரத்தைத் தொட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இந்தக் கட்டத்தில், அவருடைய ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, மூலைமுடுக்கெல்லாம், பட்டிதொட்டிசிட்டியெல்லாம் பரவியது. மிகப்பெரிய ஹிட்டடித்தது. ரசிகர்களின் ஆல்டைம் ஹிட் பட வரிசையில், இடம்பிடித்தது.
அடுத்து வந்த் ‘ரஜினி முருகன்’ படமும் இவரைக் கைவிடவில்லை. நடுவே, ‘ரெமோ’ மாதிரியும் லவ் சப்ஜெக்ட் பண்ணினார். ‘வேலைக்காரன்’ மாதிரி சமூக அக்கறையுடனும் கதை பிடித்தார்.
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக, தன்னுடைய பள்ளி, கல்லூரி நண்பர்களுக்காக, அவர்களின் திறமையை வெளிக்காட்டவேண்டும் என்பதற்காக, ‘கனா’ படத்தை தயாரித்தார். அப்படி எடுக்கும் படத்தை ஏனோதானோ கதையாக இல்லாமல், விவசாயிகளின் வலிகளைச் சொல்லும் கதையாக, நிகழ்வாக, அதை விளையாட்டுடன் தொடர்புபடுத்தி செவுட்டில் அறைந்தார். ‘கனா’ படத்தின் மூலம், சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய பாராட்டுகள் குவிந்தன. நல்லபேர் சம்பாதித்தார்.
இதனிடையே சென்னை வெள்ளத்துக்கு உதவினார். கஜா புயல் பாதித்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டினார். இயற்கை விவசாயி, நெல் ஜெயராமனின் மருத்துவச் சிகிச்சைக்கு தோள்கொடுத்தார். அவரின் மறைந்ததும் அனைத்து ஏற்பாடுகளுக்குமான உதவிகளை வழங்கினார். அவரின் உள்ளம் கண்டு நெகிழ்ந்தனர் மக்கள்.
சிவகார்த்திகேயன், இப்போதும் அப்போது போலத்தான். பதட்டமில்லை. பரபரப்பு இல்லை. ஆசை இல்லை. ஆவேச ஓட்டமில்லை. நிறுத்தி, நிதானமாக தன் ஒவ்வொரு படத்தையும் தேர்வு செய்கிறார். இன்று வரை எல்லோருக்கும் பிடித்த நடிகராகவே திகழ்கிறார்.
இந்த நிதானம், அவருக்கு வெற்றியையும் புகழையும் சேர்த்துத் தந்துகொண்டிருக்கிறது. இன்னும் தரும்.
சிவகார்த்திகேயனுக்கு இன்று 17.2.19 பிறந்தநாள். அந்த நல்ல மனிதரை, சிறந்த நடிகரை எல்லோரும் வாழ்த்துங்களேன்!
ஹேப்பி பர்த் டே சிவகார்த்திகேயன்!
முக்கிய செய்திகள்
சினிமா
1 min ago
சினிமா
40 mins ago
சினிமா
28 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
18 hours ago