காதலியின் பிரிவால் வாடும் இளைஞன் தன் மனவலிமையை அறிந்துகொள்ளும் நோக்கத்துடன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினால், அப்போது பனிச்சரிவில் சிக்கினால் அவனே 'தேவ்'.
கார்த்தி, அம்ருதா, விக்னேஷ் காந்த் ஆகிய மூவரும் பள்ளிப் பருவத்திலிருந்தே நண்பர்கள். விக்னேஷ் காந்த் ஸ்டாண்ட் அப் காமெடியில் தலைசிறந்து விளங்குகிறார். பயணங்கள் மேற்கொள்வதில் கார்த்திக்கு அலாதி ப்ரியம். திட்டமிட்ட இலக்கு என்று எதுவும் இல்லாமல் பயணம் தரும் மகிழ்ச்சியான அனுபவங்களின் மூலம் வாழ்க்கையை அதன்போக்கில் வாழ்கிறார் கார்த்தி. நண்பர்கள் அம்ருதா, விக்னேஷ் காந்துக்கும் அதையே தத்துவார்த்தமாகச் சொல்கிறார். கார்த்தியுடன் இருந்தால் நிம்மதியாக இருக்க முடியாது என்று நினைக்கும் விக்னேஷ் காந்த் அவரைக் காதலில் விழ வைக்க வியூகம் வகுக்கிறார். ஃபேஸ்புக் மூலம் ரகுல் ப்ரீத் சிங் அறிமுகம் ஆகிறார்.
மிகப்பெரிய நிறுவனம் ஒன்றின் சி.இ.ஓ.வாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங்கின் பின்னணி என்ன, கார்த்தியை ஏன் அவர் கண்டுகொள்ள மறுக்கிறார், அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினை என்ன, ஏன் அந்தக் காதலுக்காக கார்த்தி தன்னை வருத்திக்கொள்கிறார், பிரச்சினைகளைத் தாண்டி அவர்கள் இணைந்தார்களா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.
காதலும் காதல் நிமித்தமுமாக ஒரு படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர். ஆனால், படத்தின் பேசுபொருள் கதையின் மையத்துக்கு நேர்மையாகவும் உண்மையாகவும் இல்லை.
28 வயது இளைஞனுக்கான தோற்றத்தில் கார்த்தியை பொருத்திப் பார்க்க முடியவில்லை. சாகசப் பயண விரும்பியாக தன்னை வடிவமைத்துக்கொள்ளும் விதத்தில் கவனம் ஈர்க்கிறார். விதவிதமான ஆடைகளிலும் பளிச்சென இருக்கிறார். ஆனால், ஆஸம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு கார்த்தி நடிப்பதற்கான ஒரு காட்சி கூட படத்தில் இல்லை. தத்துவார்த்தம் பேசும் கார்த்தியே காதலில் விழுந்த பிறகு சுயசிந்தனையும், தன்னம்பிக்கையும் இல்லாமல் ஒடுங்கிப் போவதும், அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பதும், அதற்காக விபரீத முடிவுக்கு தன்னைத் தயார்படுத்திக் கொள்வதும் கதாபாத்திரச் சறுக்கல்.
ரகுல் ப்ரீத் சிங்குக்கு எது பிரச்சினை, ஏன் பிரச்சினை என்பதெல்லாம் பொதுவாகவே சொல்லப்பட்டுள்ளதால் கதாபாத்திரப் படைப்பில் குழப்பமே மேலோங்குகிறது. அலட்சியும், ஈகோ இதை வைத்தே அவர் கேரக்டர் டிஸைன் செய்யப்பட்டிருப்பது சரியாக இல்லை. ஒரு சி.இ.ஓ தடுமாற்றத்துடனும் தடமாற்றத்துடனும் அப்படி இயங்க முடியுமா என்பது கேள்விக்குறி. பெயர், பதவி எல்லாம் வெயிட்டாக இருக்கிறதே தவிர, ரகுலின் கேரக்டர் அவ்வளவு கனமில்லை. அதனால் அவர் நடிப்பிலும் எந்த அழுத்தமும் இல்லை.
பிரகாஷ்ராஜ் அந்த மருத்துவமனைக் காட்சியில் மட்டும் தன் இருப்பை நிலைநிறுத்திக் கொள்கிறார். ரம்யா கிருஷ்ணன் பாவம். டம்மியான ரோலில் எதுவும் செய்ய முடியாமல் வந்து போகிறார். அம்ருதா சீனிவாசன் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் குறை வைக்கவில்லை. ரேணுகா, பழைய ஜோக் தங்கதுரை, கார்த்திக், நிக்கி கல்ராணி ஆகியோர் கவுரவத் தோற்றம் அளவுக்கே பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
விக்னேஷ் காந்தின் ஸ்டாண்ட் அப் காமெடியில் தான் படம் தொடங்குகிறது. ஆனால், இடைவேளை தாண்டியும் அந்தக் காமெடி என்று கருதப்படும் நீண்ட பேச்சு விடாமல் துரத்துகிறது. சில இடங்களில் சிரிக்க வைக்கும் விக்னேஷ் அதிகப்படியான பேச்சால் சோர்வையும் கடுப்பையும் வரவழைக்கிறார். முதல் பாதியின் சேதாரத்துக்கு விக்னேஷ் காந்த் பாத்திரப் படைப்பே காரணம்.
ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் அணங்கே பாடல் மட்டும் ரசிக்க வைக்கும் ரகம். மற்ற பாடல்களும், பின்னணி இசையும் படத்துடன் பொருந்தாமல் துருத்தி நிற்கின்றன. வேல்ராஜ் படத்தை மொத்தமாகத் தூக்கி நிறுத்தியிருக்கிறார். அமெரிக்கா, உக்ரைன், மும்பை, சென்னை என்று கண்டங்கள் தாண்டிய லொக்கேஷன்களின் அழகை கேமராவில் அள்ளி வந்திருக்கிறார். ஆண்டனி எல். ரூபன் கத்தரிக்கு இன்னும் வேலை கொடுத்திருக்கலாம்.
பயணம் தொடர்பான காட்சிகள் வசீகரிக்கின்றன. படத்தின் சாதகமான அம்சம் இது மட்டுமே. காதல் மலர்வதற்கான தருணங்களை சரியாகச் சொல்லாதது படத்தின் பெருங்குறை. பயணங்களில் லயிக்கும் முதிர்ச்சியான நாயகன் தன்னையே தொலைக்கும் அளவுக்குப் போவது, பொய்யாக உருவாகும் சண்டைகள், தேவையே இல்லாத ஈகோ, அதனால் வரும் பிரிவு, நெடுஞ்சாலையில் குழந்தையைக் காப்பாற்றுவதற்காகவே வலிந்து திணிக்கப்பட்ட சண்டைக் காட்சி என படம் முழுக்க செயற்கைத்தனம். கார்த்தி- ரகுல் ப்ரீத்சிங் இடையேயான உறவு நம்பகத்தன்மையுடன் காட்சிப்படுத்தவில்லை. அப்பாவிடம் வளர்ந்த பையனுக்கு இருக்கும் சிக்கல்களை- சுதந்திரத்தைப் படம் பதிவு செய்யவில்லை. அம்மா வளர்த்தெடுத்த பெண்ணுக்கு இருக்கும் உளவியல் சிக்கலையும் படம் ஓரளவுக்குக் கூடப் பேசவில்லை.
ஃபேஸ்புக்கில் நட்புப் பட்டியலில் கூட சேர்த்துக்கொள்ளாத ஒரு பெண்ணுக்காக நாயகன் எடுக்கும் மெனக்கெடல்கள் நம்பும்படியாக இல்லை. சி.இ.ஓ. சாதாரணமாகக் கேள்வி கேட்கும் இளைஞனைத் தேடி வந்து பதில் சொல்வதில் லாஜிக்கும் இல்லை. இந்த நிமிஷம் உன் மனசு என்ன சொல்லுதே அதைச் செய் என்கிறார் இயக்குநர். ஆனால், அந்த மனங்களின் ஊடலையும் கூடலையும் நேர்த்தியாகப் பதிவு செய்யத் தவறியிருக்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago