விஸ்வாசம்: கச்சித நடிப்பில் கவனம் ஈர்க்கிறாரா அஜித்?

By உதிரன்

ஒரு தந்தையாக இல்லாமல் வேலைக்காரனாக இருந்துகொண்டு பல்வேறு கொலை முயற்சிகளில் இருந்து தன் மகளைக் காப்பாற்ற நாயகன் துடித்தால் அதுவே 'விஸ்வாசம்'.

தேனி மாவட்டம் கொடுவிளார்பட்டி கிராமத்தில் அரிசி ஆலையை நடத்தி வருபவர் தூக்குதுரை (அஜித்). ஏரியா முழுக்க சண்டை என்றாலும் சமாதானம் என்றாலும் ஒற்றை ஆளாக துவம்சம் செய்கிறார்.  அந்த ஊருக்கு மருத்துவ முகாம் நடத்த வரும் நிரஞ்சனா (நயன்தாரா) அஜித்தின் அடிதடி, அலப்பறையைப் பார்த்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். பின் அவரே அந்தப் புகாரை வாபஸ் பெறுகிறார். உள்ளூர் ரவுடி 'மைம்' கோபியால் மருத்துவ முகாம் நடத்துவதில் பிரச்சினை ஏற்படுகிறது. அந்தப் பிரச்சினை அஜித்தால் தீர்கிறது.

அஜித்தின் அரிசி ஆலையிலேயே மருத்துவ முகாம் நடக்க, நயன் - அஜித் சந்திப்புகள் அதிகமாக அஜித்துக்கு காதல் மலர்கிறது. மருத்துவ முகாம் நடந்து முடிந்த பிறகு மும்பை செல்லும் நயன்தாரா தன் தந்தையுடன் கொடுவிளார்பட்டிக்கு வந்து அஜித்தை மாப்பிள்ளை கேட்கிறார். திருமணம் முடிந்து எல்லாம் சுமுகமாய் செல்ல, மகள் பிறந்த பிறகு அஜித்தின் அடிதடி நயனுக்குப் பிடிக்காமல் போகிறது. ஒரு பஞ்சாயத்தில் குழந்தையை வைத்துக்கொண்டே அஜித் சண்டைபோட அதைப் பார்க்கும் நயன் கோபமாகிறார். இன்னொரு சண்டையில் அரிவாள் வெட்டு குழந்தை மீது விழ அதுவே அஜித்- நயன் பிரியக் காரணமாகிவிடுகிறது.

சுமார் 10 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் ஊர் திருவிழாவுக்காக மனைவி, மகளை அழைக்க மும்பை விரைகிறார். அங்கே மனைவி பார்க்க, பேச அனுமதிக்காததால் வேதனை அடைகிறார். அந்த சூழலில் மகளுக்கு இருக்கும் ஆபத்து தெரியவர, எதிரிகளை வேட்டையாடுகிறார். மகளுக்கு யாரால் ஆபத்து, மகள் ஏன் தந்தையை வெறுக்கிறார், எதிரி எப்படி மனம் மாறுகிறார், கொலை முயற்சிகளிலிருந்து தன் மகளை எப்படி அஜித் காப்பாற்றுகிறார், நயன் - அஜித் இணைந்தார்களா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது படம் 'விஸ்வாசம்'. கிராமம்- கிராமம், சென்னை- கொல்கத்தா, வெளிநாடு என்று முந்தைய படங்களில் வித்தியாசம் காட்டிய இயக்குநர் சிவா இந்த முறை கொடுவிளார்பட்டி - மும்பையை இணைத்துக் கதை பின்னியிருக்கிறார். விவேகம் படத்தால் அஜித் ரசிகர்களிடையே ஏற்பட்ட மனக்கசப்புக்கு மருந்துகொடுத்து நிலைமையைச் சீராக்கி இருக்கிறார் என்று சொல்லலாம்.

தம்பிகளுக்காகவும், காதலியின் குடும்பத்துக்காகவும் அடிவாங்கியும் திருப்பி அடித்தும் கிராமத்துக் கதையில் தன்னை பொருத்திக்கொண்ட 'வீரம்' அஜித், தங்கைக்காகவும் பெண்ணுரிமைக்காகவும் குரல் கொடுத்து கொல்கத்தாவில் துவம்சம் செய்த  'வேதாளம்' அஜித், மனைவிக்காகவும் நாட்டுக்காவும் வெளிநாடுகளில் பறந்து நண்பனே எதிரியானாலும் அவனை அழித்த 'விவேகம்' அஜித், 'விஸ்வாசம்' படத்தில் நடிப்பில் தனி முத்திரை பதிக்கிறார். ஊரில் அடிதடி, அடாவடியாகச் செயல்படும் இடங்களில் ஜாலி கேலி இளைஞராக தன்னை முன்னிறுத்த முயற்சிக்கிறார். அது எடுபடவில்லை. நகைச்சுவை என்ற பெயரில் அவர் பேசுவதும் ரசிக்கும்படி இல்லை. வேட்டி, சட்டையுடன் அவர் களம் இறங்கும்போதெல்லாம் ஒன்று அடிக்கிறார் அல்லது ஆட்டம் போடுகிறார். வட்டார வழக்கில் பேசுகிறேன் என்று சிரமப்படுகிறார். ஆங்கிலம் தெரியா நபராய் தப்புதப்பாகப் பேசி சூரியை வேறு நினைவுபடுத்துகிறார்.

ஆனால், மகளின் பாசத்துக்காக ஏங்கும் வெள்ளந்தியான கிராமத்துத் தந்தையின் குணத்தைக் கண்முன் நிறுத்தும்போது அஜித் மனதில் நிறைகிறார். அங்கிள் என்று மகள் அழைக்கும்போதும் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு அடையாளம் மறைத்து அன்பைப் பொழிவது, மனைவியின் பிறந்த நாளில் வாழ்த்துகள் நிரஞ்சனா என்று வாய் வரைக்கும் வந்ததை அப்படியே சொல்லி பின் வாழ்த்துகள் மேடம் என்று கூறி கணவன் - மனைவிக்கான இடைவெளியை உணர்த்துவது, மகளுக்கு ஆபத்து என்று தெரிந்ததும் சந்தேகப்படும் நபர்களையெல்லாம் புரட்டி எடுப்பது, குழந்தைகளை அவர் போக்கில் வளர்க்க வேண்டும் என்ற கருத்தையும் அழுத்தமாகச் சொல்வது என  முந்தைய படங்களைக் காட்டிலும் அஜித் கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பைக் கச்சிதமாகக் கொடுத்திருக்கிறார். இனி இந்தப் பாதையில் அஜித் நடித்துத் தள்ளலாம்.

ஊசி நுழையாத இடத்தில் கூட நயன்தாரா நடிப்பால் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார். முதல் பாதியில் குழந்தைக்காக அஜித்திடம் வாதம் செய்யும்போதும், பிரிவின் போதும் குடும்பத்தின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பாய் இருக்கும் நயன், கணவன் அடிபட்டு ரத்தக் காயங்களுடன் இருக்கும்போது கண்ணீருடன் தன் பாசத்தை வெளிப்படுத்துகிறார்.

அஜித்- நயன்தாராவின் மகளாக நடித்திருக்கும் அனிகாவுக்கு இது முக்கியமான படம். அப்பா யாரென்றே தெரியாமல் வெறுப்பைக் கக்குவது, அப்பாவின் அன்புக்காக ஏங்குவதைச் சொல்வது, அடியாட்களின் துரத்தலுக்குப் பயந்து அலறுவது, விளையாட்டில் இருக்கும் ஆர்வத்தை கண்கள் விரிய வெளிப்படுத்துவது என பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்.

யோகி பாபு நகைச்சுவையில் பின்னி எடுக்கிறார். விவேக்  எரிச்சலை வரவழைக்கிறார். தம்பி ராமையாவும், ரோபோ சங்கரும் படத்தில் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் செய்யும் காமெடி எந்தவிதத்திலும் ஒட்டவில்லை. ஜெகபதி பாபு வில்லனுக்கான நியாயத்தைச் செய்திருக்கிறார்.

கலைராணி, மதுமிதா, ஆர்.என்.ஆர்.மனோகர், சுரேகா வாணி, நாராயண் 'லக்கி', 'மைம்' கோபி, ஓ.ஏ.கே.சுந்தர், சுஜாதா சிவகுமார், பரத் ரெட்டி, சாக்‌ஷி அகர்வால், ராமச்சந்திரன் துரைராஜ், ஜார்ஜ் என படம் முழுக்க ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளங்கள். படத்தில் அஜித்தின் வீட்டுக்கு வெளியே எப்போதும் 10 பேர் செட் பிராபர்ட்டியாக இருக்கிறார்கள் போல. அடிடா என்றாலும் சரி, போடுறா வெடிய என்றாலும் சரி எதற்கும் தயாராகவே இருக்கிறார்கள்.

முதல் பாதியில் 4 பாடல்கள். இரண்டாம் பாதி ஆரம்பித்த உடனே பாடல் என்று இடைவெளி இல்லாமல் இமான் கொஞ்சம் இம்சிக்கிறார். கண்ணான கண்ணே பாடலில் மட்டும் இதம் தருகிறார். பின்னணி இசையில் மாஸ் படத்துக்கான பில்ட் அப் ஏற்றியிருக்கிறார். வெற்றியின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம். கேமரா கோணங்களில் வசீகரம்.  ரூபன் படத்தொகுப்பில் நேர்த்தி மிளிர்கிறது. முதல் பாதியில் மட்டும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.

வழக்கமும் பழக்கமுமான கதைதான். அதனால்தான் திரைக்கதையிலும் எந்தப் புதுமையும் இல்லை. முதல் பாதி பொறுமையைச் சோதிக்கும் படலம். அஜித்தின் நாயக பிம்பம் மட்டுமே படத்தின் பிரதான அம்சமாக உள்ளது. அஜித் அடிவாங்குவது போலவும், மகளுக்காக எல்லாவற்றையும் தாங்கிக்கொள்வது போலவும் காட்சி அமைத்துள்ளார். ஆனால், மகளுக்காக அப்பா எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார் என்ற நாயக பிம்பத்தைத் தூக்கிப் பிடிக்கும் நீட்சியாகவே அது உள்ளது.

இரண்டாம் பாதியில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள். மகளுக்கு ஆபத்து இருக்கிறது என்பது தெரிந்தும் எப்படி நயன்தாரா அனிகாவுடன் சண்டை போடுகிறார்? அஜித் இல்லாத நேரத்தில் அனிகா ஏன் சைக்கிளை எடுத்துக்கொண்டு கோபமாக வெளியே கிளம்புகிறார்? அமெரிக்காவுக்கு பாதுகாப்பாக அனுப்ப நினைக்கும் நயன் அனிகாவை ஏன் காரிலேயே இருக்கச் சொல்கிறார்?

அனிகாவைக் கொல்வது மட்டுமே என் குறிக்கோள் என்று சொல்லும் ஜெகபதி பாபு, அப்படிக் கொன்றால் அக்கொலைக்குக் காரணம் நீயும்தான் என்று அஜித்தைப் பார்த்துச் சொல்கிறார். விளையாட்டில் தோல்வி என்றால் மரணம் தான் என்று மகளுக்குச் சொல்லி சொல்லி வளர்த்த ஜெகபதி பாபு அதே மகள் தற்கொலை முயற்சியில் ஈடுபடும்போது அதற்கு தானே காரணம் என்று நினைக்காமல் அனிகாதான் காரணம் என்று நினைப்பது ஏற்புடையதாக இல்லை. அதுவும் விளையாட்டுக்கான முதலிடத்தைத் தவறவிட்டதற்காக எடுக்கும் விபரீத முடிவுகள் கொல்லும் அளவுக்குப் பகையாக மாறுவதெல்லாம் நம்பகத்தன்மையுடன் இல்லை.

அஜித் மகள் பக்கத்தில் இருக்கும்போதே எதிரிகளைப் பந்தாடுகிறார். ஆனால், மகளுக்கு அந்த சண்டையின் வீரியம் தெரியக்கூடாது என்பதற்காக விளையாட்டு குறித்த சில விவரங்களைக் கேட்கிறார். அது அழுத்தமாகவும் இல்லை, மகளை டைவர்ட் செய்யும் உத்தியாகவும் வெளிப்படவில்லை. எதிரி யார் என்று தேடிக் கண்டுபிடிப்பதிலும் புத்திசாலித்தனமும் இல்லை.

பாதிக்கப்பட்ட ஜெகபதிபாபுவின் மகள் அனிகா வெற்றிபெறும்போது கை தட்டும் காட்சி கிளிஷேவாக இருந்தாலும் ரசிகர்களுக்குப் பிடித்த காட்சியாக மாறி விடுகிறது. குழந்தைகள் மீது உங்கள் வெற்றியை, எண்ணங்களைத் திணிக்காமல் அவர்கள் போக்கில் சந்தோஷமாக வளர விடுங்கள் என்று அஜித் சொல்கிறார். அது பெற்றோருக்கான அறிவுரையாக இருந்தாலும் பொருத்தமான இடத்தில் சொல்லப்படுகிறது.

பண்டிகை காலம், திருவிழா மாதிரி ஒரே கூட்டம் கூட்டமாய் படம் இருக்க வேண்டும், அப்பா- மகள் பாசத்தைப் பார்த்து விழியோரம் சிந்தும் கண்ணீரைத் துடைத்தபடி படம் பார்த்து சிலாகிக்க வேண்டும் என்றாலும், லாஜிக் தேவையில்லை அஜித்- நயன்தாரா மேஜிக் போதும் என்றாலும் விஸ்வாசத்துக்கு நீங்களும் விசிட் அடிக்கலாம்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்