முதல் பார்வை: கே.ஜி.எஃப்

By உதிரன்

தங்கச் சுரங்கத்தைக் கையகப்படுத்தி  அதிகாரம் செலுத்தும் மிகப்பெரிய எதிரியுடன் மோதும் இளைஞனின் கதையே 'கே.ஜி.எஃப்'.

1951-ல் பெங்களூரில் இரண்டு முக்கிய சம்பவங்கள் நடைபெறுகின்றன. தங்கச் சுரங்கம் கண்டெடுக்கப்பட்ட அதே நாளில் ராக்கி பிறக்கிறான். வறுமையில் வளர்ந்த ராக்கியால் உடல்நிலை சரியில்லாத தன் தாயைக் காப்பாற்ற முடியவில்லை. இறக்கும் தருவாயில் தாய் தன் மகனிடம், ''நீ சாகும்போது பெரிய பணக்காரனாகத்தான் சாகணும்'' என்று சத்தியம் வாங்கிக்கொண்டு கண்ணை மூடுகிறார். தாயின் மறைவுக்குப் பிறகு தனித்து விடப்பட்ட ராக்கி சிறிய வயதிலேயே இந்தப் பெரிய உலகை ஆள வேண்டும் என்று கனவு காண்கிறார். அந்தக் கனவை நனவாக்க முயற்சி செய்கிறார். பவர் இருக்கும் இடத்தில் கெத்து காட்ட நினைக்கிறார். மும்பை சென்று 10 வயதில் ஷூவுக்கு பாலீஷ் போடும் சிறுவனாக இருப்பவர் அடுத்தடுத்து பாய்ச்சலை நிகழ்த்தி அசைக்க முடியாத சக்தியாக உருவெடுக்கிறார்.

அப்போது ராக்கியிடம் பெங்களூரில் செய்து முடிக்க வேண்டிய ஒரு வேலை ஒப்படைக்கப்படுகிறது. மும்பையை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைக்கும் ராக்கி பெங்களூரு வேலையைக் கச்சிதமாக முடித்துக் கொடுப்பதாக வாக்கு கொடுக்கிறார். அதற்காக பெங்களூரு விரைகிறார். ஆனால், அங்கே கள நிலவரம் கலவரமாகக் காட்சி அளிக்கிறது. சுரங்கத் தொழிலாளர்கள் எல்லோரும் கொத்தடிமைகளாக இருப்பதும், ஒரு குடும்பம் மட்டும் அவர்களை ஆட்டிப் படைப்பதும் ராக்கிக்குத் தெரியவருகிறது. அதற்குப் பிறகு ராக்கி என்ன செய்கிறார், வந்த வேலையை முடித்தாரா, மும்பை திரும்பிச் சென்றாரா, கொத்தடிமைகளின் நிலை என்ன. அந்த வலுவான எதிரியின் குடும்பம் என்ன ஆகிறது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

கன்னடத்தில் உருவான 'கே.ஜி.எஃப்' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று நான்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. 1950- 80களின் காலகட்டத்தை அடிப்பையாகக் கொண்ட ஆக்‌ஷன் படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் நீல். கமர்ஷியல் மேக்கிங்கில் பிரசாந்த் சொல்லி அடித்திருக்கிறார்.

முரட்டு உடல்வாகு, அதிரடிக்கும் ஆக்‌ஷன், வறுமையின் பிரதிபலிப்பை உணர்த்துப் பாங்கு என கமர்ஷியல் அம்ச நாயகனாக யாஷ் கச்சிதமாகப் பொருந்துகிறார். ஏகப்பட்ட ஸ்லோமோஷன் காட்சிகள், பில்டப் காட்சிகள் மாஸ் ஏற்றுவதற்காக உள்ளன. யாஷுக்கு ஆக்‌ஷன் காட்சிகள் துருத்தவில்லைதான். ஆனால், அதுவே அதீதமாக இருப்பது அலுப்புக்குக் காரணம்.

கதாநாயகி ஸ்ரீநிதி செட்டிக்கு படத்தில் எந்த வேலையும் இல்லை. யாஷ்- ஸ்ரீநிதி சம்பந்தப்பட்ட காட்சிகள் சுவாரஸ்யமில்லாமல் கடந்து போகின்றன. ஆனந்த் நாக், வசிஸ்த சிம்ஹா, மாளவிகா அவினாஷ், அச்யுத் குமார், நாகபரணா ஆகியோர் தத்தம் கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். தமன்னா ஒரு கவர்ச்சிகரப் பாடலுக்கு ஆடிவிட்டுப் போகிறார்.

புவன் கவுடாவின் கேமரா தங்கச் சுரங்கத்தின் இருட்டு உலகை அப்படியே கண்களுக்குள் கடத்துகிறது. ரவி பஸ்ரூர், தனிஷ்க் ஆகியோரின் இசையும் பின்னணியும் மாஸ் ரகம். ஸ்ரீகாந்த் பில்டப் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

''காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு கர்ஜனையோட பயங்கரமாக இருக்கும்'', ''யுத்தத்துல முதல்ல யார் அடிக்குறாங்கன்னு கணக்கு இல்லை...முதல்ல யார் கீழே விழுறதுதான் கணக்கு'', ''கேங்கை கூட்டிட்டு வர்றவன்தான் கேங்ஸ்டர்... ஒத்தையா வர்றவன் மான்ஸ்டர்'', ''உனக்குப் பின்னாடி ஆயிரம் பேர் இருக்காங்கன்ற தைரியம் உனக்கிருந்தா உன்னால ஒரு போர்லதான் ஜெயிக்க முடியும்... அதே ஆயிரம் பேருக்கு முன்னாடி நீ இருக்கன்ற தைரியம் வந்துச்சுன்னா உலகத்தையே ஜெயிக்கலாம்'' போன்ற வசனங்கள் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன.

உலகமே மதிக்கும் பெரிய பணக்காரனாக தீர்மானிக்கும் நாயகன் எப்படி ஏன் தாதாவின் பாதையில் செல்கிறான் என்பதை தெளிவாகச் சொல்லவில்லை. இந்திய அரசாங்கமே நடுநடுங்கி மரண தண்டனை விதித்தது ஏன்? உண்மையில் ராக்கி நல்லவரா? கெட்டவரா? போன்ற லாஜிக் கேள்விகளௌக்குப் பதில் இல்லை. கிளம்பிட்டான்... அவன் போற பாதை தெரியாது போய் சேரப்போற இடத்தைப் பத்தி தெரியாது அதனோட அமானுஷ்ய சரித்திரமும் தெரியாது... என்று படம் முழுக்க நாயக பிம்பத்தின் சாகசங்களைப் பாராட்டுவது  ஓவர்டோஸாக இருப்பதால் அதுவே படத்தின் பலவீனமாக அமைந்துவிடுகிறது. கிளைமேக்ஸ் வரை புதிது புதிதாக கேரக்டர்கள் அறிமுகமாவது சோதிக்கிறது. நாயகனை விதந்தோதும் அளவுக்கு புத்திசாலித்தனமாக எந்த திட்டமிடலையும், செயலையும் செய்யவில்லை என்பதுதான் பெரிய குறை. படம் முழுக்க ரத்தம்... சத்தம்...

இந்தக் குறைகள் இருந்தாலும் தங்கச் சுரங்கத்தில் வதைபடும் தொழிலாளர்களின் ரத்தம் சிந்திய கதையை வலியோடு சொன்ன விதத்திலும், ஒற்றை நாயகனை மையமாகக் கொண்டு மாஸ் கமர்ஷியல் மசாலாவை தரமான மேக்கிங்கில் கொடுத்த விதத்திலும் இரண்டாம் பாகத்துக்கும் படத்தில் வேலை வைத்த யுக்தியிலும் கே.ஜி.எஃப்புக்கு ஒரு முறை விசிட் அடிக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்