முதல் பார்வை: பேட்ட

By சி.காவேரி மாணிக்கம்

ஊட்டி கல்லூரியில் உள்ள ஹாஸ்டல் மாணவர்கள் யாருக்கும் அடங்காதவர்களாக இருக்கின்றனர். இதனால், அந்த ஹாஸ்டலுக்கு வார்டனாக வருபவர்கள் யாருமே தாக்குப் பிடிப்பதில்லை. இந்நிலையில், அந்த ஹாஸ்டலின் டெம்ப்ரரி வார்டனுக்கான இண்டர்வியூ நடைபெறுகிறது. அந்த வார்டன் வேலையை, காளிக்கு (ரஜினி) கொடுக்கச் சொல்லி மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியிடம் இருந்து மாநிலத் தலைமைக்குப் போன் வருகிறது. அதேமாதிரி ரஜினிக்கு அந்த வேலை தரப்பட, ஹாஸ்டலில் நடைபெறும் அக்கிரமங்களை ஒவ்வொன்றாகக் களையெடுக்கிறார் ரஜினி.

திடீரென ஒருநாள் அந்த ஹாஸ்டலில் இருக்கும் முதலாமாண்டு மாணவர் அன்வரைக் (சனந்த் ரெட்டி) கொலைசெய்ய ஒரு கும்பல் வருகிறது. அந்தக் கும்பலிடம் இருந்து சனந்த் ரெட்டியைக் காப்பாற்றும்போது, ரஜினிக்கும் அடிபடுகிறது. அப்படி உயிரைக் கொடுத்துக் காப்பாற்றும் அளவுக்கு ரஜினிக்கும், சனந்த் ரெட்டிக்கும் என்ன சம்பந்தம்? ஹாஸ்டல் வார்டனாவதற்கு முன்பு ரஜினி என்னவாக இருந்தார்? அவர் ஏன் ஹாஸ்டல் வார்டனாக வந்தார்? ஆகிய கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

முழுக்க முழுக்க ரஜினி ரசிகராக இருந்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். படம் தொடங்கியதில் இருந்து, முடிவதுவரை ரஜினி... ரஜினி... ரஜினி... படம் முடிந்து வெளியே வந்தபிறகும் கூட ரஜினி மட்டுமே மனதில் நிற்கிறார்.

பேட்ட வேலனாக மாஸ் காட்டியிருக்கிறார் ரஜினி. இத்தனை நாட்கள் இதற்குத்தான் காத்திருந்தது போல இறங்கி அடித்திருக்கிறார். அவரின் கோபம், எகத்தாளம், காதல், பாசம், ரைமிங் டயலாக், சண்டை, பன்ச், காமெடி என எல்லாமே ரசிக்க வைக்கின்றன. தனியாக ஒரு காமெடியன் தேவையே இல்லை எனும் அளவுக்கு ரஜினியின் காமெடிகள் ரசிக்க வைக்கின்றன. ரஜினிதான் படம் முழுக்க என்பதால், எல்லா இடங்களிலும் அவரே நீக்கமற நிறைந்திருக்கிறார். எத்தனை நடிகர்கள் சுற்றியிருந்தாலும், எல்லா இடத்திலும் ஸ்கோர் செய்வது ரஜினிக்கு கைவந்த கலை. இந்தப் படமும் அதைத்தான் செய்திருக்கிறது.

ரஜினியைத் தவிர மற்ற எல்லா நடிகர்களுக்குமே சில காட்சிகள்தான். அதனால், தங்களுக்குத் தரப்பட்ட வேலையை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். வில்லனாக பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், அவருடைய மகனாக விஜய் சேதுபதி இருவருமே வில்லன் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான வார்ப்புகள். ரஜினி படமாக இருந்தாலும், தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் ஸ்கோர் செய்திருக்கிறார் விஜய் சேதுபதி.

கெட்டவனாக இருந்து, பின்னர் நல்லவனாக மாறும் பாபி சிம்ஹா, கல்லூரி மாணவர்கள் + காதலர்களாக சனந்த் ரெட்டி - மேகா ஆகாஷ், ரஜினியின் நண்பனாக சசிகுமார், ரஜினியின் மனைவியாக த்ரிஷா, கலெக்டராக குரு சோமசுந்தரம், சாதி வெறி பிடித்த, அதேசமயம் பாசமான அப்பாவாக இயக்குநர் மகேந்திரன், ஹாஸ்டல் மெஸ்ஸின் சமையற்காரராக ராமதாஸ், மேகா ஆகாஷின் அம்மாவாக சிம்ரன், பாபி சிம்ஹாவின் தந்தையாக நரேன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் தங்கள் பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

‘பாட்ஷா’ படத்தில் இருந்து மாணிக்கம் - அன்வர் நட்பு, அன்வர் கொல்லப்பட்ட பிறகு ரஜினி எடுக்கும் விஸ்வரூபம் என்ற ஒன்லைனை எடுத்துக்கொண்டு கலர்ஃபுல்லாகக் கதை பின்னியிருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். சனந்த் ரெட்டி - மேகா ஆகாஷ் காதலைவிட, ரஜினி - சிம்ரனின் ஈர்ப்பு போர்ஷன் அத்தனை ரொமான்ஸாக இருக்கிறது. திருநாவுக்கரசின் ஒளிப்பதிவு, பயங்கர நேர்த்தி. ஊட்டி போர்ஷனில் கதை சொல்லும் கேமரா, உத்தரப் பிரதேசத்தின் ஆக்‌ஷன் காட்சிகளில் பரபரக்கிறது.

இன்னொரு ரஜினி ரசிகராக இருந்து இசையமைத்திருக்கிறார் அனிருத். பாடல்களில் இருக்கும் அதே கொண்டாட்டம், பின்னணி இசையிலும் எதிரொலிக்கிறது. ‘அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா?’ என்ற வடிவேலின் வசனத்தை மனதில் வைத்துக்கொண்டு இசையமைத்துள்ளார் போல.

முன்பாதி ரொமான்ஸ், காமெடி என மனதை வருட, இரண்டாம் பாதி முழுக்க ஆக்‌ஷனில் ரத்தம் தெறிக்கிறது. எத்தனை பேர் வந்தாலும் எதிர்த்து நின்று அடிக்கும் ரஜினியைப் பார்க்க மாஸாக இருந்தாலும், ‘இவர்தான் எல்லாரையும் அடிச்சுடுவாரே...’ என ஒருகட்டத்தில் தோன்றி, சண்டைக் காட்சிகளை சுவாரஸ்யமில்லாமல் ஆக்கிவிடுகிறது. இரண்டாம் பாதியின் அளவை இன்னும் கொஞ்சம் ட்ரிம் செய்திருக்கலாம்.

ஆனாலும், பல வருடங்களாக இப்படி ஒரு படத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு, பராக் சொல்லி வந்திருக்கிறது இந்த ‘பேட்ட’.  

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்