முதல் பார்வை: சிகை

By சி.காவேரி மாணிக்கம்

பெண்களை வைத்துப் பாலியல் தொழில் செய்பவன் பிரசாத். அன்று சந்தோஷ் என்ற புது வாடிக்கையாளரிடம் இருந்து போன்வர, தன்னிடம் பாலியல் தொழிலாளி யாருமில்லாத நிலையில், தனக்குத் தெரிந்த சிஜுவிடம் இருந்து நிம்மி என்ற பெண்ணை அனுப்பி வைக்கிறான். நிம்மி மறுநாள் காலை வீடு திரும்பாத நிலையில், சிஜுவிடம் இருந்து பிரசாத்துக்குப் போன் வருகிறது.

நிம்மியைத் தேடி சந்தோஷ் வீட்டுக்குச் செல்லும் பிரசாத், அங்கு சந்தோஷ் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான். சந்தோஷைக் கொலை செய்தது யார்? அந்த வீட்டுக்குச் சென்ற நிம்மி என்ன ஆனாள்? என்பதை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜெகதீசன் சுபு.

ஹீரோ, ஹீரோயின் என்ற வழக்கமான வரையறை இல்லாமல், பிரசாத், நிம்மி, மதிவாணன் என்ற 3 முதன்மைக் கதாபாத்திரங்களையும், சிஜு,  சுப்ரமணி, புவனா, சந்தோஷ் என்ற 4 துணைக் கதாபாத்திரங்களையும் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கதைக்கான தேவையும் அதுதான்.

பாலியல் தொழில் செய்யும் பிரகாஷ் கதாபாத்திரத்தைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார் ராஜ் பரத். யாரென்றே தெரியாத தன்னை நம்பித் தொழிலுக்குச்  சென்ற ஒரு பெண் காணாமல் போய்விட்டாள் என்று தெரிந்ததும், அவள் மீது பரிதாபப்பட்டு, அவளைக் கண்டுபிடிப்பதற்காக பதைபதைத்துத் தேடும் இடங்களில் மனிதத்தன்மையை வெளிப்படுத்துகிறார். அதேபோல், பாலியல் தொழில் செய்யும் பெண் புவனா (ரித்விகா) மீது அக்கறையோடு இருப்பதும், பின்னர் அதுவே காதலாக மாறி கல்யாணத்தில் முடிவதும், அந்தக் கதாபாத்திரத்தின் மீதான மதிப்பை உயர்த்துகிறது.

மதிவாணனாக ‘மதயானைக் கூட்டம்’, ‘கிருமி’, ‘பரியேறும் பெருமாள்’ படங்களில் கவனம் ஈர்த்த கதிர் நடித்துள்ளார். கடைசி 15 நிமிடங்கள் மட்டுமே வந்தாலும், படத்துக்கான மையப் பாத்திரம் அவர்தான். திருநங்கையாக இதில் நடித்துள்ள கதிர், அவர்களின் உடல்மொழியைக் கண்முன் நிறுத்துகிறார். ‘உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும் சந்தோஷ்’ என்று கதிர் கூறுமிடத்தில், அவர் கண்களில் உயிருக்குயிரான பாசம் தெரியும். க்ளைமாக்ஸில் அவர் எடுக்கும் முடிவு, படத்துக்குப் பக்கபலம்.

நிம்மியாக, மீரா நாயர் அறிமுகமாகியிருக்கிறார். தன் குடும்பச் சூழ்நிலை காரணமாகப் பாலியல் தொழிலுக்கு வரும் அவர், மனநிலை சரியில்லாத தன் தங்கையைக் கவனித்துக் கொள்ளும் இடத்தில் கண்கலங்க வைக்கிறார். அதேபோல், கதிர் யாரெனத் தெரிந்து அவரைச் சீண்டும் இடத்திலும் நன்றாக நடித்திருக்கிறார். இப்படி ரித்விகா, கால் டாக்ஸி டிரைவராக சுப்ரமணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மயில்சாமி, சிஜு (சேட்டா) கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜேஷ் சர்மா, சந்தோஷ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மால் முருகா என அனைவருமே கதைக்குத் தேவையான நடிப்பைத் தந்துள்ளனர்.

முதல் நாள் இரவு தொடங்கி மறுநாள் இரவு வரை நடக்கும் சம்பவங்கள்தான் இந்தப் படத்தின் கதை. படத்தின் இடைவேளையின்போது கதிரைக் காண்பித்து, நடந்த சம்பவத்துக்கு அவர்தான் காரணம் என பார்வையாளனுக்கு உணர்த்தினாலும், எதற்காக கதிர் அதைச் செய்தார், எப்படிச் செய்தார் என்ற விறுவிறுப்பைக் கடைசிவரை தக்கவைத்திருக்கிறார் இயக்குநர் ஜெகதீசன் சுபு.

சென்னையின் இரவு வாழ்க்கையையும், பகல் நேர பரபரப்பையும் நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் நவின் குமார். அதுவும் டைட்டில் கார்டு போடும்போது காண்பிக்கப்படும் காட்சிகள், சென்னை இப்படித்தான் இருக்கும் எனப் பார்வையாளனுக்கு உணர்த்தி விடுகின்றன. படத்தின் மிகப்பெரிய குறை, பின்னணி இசை. தேவையில்லாத இடங்களில் கூட சத்தமாக இருக்கிறது. அதுவும் சில இடங்களில் டயலாக் பேசிக் கொண்டிருக்கும் போதே இசையின் சத்தம் அதிகமாக இருப்பதால், அந்த டயலாக் என்னவென்றே புரியவில்லை.

சந்தோஷ் மேல் பள்ளிக் காலத்தில் இருந்தே அவ்வளவு அன்புடன் இருக்கும் மதிவாணன், தன் அன்பைச் சொல்ல ஏன் இத்தனை வருடங்கள் எடுத்துக் கொண்டார்? சந்தோஷுடன் இங்கேயே இருக்காமல், ஏன் வெளிநாட்டில் வசித்துக்கொண்டு, வருடத்துக்கு ஒருமுறை மட்டும் சென்னை வந்து செல்கிறார்? கொலை நடந்த வீட்டின் ஜன்னல் ஸ்லாப்பில் உட்கார்ந்து அழுதுகொண்டிருக்கும் மதிவாணன், போலீஸ் உள்பட அங்கிருக்கும் யார் கண்ணுக்கும் தெரியாமல், பிரசாத்துக்கு மட்டும் தெரிவது எப்படி? போன்ற லாஜிக் கேள்விகள் இருக்கின்றன.

இருந்தாலும், ஒருவர் மீதான அன்பு என்பது காமத்தை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே வருவதல்ல என்ற பேருண்மையை உரக்கச் சொன்னதற்காகவும், திருநங்கைகளின் அன்பான பக்கத்தை வெளிப்படுத்திய வகையிலும் அழகாக மிளிர்கிறது இந்த ‘சிகை’.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்