'பேட்ட' திரைப்படத்தைப் பார்த்த ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் மறக்காமல் சொல்லும் விஷயம் 'பாட்ஷா'வின் பாதிப்பில் உருவான அச்சு அசல் ரஜினி படம் இது.
பார்ட் 2 படங்கள் வெளிவரும் இக்காலகட்டத்தில் 'பாட்ஷா 2' வந்தால் எப்படி இருக்கும் என்ற கேள்வி ரஜினி ரசிகர்களிடம் எழாமல் இல்லை. ஆனால், 'பாட்ஷா' மாதிரி
ஒரு படத்தை எடுத்தால் என்ன? என்ற கேள்வி கார்த்திக் சுப்பராஜுக்கு வந்திருக்கிறது போல. அதனால்தான் அவர் ரஜினி ரசிகர் என்று பொதுப்படைத் தன்மையில் ரஜினியை அணுகாமல் 'பாட்ஷா'வின் ரசிகராகி ரஜினியை நடிக்க வைத்திருக்கிறார்.
அப்படி என்ன 'பாட்ஷா'வும், 'பேட்ட'யும் ஒத்துப்போகிறது? சுவாரஸ்யத்துக்காக இதைச் சொல்லவில்லை. இரண்டு படங்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளைப் பார்த்தால் நீங்களே புரிந்துகொள்வீர்கள்.
உயிர் நண்பனைக் கொன்றவனை அடியோடு அழிப்பது 'பாட்ஷா'வின் கதை. உயிர் நண்பனையும், தன் குடும்பத்தையும் கொன்றவனை அடியோடு அழிப்பது 'பேட்ட' படத்தின் கதை.
ரஜினியின் மறைக்கப்பட்ட மறுபக்கம்தான் 'பாட்ஷா' படத்தின் பலம். 'பேட்ட' படத்திலும் அதே பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. 'பாட்ஷா' என்ற பெயரைக் கேட்டால் அதிகாரி முதல் ரவுடிகள் வரை பயந்து நடுங்குகிறார்கள். 'பேட்ட' காளி என்றால் முன்பின் தெரியாத நபர்கள் கூட மரண காட்டு என்று மதிப்பாகச் சொல்கிறார்கள்.
மறைக்கப்பட்ட ரகசியத்துடன் 'பாட்ஷா'வில் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்கிறார் ரஜினி. 'பேட்ட' படத்தில் மறைக்கப்பட்ட ரகசியத்துடன் ஹாஸ்டல் வார்டனாக வேலை செய்கிறார்.
'பாட்ஷா'வில் ரஜினியின் முஸ்லிம் நண்பர் சரண்ராஜ். 'பேட்ட'யில் ரஜினியின் முஸ்லிம் நண்பர் சசிகுமார்.
'பாட்ஷா'வில் சரண்ராஜ் பெயர் அன்வர். 'பேட்ட'யில் சசிகுமார் மகன் சனந்த் ரெட்டியின் பெயர் அன்வர்.
'பாட்ஷா'வில் தம்பியை அதட்டி உள்ளே போ என்று உஷ்ணத்துடன் சொன்ன பிறகே லோக்கல் ரவுடி ஆனந்த் ராஜை அடி பின்னி எடுப்பார் ரஜினி. 'பேட்ட' படத்தில் கல்லூரி மாணவர்களை உள்ளே போ என்று உணர்வெழுச்சியுடன் சொல்கிறார் ரஜினி.
'பாட்ஷா'வில் ரா ரா ராமையா பாடலுக்கு நடனமாடிய பிறகுதான் மிகப்பெரிய தரமான சிறப்பான சம்பவத்தைச் செய்கிறார் ரஜினி. 'பேட்ட' படத்தில் 2 நிமிடம் நடனமாடிய பிறகுதான் முக்கியமான சம்பவம் செய்கிறார் ரஜினி.
'பாட்ஷா' படத்தில் லோக்கல் ரவுடியான ஆனந்த் ராஜை அடித்த பிறகுதான் அந்த ஏரியாவே அதகளமாகிறது. 'பேட்ட' படத்தில் லோக்கல் ரவுடியான நரேன், அவரது மகன் பாபி சிம்ஹாவை அடித்த பிறகுதான் ஏரியா ரணகளமாகிறது.
'பாட்ஷா' படத்தில் மெயின் வில்லனாக இல்லாவிட்டாலும் ரஜினியை நம்பவைத்து ஏமாற்றும் கதாபாத்திரத்தில் தேவன் நடித்திருப்பார். பின் சில பல வருடங்களுக்குப் பிறகு ரஜினியைச் சந்திக்கும்போது பயந்து நடுங்கினார். 'பேட்ட' படத்தில் மெயின் வில்லனாக இருக்கும் நவாசுதீன் சித்திக் ரஜினியை நம்பவைத்து ஏமாற்றுகிறார். 20 வருடங்கள் கழித்து ரஜினியைச் சந்திக்கும்போது நவாசுதீனும் பயந்து நடுங்கினார்.
'பாட்ஷா' படத்தில் ரஜினியின் தந்தை விஜயகுமாரை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி காரியம் சாதிப்பார் ரகுவரன். 'பேட்ட' படத்தில் நவாசுதீன் சித்திக் மகன் விஜய் சேதுபதியை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி காரியம் சாதிப்பார் ரஜினி.
'பாட்ஷா' படத்தில் ரகுவரனை ரஜினியின் தம்பிதான் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வார். 'பேட்ட' படத்தில் ரஜினியுடன் இருக்கும் ரவுடிகள்தான் நவாசுதீன் சித்திக்கை சுட்டுக் கொல்கிறார்கள்.
இப்போது சொல்லுங்கள்.' பாட்ஷா'வும் 'பேட்ட'யும் ஒன்றா?
ஆம் என்று நீங்கள் ஒப்புக்கொண்டால் ஒருவகையில் ஆமாம். மற்றொரு வகையில் இல்லை.
ஏன் இல்லை?
'பாட்ஷா' படத்தில் பிளாஷ்பேக்கில் மாணிக்கம் ரஜினி 'பாட்ஷா'வாக உருமாறும் தருணம் வலுவாகச் சொல்லப்படுகிறது. ரஜினியின் ஆதிக்கமும், அதிகாரமும், செல்வாக்கும், வீராப்பும் மிகச் சரியாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதுவே 'பாட்ஷா' படத்தின் பலம். 'பேட்ட' படத்தில் அது மிஸ்ஸிங். 'பேட்ட' வேலன் காளியாக மாறியது சொல்லப்படவில்லை. அதுவே பெரிய பலவீனம்.
'பாட்ஷா' படத்தில் ரஜினியின் ஒவ்வொரு செயலுக்கும் வீரியம் அதிகம் இருக்கும். அதுவே படத்தின் அடிநாதம். 'பேட்ட' படத்தில் சரியான அப்படி இல்லை. உருக்கமான காட்சி கூட சாதாரணமாகக் கடந்துபோகிறது.
'பாட்ஷா' படத்தில் ரகுவரனின் மகள்தான் நக்மா. குழந்தையாக இருப்பவர் வளர்ந்து ஆளாகும் வரைக்கும் ரஜினி அதே இளமையுடன் இருப்பார். பின் நக்மாவைக் காதலித்துத் திருமணம் செய்வார். அது படத்தின் பெரிய லாஜிக் ஓட்டை.
'பேட்ட' படத்தில் பேட்ட வேலனாக இருக்கும் ரஜினி 20 வருடங்கள் எங்கு சென்றார்? என்ன ஆனார்? எப்படி காளியாக மாறினார்? சாதாரண கல்லூரியில் தற்காலிக வார்டன் வேலைக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து தமிழக அமைச்சருக்கு ரெக்கமன்டேஷன் போகும் அளவுக்கு எப்படி செல்வாக்கு படைத்த மனிதரானார் என்பது சொல்லப்படவில்லை. இதுவும் லாஜிக் ஓட்டையே.
'பாட்ஷா' படத்தின் எதிர் நாயகன் ரகுவரன் பலம் வாய்ந்த கதாபாத்திரக் கட்டமைப்பில் சித்தரிக்கப்பட்டார். 'பேட்ட' படத்தில் நவாசுதீன் சித்திக். விஜய் சேதுபதிக்கு சரியான பாத்திர வார்ப்பு இல்லை.
சாகச வீரன், மாவீரன், வெற்றிகொள்ள முடியாத ஒருவன் என்று 'பாட்ஷா'வில் ரஜினிக்கு பில்டப் இருக்கும். ஆனால், எதிரியின் கோட்டைக்குள் தந்திரமாக நுழைய மாட்டார். 'பேட்ட' படத்தில் அதே பில்டப்தான். ஆனால், ராஜ தந்திரம் என்ற பெயரில் வாலி வதை பற்றி சொல்வதெல்லாம் கதாபாத்திரச் சரிவு.
'பேட்ட'யும்,' பாட்ஷா'வும் ஒன்றா? என்று இப்போது சொல்லுங்கள்.
'பாட்ஷா' திரைப்படம் வெளியாகி 24 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனாலும், ரஜினி மீதான 'பாட்ஷா' இமேஜ் இன்னும் சரியாமல் அப்படியே உச்சத்தில் உள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago