2019-ம் ஆண்டு தொடங்கிவிட்டது. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, கடந்த வருடத்தின் இரண்டாம் பாதியில்தான் நல்ல நல்ல படங்கள் ரிலீஸாகின. இந்த வருடத்தை (2019) ரஜினியின் ‘பேட்ட’ படமும், அஜித்தின் ‘விஸ்வாசம்’ படமும் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கிவைக்கப் போகின்றன.
இந்த வருடத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
ரஜினியின் ‘பேட்ட’
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பேட்ட’. படத்தின் டீஸர், ட்ரெய்லரைப் பார்க்கும்போது, முழுக்க முழுக்க ரஜினி ரசிகனாக உருமாறி இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ் என்பது தெரிகிறது.
கிட்டத்தட்ட 38 வருடங்களுக்குப் பிறகு காளி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரஜினி, 1980-ம் ஆண்டு ரிலீஸான ‘காளி’ படத்தில் நடித்தது போலவே இந்தப் படத்திலும் ஸ்டைலாக கேட்டைத் திறக்கும் காட்சியில் நடித்துள்ளார். அத்துடன் இளமையும் ரொமான்ஸும் ரஜினி நடிப்பில் பொங்கி வழிகிறது.
‘பார்க்குறதுக்கு சின்னப்பையன் மாதிரி இருக்கீங்க’ என்று மேகா ஆகாஷ் சொல்லும்போது, தனது ட்ரேட்மார்க் சிரிப்பை உதிர்க்கும் ரஜினி, ‘நேச்சுரலி...’ என்று சொல்லும் இடத்தில் அவ்வளவு அழகாக இருக்கிறார்.
ரஜினி ரசிகர்களுக்கு மெகா விருந்தாக இந்தப் படம் அமையும் என்ற நம்பிக்கை ட்ரெய்லரிலேயே தெரிகிறது. ரஜினியுடன் சேர்ந்து சிம்ரன், த்ரிஷா இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இந்த இருவருமே இதுவரை ரஜினியுடன் சேர்ந்து நடித்ததில்லை என்பதும் படத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது. ரஜினி - த்ரிஷா புகைப்படங்களும், ரஜினி - சிம்ரன் ட்ரெய்லர் காட்சிகளும் படத்தின் ரொமான்ஸ் காட்சிகளுக்குக் கட்டியம் கூறுகின்றன.
விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சசிகுமார், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், ராமச்சந்திரன், ‘முண்டாசுப்பட்டி’ ராமதாஸ் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் ‘மரணம் மாஸு மரணம்’ உள்ளிட்ட பாடல்கள் ஹிட்டான நிலையில், வருகிற 10-தேதி ரிலீஸாக உள்ள ‘பேட்ட’ படத்துக்காகக் காத்திருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
அஜித்தின் ‘விஸ்வாசம்’
தொடர்ந்து சிவா இயக்கத்தில் நான்காவது படமா? என்று எரிச்சலாகவும் ஏமாற்றமாகவும் இருந்த அஜித் ரசிகர்கள் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறது ‘விஸ்வாசம்’ ட்ரெய்லர். அதுவும் ரஜினியின் ‘பேட்ட’ ட்ரெய்லருக்குப் பதிலடி தரும் வகையில் அமைந்திருப்பதால் அஜித் ரசிகர்களுக்கு குஷியோ குஷி.
எனவே, ‘பேட்ட’யுடன் ரிலீஸானாலும், போட்டி போட்டு ஜெயிக்கும் என்ற நம்பிக்கை அஜித் ரசிகர்களுக்குப் பக்காவாக இருக்கிறது. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வெள்ளை வேட்டி - சட்டை கெட்டப், மழையில் சண்டை என சற்றே ‘வீரம்’ படத்தை நினைவுபடுத்தினாலும், ‘விஸ்வாசம்’ படம் மாஸாக இருக்கும் என நம்புகிறார்கள் அஜித் ரசிகர்கள்.
அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க, முக்கியக் கதாபாத்திரங்களில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, ரமேஷ் திலக் ஆகியோர் நடித்துள்ளனர். ‘விவேகம்’ தோல்வியை ஈடுகட்ட இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸுக்குக் கொடுத்துள்ளார் அஜித். டி.இமான் இசையமைப்பில், வெற்றி ஒளிப்பதிவில் வருகிற 10-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது ‘விஸ்வாசம்’.
சூர்யாவின் ‘என்.ஜி.கே’ மற்றும் ‘காப்பான்’
செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘என்.ஜி.கே.’. சூர்யா ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் தயாரிக்க, ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது. யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
கடந்த வருடம் தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போதுவரை படப்பிடிப்பு முடியாமல் இழுத்துக்கொண்டே போகிறது. “நாங்கள் எல்லாருமே கடுமையாக உழைக்கிறோம். ஆனால், சில விஷயங்கள் எங்கள் கைமீறிப் போய்விட்டது” என சூர்யா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார் செல்வராகவன். இந்தப் படத்துக்காகத் தான் போட்ட ட்யூன்களை அழித்துவிட்டு மறுபடியும் புதிதாக ட்யூன்கள் போடுவதாக அறிவித்தார் யுவன் சங்கர் ராஜா.
‘என்.ஜி.கே.’ படத்துக்காக ஒதுக்கிய தேதிகள் முடிவடைந்த நிலையில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கத் தொடங்கினார் சூர்யா. லண்டனில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு, இந்தியாவின் பல பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘காப்பான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சயிஷா சைகல் ஹீரோயினாக நடிக்க, மோகன்லால், ஆர்யா, பொமன் இரானி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
இந்த இரண்டு படங்களுமே இறுதிக்கட்டத்தில் இருப்பதால், இரண்டுமே இந்த வருடம் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘தானா சேர்ந்த கூட்டம்’ ரிலீஸாகி ஒரு வருடம் நிறைவடைய இருப்பதால், சூர்யா ரசிகர்கள் ஆர்வத்துடன் இரு படங்களுக்காகவும் காத்திருக்கின்றனர்.
கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’
1996-ம் ஆண்டு ரிலீஸான ‘இந்தியன்’ படத்தின் தொடர்ச்சியாக உருவாக இருக்கிறது ‘இந்தியன் 2’. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க, அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் நெடுமுடி வேணு நடிக்கிறார்.
‘இந்தியன்’ படத்தில் இந்தியன் தாத்தா கமல் வர்மக்கலை தெரிந்தவராக நடித்தார். ஆனால், இந்தப் படத்தின் கதைப்படி காஜலுக்கும் வர்மக்கலை தெரியவேண்டும் என்பதால், அவர் தற்போது வர்மக்கலை கற்று வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. வருகிற 18-ம் தேதி படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’
சுந்தர்.சி இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ‘அத்தரண்டிகி தாரேதி’ தெலுங்குப் படத்தின் ரீமேக் இது. சிம்பு ஜோடியாக மேகா ஆகாஷ், கேத்ரின் தெரேசா என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். முக்கியக் கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் இந்தப் படம், வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடியாததால், குறித்த நேரத்தில் திரைக்கு வர முடியவில்லை. எனவே, புதிய ரிலீஸ் தேதிக்காகக் காத்திருக்கின்றனர் சிம்பு ரசிகர்கள்.
விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’
‘ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா, சில வருட இடைவெளிக்குப் பின் இயக்கியுள்ள படம் இது. ஹீரோவாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி, ஷில்பா என்ற திருநங்கை தோற்றத்திலும் நடித்துள்ளார். சமந்தா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், ஃபஹத் ஃபாசில், மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம், பி.எஸ்.வினோத், நிரவ் ஷா ஆகிய மூவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். தியாகராஜன் குமாரசாமி, மிஷ்கின், நலன் குமரசாமி, நீலன் கே.சேகர் ஆகிய நான்கு பேரும் இணைந்து இந்தப் படத்துக்குத் திரைக்கதை எழுதியுள்ளனர். கடந்த வருடமே ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம், இந்த வருட ரிலீஸ் பட்டியலில் இணைந்துள்ளது.
எச்.வினோத் - அஜித் படம்
தொடர்ந்து நான்கு முறை சிவா இயக்கத்தில் நடித்த அஜித், ஒருவழியாக சிவாவுக்கு டாட்டா சொல்லிவிட்டு, ‘சதுரங்க வேட்டை’ மற்றும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய எச்.வினோத்துடன் இணைந்துள்ளார். அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான ‘பிங்க்’ இந்திப் படத்தின் ரீமேக் இது.
போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங், சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் விவரங்கள் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. கடந்த வருட இறுதியில் படப்பிடிப்பு தொடங்கியதால், ‘விஸ்வாசம்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படமும் இந்த வருடமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் ‘தளபதி 63’
‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், யோகி பாபு இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விளையாட்டு சம்பந்தப்பட்ட இந்தப் படத்தில் ட்ரெய்னராக விஜய் நடிப்பதால், சிறப்புப் பயிற்சியாளர் மூலம் அவருடைய உடலமைப்பு மாற்றப்பட்டு வருகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட் செய்கிறார். கலை இயக்குநர் முத்துராஜ், இந்தப் படத்துக்கான செட் வேலைகளைத் தொடங்கிவிட்டார். இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது. ‘மெர்சல்’, ‘சர்கார்’ படங்களைப் போலவே இந்தப் படமும் தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் ‘அசுரன்’
கெளதம் மேனன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் மார்ச் 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. தனுஷுக்கும், கெளதம் மேனனுக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட, பாதியிலேயே படம் நின்றது. பின்னர் சசிகுமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஒருவழியாக கடந்த வருடம் செப்டம்பர் 4-ம் தேதி நிறைவடைந்தது. தர்புகா சிவா இசையில் ‘மறுவார்த்தை பேசாதே’, ‘விசிறி’ பாடல்கள் ஹிட்டான நிலையில், படத்துக்காகக் காத்திருக்கின்றனர் தனுஷ் ரசிகர்கள்.
‘வடசென்னை’ படத்தைத் தொடர்ந்து தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படம் ‘அசுரன்’. வி. கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். மனஸ்தாபங்களால் சில வருடங்கள் பேசாமல் இருந்த தனுஷும் ஜீ.வி.பிரகாஷும் தற்போது பேசிக் கொள்வதால், ஜீ.வி.பிரகாஷையே இந்தப் படத்துக்கு இசையமைக்க வைக்க முயற்சி நடக்கிறது. வெற்றிமாறனுக்கும் ஜீ.வி. தான் ஆஸ்தான இசையமைப்பாளர் என்பதால், விரைவில் இந்தக் கூட்டணி இணையும் எனத் தெரிகிறது. தனுஷ் நடித்து, இயக்கி வந்த படம் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக நிற்பதால், இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது.
விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ மற்றும் ‘கடாரம் கொண்டான்’
கெளதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துருவ நட்சத்திரம்’. 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் நியூயார்க்கில் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு, இரண்டு வருடங்களாகியும் இன்னும் முடியாமல் இழுத்துக்கொண்டே போகிறது. ரீத்து வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கும் இந்தப் படத்தில், பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், வம்சி கிருஷ்ணா, விநாயகன், டிடி ஆகியோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மட்டும் இன்னும் மீதமுள்ளது.
‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படம் ‘கடாரம் கொண்டான்’. கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில், அக்ஷரா ஹாசன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்க, ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றது.
கார்த்தியின் ‘தேவ்’
ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தேவ்’. ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தைத் தொடர்ந்து, இந்தப் படத்திலும் கார்த்தி ஜோடியாக நடிக்கிறார் ரகுல் ப்ரீத்சிங். ஆக்ஷன் அட்வென்ச்சர் படமான இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், மும்பை, குலுமணாலி, பஞ்சகனி, குல்மார்க், இமாச்சலப் பிரதேசம், உக்ரைன் ஆகிய இடங்களில் நடந்து முடிந்தது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் உள்ள ‘ஒரு நூறு முறை’ பாடலின் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியானது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்க, தமிழ்ப் புத்தாண்டு படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ள படக்குழு.
ராஜுமுருகனின் ‘ஜிப்ஸி’
‘குக்கூ’ மற்றும் ‘ஜோக்கர்’ படங்களைத் தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கியுள்ள படம் ‘ஜிப்ஸி’. ஜீவா ஹீரோவாக நடிக்க, இமாச்சலப் பிரதேச அழகி நடாஷா சிங் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், நடனமாடப் பழக்கப்பட்டக் குதிரை ஒன்றும் நடித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில், யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். காரைக்கால் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற இதன் படப்பிடிப்பு, கடந்த வருடம் நவம்பர் 4-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், இந்தப் படத்தின் விளம்பரப் பாடலுக்காக நல்லகண்ணு, பியூஷ் மனுஷ், திருமுருகன் காந்தி உள்ளிட்ட சமூக ஆர்வலர்களை வைத்துப் படமாக்கியுள்ளனர்.
ஜெயம் ரவி - காஜல் அகர்வால் படம்
அறிமுக இயக்குநரான பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில், காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார். இருவருமே நீண்ட வருடங்களாக சினிமாவில் இருந்தாலும், இணைந்து நடிப்பது இதுதான் முதல்முறை. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் கடந்த வருடம் செப்டம்பர் 20-ம் தேதி தொடங்கியது.
இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், யோகிபாபு, சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை, வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இந்தப் படத்தில், பள்ளி மாணவனாக நடிக்கும் ஜெயம் ரவி அதற்காக 20 கிலோ உடல் எடையைக் குறைத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago