'பேட்ட' ஃபர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்து சிம்ரனுக்கு வாழ்த்துகள் வந்தவண்ணம் இருக்கின்றன. போனை எடுத்துப் பேச முடியாத அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் குவிகின்றன.
'இதுதான் என்னுடைய நிஜமான கம்பேக், உண்மைதானே?' என்று புன்னகைக்கிறார் சிம்ரன். டான்ஸ் ரிகர்சல் செய்து கொண்டிருந்தவரிடம் 'தி இந்து'வுக்காகச் சந்தித்தேன்.
'பேட்ட' படத்தில் உங்களின் லுக் ரசிகர்களால் வெகுவாகப் பாராட்டப்படுகிறது. உங்கள் இளமைக்கான ரகசியம் என்ன?
ஃபிட்டாக இருப்பதுதான் உங்களுக்கு நீங்களே கொடுத்துக்கொள்ளும் மிகப்பெரிய பரிசு. டயட், யோகா, ஃபிட்னஸ் மூலம் இப்படி இருக்கிறேன். ரஜினி சாருடன் பணியாற்றியதும் இதற்கான காரணமாக இருக்கலாம். சிரிக்கிறார்...
திரையுலகில் இருந்து சில காலம் விலகி இருந்தீர்கள். திடீரென ரஜினி ஹீரோயின் ஆகிவிட்டீர்கள். எப்படி இது நடந்தது?
'பேட்ட'தான் என்னை மீண்டும் இங்கே கொண்டு வந்தது. இதற்காக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுக்கும், ரஜினி சாருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி.
கடந்த சில வருடங்களாகவே அங்குமிங்கும் நடித்துக் கொண்டிருந்தேன். என்ன மாதிரியான படங்களைத் தேர்வு செய்வது என்றே தெரியவில்லை. ஆனால் நான் எப்படி, எந்த வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதை நண்பர்கள் வழிகாட்டினர்.
எதனால் 'பேட்ட' படத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்?
நிறைய காரணங்கள். படம் கையை விட்டுப் போவது குறித்து யோசிக்கக்கூட முடியவில்லை. இளம் தலைமுறை இயக்குநர்களில் நான் ஃபாலோ செய்பவர்களில் ஒருவர் கார்த்திக் சுப்பராஜ். வெவ்வேறு வகைமைப் படங்களை இயக்கியவர். ஒரு நடிகரிடம் இருந்து எதை வாங்கவேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார்.
தீவிர ரஜினி ரசிகராக இருந்தாலும் படப்பிடிப்பில் இயக்குநர்- நடிகர் உறவைச் சிறப்பாகக் கையாண்டு படத்தை எடுத்திருக்கிறார்.
ரஜினியுடன் படப்பிடிப்பில் முதல் நாள் அனுபவம் எப்படி இருந்தது?
நான் நீண்ட நாட்களாகவே ரஜினி ரசிகை. அவரைப் போல நடக்கவும், ஸ்டைலாகக் கண்ணாடியை மாட்டவும் எக்கச்சக்க தடவைகள் முயற்சித்திருக்கிறேன். முதல் நாள் ஷூட்டிங்கின்போது என்னுடைய டயலாக்குகளைப் பேச மறந்துவிடுவேன் என்று நினைத்தேன். ஆனால், ரஜினி சார், படப்பிடிப்பில் அனைத்தும் அமைதியாக நடப்பதை உறுதிப்படுத்தினார். மக்களை மகிழ்விக்கவே நாம் நடிக்கிறோம் என்பதை சொல்லிக்கொண்டே இருந்தார்.
'சந்திரமுகி' படத்தில் ஜோதிகா நடித்த வேடத்துக்கு நீங்கள்தான் தேர்வு செய்யப்பட்டீர்கள் என்பது நிறையப் பேருக்குத் தெரியாது. எதனால் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பைத் தவிர்த்தீர்கள்?
அதற்குப் பின்னால் ஓர் அழகான காரணம் இருக்கிறது. 'சந்திரமுகி' படப்பிடிப்பில் 3 நாட்கள் கலந்துகொண்டேன். நான்காவது நாள் நான் கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அந்தக் காரணம்தான் படத்திலிருந்து என்னை விலக வைத்தது.
90களில் தமிழ் சினிமாவை நீங்களும் ஜோதிகாவும் ஆட்சி செய்தீர்கள். விஜய், அஜித், சூர்யா மற்றும் கமல்ஹாசனோடு நடித்திருக்கிறீர்கள். அந்தக் காலகட்டத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
திரும்பிப் பார்த்தால், மகிழ்ச்சியாக இருக்கிறது. குறுகிய காலகட்டத்தில் நிறைய பணிபுரிந்திருக்கிறேன். ரசிகர்களின் மனதில் ஓர் அடையாளத்தை ஏற்படுத்தி இருக்கிறேன்.
கர்ப்பமாக இருந்ததால் சந்திரமுகி படத்தைவிட்டு வெளியேறினீர்கள். திருமணத்துக்குப் பிறகு ஜோதிகா சில காலம் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார். திருமணத்துக்குப் பிறகு ஆண்கள் முன்னணி ஹீரோக்களாக நடிக்கும்போது, பெண்களுக்கு அந்த வாய்ப்பு கடினமாக்கப்படுகிறதா?
ஆண்களைக் காட்டிலும் பெண்கள் உயர்ந்தவர்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர்கள்தான் ஏராளமான விஷயங்களை பேலன்ஸ் செய்கிறார்கள். அஜித், விஜய் இருவரும் சூப்பர் ஸ்டார்களாக இருக்கிறார்கள். அதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் அவர்கள் தந்தையும் கூட. அவர்களின் வளர்ச்சிக்குப் பின்னால், இருவரின் மனைவிகள் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும்.
டிவி சேனல்களைத் திருப்பும்போது 90களில் சூப்பர் ஹிட்டான உங்களின் படங்களைப் பார்த்திருப்பீர்கள். அப்போதெல்லாம் என்ன தோன்றும்?
நானா இப்படி நடித்திருக்கிறேன் என்று என்னாலேயே நம்ப முடியாது. நாள் முழுக்க படப்பிடிப்பில் இருந்திருக்கிறேன். அப்போது திரை உலகில்தான் முழுக்க முழுக்க இருந்தேன். என்னுடைய குடும்பத்தோடோ, நண்பர்களுடனோ நேரம் செலவிடவோ, பண்டிகைகளைக் கொண்டாடவோ முடியாது.
ஆனால் இன்று அப்படி இல்லை. 'என் குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டும்' என்பேன். இப்போது படங்கள் நடிக்கும்போது குடும்பத்துக்கு எனத் திட்டமிட்டு தனித்தனியாக நேரம் ஒதுக்குவேன்.
உங்களின் நடிப்பில் வெளியாகி, மீண்டும் மீண்டும் உங்களைப் பார்க்கத் தூண்டும் படங்கள் ஏதாவது?
'வாலி', 'பிரியமானவளே', 'கன்னத்தில் முத்தமிட்டால்'. 'யூத்' படத்தில் இருந்து 'ஆல் தோட்ட பூபதி' பாடல்.. இவற்றை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பார்ப்பேன்.
தமிழில்: ரமணி பிரபா தேவி
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago