அரசியல்வாதின்னா எல்லாத்துக்கும் கருத்து சொல்லணும்னு அவசியமில்லை - ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ நாயகி குஷ்பு

By மகராசன் மோகன்

நீண்ட நாட்களுக்கு  பிறகு  மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பியிருக்கிறார் குஷ்பு. சன் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடரின் மூலம் நாலரை ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, நடிகையாக ஓட ஆரம்பித்துள்ளார்.  நடிகை, அரசியல்வாதி, தயாரிப்பாளர், குடும்பத் தலைவி என பன்முகம் காட்டிவரும் அவருடன் பேசினோம்.

ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை பெற்றிருந்த ‘நந்தினி’ தொடர் ஏன் இத்தனை விரைவில் முடிவுக்கு வந்தது?

விரைவில் முடியவில்லை. இரண்டரை வருஷம் ஆச்சு. விறுவிறுப்பான தொடர் என்பதால் காலம் ஓடினதே தெரியல. ‘நந்தினி’ தொடர்ல ஒரு சின்ன ப்ளாஷ்பேக்லதான் வேலை. 20 நாட்கள் அதில் முகம் காட்டினேன். ஏதாவது ஒரு வகையில முக்கியத்துவம் இல்லைன்னா அங்கே எனக்கு வேலை இருக்காது. அந்தக் கதையில எனக்கு வேலை இல்லாததால வரல.  ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’  தொடரில் நான்தான் மையம். என்னைச் சுற்றித்தான் கதை நகரும். நல்ல கதாபாத்திரம் என்பதால் இதில் நான் இருக்கேன்.

இந்த தொடரில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதைக் கடந்து வேறு என்ன இருக்கிறது?

சின்னத்திரையில் இன்னைக்கு போட்டி ரொம்ப அதிகம்.  ரொம்ப கவனமா இருக்கணும். அதுவும் இது என்  சொந்த தயாரிப்பில் வரும் தொடர் வேற. நந்தினி தொடரை தென்னிந்தியாவிலேயே பிரம்மாண்டமான தொடர் என்ற பேரோட கொடுத்தோம். விறுவிறுப்பு, செட், திருப்பம்னு எல்லா அம்சமும் அதில் இருந்துச்சு. அதேமாதிரிதான் இப்பவும். லட்சுமி ஸ்டோர்ஸ் தொடருக்கான ‘கடை செட்’டுக்கே  ரூ.2 கோடிக்கும் மேல ஆச்சு. தமிழ், தெலுங்குன்னு ரெண்டு மொழிகளில் ஷூட் பண்றோம்.

தயாரிப்பு, நடிப்பு, கதை ஆக்கம் என மூன்றிலும் தலையிடுவது சவுகரியமாக இருக்கிறதா?

நடிகையா, கிரியேட்டிவ் ஹெட்டா இந்தக் காட்சி நல்லா, பிரம்மாண்டமா இருக்கணும்னு மனசு சொல்லும். அதே நேரத்துல எனக்குள்ள இருக்குற தயாரிப்பாளர்  செலவு அதிகமாகிடப் போகுதேன்னு யோசிக்கத் தூண்டும்.   முடிவா அவுட்புட்தான் முக்கியம். அதுக்கு எந்தவித சமரசமும் இல்லாமல் பார்த்துக்கிறேன். இதுவே ஒரு சவால்தான்.

சினிமாவில் உங்களோட  சீனியர்ஸான  ராதிகாவும், ரேவதியும் பிரைம் டைம் தொடர்களில் வருகிறார்களே?

சின்னத்திரை பெண்களோட மீடியம். சின்னத்திரையில் சினிமா நடிகைங்க வரக்கூடாதுன்னு ஒரு காலகட்டம் இருந்தப்போ, அதை உடைத்து பிரேக் பண்ணினவங்க ராதிகா. அவங்க ஒரு ட்ரெண்ட் செட்டார்னே சொல்வேன். நாங்க 3 பேரும்  வர்ற ஒவ்வொரு தொடரும் ஒவ்வொரு கதைக்களத்தை கொண்டது.  எங்க எல்லோருக்குமே பாலோயர்ஸ் இருக்காங்க.   எங்களோட பங்களிப்பை சின்னத்திரை வழியே ரசிகர்கள் கொண்டாடுவது சந்தோஷமான விஷயம்.

kushboo-2jpg

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்  ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு போட்டியாகத்தான் இந்த ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடரா?

லட்சுமி ஸ்டோர்ஸ்’ முன்பே திட்டமிடப்பட்ட ஒரு கதை. அப்படி இருந்தாலும் இங்கே போட்டி என்பது  ஆரோக்கியமான ஒரு விஷயம்தானே. தொடர் நல்லா இருந்தா பார்க்கப்போறாங்க. நல்லவிதமான போட்டிங்க  இல்லைன்னா  எங்கே தப்பு நடக்குதுன்னு தெரியாமல் போய்டும்.

சினிமாவில் இப்போதைக்கு நடிக்க மாட்டேன் என்று சொல்லி இருந்தீர்கள்.  இப்போதும் அதே மனநிலையில்தான் இருக்கிறீர்களா?

ஆமாம். டெலிவிஷன் மாதிரி சினிமா ஷூட்டிங்கை எடுத்துக்க முடியாது. இதுல நானே தயாரிப்பாளரா இருக்குறதால ஷூட்டிங் போகுற நேரத்துல சின்னச் சின்ன அவகாசம் எடுத்துக்க முடியும். சினிமாவுல அப்படி முடியாது. நாம்  யாருக்கும் கஷ்டத்தையும் கொடுக்கக்கூடாது. அதோடு எனக்கு ஏற்றமாதிரி முக்கியத்துவம் வாய்ந்த கதைகள்  வந்தால் மட்டும்தான் சினிமா பற்றி யோசிக்கணும். தமிழ் படங்களில் நடிச்சு ஏழெட்டு  வருஷங்கள் ஆச்சு.  கடைசியா என்ன படத்துல வந்தேன்னே ஞாபகம் இல்லை.  என்னை ஈர்க்குறமாதிரி நல்ல கதை அமைந்தால் பார்க்கலாம்.

சமீபகாலமாக  அரசியல் குறித்த உங்களது பேச்சு, செயல்பாடுகளில் வித்தியாசம் தெரிகிறது. அரசியலில் உங்களுக்கு நெருக்கடிகள் இருப்பதாக விமர்சனம் இருக்கிறதே?

காங்கிரஸ் கட்சியில் நான் தேசிய அளவிலான பொறுப்பில் இருக்கிறேன். அப்படி இருக்கும்போது  தேசிய அளவிலான பிரச்சினைகளில்தான் நான்  அதிக கவனம் செலுத்த முடியும். அதற்காக தமிழ்நாட்டில் உள்ள பிரச்சினைகள் பற்றி பேசாமல் இல்லை. அரசியலில் இருக்கோம். அதுக்காக எப்பவும் சும்மா கருத்து சொல்லணும்னு எல்லா விஷயங்களுக்கும் கருத்து சொல்லிக்கிட்டே இருக்க முடியாது. அது அவசியமில்லை.  டெல்டா விவசாயிகள் பிரச்சினை,  தேர்தலைச் சந்திக்க அதிமுகவுக்கு  ஏன் பயம் என்பதுபோன்ற  விஷயங்களைப் பேசவே செய்கிறேன். அது போதும்.

ரஜினி, கமல் அரசியலை எப்படி பார்க்கிறீர்கள். இவர்கள்  தரப்பில் இருந்து உங்களுக்கு ஏதேனும் அழைப்பு வந்ததா?

ரஜினி இன்னும் அரசியல் கட்சி தொடங்கல. அதுபற்றி அப்பறம் பேசலாம். கமல் எனக்கு  நல்ல நண்பர். நான் இப்போது காங்கிரஸ் கட்சியில் நல்ல பதவியில் சந்தோஷமாக இருக்கேன். மற்ற விஷயங்களைப் பற்றி எதுக்கு யோசிக்கணும்?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்