கிரிக்கெட் விளையாடி இந்தியாவை ஜெயிக்க வைத்து அப்பாவின் கண்ணீரைத் துடைப்பேன் என்ற லட்சியத்துடன் போராடும் மகளின் கதையே 'கனா'.
குளித்தலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகேசனுக்கு (சத்யராஜ்) கிரிக்கெட் என்றால் உயிர். எந்த வேலை இருந்தாலும் அப்படியே போட்டு விட்டு டிவியில் மேட்ச் பார்க்கக் கிளம்பி விடுவார். ஒரு நாள் மகளுடன் சேர்ந்து கிரிக்கெட் பார்க்கும்போது இந்திய அணி தோற்றுவிடுவதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அழுகிறார். சுமார் 10 வயதில் இருக்கும் அவரது மகள் கவுசல்யா (ஐஸ்வர்யா ராஜேஷ்) அப்பாவை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக கிரிக்கெட் கற்றுக்கொள்கிறார்.
ஆனால், அவர் கிரிக்கெட் விளையாடுவதற்கு தடைகள் மட்டுமே சூழ்கின்றன. தடைகளை அவர் தாண்டினாரா, இந்திய அணியில் இடம் பிடிக்க முடிந்ததா, அப்பாவை சந்தோஷப்படுத்த முடிந்ததா, விவசாயம் என்ன ஆனது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.
பாடலாசிரியர், நடிகர் அருண்ராஜா காமராஜ் கனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகியிருக்கிறார். அவரது வரவு தமிழ் சினிமாவில் நல்வரவாகட்டும்.
ஒட்டுமொத்தப் படத்தையும் ஐஸ்வர்யா ராஜேஷ் தாங்கி நிற்கிறார். வெகுளிப் பெண்ணாக இருந்துகொண்டு கிரிக்கெட் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தும் இடங்களிலும், வறுமை நிலையிலும் அம்மாவின் எதிர்ப்பை மீறி அடம் பிடிக்கும் தருணங்களிலும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு காட்சியில் கூட மிகைத்தன்மை எட்டிப்பார்க்காத அளவுக்கு பாத்திரமாகத்துக்குத் தேவையான நிறைவான, இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். கதாநாயகியை மையமாகக் கொண்ட படம் என்றால் இனி ஐஸ்வர்யா ராஜேஷின் பெயரும் தவறவிடக்கூடாத பட்டியலில் இடம்பெறும் என்று நம்பலாம்.
விவசாயத்தின் வீழ்ச்சியைக் கண்டு நொந்துபோகும் சத்யராஜ் தன் மகளை ஆளாக்கிப் பார்க்கும் கனவுகளைச் சுமக்கும்போது பொறுப்பான தகப்பனை கண்முன் நிறுத்துகிறார்.
ஆண்களுடன் விளையாடச் செல்லும் மகளைக் கண்டிக்கும் கறாரான அம்மாவாக ரமாவின் நடிப்பு பலே. அதே மகளிடம், ''ஆசைப்பட்டா மட்டும் பத்தாது. அடம்பிடிக்கத் தெரியணும், நீ பிடிக்கிற அடம் எந்த அளவுக்கு உனக்கு அது பிடிச்சுருக்குன்னு காட்டும்'' என்று தடைக்கல்லையே படிக்கல்லாக மாற்றிப் போடும்போது சபாஷ் பெறுகிறார்.
சோர்ந்துபோன சத்யராஜை மிக சாமர்த்தியமாகத் தேற்றி நம்பிக்கையூட்டும் கதாபாத்திரத்தில் இளவரசு இதயத்தில் இடம் பிடிக்கிறார். சச்சின், டெண்டுல்கராக வரும் சவரிமுத்துவும் ஆண்டனி பாக்யராஜும் நகைச்சுவை என்ற பெயரில் கடுப்பேத்துகிறார்கள். முனீஸ்காந்த் ராம்தாஸ் பதற்றம், பரபரப்பு என்ற பெயரில் வெளிக்காட்டும் உணர்வுகள் படத்துக்கு அந்நியமே.
தன்னம்பிக்கையை விதைக்கும் பயிற்சியாளராக சிவகார்த்திகேயன் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். அவரின் கனவும் அதற்கான காரணங்களும் படத்துக்கு வலு சேர்க்கிறது.
தினேஷ் கிருஷ்ணன் நிலம் சூழ் கிராமத்தையும், கிரிக்கெட் விளையாட்டையும் மிகச் சிறப்பாக படம் பிடித்துள்ளார். திபு நினன் தாமஸ் இசையில் வாயாடி பெத்த புள்ள பாடலும் சவால் பாடலும் படத்தின் கதையோட்டத்தில் சேர்ந்து பயணிக்கின்றன. பின்னணி இசையில் சுமாரான காட்சிகளுக்கும் உயிரூட்டி இருக்கிறார் திபு நினன் தாமஸ்.
''நிறைய விவசாயிகள் உசுரோடு இருக்கக் காரணமே விஷம் வாங்க காசில்லைன்னுதான்'', ''கிரிக்கெட் பிளேயர்ஸ் வீட்லயே கிரிக்கெட் விளையாட மகனைத்தான் அனுப்பி வெச்சிருக்காங்க, மகளை இல்லை'', ''உன்னால முடியாதுன்னு யாராவது சொன்னா நீ நம்ப வேண்டியது அவங்களை இல்லை, உன்னை'', ''ஜெயிச்சிடுவேன்னு சொன்னா இந்த உலகம் கேட்காது, ஆனா, ஜெயிச்சவன் சொன்னா கேட்கும். எதுவா இருந்தாலும் நீ ஜெயிச்சிட்டுப் பேசு'' போன்ற வசனங்கள் படத்துக்குப் பலம்.
மிடில் கிளாஸ் குடும்பத்திலிருந்து ஒரு பெண் கிரிக்கெட் விளையாடப் போனால் ஊர் என்ன பேசும், அக்கம் பக்கத்தினர் என்ன பேசுவார்கள், அதுவும் ஆண்களுடன் ஒரு பெண் விளையாடினால் சமூகத்திலிருக்கும் அந்த நாலு பேர் என்ன சொல்வார்கள் போன்றவற்றை யதார்த்தம் மீறாமல் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் அருண்ராஜா காமராஜ். விளையாட்டில் சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு பெற்றோரால் ஏற்படும் தடைகள், குறிப்பாக அம்மாவால் ஏற்படும் எதிர்ப்புகள், சுதந்திரம் இல்லாமல் கட்டுப்படுத்தப்படும் சூழல், அந்த வேலிகளை உடைக்க செய்ய வேண்டிய வழிமுறைகள் என அனைத்தையும் மிக லாவகமாகப் பதிவு செய்திருக்கிறார்.
கிரிக்கெட், விவசாயம் என்ற இரண்டு நேர்க்கோடுகளில் கதை செல்கிறது. இதனால் படத்தின் மையம் எது என்ற குழப்பம் வந்துவிடுகிறது. அந்தக் குழப்பம் இயக்குநருக்கும் இருப்பதால் எதற்கு முக்கியத்துவம் அளிப்பது என்று தெரியாமல் திரைக்கதை தடுமாறுகிறது. ஒருவழியாக சுதாரித்து கிரிக்கெட்டை மையப்பொருளாகக் கொண்டு விவசாயத்தை துணைப்பொருளாகத் தொடர்ந்தாலும் தர்ஷன், சவரிமுத்து, ஆண்டனி பாக்யராஜ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தை பலவீனப்படுத்துகின்றன. இதற்கிடையே சிவகார்த்திகேயன் வந்ததும் படம் அவர் பக்கம் திரும்பிவிடுகிறது. பயிற்சியாளருக்கே அதிக ஹைப் கொடுக்கப்படுவதால் இது கிரிக்கெட் வீராங்கனைக்கான படமா? கிரிக்கெட் பயிற்சியாளருக்கான படமா? என்ற சந்தேகம் எழுந்துவிடுகிறது.
இப்படி சில பிரச்சினைகள் இருந்தாலும் தமிழில் ஒரு கிரிக்கெட் படத்தைக் கொஞ்சம் தரமாகக் கொடுத்ததற்காக நாமும் 'கனா' காணலாம்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago