2018-ம் ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே இருக்கின்றன. சர்ச்சைக்குப் பெயர்போன தமிழ் சினிமாவில், நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சில சம்பவங்களும் இந்த ஆண்டு நடைபெற்றன. அவற்றைப் பார்க்கலாம்...
உதவியாளர்களின் முழு சம்பளத்தைத் தர முன்வந்த சூர்யா, கார்த்தி, விஷால்
ஒரு படத்தில் நடிக்கும்போது, நடிகர் - நடிகைகளின் உதவியாளர்களுக்கான சம்பளத்தை, அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தான் தரவேண்டும். சிலர் மேக்கப், காஸ்ட்யூம் டிசைனர், சமையல் என ஒன்றுக்கும் மேற்பட்ட உதவியாளர்களை படப்பிடிப்புக்கு அழைத்து வருவர். ஒவ்வொரு நடிகர் - நடிகையைப் பொறுத்தும் இந்த உதவியாளர்களின் சம்பளம் மாறுபடும். இதனால், தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய செலவு ஏற்பட்டது. நடிகர் - நடிகைகளின் உதவியாளர்களுக்கான சம்பளம் மட்டுமே ஒரு படத்துக்கு 20 லட்ச ரூபாய் வரை தரப்பட்டது. இது தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் இதுகுறித்து ஆலோசனை நடத்தியது. இதில், நடிகர்களின் உதவியாளர்களுக்கு இனிமேல் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியமே வழங்கப்படும் எனவும், கூடுதல் தொகையை சம்பந்தப்பட்ட நடிகர்களே வழங்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. சூர்யா, கார்த்தி, விஷால் ஆகிய மூவரும், தங்கள் உதவியாளர்களின் முழு சம்பளத்தையும் தாங்களே கொடுத்துவிடுவதாகத் தெரிவித்தனர். தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவரான நாசர், ‘மற்ற நடிகர்களும் இதைப் பின்பற்ற வேண்டும்’ என்று தெரிவித்தார்.
காவிரி, ஸ்டெர்லைட் பிரச்சினைகளுக்காக சினிமாத்துறையினர் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் சினிமாத்துறையினர் சார்பில் ஏப்ரல் 8-ம் தேதி கண்டன அறவழிப் போராட்டம் நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெப்சி உள்ளிட்ட சினிமா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெற்றது.
கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி, விஷால் என தமிழின் அனைத்து முன்னணி நடிகர்களும் இதில் கலந்து கொண்டனர். ஆனால், அஜித் கலந்து கொள்ளவில்லை. அதேபோல், நயன்தாரா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், சமந்தா உள்பட யாருமே கலந்து கொள்ளவில்லை. வரலட்சுமி சரத்குமார், தன்ஷிகா, ரித்விகா என சில இளம் நடிகைகளும், ஸ்ரீபிரியா, ரேகா, சத்யப்பிரியா உள்ளிட்ட மூத்த நடிகைகள் சிலருமே கலந்து கொண்டனர்.
தன் சம்பளத்தை நா.முத்துக்குமார் குடும்பத்துக்கு கொடுக்கச் சொன்ன சிவகார்த்திகேயன்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்துக்கு அனிருத் இசையமைத்தார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், அருண்ராஜா காமராஜ், விக்னேஷ் சிவன் ஆகிய மூவரும் ஆளுக்கொரு பாடல் எழுதினர். மூவருமே பாடல் எழுதியதற்காக சம்பளம் வாங்கவில்லை.
இதில், சிவகார்த்திகேயன் மட்டும் தனக்கு கொடுக்க நினைக்கும் சம்பளத்தை, மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் குடும்பத்துக்கு கொடுக்கச் சொல்லிவிட்டார். காரணம், சிவகார்த்திகேயனுக்காக முதன்முதலில் பாடல் எழுதியவர் நா.முத்துக்குமார். சிவகார்த்திகேயன் நடித்த முதல் படமான ‘மெரினா’வில், மூன்று பாடல்களை எழுதியிருக்கிறார் நா.முத்துக்குமார். அதனால் தான் தன் அன்பை வெளிப்படுத்தும் வகையில் இப்படிச் செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
திரையுலகில் 25 ஆண்டுகள்: உதவி இயக்குநர்களின் அன்பால் நெகிழ்ந்த ஷங்கர்
1993-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி வெளியான ‘ஜென்டில்மேன்’ படம்தான் ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல் படம். அந்தப் படம் வெளியாகி கடந்த ஜூலை 30-ம் தேதியுடன் 25 வருடங்கள் ஆனது. அதைக் கொண்டாடும் வகையில் ஷங்கரிடம் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்த அனைவருமே ஒன்றிணைந்து சென்னையில் விழாவுக்கு ஏற்பாடு செய்தனர். ஷங்கரிடம் ஆரம்ப காலகட்டத்தில் பணிபுரிந்த உதவி இயக்குநர்களில் இருந்து, இப்போது பணிபுரியும் உதவி இயக்குநர்கள் வரை இந்த விழாவில் கலந்து கொண்டார்கள். பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், அறிவழகன், அட்லீ உள்ளிட்ட அனைவருமே இதில் பங்கேற்றனர்.
உதவி இயக்குநர்கள் அனைவருமே ஷங்கரைப் பற்றி தனித்தனியாக எழுதி, அதனை ஒரு புத்தகமாகத் தொகுத்து, அதனை ஷங்கருக்குப் பரிசாக வழங்கினர். அதைப் பார்த்து மிகவும் நெகிழ்ந்துபோன ஷங்கர், ‘இன்றைய தினம், என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். கண்டிப்பாக அனைவருமே இன்னும் பெரிய நிலைக்கு வரவேண்டும்’ என்று வாழ்த்தினார்.
மனக்கசப்புக்கு முற்றுப்புள்ளி: மீண்டும் இணைந்தது சுசீந்திரன் - யுவன் கூட்டணி
‘நான் மகான் அல்ல’, ‘ஆதலால் காதல் செய்வீர்’ ஆகிய படங்கள் இணைந்து பணிபுரிந்தது சுசீந்திரன் - யுவன் கூட்டணி. அதனைத் தொடர்ந்து டி.இமானுடன் பணிபுரிந்து வந்தார். மே 30, 2018 அன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ‘யுவனுடன் தன்னால் பணிபுரிய முடியவில்லை. அதற்கு அவருடன் இருக்கும் புதிய நண்பர்கள் தான் காரணம்’ என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
சுசீந்திரனின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டது. அதனைத் தொடர்ந்து இருவரும் சந்தித்துப் பேசி, மீண்டும் நட்பானார்கள். சுசீந்திரன் இயக்கத்தில் கடைசியாக வெளியான ’ஜீனியஸ்’ படத்துக்கு யுவன் தான் இசையமைத்தார்.
குரூப் டான்ஸர் திடீர் மரணம்: ஒருநாள் முழுவதும் மருத்துவமனையில் இருந்த அஜித்
அஜித் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸாகும் படம் ‘விஸ்வாசம்’. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு புனேவில் நடைபெற்றது. அஜித்துடன் குரூப் டான்ஸர்கள் நடனமாடும் காட்சியைப் படமாக்கினர். திடீரென்று சரவணன் என்ற குரூப் டான்ஸர், தனது உடலில் ஒரு அசாதாரண சூழலை உணர்ந்திருக்கிறார். வாந்தி எடுத்து, மிகவும் உடல் நிலை மோசமாகியிருக்கிறது. உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தி, மருத்துவமனைக்கு விரைந்தனர். ஈசிஜி உள்ளிட்ட அனைத்து டெஸ்ட்களும் எடுக்கும்போதே, அவருடைய உயிர் பிரிந்துவிட்டது. அஜித்துக்குத் தகவல் தெரியவர, உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார்.
சரவணன் உயிரிழந்தது தெரிந்தவுடன், பிரேதப் பரிசோதனை முடியும்வரை மருத்துவமனையிலே இருந்திருக்கிறார் அஜித். மேலும், குடும்பத்தினரிடமும் பேசி உடலை புனேவிலிருந்து மும்பைக்கு அனுப்பி, அங்கிருந்து சென்னைக்கு கொண்டு செல்லும்வரை முழுக்க தொலைபேசி வாயிலாக எவ்விதப் பிரச்சினையும் ஏற்படாதவாறு பேசிக் கொண்டே இருந்திருக்கிறார். மேலும், அருகில் இருந்த டான்ஸர்கள் அனைவருக்கும் ஆறுதல் கூறியிருக்கிறார்.
'இந்தியன் 2' எனது கடைசிப் படம்: கமல்ஹாசன்
கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் கலந்துகொண்ட கமல்ஹாசன், அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ‘எங்களின் மக்கள் நீதி மய்யம் கட்சி மேற்கொண்டுள்ள பணிகளுக்கு இடையே ‘இந்தியன் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறேன். இந்தப் படம்தான் என்னுடைய திரையுலகப் பயணத்தில் கடைசிப் படமாக இருக்கும். முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதால், ‘இந்தியன் 2’ படத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து விடைபெற்று விடுவேன். நடிப்பில் இருந்து நான் ஒதுங்கிவிட்டாலும், என்னுடைய திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து சினிமாவில் பங்களிப்பைச் செலுத்தி வரும். 'இந்தியன் 2' படப்பிடிப்பு பணிகள் விரைவில் முடிந்ததும் எனது அரசியல் பணி முழு நேரமாக மாறும்’ என்றார்.
5 வயதாக இருக்கும்போதே ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தின் மூலம் சினிமாவில் நடிக்கத் தொடங்கியவர் கமல்ஹாசன். நடிகராக மட்டுமின்றி சினிமாவின் பல துறைகளிலும் வித்தகராக விளங்கியவர். பல தொழில்நுட்பங்களை முன்கூட்டியே தமிழ் சினிமாவுக்குத் தாரை வார்த்தவர். அவரின் இந்த அறிவிப்பு, சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
'நெல்' ஜெயராமன் மறைவு: இறுதிக்கட்ட செலவுகளையும் ஏற்றார் சிவகார்த்திகேயன்
கடந்த ஒன்றரை ஆண்டு காலமாகத் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார் 'நெல்' ஜெயராமன். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் கடந்த டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை காலமானார். இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடங்கி, அனைத்து சிகிச்சை செலவுகளையும் செய்தார் சிவகார்த்திகேயன். அவர் காலமானதுக்குப் பிறகு, மருத்துவமனையில் கட்ட வேண்டிய இதர தொகை அனைத்தையும் கொடுத்தார். மேலும், எப்படி அவரை ஊரிலிருந்து அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்தார்களோ, அதேபோல் இங்கிருந்து அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லும் மொத்த செலவையும் சிவகார்த்திகேயன் ஏற்றுக் கொண்டார்.
மனஸ்தாபங்கள் தீர்ந்தது: மீண்டும் இணைந்த தனுஷ் - ஜீ.வி.பிரகாஷ்
வசந்த பாலன் இயக்கும் ‘ஜெயில்’ படத்தில் நாயகனாக நடித்துவரும் ஜீ.வி.பிரகாஷ், அந்தப் படத்துக்கு இசையும் அமைக்கிறார். அந்தப் படத்துக்காக ஒரு பாடலை தனுஷைப் பாட வைத்துள்ளார். தனுஷ் நடித்த 'ஆடுகளம்', 'மயக்கம் என்ன' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர் ஜீ.வி.பிரகாஷ். 'மயக்கம் என்ன' படத்தின்போது ஏற்பட்ட மனஸ்தாபத்தில் இருவருமே நீண்ட நாட்களாக பேசாமல் இருந்தனர். இந்நிலையில் 'ஜெயில்' படத்தின் ஒரு பாடலுக்காக இருவரையும் இணைத்து வைத்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன். இதனால், தனுஷ் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் விரைவில் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
46 mins ago
சினிமா
46 mins ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago