முதல் பார்வை: 2.0

By உதிரன்

சென்னை மாநகரில் ஒரே நாளில் ஒரே சமயத்தில் செல்போன்கள் மாயமானால் அதற்கான காரணத்தை ஒரு விஞ்ஞானி கண்டறிந்து, பிரச்சினைகளைத் தீர்த்தால் அதுவே '2.0'.

சென்னையில் திடீரென்று  எல்லோருடைய செல்போன்களும் காணாமல் போகின்றன. முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள், விஞ்ஞானிகள், பொதுமக்கள் என்று அனைவரும் செல்போனை இழந்து தவிக்கிறார்கள். இதற்குக் காரணம் தீவிரவாதிகளின் சதியா, வேற்றுகிரக வாசிகளின் நடமாட்டமா என்பது தெரியாமல் அரசு குழம்புகிறது. முதல்வர் அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்ட, விஞ்ஞானி வசீகரன் (ரஜினிகாந்த்) அதில் கலந்துகொள்கிறார்.  செல்போன் கடை வைத்திருக்கும் முதலாளியும், ஒரு தொழிலதிபரும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும் அடுத்தடுத்து பலியாகின்றனர். இதற்கு செல்போனே காரணமாகிறது. இந்த நிலையில் விஞ்ஞானி ரஜினிகாந்த் பொதுமக்களின் உயிரை எப்படிக் காப்பாற்றுகிறார், அரசு என்ன செய்கிறது, எதிரிகளை எப்படி எதிர்கொள்கிறார் போன்ற கேள்விகளுக்கு விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் பதில் சொல்கிறது திரைக்கதை.

3டி தொழில்நுட்பத்தில் தமிழில் இப்படி ஒரு படமா? என  விழிகளை விரிய வைத்துள்ளார் இயக்குநர் ஷங்கர். டைட்டிலில் தொடங்கும் அவரது ராஜ்ஜியம் படம் முடியும் வரை இமைக்காமல் ரசிக்க வைக்கிறது. கமர்ஷியல், பிரம்மாண்டம், தொழில்நுட்பம், திரைக்கதை என்று எதிலும் சமரசம் செய்துகொள்ளாமல் ரசிகர்களை திருப்திப்படுத்திய விதத்தில் கச்சிதமான இயக்குநராய் ஈர்க்கிறார்.

விஞ்ஞானி வசீகரன், சிட்டி 1.0, சிட்டி 2.0, குட்டி 3.0 என்று நான்கு விதமான தோற்றங்களில் ரஜினி வசீகரிக்கிறார்.  அதுவும் சிட்டி 2.0, குட்டி 3.0 ரஜினியின் நடிப்பு அட்டகாசம்.  ''இந்த நம்பர் ஒன் நம்பர் 2 எல்லாம் பாப்பா விளையாட்டு, எப்பவும் நான் தான் நம்பர் ஒன்'', ''ஓடிப்போறது என் சாஃப்ட்வேர்லயே கிடையாது'', ''அய்யோ சார் நீங்களா, இந்தா வாங்கிக்கோ'' என்று சிட்டி ரஜினி தனக்கே உரிய ஸ்டைலில் வசனம் பேசி அப்ளாஸ்களை அள்ளுகிறார். குட்டி 3.0 ஆக திரையில் குழந்தைக்கே உரிய குதூகலத்துடன் சர்ப்ரைஸ் என்ட்ரி தந்து ரஜினி ஆச்சரியப்படுத்துகிறார்.  முரட்டு குணம் கொண்ட கதாபாத்திரம் என்றால் ரஜினிக்கு அல்வா சாப்பிடுவது போல என்பதை இப்படத்திலும் நிரூபித்திருக்கிறார்.

பட்சி ராஜனாக அக்‌ஷய் குமார் பக்குவமான நடிப்பை வழங்கியுள்ளார். வருத்த வடுக்களைச் சுமந்தபடி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் அக்‌ஷய் குமார் அதற்குப் பிறகு வெடிப்பது வேற லெவல்.

எமி ஜாக்ஸன் கதாநாயகிக்கான பங்களிப்பை நிறைவாகச் செய்கிறார். கதை நகர்த்தலுக்கான முக்கியக் கருவியாகவும் இயங்குகிறார். ''வட போச்சே'', ''நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல'', ''காதலுக்கு மரியாதை'' என்று டைமிங்கில் அவர் அடிக்கும் பன்ச்களுக்கு தியேட்டரில் சிரிப்புச் சத்தம் அதிகம் கேட்கிறது.

அமைச்சராக வரும் கலாபவன் ஷாஜோன், அமைச்சர் பி.ஏ.வாக வரும் மயில்சாமி, விஞ்ஞானி போராவின்மகனாக வரும் சுதான்ஷு பாண்டே, ரோபோவைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர அனுமதி வழங்கும் அமைச்சர் அடில் ஹுசேன், செல்போன் கடை முதலாளியாக வரும் ஐசரி கணேஷ் ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள்.

நீரவ் ஷாவின் கேமரா படம் முழுக்க ஜாலம் செய்திருக்கிறது. அதில் நம்மையும் இரண்டறக் கலந்துபோகச் செய்கிறார். ஆண்டனியின் எடிட்டிங் நேர்த்தி. ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்துக்கான பில்ட் அப் காட்சிகளிலும் ரஹ்மான் அடக்கி வாசித்திருப்பது ஏற்புடையதாக இல்லை.

ஜெயமோகன், ஷங்கரின் வசனங்களும், கார்க்கியின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட வசனங்களும் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன.

செல்போன்கள் எல்லாம் காணாமல் போனால் என்ன ஆகும் என்று யோசிப்பதும், அதைச் சொல்வதும் சுலபம்தான். ஆனால், அதை பிரச்சினைக்குரிய அம்சமாகக் காட்சிப்படுத்தி வெகுஜன மக்களுடன் தொடர்புபடுத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆனால், அதை சர்வசாதாரணமாக திரையில் நிகழ்த்தியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.  செல்போன் பறக்குமா? என்று கேள்வி கேட்டு லாஜிக் எதிர்பார்த்தால் படத்தின் மேஜிக்கை ரசிக்க முடியாது.  ஆனால், செல்போன் பறப்பது, சூறாவளியாவது, புயலாகக் கிளம்புவது, பாம்பைப் போல ஊர்வது, சாலை முழுக்கப் பரவி நிற்பது, நீர்வீழ்ச்சியைப் போல அசரடித்து அதிர்ச்சி காட்டுவது என அத்தனை விதங்களிலும் ஆங்கிலப் படங்களைப் போன்று தரமான 3டி தொழில்நுட்பத்தில் தந்து அசத்தி இருக்கும் விதம் பாராட்டுக்குரியது.

அக்‌ஷய் குமார் ஏன் அப்படி ஒரு முடிவை எடுக்கிறார், அவர் வேறு மாதிரியான பாடம் கற்பித்திருக்கலாமே, சுதான்ஷு பாண்டேவால் அவ்வளவு எளிதாக அழிக்கப்பட்ட ஒன்றை மறு உருவாக்கம் செய்ய முடியுமா, ஹீரோ - வில்லன் என இருவருக்குள் நடக்கும் மோதல் மட்டும்தான் படத்தின் பிரதான அம்சமா என்று படத்தில் சில கேள்விகள் இருக்கின்றன. ஆனால், இவற்றை மறக்கடிக்கச் செய்து 2.30 மணி நேரப் படத்தை முழுக்க ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். சூழலியல் சார்ந்த அவரது அக்கறையும் வரவேற்கத்தக்கது.

ஒரு முறை பார்த்த ரசிகர்கள் மறுமுறை திரும்பியும் விரும்பியும் பார்க்கும் அளவுக்கு '2.0' படத்தைக் கொடுத்து '3.0' படத்துக்கான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கும் விதத்தில் கேப்டன் ஆஃப் தி ஷிப்பாக இயக்குநருக்கான பொறுப்பை மிகச் சரியாகச் செய்திருக்கிறார் ஷங்கர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்