பரிசுப் பொருளை வாங்குவதற்காக பண்பலை அலுவலகம் செல்லும் பெண், அதே இடத்தில் ஆர்.ஜே. ஆகப் பணிபுரியும் சூழல் வந்தால், அவர் அன்பு வழி நின்று ஆறுதல் மொழி பகிர்ந்தால் அதுவே 'காற்றின் மொழி'.
கணவர் விதார்த், மகன் சித்து ஆகியோருடன் சென்னையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் ஜோதிகா. குடும்பத் தலைவியாக வீட்டைப் பொறுப்பாக கவனித்துக் கொண்டாலும் உடன் பிறந்த இரட்டைச் சகோதரிகளாலும், அப்பாவாலும் தொடர்ந்து அவமானப்படுத்தப்படுகிறார். பிளஸ் 2-வில் மூன்று முறை முயன்றும் தோல்வியைச் சந்தித்ததால் ஜோதிகாவை உடன்பிறந்தவர்களே ஏளனமாகப் பார்ப்பதும், எந்த வேலை செய்தாலும் விமர்சிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில் ஒரு நாள் மின் கட்டணம் செலுத்துவதற்காகச் செல்லும் ஜோதிகா ஹலோ எஃப்.எம். நடத்தும் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறுகிறார். அதற்கான பரிசைப் பெற அந்த அலுவலகம் செல்லும் ஜோதிகாவுக்கு ஆர்.ஜே. ஆகும் ஆசை ஜோதிகாவுக்கு துளிர்க்கிறது. ஆர்வமுடன் ஆடிஷனில் கலந்துகொள்ளும் ஜோதிகா அதில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆர்.ஜே.வும் ஆகிறார். ஆனால், அவருக்கு இரவுப் பணி ஒதுக்கப்பட்டு ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவும் ஏற்பாடாகிறது.
அதற்கு விதார்த் முழு மனதோடு சம்மதிக்கவில்லை. இதனிடையே ஜோதிகா - விதார்த் மகன் சித்து வீடியோ கேம்களுக்கு அடிமையாகிறான். முறையான கண்காணிப்பு இல்லாததால் ஒழுங்கில்லாமல் வளர்கிறான். நிறுவனத்துக்குப் புதிதாக வந்த முதலாளியின் பேரன் நாராயண் லக்கியால் விதார்த்துக்கும் சிக்கல் எழுகிறது. இந்தச் சூழலில் ஒரு நாள் சித்து காணாமல் போகிறான். ஏன் சித்து காணாமல் போகிறான், ஜோதிகாவின் வேலை என்ன ஆகிறது, விதார்த் தன் வேலையை தக்கவைத்துக் கொண்டாரா, எப்போதும் தன் குடும்பத்தினரிடம் திட்டு வாங்கும் ஜோதிகா அடுத்து என்ன செய்கிறார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.
சாதாரண குடும்பத் தலைவிக்கு இருக்கும் சுமைகளையும், அவருக்குள் இருக்கும் கனவுகளையும் இயல்பாகச் சொல்லியிருக்கும் இயக்குநர் ராதாமோகனைப் பாராட்டலாம். ஒரு இந்திப் படத்தின் மறு ஆக்கம் என்ற போதிலும், நுண் உணர்வுகளை மெல்லிய இழையுடன் சொல்லும் அவரது பாணி இந்தப் படத்திலும் தொடர்வது ஆரோக்கியமானது.
லெமன் இன் த ஸ்பூன் போட்டியில் வெற்றி பெறும் சான்றிதழ்களைக் காட்டினாலே விளையாட்டுப் பிரிவுக்கான ஒதுக்கீட்டில் ஓர் அரசு வேலை கிடைத்திருக்கும் என்று நம்பும் அளவுக்கான வெகுளிப் பெண் கதாபாத்திரத்தில் ஜோதிகா ஆர்வமும் ஆசையுமாக நடித்திருக்கிறார். ஆர்வக்கோளாறில் குறும்பு என்கிற பெயரில் சரோஜாதேவியை இமிடேட் செய்ததையும், மிமிக்ரி என்ற பெயரில் மிகை உணர்ச்சி காட்டியதையும் ஜோதிகா தவிர்த்திருக்கலாம். டிராவல்ஸ் நடத்தலாம் என்ற ஐடியா குறித்துப் பேசும் தொனியிலும் முறையிலும் செயற்கைத்தனம் அப்பட்டமாய் எட்டிப்பார்க்கிறது.
ஆர்.ஜே. ஆன பிறகு முகம் தெரியாத முகங்களுக்கு ஆறுதல் சொல்லும் விதத்தில் ஜோதிகா பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். புரிந்துகொள்ளாமல் எப்போதும் திட்டும் அப்பா, அக்காக்களுக்கு மத்தியில் அவஸ்தையையும், மகன் காணாமல் போன சம்பவத்தின்போது பதற்றத்தையும் அழகாக வெளிப்படுத்துகிறார். லட்சுமி மஞ்சு, இளங்கோ குமாரவேல் கேட்கும் கேள்விகளுக்கு ரியாக்ஷனில் பதில் சொல்லும் விதம் சிறப்பு.
விதார்த் - ஜோதிகாவுடனான காட்சிகளில் அந்நியோன்யம் இல்லை. ஒருவித அசவுகரியத்துடனே விதார்த் நடித்திருப்பது திரையில் வெளிப்படையாகத் தெரிகிறது. மனைவியைக் கொஞ்சும் போது கூட 2 அடி தள்ளி நிற்கிறார். வேலை தரும் அழுத்தம், பக்கத்திலிருந்தும் மனைவி தூரமாய் போய்விட்ட உணர்வை வெளிப்படுத்தும் தருணம், மகன் காணாமல் போனதும் துடிக்கும் இடங்களில் ஸ்கோர் செய்கிறார்.
எம்.எஸ்.பாஸ்கருக்கு வழக்கமும் பழக்கமுமான கதாபாத்திரம். அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். இளங்கோ குமரவேல், லட்சுமி மஞ்சு, சாண்ட்ரா எமி ஆகிய மூவரும் கதையின் போக்கில் கவனிக்க வைக்கிறார்கள். மயில்சாமி ஓரிரு காட்சிகளில் வந்தாலும் சிரிக்க வைக்கிறார்.
மனோபாலா, 'டாடி' சரவணன், யோகி பாபு, சிம்பு, உமா பத்மநாபன் ஆகியோர் இடம்பெறும் காட்சிகள் படத்துக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. பிரவீன் கே.எல். இதில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.
மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம் சேர்க்கிறது. காஷிஃப்பின் இசையில் போ உறவே பாடல் மட்டும் மனதில் நிற்கிறது. கிளம்பிட்டாளே விஜயலட்சுமி தீம் பாடல் பொருத்தமற்ற இடத்தில் முன்கூட்டியே வருவதால் ரசிக்க முடியவில்லை. பின்னணி இசை நெருடல். ஜிமிக்கி கம்மல் பாடலுக்கான நடனம் வேகத்தடை.
இந்தியில் ஹிட்டடித்த 'துமாரி சுலு' என்ற படத்தை தமிழுக்கு ஏற்றபடி மறு ஆக்கம் செய்திருக்கிறார் இயக்குநர் ராதாமோகன். ஒரு குடும்பத்தலைவி ஆர்.ஜே.ஆனால் வீட்டுக்குள் என்ன மாதிரியான பிரச்சினைகள் ஏற்படும் என்ற சுவாரஸ்ய ஒன்லைனைச் சுற்றி திரைக்கதையையும் கொஞ்சம் மாற்றி அமைத்திருக்கிறார். ஆனால், நடிகர்களின் பக்குவமற்ற நடிப்பால், தேவையே இல்லாத இரட்டை அர்த்த வசனங்களால் முதல் பாதி மிகச் சுமாரான அம்சங்களில் அமுங்கி விடுகிறது.
இரண்டாம் பாதியில் சூழல் தரும் நெருக்கடியால் திரைக்கதை சீராகப் பயணிக்கிறது. பொன்.பார்த்திபன் வசனங்களும் அதற்கு கை கொடுக்கின்றன. பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் விதமும், தனிமையில் இருப்பவர்களின் வலியைப் புரிந்துகொண்டு ஆறுதல் சொல்லும் காட்சிகளும் படத்தை வலுவான தாங்கிப் பிடிக்கின்றன. ஜோதிகாவின் கதாபாத்திரம் நீட்சியடையும்போது உணர்வின் எல்லையில் படம் சரியாகப் பயணிக்கிறது. கிளைமேக்ஸ் காட்சியும் நல்ல தீர்வை முன் மொழிந்திருக்கிறது. அந்த வகையில் 'காற்றின் மொழி' உறவுப் பாலத்துக்கு கவுரவம் சேர்க்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago