முதல் பார்வை: சண்டக்கோழி 2

By உதிரன்

 

வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வரும் இளைஞன் மண்ணுக்கு மதிப்பு கொடுத்து அப்பாவின் வாக்கைக் காப்பாற்றப் போராடினால் அதுவே 'சண்டக்கோழி 2'.

திருவிழாவில் நடக்கும் கறிசோறுச் சண்டையில் வரலட்சுமியின் கணவர் கபாலி விஸ்வநாத் கொல்லப்படுகிறார். கணவனைப் பறிகொடுத்துவிட்டு நிற்கும் வரலட்சுமி கணவனின் மரணத்துக்குக் காரணமானவர்களின் வம்சத்தில் ஒரு உயிர் கூட இருக்கக்கூடாது என்று சபதம் எடுக்கிறார். ஹரீஷ் பெராடி, அர்ஜய் உள்ளிட்ட உறவினர்கள் விஸ்வநாத்தின் மரணத்துக்குக் காரணமான வம்சத்தைச் சேர்ந்த ஒருவரையும் விடாமல் வெட்டிச் சாய்க்கிறார்கள். இறுதியில் ஹரி என்ற இளைஞன் மட்டுமே மிஞ்சுகிறான். இந்நிலையில் ஏழு ஆண்டுகளாக நடத்த முடியாத திருவிழாவை நடத்தும் முயற்சியில் ஊர்ப் பெரியவர் ராஜ்கிரண் ஈடுபடுகிறார். வரலட்சுமி தரப்பு சமாதானமாக, திருவிழா தொடங்குகிறது. ஆனால், அங்கே ஹரியைக் கொலை செய்ய வரலட்சுமி அண்ட் கோ வெறித்தனமாய் வேலை பார்க்கிறது. இதனால் ஹரியைக் காப்பாற்றும் பெரும்பணியை ராஜ்கிரணும், அவரது மகன் விஷாலும் செய்கிறார்கள். அப்பாவிடம் நேருக்கு நேர் கோபமுகம் காட்டி எதிர்த்துப் பேசியதையே தாங்கிக்கொள்ள முடியாதவர் விஷால். அப்படிப்பட்டவர் ராஜ்கிரணுக்கும், ஹரிக்கும் ஆபத்து வந்தால் என்ன செய்வார், திருவிழா எந்த அசம்பாவிதமும் இல்லாமல் சரியாக நடந்து முடிகிறதா, ஹரி என்ன ஆனார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

2015-ம் ஆண்டின் இறுதியில் வெளியான சண்டக்கோழி படத்தின் தொடர்ச்சி அல்லது அதன் இரண்டாம் பாகத்தை 13 ஆண்டுகளுக்குப் பிறகு கொடுத்திருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி. திருவிழா, அடிதடி, பழிவாங்குதல் என்று கமர்ஷியல் சினிமாவின் அம்சங்களுக்கிடையே புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகளை வைக்காமல் இருந்த இயக்குநரின் அக்கறையை, பொறுப்புணர்வை வரவேற்கலாம்.

துரை ஐயா மகன் பாலு கதாபாத்திரத்தில் விஷால் சரியாகப் பொருந்துகிறார். கீர்த்தி சுரேஷிடம் காதலில் விழுவது, டிரைவர் என்று நம்பும்படியாக நடிப்பது, அப்பாவுக்கு முன் சவடால் பேசிய நம்பரை ஒரே அடியில் சாய்ப்பது, அப்பாவின் வாக்கை நிறைவேற்றுவதற்காக பொறுமை காப்பது, பழிவாங்கும் படலத்திலும் அன்பைக் கையாளுவது என தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். சில இடங்களில் ஒரே மாதிரியான முக பாவனைகளில் வந்து போவது மட்டும் நெருடல்.

வாத்தியார் மகள் செம்பருத்தியாக கீர்த்தி சுரேஷுக்கு வாய் வலிக்கப் பேசும் கதாபாத்திரம். நாயகனைக் காதலிக்கும் ஒரே வேலை மட்டுமே அவருக்குக் கொடுக்கப்பட்டிருப்பதால், கீர்த்தியின் சென்டிமீட்டர் சிரிப்பும் மிஸ்ஸாகி கிலோ மீட்டர் கணக்கில் பேசுவது அலுப்பை வரவழைக்கிறது. ராஜ்கிரணை அவரது வீட்டில் பார்க்கும் ஒற்றைக் காட்சியில் மட்டும் கீர்த்தி நடிகையாக தன்னை தக்கவைத்துக் கொள்கிறார்.

வரலட்சுமி கோபமும் வேகமுமாக மட்டுமே பேசுகிறார். அந்தப் பேச்சு எடுபடாமல் சலிப்பை வரவழைக்கிறது.

ராஜ்கிரண் கதாபாத்திரத்துக்குத் தேவையான பக்குவமான நடிப்பை வழங்கி இருக்கிறார். மு.ராமசாமி, சண்முகராஜன், தென்னவன், கஜராஜ், கஞ்சா கருப்பு, ஹரீஷ் பெராடி, அர்ஜய், ஞானசம்பந்தன், மயில்சாமி, முனீஸ்காந்த் என்று படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் இருந்தும் அவர்களுக்குப் போதுமான வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் ராஜ்கிரண் உட்பட மற்ற நடிகர்களும் மனதில் இடம்பிடிக்கத் தவறுகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கே.ஏ.சக்திவேலும், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் படத்தைத் தூக்கி நிறுத்துகிறார்கள். பின்னணி இசையில் யுவன் உழைப்பு திகைக்க வைக்கிறது. பாடல்கள் மட்டும் வேகத்தடைகள். பிரவீன் கே.எல். இரண்டாம் பாதியில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.

''இது ஆடு புலி ஆட்டமில்லை... ஆடும் புலியும் சேர்ந்து ஆடுற ஆட்டம்'', ''அருவாளைப் பார்த்தா ஆடு பயப்படும்... அய்யனாரு பயப்படுவாரா'', ''செய்றதுன்னா சொல்றது இல்லை... செய்றது'', ''திருவிழாவுல புலி வேஷம் போடலாம்...ஆனா புலிக்கு முன்னாடியே வேஷம் போடக்கூடாது'' உள்ளிட்ட எஸ்.ராமகிருஷ்ணன், பிருந்தா சாரதியின் வசனங்கள் படத்துக்கு வலு சேர்க்கின்றன.

''இன்னைக்கும் இந்த அருவா பிடிக்குற தெம்பு இருந்தா வாடா, வந்து வெட்டுடா... இங்கேதான் டா இருப்பேன், இந்த மண்லதான்டா இருப்பேன்'' என்று விஷால் சவால் விடுப்பதே 'சண்டக்கோழி' படத்தின் கிளைமேக்ஸ். படத்தின் தொடர்ச்சி அங்கிருந்து தொடங்கியிருக்கலாம் அல்லது அதற்கான நியாயத்தைப் படத்தில் வேறு எங்காவது சொல்லியிருக்கலாம். ஆனால், அப்படி ஒரு முக்கியமான காட்சி வீணடிக்கப்பட்டுள்ளது. அதுவும் அது அஜித் பட சாயலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. அடிதடி, வெட்டுக்குத்து, கலவரம், பழிவாங்குதல், திருவிழாச் சண்டை, இரு தரப்பு மோதல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு பல படங்கள் தமிழ் சினிமாவில் வந்திருக்கின்றன. 'சண்டக்கோழி 2'-விலும் அது புதுமாதிரியாக இல்லாமல் பழைய மாதிரியாகவே இருப்பதால் திருவிழாவில் உற்சாகமிழந்த சூழல் போல் ஆகிவிட்டது.

ஹரியைக் காப்பாற்றுவது, திருவிழாவைத் தடையில்லாமல் நடத்துவது மட்டுமே திரைக்கதைக்கான முடிச்சுகளாக இருப்பதால் சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் குறைந்து கொண்டே சென்று தொய்வு நிலையை அடைகிறது. வேட்டைக் கருப்புக்கு அஞ்சாதவர்கள் ஏன் ஏழுவருடங்களாக அமைதியாக இருக்கிறார்கள், ஹரியின் கழுத்தில் துண்டுபோடும் அர்ஜய் அப்போதே அவரைப் பழிவாங்கி இருக்கலாமே, கலெக்டர் ஆன பிறகும் ஹரி ஏன் அமைதியாக ஒரு செட் பிராப்பர்டியாகவே இருக்கிறார் என்று லாஜிக் கேள்விகள் எழுகின்றன. ராஜ்கிரணையும், விஷாலையும் புகழ்பாடிக்கொண்டே இருக்கும் துதிபாடிகளாகவே உறுதுணைக் கதாபாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது படத்தின் பலவீனம்.

லாஜிக் பற்றி யோசிக்காமல் ஒரு கமர்ஷியல் சினிமாதான் உங்கள் சாய்ஸ் என்றால் சண்டக்கோழி 2வைப் பார்க்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்