சண்டியர் - திரை விமர்சனம்

By இந்து டாக்கீஸ் குழு

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்ற பெருமையைத் தஞ்சை எப்போதோ இழந்துவிட்டது. ஆனால் விவசாயத் தில் சம்பாதிக்க முடியாத பல மடங்கு லாபத்தை அரசியலில் அள்ளிவிடலாம் என்று எண்ணும் ஒரு தஞ்சை மாவட்ட இளைஞனின் பதவி ஆசையும், அத னால் அவன் எந்த எல்லைக்கும் போகக்கூடி யவன் என்பதையும் அசல் மண்வாசனையுடன் சொல்லியிருக்கும் படம் ‘சண்டியர்’.

தலைப்பு குறித்த சர்ச்சைகளை வேறொரு தளத்துக்கு ஒதுக்கிவிட்டுப் படத்தை ஆராயலாம். மேலத் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சாலியமங்கலம் என்ற ஊர்தான் கதைக் களம். சுயமரியாதை இயக்கத்தால் கவரப்பட்ட கதையின் நாயகன் ஜெகனுக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் பதவி அரசியல் மீது வெறி. காரணம் அதன் பின்னுள்ள வருமானம். பகுத்தறிவு பேசிக்கொண்டு குட்டி அரசியல்வாதியாக வலம் வரும் பாண்டித்துரைக்கு ஊர் சேர்மனாக வேண்டும் என்பதுதான் லட்சங்கள் கொட்டும் லட்சியக் கனவு. பாண்டித்துரை வளர வளர, பரம்பரை பரம்பரை யாக சேர்மனாக இருக்கும் குடும்பத்துக்கும் பாண்டித்துரைக்கும் மோதல் வெடிக்கிறது.

சேர்மனின் அக்காள் மகள் கயல். அவளைக் காதலித்து, அவளையே பகடைக் காயாக்கி, சேர்மனை பதவியில் இருந்து விரட்டலாம் என்று, காதலை வைத்து தாயம் உருட்டுகிறான் பாண்டித்துரை. ஆனால் கயல் மீதான காதல் நிஜமானதாக மாறுகிறது.

இதற்கிடையில் சேர்மனை குறுக்கு வழியில் பதவியில் இருந்து இறக்கி சேர்மன் ஆகிறான் பாண்டித்துரை. பாண்டித்துரை காதலைத் தன் பதவிப் போட்டியில் பகடைக்காயாக்க முனைந் தது கயலுக்குத் தெரியவர, பாண்டித்துரையை வெறுக்கிறாள். பதவியை இழந்த முன்னாள் சேர்மன், பாண்டித்துரையின் கதையை முடித்து, விட்ட இடத்தைப் பிடிக்க நாள் குறிக்கிறார். அரசியல் எதிரிகளிடம் இருந்து ஜெகனால் தப்பிக்க முடிந்ததா, அவன் காதலியின் கோபம் என்ன ஆயிற்று என்பது மீதிக்கதை.

எல்லாக் கதாபாத்திரங்களின் யதார்த்த மான முகங்களையும் துல்லியமாக, துணிச்ச லாக சித்தரிப்பது திரைக்கதையின் பலம். தேவையில்லாமல் கதையை இழுத்துக் கொண்டிருக்காமல் கச்சிதமாகக் கதை சொல்லப்பட்டிருப்பது பெரிய ஆறுதல். அரசியல் அதிகாரம் என்று வந்துவிட்டால் உறவுகளும் நட்பும் இரண்டாம்பட்சமாகும் விதத்தைக் காட்சிகள் வழியாகப் படிப்படியாக நிறுவும் பாங்கு பாராட்டத்தக்கது. இயக்குநர் சோழதேவனிடம் இருந்து இன்னும் பல யதார்த்தமான படைப்புகளை எதிர்பார்க்க லாம் என்ற எதிர்பார்ப்பை இந்தப் படம் ஏற்படுத்துகிறது.

பாண்டித்துரை கதாபாத்திரத்துக்கு ஜெகன் பொருத்தமாக இருக்கிறார். நடிப்பு பரவாயில்லை. காதல் காட்சிகளில் அவருக்கு நடிப்பு வர மாட்டேன் என்று அடம்பிடிக்கிறது. ஆனால், எளிய தோற்றத்துடன் அறிமுகமாகியிருக்கும் நாயகி கயல் அதை ஈடுசெய்கிறார். அப்பா ரோல்களில் நடித்திருக்கும் தஞ்சிராயரும், நாயகமும் ‘ஆடுகளம்’ பேட்டைக்காரனைப் போல கவனிக்கவைக்கிறார்கள். இயக்குநரின் பாத்திரப் படைப்பும் இவர்களது நடிப்பும் ஒன்றுக்கொன்று வலுவூட்டும் அளவில் அமைந்திருக்கின்றன.

சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த பலர் பதவிக்காக மைய நீரோட்ட அரசியலுக்கு வந்திருப்பதை மறுக்க முடியாது. ஆனால் ஒட்டுமொத்தமாகச் சுயமரியாதை இயக்கத்தை விமர்சிப்பதுபோல, பொத்தாம் பொதுவாக அவர்களை எதிர்மறையான விதத்தில் சித்தரிப்பதும், பொதுவுடைமைவாதிகள் எதற்கும் உதவாத வர்கள் என்று காட்டுவதும் மேம்போக்கான பார்வையாகவே வெளிப்படுகிறது.

மதுரை, கோவை, நெல்லை ஆகிய ஊர்களின் பேச்சுவழக்கு பதிவான அளவுக்கு தஞ்சைப் பேச்சுவழக்கு துல்லியமாக தமிழ் சினிமாவில் பதிவாகவில்லை. தஞ்சை மண்ணின் யதார்த்தத்தைப் பெருமளவு சரியாகவே சித்தரித்திருக்கும் இந்த படமும் தஞ்சைப் பேச்சுவழக்கைப் பதிவுசெய்வதில் ஓரளவே வெற்றிபெற்றிருக்கிறது.

தஞ்சை விவசாய சமூகத்தின் மற்றொரு கூறாக இருக்கும் தலித்களும் அரசியல் போட்டியில் இருப்பதைப் பற்றிப் படம் கண்டுகொள்ளவில்லை என்பது முக்கியமான குறை.

யத்தீஷ் மகாதேவின் இசையில் பாடல் களோ, பின்னணி இசையோ குறிப்பிடும்படி இல்லை. படமாக்கப்பட்ட விதத்தில் பல காட்சி களில் இன்னும் மெருகு ஏற்றியிருக்கலாம்.

அசலான பாத்திரங்கள், யதார்த்தத்துக்கு நெருக்கமான கதைப்போக்கு ஆகியவை படத்தின் பலம். இசை, படமாக்கப்பட்ட விதம் முதலான சில குறைகளைத் தவிர்த்திருந்தால் சண்டியர் முக்கியமான படைப்பாக வந்திருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்