முதல் பார்வை: ஜீனியஸ்

By உதிரன்

அப்பா தரும் அழுத்தத்ததால் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தும் சிறுவன், வேலைக்குப் போய் எம்.டி. தரும் அழுத்தத்தால் வேலையில் தீவிரம் காட்டி மனச்சிதைவுக்கு உள்ளானால் அதுவே 'ஜீனியஸ்'.

நரேன் - மீரா கிருஷ்ணன் தம்பதிக்கு ஒரே மகன் ரோஷன். பள்ளி ஆண்டுவிழாவின்போது எல்லா போட்டிகளிலும் முதல் பரிசு பெறும் மகனைப் பார்த்து பூரிப்படைகிறார் நரேன். இனி அவனை இன்னும் நன்றாகப் படிக்க வேண்டும் என்று பள்ளி நேரம் தவிர மற்ற நேரங்களில் கம்ப்யூட்டர் கிளாஸ், டியூஷன் என்று அலைய விடுகிறார். விடுமுறையில் ஊருக்குப் போவதோ, தாத்தா- பாட்டியைச் சந்திப்பதோ ரோஷனுக்கு வாய்க்காத வரமாகி விடுகிறது. விளையாடுவதற்குக் கூட அப்பா அனுமதிக்காததால் சோர்ந்து போனாலும், படிப்பதில் எந்தக் குறையும் வைக்காமல் அப்பாவின் ஆசையை நிறைவேற்றுகிறார்.

படிப்பு முடிந்ததும் சாஃப்ட்வேர் கம்பெனிக்கு வேலைக்குச் சென்றால் அதன் நிர்வாக இயக்குநர் உன்னால் முடியும் முடியும் என்று சொல்லியே அதிகம் வேலை வாங்குகிறார். ஒரு மாதத்தில் முடிக்க வேண்டிய வேலையை ஒரே வாரத்தில் முடிக்கச் சொல்ல, அதைத் தீவிரமாகச் செய்யும் ரோஷன் மனபாதிப்புக்குள்ளாகி திடீரென்று அவர் மனத்தடுப்புக்கு உள்ளாகிறார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரைப் பரிசோதிக்கும் மருத்துவர் ஸ்கிசோஃப்ரினியா எனும் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டதாகக் கூறுகிறார். கம்பெனி எம்.டி. ரோஷனை பணியில் இருந்து நீக்குகிறார். ரோஷன் என்ன ஆனார், அவர் பிரச்சினைக்கான தீர்வு என்ன, இந்தப் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது போன்ற கேள்விகளுக்கு 'ஜீனியஸ்' பதில் சொல்கிறது.

படிப்பு, வேலை என்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் தங்களை புத்துணர்ச்சியோடு வைத்துக்கொள்வதில்லை, ஓர் அழுத்தத்துடன் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் என்ற கருத்தை மிக லாவகமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். அதையும் கருத்து சொல்லி வசனம் பேசி சமூக அக்கறையை தானே வெளிப்படுத்துகிறேன் என்று சொல்லாமல் காட்சிகள் வழியாக உணர்த்த முயற்சித்திருக்கிறார்.

அறிமுக நாயகன் ரோஷன் டீக்கடையில் தனக்குத் தானே பேசிக்கொள்கிரார். டீ குடித்துவிட்டு கோபத்தில் கத்தி தகராறு செய்கிறார். நான் என் கன்ட்ரோல்லயே இருக்க மாட்டேன் என்று பெண் பார்க்கப் போகும் இடங்களில் எல்லாம் தன்னிலை விளக்கம் கொடுத்து அதுவே அலம்பலும், சங்கடமுமாக மாற பொங்கி எழுகிறார். யோகா செய்யும் இடம், டிராஃபிக் போலீஸ் என எல்லா இடங்களிலும் வம்பு வளர்க்கிறார். இந்தக் காட்சிகளில் அவர் நோயால் பாதிக்கப்பட்ட நபராகத் தெரியவில்லை. மாறாக, இயக்குநர் சொன்னதை அப்படியே ஒரு ரோபோ போல நகல் எடுத்து நடித்திருக்கிறார். அதுவே படத்தின் மிகப்பெரிய பலவீனம்.

எப்படியாவது தன் மகனை சாதனை படைப்பவனாக இருக்க வேண்டும் என்பதற்காக அவனின் எல்லா சுக துக்கங்களுக்கும் இடமளிக்காமல் ஸ்ட்ரிக்ட் ஆபிஸராக ஒருக்கும் நரேன் தேர்ந்த நடிப்பை வழங்கி இருக்கிறார். மகன் மனநலம் பாதிகப்பட்டது அறிந்ததும் உடைந்து அழும் காட்சியில் ஸ்கோர் செய்கிறார்.

மீரா கிருஷ்ணன், சிங்கம் புலி ஆகியோர் கொஞ்சம் அதிகமாகவே நடித்திருக்கிறார்கள். சில இடங்களில் சிங்கம் புலி நன்றாகச் சிரிக்க வைக்கிறார். சிங்கமுத்து, ஈரோடு மகேஷ், தாடி பாலாஜி ஆகிய மூவர் கூட்டணி நகைச்சுவை என்ற பெயரில் கடிக்கிறார்கள்.

கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் ரோஷனின் தாத்தாவாக கச்சிதமாக நடித்திருக்கிறார். அவன் குழந்தையா? மெஷினா? என்று கேட்கும் கேள்வியில் சமூக யதார்த்தத்தை வார்த்தைகளில் பிரதிபலிக்கிறார்.

பிரியாலால் கதாபாத்திரம் தனித்து நிற்கிறது. ரோஷனை அரவணைப்பது, தேற்றுவது, மாற்றுவது, நரேனிடம் தன் பின்னணியை விவரிப்பது என நன்றாக நடித்திருக்கிறார்.

குருதேவின் ஒளிப்பதிவும், யுவனின் பின்னணி இசையும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. நீங்களும் ஊரும் பாடல் ரசனை. பள்ளி ஆண்டு விழா பரிசுப்போட்டி, டியூஷனுக்கு அனுப்புவது போன்ற காட்சிகளில் தியாகு இன்னும் கத்தரி போட்டிருக்கலாம்.

உண்மையாகவும், அர்ப்பணிப்பு உணர்வோடும் வேலை செய்யும் ஒருவன் தலையிலேயே எல்லா வேலையையும் சுமத்துவது, அவனால் இனி வேலை செய்ய முடியாது என்றதும் சம்பளப் பணம் அனுப்புவதாக இளைஞனின் அப்பாவிடம் சொல்லிவிட்டு, வேலையை விட்டே தூக்குவது என நிறுவன முதலாளிகளின் மனநிலையையும் சேர்த்தே இயக்குநர் சுசீந்திரன் பதிவு செய்திருக்கிறார். எப்போதும் முதல் ரேங்க் எடுக்க வேண்டும் என்று மாணவர்களை விரட்டிக்கொண்டே இருக்கும் பெற்றோர்களுக்கும், படிப்பு மட்டுமே போதும் விளையாட்டு போன்ற எந்த மகிழ்ச்சியான அனுபவமும் பிள்ளைகளுக்குத் தேவையில்லை என்று நினைக்கும் பெற்றோர்களுக்கும் படிப்பு மட்டுமே வாழ்க்கையில்லை, உங்கள் பிள்ளைகளுக்கு அதுமட்டுமே போதுமானதாக இருக்காது என்று இயல்பாகச் சொல்லி இருக்கிறார்.

நெருக்கடியில், மன பாதிப்பிலிருந்து ரோஷன் மீண்டு வர இயக்குநர் சொல்லும் தீர்வு பல தீர்வுகளில் ஒன்று என்றே பார்க்கப்பட வேண்டியதாக இருக்கிறது. ஆனால், அதை சினிமாத்தனத்துடன் காட்சிப்படுத்தி இருப்பதும், நாயகிக்கான பின்னணியில் வில்லன் கேரக்டரை நுழைப்பதும்தான் செயற்கையாக உள்ளது.

கிராமத்து மண்ணின் உண்மையான மகிழ்ச்சியை அழுத்தமாகக் காட்சிப்படுத்தி, ஸ்கிசோஃப்ரினியா எனும் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞன் எப்படி ஒருவரை அணுகுவான், அவன் நடத்தைகள் எப்படி இருக்கும் போன்ற உளவியலோடு திரைக்கதையை நகர்த்தி இருந்தால் 'ஜீனியஸ்' அழுத்தமாகத் தடம் பதித்திருப்பன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்