1994-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் 22 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தால், அதில் நாயகன் தன் காதலியைத் தேடினால் அதுவே '96'.
டிராவல் போட்டோகிராபர் கே.ராமச்சந்திரன் (விஜய் சேதுபதி) இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு புகைப்படக் கலையைக் கற்றுத் தருகிறார். தன் மாணவியுடன் காரில் பயணிக்கும்போது பிறந்து, வளர்ந்து, படித்த ஊரைக் கடந்து செல்ல முடியாமல் நினைவுகளில் மூழ்குகிறார். 10-ம் வகுப்பு படித்த ஞாபகங்கள் அவரைக் கிளற, தன் நண்பன் பகவதி பெருமாளிடம் போனில் பேசுகிறார். வாட்ஸ் அப் மூலம் தன்னுடன் படித்த அனைத்து மாணவர்களுடனும் சாட் செய்ய ஒரு நன்னாளில் சந்தித்து மகிழ்கிறார்கள். சிரிக்கிறார்கள். விஜய் சேதுபதி மட்டும் தன் காதலி ஜானு (த்ரிஷா) வருகையை எதிர்பார்க்கிறார். அவரும் கொஞ்சம் தாமதமாக வருகிறார். 22 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சந்திக்கும் காதலர்கள் ஓர் இரவு முழுக்க எங்கெல்லாம் செல்கிறார்கள், எதுவெல்லாம் பேசிப் பகிர்கிறார்கள் என்பதைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பிரேம் குமார்.
காவியக் காதல், கமர்ஷியல் காதல், யதார்த்த காதல், உன்னதக் காதல், ஒருதலைக் காதல், சேர்ந்த காதல், சேராத காதல், பார்க்காமலேயே காதல், பேசாமலேயே காதல் என்று காதலை மையமாகக் கொண்ட படங்கள் தமிழ் சினிமாவில் அதிகம். 'தேவதாஸ்' காலத்திலிருந்து 'பிரேமம்' வரை காதல் படங்களுக்கான மரியாதை தொடர்ந்து கொடுக்கப்பட்டே வருகிறது. அதன் தொடர்ச்சியாக '96' படத்தைச் சொல்லலாம்.
விஜய் சேதுபதியின் டீன் ஏஜ் கேரக்டரில் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யன் அழகாய்ப் பொருந்துகிறார். பார்வை, உடல் மொழியில் அப்படியே விஜய் சேதுபதியைப் பிரதி எடுத்திருக்கிறார்.
த்ரிஷாவின் டீன் ஏஜ் கேரக்டரில் கவுரி அற்புதமான புதுவரவு. கள்ளம் கபடமில்லாத அன்பின் ஊற்றை நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார்.
விஜய் சேதுபதி தீராக் காதலனாய் படம் முழுக்க வசீகரிக்கிறார். அவரின் மென்மையான நுண்ணிய உணர்வுகள் ரசிக்க வைக்கின்றன. ரவுடி, போலீஸ், பயந்து பின் வாங்கும் கதாபாத்திரங்களிலேயே விஜய் சேதுபதி நடிக்கிறார் என்றும், எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் விஜய் சேதுபதியே தெரிகிறார் என்றும் சொல்லப்படுவதுண்டு. அந்த விமர்சனத்தை இதில் சேது தகர்த்தெறிந்திருக்கிறார். படபடப்பு, தவிப்பு, காத்திருப்பு, ஏக்கம் என எல்லாவற்றையும் சுமந்து திரியும் பெருங்காதலனைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். வெட்கப்படும் தருணங்களிலும், காதலியின் பாராட்டில் பெருமிதம் மிளிரப் பார்க்கும் போதும் விஜய் சேதுபதி திரை முழுக்க ஆக்கிரமித்துக் கொள்கிறார்.
'கொடி', 'மோகினி' போன்ற படங்களில் நடித்த த்ரிஷாவா இது என்று ஆச்சரியப்படும் அளவுக்கு நடிப்பில் ஆளுமை செலுத்தி இருக்கிறார் த்ரிஷா. விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸ்ஸியை விட இதில் நடிப்பில் தன்னை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பு த்ரிஷாவுக்குக் கிட்டி இருக்கிறது. அதை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு ஜானு கதாபாத்திரத்தின் ஆழ அகலத்துக்குள் சென்று அழுகையும், ஆற்றாமையும், இயலாமையுமாக கரைந்து போகிறார். அத்தகைய தருணங்களில் த்ரிஷாவுக்கு மட்டுமல்ல, நமக்கும் கண்களில் நீர் திரள்கிறது. விஜய் சேதுபதியைத் தேடும் அந்த ஒற்றைப் பார்வையில் காதல் மொழியை உணர்த்திவிடுகிறார்.
தேவதர்ஷினி, பகவதி பெருமாள், முருகதாஸ் ஆகியோர் நகைச்சுவைக்குப் பலம் சேர்க்கிறார்கள். கவிதாலயா கிருஷ்ணன் ஒரே காட்சியில் வந்தாலும் ஸ்கோர் செய்கிறார். ஜனகராஜின் மறுவருகை புன்னகையை மலர வைக்கிறது.
மகேந்திரன் ஜெயராஜு, சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவு படத்தின் ஒவ்வொரு காட்சியையும் கவிதை ஆக்கியிருக்கிறது. கோவிந்த் மேனன் அக்கவிதைகளுக்கு தன் இசையால் உயிரூட்டி இருக்கிறார். அதுவும் காதலே காதலே பாடல் மிகப் பொருத்தமான காட்சியில் வந்து பார்வையாளர்கள பரவசப்படுத்துகிறது.
சொல்லில் தீராத காதலை காட்சியில் தீரும் அளவுக்கு மிக நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் பிரேம் குமார். பள்ளிப் பருவக் காதலின் நினைவுகளை ப் பசுமையாக நினைவு கூர்கிறார். சேர முடியாத காதலின் கனத்தை, பிரிவை அழுகையின் ஊடே பதிவு செய்த விதம் பாராட்டுக்குரியது. கொஞ்சமும் கதையிலிருந்து விலகாமல் கதாபாத்திரங்களின் இயல்பு மீறாமல் நெறியாள்கை செய்திருக்கிறார். இரண்டாம் பாதி முழுக்க விஜய் சேதுபதி, த்ரிஷா என்ற இருவரை மட்டுமே நம்பி திரைக்கதையை நகர்த்தி இருக்கும் விதம் வியக்க வைக்கிறது. சின்னச்சின்ன சினிமாத்தனங்கள் ஆங்காங்கே எட்டிப்பார்த்தாலும் அது நெருடலாகவோ, தவறாகவோ, துருத்திக்கொண்டோ தெரியவில்லை.
இந்தக் காதல் ஏன் சேரக்கூடாது, சேர்ந்தால் நன்றாக இருக்குமே போன்ற கேள்விகள் எழலாம். எல்லாவற்றையும் தாண்டி சினிமாவுக்கே உரிய கிளைமாக்ஸ் வைக்காமல் யதார்த்தமாய் அமைத்திருந்த விதம் உண்மையின் பக்கம் நின்று பேசுவதாக உள்ளது. காதலித்தவர்களும், காதலிப்பவர்களும், காதலை ஆராதிப்பவர்களும் '96' படத்தை ரசிக்கலாம்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 min ago
சினிமா
12 mins ago
சினிமா
18 mins ago
சினிமா
26 mins ago
சினிமா
34 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago