ரசிகரிடம் இருந்து விலகுகிறாரா ரஜினி?

By ஜாசன்

‘அரசியலுக்கு வருவேனா என்பதை  ஆண்டவன்தான் சொல்ல வேண்டும்..’, ‘அரசியலில் ஈடுபடுவேன்..’, ‘அரசியலுக்கு வந்துவிட்டேன்..’ ‘கட்சி தொடங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன்..’ என்று ஒவ்வொன்றாக கூறிக்கொண்டிருந்த ரஜினிகாந்த் சமீபத்தில், ‘கட்சி தொடங்குவதற்கான 90 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. காலம், நேரம் வரும்போது தொடங்குவேன்..’ என்று கூறியிருக்கிறார். இப்படி இந்த நொடி வரை தீர்க்கமான முடிவு எடுக்காமல் திணறும் ரஜினிகாந்தை வருங்கால முதல்வர் என்கின்றனர் ரசிகர்கள்.

இது ஒரு பக்கம் இருக்க, ரஜினி கடந்த 23-ம் தேதி வெளியிட்ட ஒண்ணேமுக்கால் பக்கஅறிக்கை அவரது ரசிகர்களுக்கு பெரும் சவுக்கடி. அவர் அரசியலுக்கு வரட்டும், வராமல் போகட்டும்.. அது தனிப்பட்ட விஷயம். ஆனால், தான் கைதேர்ந்த அரசியல்வாதி என்பதை அந்த அறிக்கை மூலம் நிரூபித்திருக்கிறார் ரஜினி. ரசிகர் மன்றங்கள் பற்றிய அவரது கருத்தே இதற்கு சாட்சி.

‘‘வெறும் ரசிகர் மன்றத்தை வைத்துக்கொண்டு, அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால் அவரது புத்தி பேதலித்துள்ளது என்றேஅர்த்தம். மக்கள் ஆதரவு இல்லாமல் நாம் நினைத்ததை சாதிக்க முடியாது’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார். ரஜினி சில விஷயங்களை தனது வசதிக்காக மறந்துவிட்டார் அல்லது மறைத்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஏற்கெனவே இருந்த ரஜினி ரசிகர் மன்றத்தைதான் மக்கள் மன்றமாக மாற்றுவதாக அறிவித்தார். இந்த ரசிகர்கள் அரசியலுக்கு சரிப்பட்டு வரமாட்டார்கள் என்று அப்போது அவருக்கு ஏன் தோன்றவில்லை? ரஜினிக்கு கட்அவுட் வைத்து, பால் அபிஷேகம் செய்து, தோரணம்கட்டி, என்ன விலையானாலும் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் வாங்கி, ரஜினியை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தது யார், இதே ரசிகர்கள்தானே?

‘‘முப்பது நாற்பது ஆண்டுகள் ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறவோ, அரசியலில் ஈடுபடவோ முழு தகுதி ஆகிவிடாது’’ என்கிறார். ‘‘கட்சி தொடங்க உங்களுக்கு என்ன அனுபவம் இருக்கிறது?’’ என்று ஒரு ரசிகர் திருப்பிக் கேட்டால் அவர் பதில் என்ன?

‘‘யாரையும் செலவு செய்ய வேண்டும் என்று நான் சொன்னதில்லை’’ என்கிறார். இதைச் சொல்ல அவருக்கு 30 ஆண்டுகள் பிடித்திருக்கிறது.

கடந்த ஜூலை 31-ம் தேதி ரஜினி 36 பக்கங்களில் வெளியிட்ட மக்கள் மன்ற நிர்வாக விதிகளுக்கு முரணாக இந்த அறிக்கையில் பல அம்சங்கள் உள்ளன. குறைந்தபட்சம் ஒருவர் தினமும்காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மக்கள் மன்ற அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று அந்த விதிகளில் குறிப்பிட்டுள்ள ரஜினிதான் இந்த அறிக்கையில், ‘‘உங்கள் குடும்பத்தை பார்த்துக்கொள்ளுங்கள் மற்றதெல்லாம் அப்புறம்தான்’’ என்கிறார். இதில் ரசிகர்கள் எதை பின்பற்றுவது?

நம் கொள்கைகளுக்கு சரிப்பட்டு வராதவரை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை என்கிறார். உண்மையில் அவரது கொள்கை என்ன? பிளாக்டிக்கெட் விற்கக்கூடாது. திரையரங்குகளில் விசேஷ காட்சிக்கு கொள்ளை விலையில் டிக்கெட் விற்கக்கூடாது. ஒழுங்காக வருமான வரிக் கணக்கு காட்ட வேண்டும். சம்பளத்தை ‘வெள்ளை’யாக மட்டுமே வாங்க வேண்டும். கட்அவுட்கள், பால் அபிஷேகங்கள் கூடாது. இதெல்லாம்தான் அவரது கொள்கையா? இதை முறைப்படி அறிவிப்பாரா?

ரசிகர் மன்றத்தை நம்பியே எம்ஜிஆர் கட்சி தொடங்கினார். திண்டுக்கல் இடைத்தேர்தலில் அவருக்கு வெற்றியை தேடித்தந்தது ரசிகர்கள்தான். ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த ஐசரி வேலன், சைதை துரைசாமி, திருச்சி சவுந்தர்ராஜன் என்று பலருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தந்தார் எம்ஜிஆர். ரசிகர்கள் - மக்கள் என அவர் ஒருபோதும் பேதம் பார்க்கவில்லை.

ஒருமுறை அண்ணா பிரச்சாரம் முடிந்து காரில் திரும்பும்போது சாலையோர கடையில் நிறுத்தி தேநீர் அருந்தினார். அப்போது சாலையில் சென்ற விவசாய கூலிதொழிலாளர்கள் சிலர் அண்ணாவின் காரில் கட்டிருந்த கொடி யைப் பார்த்து, ‘‘நீங்க எம்ஜிஆர் கட்சியா?’’ என்று கேட்டனர். அதற்கு அண்ணா, ‘‘ஆம், நான் எம்ஜிஆர் கட்சிதான்’’ என்றார் பெருந்தன்மையாக. மறுநாளே இதை ‘தம்பிக்கு’ பகுதி யில் குறிப்பிட்டு எம்ஜிஆரை புகழ்ந்தார்.

சிவாஜியும்கூட ரசிகர் மன்றத்தினருக்காக டெல்லியில் போராடி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வாங்கித் தந்தவர்தான். சிவாஜி ரசிகரான ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ, எம்.பி.யாகி, மத்திய அமைச்சராகி, தமிழக காங்கிரஸ் கட்சிக்கு தலைவரானார். ‘அரசியலில் ஈடுபட உங்களுக்கு தகுதி இல்லை’ என்றுரசிகர்களை சிவாஜி ஒதுக்கவில்லை.

ரசிகர்களிடம் இருந்து ரஜினிவிலகுகிறாரோ என்ற கேள்வியைத்தான் அவரது இந்த அறிக்கை எழுப்புகிறது. அவரது நாற்காலிக் கனவு நிஜமாக, அவர் நிறைய சவால்களை சந்திக்க வேண்டும். மக்களை, ரசிகர்களை சந்தித்துப் பேச வேண்டும். அவர்கள் சொல்

வதை உண்மையில் காதுகொடுத்து கேட்க வேண்டும். இப் படி இன்னும் நிறைய நிறைய..!

கட்டுரையாளர்:

மூத்த பத்திரிகையாளர்

தொடர்புக்கு: jasonja993@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்