ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறைத் திரைப்படமாகப் பார்க்க பலரும் ஆர்வமாக எதிர்பார்த்திருந்த வேளையில் அதுகுறித்து இரு இயக்குநர்களிடமிருந்து ஒரே சமயத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குநர் விஜய் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்கிறார். வரலட்சுமி நடிப்பில் 'சக்தி' படத்தை இயக்கிய பிரியதர்ஷினியும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறைப் படமாக எடுப்பதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இயக்குநர் பிரியதர்ஷினியிடம் ஜெயலலிதா படம் தொடர்பாக சில கேள்விகளை எழுப்பினோம்.
'சக்தி', ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று திரைப்படம் என இரண்டு படங்களும் பெண்களை மையப்படுத்தியே உள்ளதே?
'சக்தி' திரைப்படம் தேதி பிரச்சினையால் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தவிர்த்து, அந்தப் படத்தில் கொஞ்சம் அரசியலும் செய்தார்கள். அதனால் தான் அடுத்து ஒரு அரசியல் படத்தையே எடுத்துவிடலாம் என முடிவெடுத்தேன்.
இந்திய வரலாற்றில் தன் வாழ்க்கையில் நேர்ந்த தடங்கல்களை கடந்து அனைவரின் இதயங்களையும் வெற்றி கொண்டவர் ஜெ.ஜெயலலிதா. மில்லியன் கணக்கான தமிழர்களின் இதயத்தில் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் இரும்புப் பெண்மணியின் வாழ்க்கையை திரையில் காண்பிக்க கடந்த 4 மாதங்களாக திட்டமிட்டிருந்தோம். அது இப்போதுதான் முடிவாகியது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 4 மொழிகளில் ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் படமாக்குகிறோம். அவரின் பிறந்த தினமான பிப்ரவரி 24-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.
ஏன் ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் படமாக்க வேண்டும் என நினைத்தீர்கள்?
எனது முதல்படம் 'சக்தி'. பல பிரச்சினைகள், அரசியல் காரணமாக இன்னும் ரிலீஸாகவில்லை. அதனால், ஏற்பட்ட தாக்கம் தான் ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் திரைப்படமாக உருவாக்க வேண்டும் எனத் தோன்றியது. ஜெயலலிதா குழந்தைப் பருவம் முதல் இறப்பு வரை தனிமையில் வாடியவர். நான் சினிமாவில் இருப்பதால் அத்தகைய தனிமையை என்னால் உணர முடிகிறது. இதனை முழுக்க முழுக்க மிகவும் உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் அணுக இருக்கிறோம். அவரின் இந்தத் தனிமை படத்தில் தனிப்பட்ட பகுதியாக இருக்காது. ஆனால் படம் முழுக்க அவருடைய உளப்போராட்டமாக அந்தத் தனிமையைக் காண்பிப்போம்.
இயக்குநர் விஜய் அறிவித்த மறுநாளே நீங்களும் ஜெயலலிதா குறித்துப் படம் இயக்குவதாக அறிவித்திருக்கிறீர்களே?
விஜய் சார் எனக்கு சினிமா துறையில் சீனியர். அவர் படம் என்றால் பிரபலமானவர்கள் கூட நடிப்பார்கள். நான் தானாக கஷ்டப்பட்டு துறைக்கு வந்தவள். அதனால், எனக்கு எந்தவித பயமும் கிடையாது. நான் அறிவித்தவுடன் எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். “என்னடா ஏ.எல்.விஜய் அறிவிக்கிறார், சம்பந்தமே இல்லாமல் சின்னப் பொண்ணு அறிவிக்குதே” என்று.
வயசெல்லாம் ஒரு காரணமே கிடையாது. ஸ்கிரிப்ட் ஸ்ட்ராங்காக இருந்தால் பயப்பட வேண்டிய அவசியமில்லை. பார்வையாளர்கள் மனதிலிருந்து நாம் ஒன்றை சரியாகச் செய்கின்றோமா என்பதற்குத்தான் பயப்பட வேண்டியுள்ளது. எப்படியும் சக்சஸை மட்டும் தான் கொண்டாடப் போகிறார்கள். அதை நோக்கி ஓடுவதுதான் எனது எண்ணம்.
ஜெயலலிதாவாக நடிப்பதற்கு பாலிவுட் நடிகைகளிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். தமிழிலும் சிலரிடம் பேசுகிறோம். யார் ஜெயலலிதாவாக நடிக்கிறார் என்பது முடிவானதும் அறிவிக்கலாம் என்றிருந்தோம். விஜய் சார் ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் படமாக எடுக்கப் போகிறார் என்பதை அவர் அறிவித்தவுடன் தான் எனக்கு தெரியும். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால், நான் எடுக்கும் படத்தைவிட அவரின் திரைப்படம் ஹிட்டானால் எனக்கு மகிழ்ச்சி தான்.
ஜெயலலிதாவாக நடிக்கும் நடிகையிடம் நீங்கள் என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?
அவருடைய வெளித்தோற்றத்தை பிரதிபலிப்பவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. அனுஷ்கா அந்தக் கதாபாத்திரத்தைச் செய்தால் கூட என்னால் சரிவர ஜெயலலிதாவை திரையில் காட்ட முடியும். ஜெயலலிதாவின் ஆளுமைத் திறனைப் பிரதிபலிப்பவராக இருக்க வேண்டும். இதற்கு முன்பு என்னென்ன மாதிரியான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பதைப் பார்ப்போம். அவருடைய முகபாவம், உயரம் எல்லாவற்றையும் நுணுக்கமாகப் பார்க்க வேண்டியுள்ளது. ஸ்கிரிப்ட் தான் இதில் முக்கியம். செப்டம்பர் 20 அன்று படக்குழுவை அறிமுகப்படுத்துவோம். ஜெயலலிதாவாக யார் நடிக்கிறார் என்பதையும் தெரிவிப்போம்.
ஜெயலலிதாவை இந்த திரைப்படத்தில் எப்படி முன்னிறுத்தப் போகிறீர்கள்? அவரின் வாழ்க்கையின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் படமாக்கப் போகிறீர்களா?
தன்னுடைய கஷ்டங்களையும், துன்பங்களையும் யாரிடமும் பகிர்ந்துகொள்ளாமல் தான் ஜெயலலிதா வாழ்ந்திருக்கிறார். பல நரகங்களைக் கடந்துதான் அவர் முக்கியமான இடத்திற்கு வந்தார். இந்தப் படமாக இருக்கட்டும், ‘சக்தியாக’ இருக்கட்டும், நாங்கள் சந்தித்த மறைமுக அரசியல்கள் பல. 2018-லேயே இவ்வளவு அரசியல் இருந்தால், 50 ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய காலகட்டம் இன்னும் பிரச்சினைக்குரியதாகத் தான் இருந்திருக்கும்.
அப்போது எவ்வளவோ நடிகைகள் இருந்திருக்கிறார்கள், ஆனால், ஒரேயொரு பெண் எல்லாவற்றையும் தாண்டி இந்த இடத்திற்கு வந்துள்ளார். அரசியல், சினிமா என எந்தத் துறையாக இருந்தாலும், அவற்றில் நேர்ந்த இன்னல்களைத் தாண்டுவதற்கு அவர் எடுத்துக்கொண்ட பிரயத்தனங்கள் அதிகம். அவருடைய வாழ்க்கையைப் படிக்கும்போது இறுதியில் எனக்கே மனம் கலங்கிவிட்டது. படத்தை மூன்று கட்டங்களாகப் பிரித்து உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறோம். அந்த மூன்று பகுதிகளிலேயே ஜெயலலிதாவின் வாழ்க்கை முழுவதும் வந்துவிடும்.
இந்தப் படத்திற்கு என்னென்ன மாதிரியான முன் தயாரிப்புகளெல்லாம் செய்துள்ளீர்கள்?
அவர் குறித்த புத்தகங்கள் படித்துள்ளேன். அவருடைய பேட்டிகள், செய்தி தொலைக்காட்சிகளில் அவருடைய வீடியோக்கள் ஆகியவற்றை பார்த்துள்ளேன். இன்னும், அவர் சம்பந்தப்பட்டவர்களிடம் கலந்துரையாட வேண்டும். யார், யாரிடம் பேச வேண்டும் என்ற லிஸ்ட் தயார் செய்திருக்கிறோம். ஒய்.ஜி.மகேந்திரன் குடும்பத்தினர், நடிகைகள் சரோஜா தேவி, சச்சு, மறைந்த சோவின் குடும்பத்தினர், பெங்களூருவில் அவர் படித்த பள்ளிக்கூட ஆசிரியர்கள் ஆகியோரிடம் பேச வேண்டும். சசிகலாவைச் சந்திக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். இப்போதைய முதல்வர், துணை முதல்வர் ஆகியோரிடம் பேச உள்ளோம்.
பயோபிக் என்றாலே சம்பந்தப்பட்ட ஆளுமையைப் புனிதப்படுத்திவிடுகிறார்கள். ஜெயலலிதாவிடமும் நிறைய விமர்சனங்கள் உள்ளன. அவரின் அரசியல் வாழ்க்கையில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் படத்தில் சொல்வீர்களா?
எந்தத் தலைவராக இருந்தாலும் சூழ்நிலைதான் முடிவு செய்கிறது. எல்லா அரசியல்வாதிகளிடமும் ப்ளஸ், மைனஸ் உள்ளது. அவர் மீது எனக்கு எந்தவித விமர்சனமும் இல்லை. இன்றைய சமுதாயத்தில் பெண்கள் அவரைப் போன்றுதான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இது ஜெயலலிதா வாழ்க்கை குறித்த கலை ரீதியான பதிவு. அடுத்த தலைமுறை அவரை ஒரு உந்துசக்தியாக கருதும்படி படத்தை உருவாக்க உள்ளேன்.
தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago