‘எனக்குப் பிடித்த அரசியல் தலைவர் டிடிவி தினகரன்’ என ‘இந்து தமிழ்திசை’க்கு அளித்த சிறப்புப் பேட்டியில் தெரிவித்துள்ளார் நடிகர் தினேஷ்.
ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘அண்ணனுக்கு ஜே’. தினேஷ் ஹீரோவாக நடிக்க, மஹிமா நம்பியார் ஹீரோயினாக நடித்துள்ளார். ஆகஸ்ட் 17-ம் தேதி ரிலீஸாக இருக்கும் இந்தப் படத்தை, இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்துள்ளார்.
‘இந்து தமிழ்திசை’க்கு தினேஷ் அளித்த சிறப்புப் பேட்டி இது...
முதன்முறையாக அரசியல் படத்தில் நடித்திருக்கிறீர்கள். அதற்காக உங்களை எப்படி தயார்படுத்திக் கொண்டீர்கள்?
என் முதல் படமான ‘அட்டகத்தி’யில் இருந்தே என் படங்களில் அரசியல் இருந்திருக்கிறது அல்லது அரசியல் படங்களில் நான் இருந்துகொண்டே இருக்கிறேன். எனக்குத் தெரியாமலேயே அது நிகழ்ந்து கொண்டிருந்தது. ‘இந்த மாதிரி படங்களில் தான் நடிக்க வேண்டும்’ என நான் தேர்ந்தெடுத்து எந்தப் படங்களிலும் நடிப்பதில்லை.
‘அட்டகத்தி’க்கு முன்னாடி ‘தசையினை தீச்சுடும்’ என்ற படத்தில் நடித்தேன். ஆனால், அது முழுவதுமாக முடிந்து வெளியாகவில்லை. ‘அட்டகத்தி’ தொடங்கி இதுவரை வெளியான என் படங்கள் எல்லாமே அந்தந்த காலகட்டங்களில் அதுவாக அமைந்தவை. ஆனால், கொஞ்சம் கொஞ்சம் நேரம் எடுத்து அமைந்தவை.
‘அட்டகத்தி’ ரிலீஸுக்குப் பிறகு வெற்றிமாறன் சார் கூப்பிட்டு அட்வான்ஸ் கொடுத்து ஒரு படம் பண்ணலாம் என்றார். அப்படி ஆரம்பிச்ச படம்தான் ‘அண்ணனுக்கு ஜே’. கதை கேட்காமலேயே அந்தப் படத்தில் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். ‘அட்டகத்தி’ மாதிரி ஜாலியா லவ் பண்ணப் போறோம்னு ஆரம்பித்த படம், தற்போது அரசியலில் நிற்கிறது.
இந்தப் படம் ஆரம்பித்து நீண்ட நாட்கள் ஆனாலும், சரியான நேரத்தில் ரிலீஸாக இருக்கிறது. இதற்காக நான் பெரிதாகத் தயாராகவில்லை. அதுவே என்னைத் தயார்படுத்தி எடுத்துவந்து, இங்கு நிற்க வைத்திருக்கிறது.
இந்தப் படம், உங்களுக்கு எந்த மாதிரியான இமேஜை உருவாக்கிக் கொடுக்கும் என நினைக்கிறீர்கள்?
‘அட்டகத்தி’, ‘குக்கூ’ மாதிரியான படங்களில் நடித்துக் கொண்டிருந்த நான், என்னைவிட்டுக் கொஞ்சம் வெளியில் சென்று வேற மாதிரி நடித்த படம் இது. ‘அட்டகத்தி’யில் பார்த்தது மாதிரி ஃப்ரெஷ்ஷா, எனக்கு மிகவும் பக்கத்தில் இருக்கிற படம். ‘அட்டகத்தி’யில் இருந்த எனர்ஜியை மறுபடியும் கொண்டுவர நிறைய சிரமப்பட்டேன்.
நான் நானாக இருக்க என்னவெல்லாம் பண்ண முடியுமோ, அதைப் பண்ணேன். ஒவ்வொரு முறை படப்பிடிப்புக்குச் சென்று வரும்போதும், ‘இன்னும் எனர்ஜி போதவில்லை... இன்னும் வேண்டும்’ என்று ராஜ்குமார் சாரும், வெற்றிமாறன் சாரும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.
‘அட்டகத்தி’க்குப் பிறகு மறுபடியும் இன்னொரு ஆரம்பமாக இருக்கும். மாஸா, ஜாலியா எல்லா தரப்பு மக்களையும் கவரும்படி இந்தப் படம் இருக்கும் என்று நம்புகிறேன். இமேஜாகப் பார்க்கும்போது, பெரிதாக இருக்கும் என்று நினைக்கிறேன். எனக்கான பெரிய ஓப்பனிங்காக இது இருக்கும்.
அரசியல்வாதி என்றாலே தனி கெத்து இருக்கும். நீங்கள் எந்த மாதிரியான கெத்தை இதில் ஃபாலோ பண்ணிருக்கீங்க?
அவ்வளவாக விவரம் தெரியாத சின்னைப் பையன் அரசியல்வாதியாக மாறுகிறான். அவனுக்கு என்ன கெத்து இருக்குமோ, அதைத்தான் படத்தில் காட்ட முயற்சித்திருக்கிறோம். ஒரு போராட்டத்தை இந்தப் படத்தில் பதிவு செய்திருக்கிறோம். அந்தப் பதிவுதான் உண்மையான கெத்து.
உங்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர் யார்?
எனக்கு இப்போது பிடித்தவர் டிடிவி தினகரன்.
உங்களுடைய ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் நீண்ட இடைவெளி இருப்பது போல் தெரிகிறதே...
நான் ஆசைப்பட்டு அப்படிப் பண்றது கிடையாது, அதுவாக நடக்கிறது. நான் எல்லாப் படங்களையும் ஏற்றுக் கொள்வதும் இல்லை, எல்லாப் படங்களையும் தவிர்ப்பதும் இல்லை. மனதுக்கு சரியெனப்படும் கதைகளில் நடித்திருக்கிறேன். இனிமேல் இவ்வளவு இடைவெளி இருக்காது என நினைக்கிறேன். காரணம், 30 அல்லது 33 நாட்களில் கூட சில படங்களை எடுத்து முடித்திருக்கிறோம். ஆனால், ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டு விடுகிறது. ‘அண்ணனுக்கு ஜே’வைப் பொறுத்தவரை கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டுதான் வெளியாகிறது. ஆனால், சரியான நேரத்தில் வெளியாகிறது.
7 வருடங்களில் 8 படம் என்பது ரொம்ப கம்மியாக இருக்கிறதே...
இந்த உலக வாழ்க்கைக்குப் பணம் என்பது ரொம்ப முக்கியம். என்னுடைய தேவைக்கு நான் படம் பண்றேன். அதிகமாகவோ, குறைவாகவோ பண்ணவில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago