சுமைதூக்கிகளாக மலைக்கும் அடிவாரத்திற்கும் வந்து போகும் மக்களின் வாழ்க்கையை துல்லியமாகவும், நுட்பமாகவும், பாசாங்கு இல்லாமலும் பதிவு செய்துள்ள படம் 'மேற்குத்தொடர்ச்சி மலை'.
கதை, கதாபாத்திரத் தேர்வு, பாத்திர வார்ப்பு, திரைக்கதை என ஒவ்வொன்றையும் பகுத்துப் பார்த்துச் சொல்ல முடியாத அளவுக்கு அனைத்தும் ஒன்றோடு ஒன்று பிணைந்தும் இணைந்தும் கிடப்பதே படத்தின் ஆகச் சிறந்த பலம். படத்தில் நாயகன் இருக்கிறார். அதற்காக அவரை மையமாகக் கொண்டு மட்டுமே படம் நகரவில்லை. கதை மட்டும் அல்ல, நிறைய கதைகள் படத்தில் உள்ளன.
ஏலக்காய் மூட்டையை தலையிலும், தோளிலும் சுமந்தபடி மலையிலிருந்து அடிவாரப் பகுதிக்கு கொண்டு சேர்க்கும் வேலையைச் செய்கிறார் ரங்கசாமி (ஆண்டனி). காணி நிலத்தையாவது வாங்கிவிட வேண்டும் என்பதற்காக ஓய்வில்லாமல் உழைக்கிறார். நிலம் வாங்கிய பிறகுதான் திருமணம் என்று வைராக்கியத்துடன் வாழும் ரங்கசாமியை அதிகாரமும் அரசியலும் சதி செய்து சிறைக்குள் தள்ளுகிறது. தான் வாங்கிய நிலத்துக்கே காவலாளியாக வேலை பார்க்கும் கொடூர சூழலுக்குத் தள்ளி வேடிக்கை பார்க்கிறது காலம். இது ஏன் நிகழ்கிறது, ரங்கசாமி கனவு தகர்ந்து போக யார் காரணம், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் எப்படிப் பறிபோகிறது போன்ற பல கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.
நாயகன் ரங்கசாமி என்றாலும், படம் முழுக்க விரவிக் கிடக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு கதை உள்ளது. அதில் வைராக்கியம், அன்பு, சோகம், இழப்பு என சர்வமும் அடங்கிவிடுகிறது. தலையில் தூக்காமல் கழுதையின் மீது ஏலக்காய் மூட்டைகளைக் கிடத்தி மலையிலிருந்து அடிவாரம் நோக்கிச் செல்லும் மூக்கையாவைப் பரிகாசம் செய்கிறார் வனகாளி.முதலாளி மூட்டையை இறக்க ஆளில்லாமல் தவித்ததற்காக பெருமழை என்றும் பாராமல், பாதை இன்னதென்று புலப்படாமல் இருந்த போதும் மலையில் இருந்து தலையில் மூட்டையைச் சுமந்து அடிவாரத்துக்கு கொண்டு சேர்த்த கதையை ஒற்றைக் குரலில் கம்பீரமாகச் சொல்கிறார் வனகாளி. ரத்த வாந்தி எடுத்த பிறகும் தன் மூட்டையை தானே சுமப்பேன் என பிடிவாதம் பிடிக்கும் அவர் இறுதியில் அந்த மூட்டையுடன் சரிகிறார்.
தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காகவே ஓயாமல் போராடும் தூய்மையான, நேர்மையான கம்யூனிஸ்ட்டாக இருக்கும் சாக்கோவின் கதாபாத்திரம் கம்பீர வார்ப்பு. இயக்கத்தின் மூத்த தோழர் முதலாளியின் சொல்பேச்சு கேட்டு, தொழிலாளர்களுக்கு எதிராகச் செயல்படும்போது சாக்கோவின் எதிர்வினை அதீதமாக இருந்தாலும் மக்கள் தலைவனுக்கான குணநலன்களைப் பிரதிபலிக்கின்றன.
மூணு ஏலக்காய் முந்நூறு மல்லிகைப்பூ என்று யார் கிண்டல் செய்தாலும் பொறுத்துக்கொள்ள முடியாமல் கையில் கிடைத்ததை வைத்து அடிக்கும் கங்காணி பின் அதே வசனத்தைச் சொல்லி இனி என்னை யார் அழைப்பார் என்று கலங்கும்போது மனதைப் பிசைகிறார்.
மகள் திருமணத்துக்காக மகிழ்ச்சியுடன் மலை இறங்கி வரும் தம்பதியரில் கணவனை யானை மிதித்துக் கொன்று விட, சில்லறைப் பணமும் சிதறிப் போக மன பாதிப்புக்குள்ளாகி சில்லறைகளைத் தேடி அலையும் கிறுக்குக் கிழவி, தனக்கென்று இருக்கும் ஒரே ஆதரவான பேத்தியின் வாழ்வுக்காக மலையடிவாரத்தில் டீக்கடை மற்றும் ஹோட்டல் நடத்தும் பாக்கியம் அம்மாள், ஒண்ணுமில்லாமல் அந்த ஊருக்குப் பிழைப்பு தேடி வந்து ரியல் எஸ்டேட்டில் உச்சம் தொடும் லோகு, தானாகவே முன்வந்து கடன் கொடுக்கும் மீரான் பாய், ரங்கசாமியின் நலனுக்காக முதலாளியிடம் பரிந்து பேசும் கணக்குப்பிள்ளை சுடலை, ரங்கசாமியுடனே வலம் வரும் கேத்தர, அதிகாரத் திமிரைக் காட்டும் ஆறு பாலா என படம் முழுக்க வரும் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரின் கதையும் படத்துடன் ஒன்றிப் போகிறது.
ரங்கசாமியாக நடித்திருக்கும் ஆண்டனியின் உடல்மொழியும், தோற்றமும் தொழிலாளியின் சகல துயரங்களையும் கண்முன் நிறுத்துகிறது. காடு, மலை கடந்து நடையாய் நடந்து மரணச் செய்தி சொல்வது, ஏலக்காய் தோட்டத்தில் திருட வந்தவர்களைப் பிடிக்கப் போய் அந்தரத்தில் தொங்கி ஆபத்தில் சிக்குவது, காணி நிலத்தைப் பத்திரம் பதிவு செய்யும் கனவைத் துரத்துவது, ஏலக்காய் மூட்டை மலையில் சிதறி வாழ்க்கையே முடிந்துபோனதாய் உணர்ந்து அழுவது, தன் உழைப்பில் வாங்கிய நிலத்தை தன் மகனுக்குக் காட்டும்போது ஆர்வத்தைக் கொப்பளிக்கச் செய்வது, அசாதாரண சூழலில் யோசிக்காமல் இரு கொலைகள் நிகழ அவசரப்பட்டுவிட்டோமோ என்ற ஆற்றாமையை வெளிப்படுத்துவதுமாக ஆண்டனி கதையின் நாயகனாக மிளிர்கிறார்.
அத்தை மகன் ரங்கசாமியைப் பார்க்க வேண்டும் என்பதற்காக டீ போட்டுக் கொடுத்தவுடன் சீனி இருக்கிறதா என்று வெட்கமும் சிரிப்புமாகக் கேட்கும் ஈஸ்வரியின் கதாபாத்திரம் தமிழ் சினிமா அரிதாகக் காட்டும் யதார்த்த நாயகியின் பிம்பம். ஈஸ்வரியாக நடித்திருக்கும் காயத்ரி கிருஷ்ணாவுக்கு இனி வெளிச்ச வாய்ப்புகள் கிடைக்கும்.
கங்காணியாக நடித்திருக்கும் ஆண்டனி வாத்தியார், வனகாளியாக வாழ்ந்த பாண்டி, அடிவாரம் பாக்கியமாக நடித்திருக்கும் சொர்ணம், ரியல் எஸ்டேட் லோகுவாக நடித்திருக்கும் அரண்மனை சுப்பு, சாக்கோவாக நடித்திருக்கும் அபு வளையங்குளம் ஆகியோர் நிச்சயம் தமிழ் சினிமாவின் நல்வரவுகள்.
வசனகர்த்தா ராசி.தங்கதுரை சினிமாவின் மொழியில் வசனங்களை எழுதாமல் மக்களின் வாழ்க்கையிலிருந்து வார்த்தைகளை வடித்திருக்கிறார். தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும், இளையராஜாவின் இசையும் படத்துக்கு ரத்தமும் சதையுமாய் உயிர் கொடுக்கிறது. அந்தரத்தில் தொங்குதம்மா ஏழையின் வாழ்க்கை பாடல் மூலம் இளையராஜா கண்ணீர் வரவழைக்கிறார்.
மேற்குத்தொடர்ச்சி மலை மீது வாழ்கின்ற நிலம் அற்ற உழைக்கும் மக்களின் கதையை இவ்வளவு வலுவாகவும் ஆழமாகவும் அழுத்தமாகவும் சொல்லியிருக்கும்
இயக்குநர் லெனின் பாரதியை நிச்சயம் தமிழ் சினிமா உலகம் கொண்டாடும். எளிய மக்களின் வாழ்க்கை எப்படி சூறையாடப்படுகிறது என்பதை சமரசம் இல்லாமல் பதிவு செய்திருக்கும் அவரது கலைத்தாகம் வியக்க வைக்கிறது. முற்றிலும் புதுமுகங்களையே நடிக்க வைத்து கதாபாத்திரத் தேர்வில் கச்சிதம் காட்டியிருப்பது சிறப்பு. கூட வந்தவன் செய்த விளையாட்டால் ஏலக்காய் மூட்டை சிதறிப் போக, அடுத்த சில கணங்களில் அந்த நண்பன் கேத்தரயுடன் வலம் வருவது நட்பின் இயல்பான வார்ப்பு. எளிய மனிதர்களின் முரண்பாடு இல்லாத அன்பை அப்படியே திரையில் காட்டியிருக்கும் இயக்குநர் லெனின் பாரதி கதை நிகழும் காலகட்டத்தை சரியாக உணர்த்தவில்லை. அந்தக் கொலை சம்பவம் கொஞ்சம் மிகைப்படுத்துதல்தான். ஆனால், சமகால அரசியல், மலையை நம்பிய மக்களின் வாழ்நிலை, அரசியல் சதி என அத்தனையையும் அம்பலப்படுத்திய விதத்தில் மக்களுக்கான சினிமாவை, மக்கள் குறித்த மகத்தான சினிமாவைப் படைத்திருக்கிறார்.
மேற்குத்தொடர்ச்சி மலை திரைப்படத்தைத் தயாரித்ததற்காக விஜய் சேதுபதி காலம் முழுக்க பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
சினிமா
14 mins ago
சினிமா
25 mins ago
சினிமா
31 mins ago
சினிமா
39 mins ago
சினிமா
47 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago