‘எந்த ஒரு பெரிய மனிதரும் நேருக்கு நேர் சந்தித்தால் அவரிடம் சரணாகதி அடைந்துவிடுவார்கள். இந்திய அரசியலில் பெரும் கவர்ச்சிக்கு உரியவர்களில் குறிப்பிடத்தக்கவர். எந்த வீழ்ச்சிக்கு இடையிலும் எழுந்து நிற்பவர்’ - கருணாநிதியைப் பற்றி அவரது உற்ற நண்பர் கவியரசர் கண்ணதாசன் சொன்ன வாசகம் இது.
அரசியலில் அரை நூற்றாண்டு காலம் தனித்த அடையாளத்தை தக்கவைத்தவராக இருந்த கருணாநிதி தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் பகுதிகளில் தெரு நாடகங்களை மேடையேற்றிதான் தனது கலைப் பயணத்தை தொடங்கினார். நாடகங்கள் வழியே சமூகத்தில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று உறுதியாக இருந்தவர் கருணாநிதி. அதனால் இளம் வயதிலேயே அப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
முதல் நாடகம்
பள்ளிப் பருவத்திலேயே அவர் தொடங்கிய தமிழ் மாணவர் மன்றம் வாயிலாகவும், அந்த காலகட்டத்தில் அவர் சார்ந்திருந்த நீதிக் கட்சியின் மூலமாகவும் பல்வேறு சமூக நாடகங்களை அரங்கேற்றினார். கருணாநிதியின் முதல் நாடகமான 'பழனியப்பன்' திருவாரூர் பேபி டாக்கீஸில் 1944-ல் அரங்கேற்றப்பட்டது. அது அவருக்கு நற்பெயரை ஏற்படுத்தியதோடு, ‘யார் இந்த கருணாநிதி?’ என்று அனைவரையும் கேட்க வைத்தது.
நாடகம் மற்றும் திரைத்துறையில் கருணாநிதி கட்டாயம் சாதிப்பார் என்பதை உணர்ந்த பெரியார், அண்ணா போன்றவர்கள் அவரை ஊக்கப்படுத்தினர். ஒரு கட்டத்தில் அவர்களது முழு சம்மதத்தோடு திரைத்துறை எழுத்தாளராக தனது பயணத்தை தொடங்கினார் கருணாநிதி.
வசனகர்த்தா என்ற வாசல், முதல் வாய்ப்பாக 1947–ம் ஆண்டு ‘ராஜகுமாரி’ படத்தில் திறந்தது. அப்படத்தின் நாயகன் எம்ஜிஆர். அதன் பிறகு ‘மந்திரிகுமாரி’, ‘மருதநாட்டு இளவரசி’ என பல படங்களுக்கு வசனம் எழுதினார். இந்த காலகட்டத்தில்தான் என்.எஸ்.கிருஷ்ணன், எம்ஜிஆர், சிவாஜிகணேசன் உள்ளிட்டவர்களுடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டது. சினிமாவை பொறுத்தவரை, அண்ணாதுரைக்கு சீனியர் கருணாநிதி!
கிட்டத்தட்ட 65 ஆண்டுகாலம் சினிமா துறையில் பணியாற்றியிருக்கிறார் கருணாநிதி. தனது கடைசிப் படமாக அவர் பணியாற்றியது பிரசாந்த், பிரபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘பொன்னர் சங்கர்’ திரைப்படம்.
வசனகர்த்தாவாக ‘பராசக்தி’ படத்துக்காக அவர் பெற்ற சம்பளம் ரூ.500. அப்படத்தின் கதாநாயகன் சிவாஜிகணேசனின் சம்பளம் அப்போது ரூ.250. தமிழ்த் திரைத்துறை வரலாற்றிலேயே ஒரு பாட்டுப்புத்தகம் போல ‘பராசக்தி’ படத்தின் வசனப் புத்தகம் விற்பனையில் சாதனை படைத்தது.
மகன்களுக்காக திரைப்படம்
கருணாநிதி மொத்தமாக 69 திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார். இதில் ‘பிள்ளையோ பிள்ளை’ படத்தில் அவரது மகன் மு.க.முத்துவும், ‘ஒரே ரத்தம்’ படத்தில் மு.க.ஸ்டாலினும் நடித்தனர்.
தமிழ் சினிமாவில் 1940-50களில் அதிக அளவில் சமஸ்கிருதம், தெலுங்கு கலந்த வசனங்கள் இடம்பெற்றன. அவற்றை எல்லாம் மாற்றி எளிமையாக, எல்லோருக்கும் புரியும்படி எழுதியவர் கருணாநிதி. இதனால், மார்டன் தியேட்டர்ஸ், ஜூபிடர் ஃபிலிம்ஸ் என அந்த காலகட்டத்தில் முன்னிலை வகித்து வந்த திரைப்பட நிறுவனங்கள் அவரை தொடர்ந்து தங்களது படங்களில் எழுத வைத்தன.
சினிமா வழியே செல்வந்தர்
‘பூம்புகார்', ‘மனோகரா', `மணமகள்', `திரும்பிப்பார்', `மருதநாட்டு இளவரசி', `மந்திரி குமாரி', `தேவகி', `அபிமன்யூ', `பணம்', `நாம்', `மலைக்கள்ளன்', `ரங்கோன்ராதா', `புதையல்', `புதுமைப்பித்தன்', `குறவஞ்சி', `எல்லோரும் இந்நாட்டு மன்னர்', `அரசிளங்குமரி' உள்ளிட்ட 69 படங்களில் பணியாற்றியுள்ள கருணாநிதி 26 படங்களை தயாரித்துள்ளார். 1957-ல் திமுக சார்பில் போட்டியிடுவதற்கு முன்பே சினிமாத்துறை கருணாநிதியை பணக்காரராக ஆக்கிவிட்டது.
எம்.ஜிஆருக்கு 9, சிவாஜிக்கு 8
கருணாநிதி வசனத்தில் 1954-ல் வெளியான ‘மனோகரா’ இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இவரது 6 படங்கள் தெலுங்கில் வெளியாகியுள்ளது. தனது நாடக, திரைத்துறை பயணத்தில் 21 நாடகங்களிலும், 69 படங்களிலும் பணியாற்றியிருக்கிறார். இவற்றில் கருணாநிதி கதை, வசனம் எழுதி எம்ஜிஆர் நடித்த படங்களின் எண்ணிக்கை 9. சிவாஜி கணேசன் நடித்த படங்கள் 8. இவற்றில் ‘பராசக்தி’ ‘மனோகரா’ இரண்டும் தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட படைப்புகள்.
சினிமாவைத் தாண்டி எம்ஜிஆர், சிவாஜியுடன் நெருங்கிய, ஆத்மார்த்தமான நட்பு கொண்டிருந்தவர் கருணாநிதி. கருணாநிதியுடன் எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் ‘என் அருமை நண்பனைப் பற்றி நான் என்ன பேசுவது? கலைஞரைப் பற்றி பேசினால் நானும் அதில் கலந்திருப்பேனே!’ என்று நெகிழ்ச்சியோடு பேசுவார் சிவாஜி.
தொலைக்காட்சி ஆளுமை
கருணாநிதி கடைசியாக வசனம் எழுதிய தொலைக்காட்சித் தொடர், 'இராமானுஜர்' - மதத்தில் புரட்சி செய்த ஸ்ரீ ராமானுஜரைப் பற்றி வெளிவந்த இந்தத் தொடர் வசனமும் தொலைக்காட்சியில் வரவேற்பை பெற்றது. இந்தப் பணியில் அவர் ஈடுபட்ட போது அவருக்கு வயது 92.
‘தூக்கு மேடை’ நாடகத்துக்காக எம்.ஆர்.ராதாவால் ‘கலைஞர்’ என்று பட்டம் பெற்றார் கருணாநிதி. அதுமுதல், தலைவர்கள் மட்டுமல்லாமல் தொண்டர்கள் வரை அனைவராலும் ‘கலைஞர்’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். தன் வாழ்நாளின் கடைசி வரை கலைத் துறையிலும் ஆர்வம் காட்டி, உண்மையான கலைஞராகவே திகழ்ந்தார் கருணாநிதி.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago