‘மக்களுக்காகத் தொடர்ந்து பாடிக்கொண்டே இருப்பேன்’ என ‘சூப்பர் சிங்கர் 6’ பட்டம் வென்ற மக்கள் இசைக் கலைஞர் செந்தில் கணேஷ் ‘இந்து தமிழ்’ இணையதளத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர் 6’ நிகழ்ச்சியில், மக்கள் இசைக் கலைஞரான செந்தில் கணேஷ் பட்டத்தை வென்றுள்ளார். ஸ்ரீகாந்த், அனிருத், மாளவிகா, ஷக்தி, ரக்ஷிதா, செந்தில் கணேஷ் என 6 போர் பங்குகொண்ட இறுதிப் போட்டியில், முதல் பரிசை செந்தில் கணேஷும், இரண்டாவது பரிசை ரக்ஷிதாவும், மூன்றாவது பரிசை மாளவிகாவும் பெற்றுள்ளனர்.
செந்தில் கணேஷ் ‘இந்து தமிழ்’ இணையதளத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டி இது.
கச்சேரிகளில் பாடியதற்கும், ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் பாடியதற்கும் என்ன வித்தியாசம்?
கச்சேரிகளில் 25 வருடங்களாகப் பாடிக் கொண்டிருக்கிறேன். எனவே, மிகப்பெரிய அனுபவம் இருக்கிறது. அந்த மேடை புதிது கிடையாது. ஆனால், எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் ஆரம்பத்தில் சின்ன தயக்கம் இருக்கும். அது கச்சேரி ஆரம்பிக்கிற வரைக்கும்தான். ஆரம்பித்துவிட்டால் உள்ளே இறங்கி தூள் கிளப்பிவிடுவேன். ஆனால், ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி அப்படி கிடையாது. அதில் அமர்ந்திருக்கிறவர்கள் எல்லாமே பெரிய பெரிய ஜாம்பவான்கள். அவர்களுக்கு முன்னால் சுதி, தாளத்துடன் பாட வேண்டும். வார்த்தைகளை மறந்துவிடக் கூடாது என்ற பதட்டம் இருக்கும். கச்சேரிகளில் இந்தப் பதட்டம் இல்லாமல், ஃப்ரீயாகப் பாடுவேன்.
ஒரே வீட்டில் இரண்டு பாடகர்கள் இருப்பது ப்ளஸ்ஸா? மைனஸா?
என்னைப் பொறுத்தவரைக்கும் ப்ளஸ் தான். என் மனைவிக்கு ஏதாவது சந்தேகம் என்றால், என்னிடம் கேட்பாங்க. ‘இது சரியாக இருக்குமா? எப்படிப் பாடலாம்?’ என்றெல்லாம் கேட்பாங்க. அதேமாதிரி நான் ஏதாவது புதுப் பாடல் எழுதினாலோ அல்லது புது மெட்டில் பாட முயற்சித்தாலோ, ‘நல்லாயிருக்கா? இது சரியா வருமா?’ என்று அவங்ககிட்ட கேட்பேன். இரண்டு பேருமே இசை இணையர்களாக இருப்பதால், ப்ளஸ் தான்.
நீங்கள் இருவரும் இணைந்து பாடிய ‘ஏ... அத்த புள்ள...’ பாடல் எல்லா இடங்களிலும் பயங்கர வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்தப் பாடல் உருவான விதம் பற்றி சொல்லுங்கள்...
என்னுடைய 15-வது வயதில்தான் இந்தப் பாடலை நான் முதன்முதலாகப் பாடினேன். கேசட்டில் பதிவு செய்வதற்காக இந்தப் பாடலைப் பாடினேன். என்னுடைய குருநாதர் செல்லத் தங்கையா தான் இதை எழுதினார். அப்போது நானும், என்கூடப் பிறந்த தங்கை தேன்மொழி இருவரும் சேர்ந்துதான் இந்தப் பாடலைப் பாடினோம். ராஜி கச்சேரிகளில் பாட வந்தபோது, நாங்கள் இருவரும் சேர்ந்து இந்தப் பாடலைப் பாடினோம். இந்தப் பாடல் தான் எங்களுக்குள் காதல் மலரக் காரணமாகவும் இருந்தது. இந்தப் பாடல், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் இந்த அளவுக்கு சென்று சேர்ந்திருப்பதைப் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.
உங்களைப் பார்த்தால் சாதுவானவர் போலத் தெரிகிறது. உங்கள் வீட்டில் மதுரை ஆட்சியா? சிதம்பரம் ஆட்சியா?
மதுரை ஆட்சி தான். அவங்களைத் தாண்டி எதுவும் நடக்கப்போவது இல்லை. இருந்தாலும், செயல்படுவதெல்லாம் சிதம்பரம் ஆட்சி போல் நான் தான். எந்த விஷயமாக இருந்தாலும், அவங்களிடம் கருத்து கேட்டுவிட்டு தான் முடிவு செய்வேன். பேட்டிக்காக நான் இதைச் சொல்லவில்லை. உண்மையிலேயே என்னைவிட அவங்க கொஞ்சம் தெளிவானவங்க.
உங்களின் வெற்றி, நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது?
மக்கள் இசைக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என நானே எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றி எனக்கு மட்டுமல்ல, மக்கள் இசைக் கலைஞர்கள் எல்லாருக்குமான வெற்றி இது. ‘நமக்குப் பிறகு ஒரு தலைமுறை இந்தக் கலையைக் காப்பாற்றுவதற்காக இருக்கிறது’ என மூத்த கலைஞர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை வந்திருக்கிறது.
அடுத்த தலைமுறைக்கு மக்கள் இசையை எப்படி கொண்டு செல்லப் போகிறீர்கள்?
நாங்கள் இன்னும் நிறைய உழைக்க வேண்டும். எங்களுடைய மூத்த கலைஞர்கள் செய்ததைத்தான் நாங்கள் இன்று செய்து கொண்டிருக்கிறோம். எனவே, அவர்களுடைய வழிகாட்டுதல் எங்களுக்கு இருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு நாங்கள் வழிகாட்ட வேண்டும் என்றால், இந்தப் பாடல்கள் எல்லாவற்றையும் ஆவணப்படுத்த வேண்டும். புதுப்புது பாடல்கள் எழுத வேண்டும், புதிய மெட்டுகள் அமைக்க வேண்டும்.
கள ஆய்வு மேற்கொண்டு, எங்கெல்லாம் நாட்டுப்புறப் பாடல்கள் இருக்கிறதோ, அவற்றைத் தொகுக்க வேண்டும். எங்களுடைய முன்னோடிகள் விஜயலட்சுமி, நவநீதகிருஷ்ணன் சொன்னதுபோல், நாட்டுப்புறப் பாடல்களுக்கு நொட்டேஷன் எழுதிவைக்க வேண்டும். அப்படி எழுதிவைத்தால், யார் வேண்டுமானாலும் நாட்டுப்புறப் பாடல்களைப் பாட முடியும். அதற்கான வேலைகளைத் தொடங்க வேண்டும்.
நாட்டுப்புறப் பாடல்களை மட்டுமே பாடிக் கொண்டிருந்த நீங்கள், திரையிசைப் பாடல்களையும் பாடிய அனுபவம் எப்படி இருந்தது?
நான் திரையிசைப் பாடல்களைப் பாடுகிறேன் என்று சொன்னதும், அதை ஏற்றுக்கொண்டு என்னைப் பாடவைத்த ‘சூப்பர் சிங்கர்’ மேடைக்கு மிகப்பெரிய நன்றி. அதில் சின்னச்சின்னக் குறைகள் இருந்தாலும், அதை மெருகேற்றிக் கொடுத்த அனந்த் வைத்யநாதன் மாஸ்டருக்கும், மணி இசைக்குழுவுக்கும் நன்றி. நான் எந்த அளவுக்குப் பாடுவேன், என் லெவல் என்ன என்று எனக்குத் தெரியும். மக்களும் அதை ஏற்றுக்கொண்டதைப் பெருமையாக நினைக்கிறேன்.
நன்றாகப் பாடுவதைத் தாண்டி, ஒட்டுமொத்த மேடையையும் தன்வசப்படுத்திக் கொள்வது என்பது உங்களுக்கு கைவந்த கலை. அதை எப்படி கற்றுக் கொண்டீர்கள்?
இதற்கு முழுக்காரணம், என்னுடைய குருநாதர் தங்கையா. ‘பாடுவதோடு மட்டுமின்றி, நடித்துக் கொண்டே ஒரு விஷயத்தைச் சொன்னால் தான் மக்களிடம் எளிதில் சென்றுசேரும். அதுதான் உனக்கான அடையாளத்தைக் கொடுக்கும்’ என அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். சின்ன வயதில் பாடுவதற்குப் பயிற்சி அளிக்கும்போதே, குச்சியை மைக் போல வைத்துக்கொண்டு அல்லது சும்மாவாவது மைக் போல கையை வைத்துக்கொண்டு ஆக்ஷன் செய்துகொண்டே பாடச் சொல்வார். அதுவே கச்சேரிகளிலும் தொடர்ந்தது. அப்படி சின்னச் சின்ன மேடைகளில் உழைத்த உழைப்புதான் இன்று பலனைக் கொடுத்திருக்கிறது.
உங்களுடைய பாடலால், உங்கள் கிராமத்துக்கு ஒரு போர்வெல் கிடைத்திருக்கிறது. அந்த சந்தோஷத்தை எப்படி உணர்கிறீர்கள்?
மக்களின் வாழ்க்கையை, வலிகளை, கஷ்டங்களை, சந்தோஷங்களைப் பாடுவதற்காகத்தான் மக்கள் இசைக் கலைஞர்கள் என நாங்கள் இருக்கிறோம். எங்களுடைய நீண்ட நாள் ஆதங்கம் இது. சமூகத்துக்காக நாங்களும் ஏதாவது இறங்கிச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், அதற்கானப் பொருளாதாரம் இல்லை என்ற வருத்தமும் இருந்தது.
நான் கடவுளிடம் அடிக்கடி வேண்டிக் கொள்வதும் இதுதான், ‘எங்களைக் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டு, இந்த சமூகத்துக்கு நல்ல விஷயங்கள் செய்யும் நிலையைக் கொடுங்கள்’. அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, இன்றைக்கு இவ்வளவு பெரிய இடத்தைக் கடவுள் கொடுத்திருக்கிறார். பாட்டுல சொன்னது மூலமாக, பெங்களூரைச் சேர்ந்த சாம்ஸ் அறக்கட்டளை ஒரு போர்வெல் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இந்த மாதிரி இன்னும் நிறைய நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும். மக்களுக்காகத் தொடர்ந்து பாடிக்கொண்டே இருப்பேன்.
செந்தில் கணேஷின் முழு வீடியோ பேட்டி
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago