திரைப்படங்களில் கிராமங்களை பதிவு செய்வது அவசியம்:‘கடைக்குட்டி சிங்கம்’ கார்த்தி நேர்காணல்

By மகராசன் மோகன்

நான்கு ஆண்டுகளாகவே பேசிட்டு இருந்த படம்தான் ‘கடைக்குட்டி சிங்கம்’. 5 பெண் குழந்தைகளுக்குப் பிறகு பிறக்கிற பையன் கதாபாத்திரம் என்றதுமே குஷியாகிவிட்டேன். ஏனென்றால், அதற்குள் எவ்வளவு எமோஷன், காமெடி இருக்கும் என எனக்கு நன்றாகவே தெரியும். என் அம்மாவின் குடும்பம் ரொம்ப பெரிசு. எப்பவும் பேச்சும், கலகலப்புமாக இருக்கும். பெரிய குடும்பமாக ஒரு படம் பண்ணனும் என்பது என் நீண்ட நாள் ஆசை. ‘கடைக்குட்டி சிங்கம்’ மூலம் அது நிறைவேறியதில் ரொம்ப மகிழ்ச்சி.. என்று உற்சாகமாக பேசத் தொடங்குகிறார் ‘விவசாயி’ கார்த்தி. அவருடன் பேசியதில் இருந்து..

விவசாயியாக நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

நான் சென்னையில் வளர்ந்து, அமெரிக்காவில் படிச்சிருந்தாலும், விடுமுறை என்றால் உடனே கோயம்புத்தூருக்கு அருகே உள்ள அம்மாவின் ஊருக்குப் போய்விடுவேன். அங்குள்ள உறவினர்கள் எல்லாரும் விவசாயம்தான் பண்றாங்க. அங்கு போய் நிலத்தில் நிற்கிற சுகமே தனி. மாட்டு வண்டி செமயா ஓட்டுவேன். என் பைக்கில் ‘விவசாயி’ என எழுதி வைத்துக்கொள்கிற கம்பீரமான ‘குணசிங்கம்’ என்கிற கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கேன். மாநகரத்தில் இருக்கிற இளைஞர்கள் எல்லாம் மீண்டும் கிராமத்துக்குப் போய் விவசாயம் செய்ய வேண்டும். கூட்டுக் குடும்ப உறவுகளைப் போற்ற வேண்டும்.

நிறைய கதாபாத்திரங்கள் இருக்கும் ஒரு படத்தில் உங்களுக்கான முக்கியத்துவம் எப்படி?

அதுதான் இயக்குநர் பாண்டிராஜின் மேஜிக். மொத்தம் 29 கதாபாத்திரங்கள். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு சீன்ல ஸ்கோர் பண்ணுவாங்க. முழுக்க ஹீரோ மட்டுமே பேசிட்டு இருக்கிற படம் இல்லை இது. கிராமங்களை சினிமாவில் பதிவு பண்ணிட்டே இருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில், அந்த வாழ்வியல் தெரிந்த இயக்குநர்கள், பாண்டிராஜ் மாதிரி வெகுசிலரே இருக்கிறார்கள். இந்தப் படத்தைப் பார்த்தவுடன், ஒவ்வொருத்தரும் கட்டாயம் தன்னோட குடும்ப உறுப்பினர்களுக்கு போன் செய்து பேசுவாங்க. அவர்களைச் சந்திக்க ஊருக்கு கிளம்புவாங்க.

இன்றைய விவசாயிகளின் நிலைமை எப்படி இருப்பதாக உணர்கிறீர்கள்?

எதார்த்தமாகப் பார்த்தால், இப்போது உள்ள சூழ்நிலையில், விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ முடியுமா என்பது தெரியவில்லை. விவசாயிகள் முழுமையா இயற்கையை மட்டுமே நம்பி வாழறாங்க. அறுவடை காலத்தை மையமாக வைச்சுத்தான் பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் பண்றாங்க. அறுவடையில் வரும் பணம்தான் அவங்களுக்கு பிரதானம். அப்படியென்றால், எந்த அளவுக்கு இயற்கையை ஒட்டியே, இயற்கையை நம்பியே வாழ்ந்துட்டு இருக்காங்கன்னு புரிஞ்சுக்கலாம். விவசாயிகள் பெரும்பாலும் ரொம்ப எளிமையா, பெருந்தன்மையா வாழறவங்க. அவங்களுக்குப் பெரிசா ஆசைகள் இருக்காது. பலசிரமங்களுக்கு மத்தியில் வைராக்கியத்துடன் வாழ்பவர்கள். அவர்களுடைய பொருளுக்கு என்ன விலை என்பது இன்னும் போராட்டமாவே இருக்கு. காய்கறி கடையில நாம வாங்குற விலைக்கும், விவசாயிகளின் கையில் கிடைக்கிற விலைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கு.

ஒவ்வொரு படத்துக்கும் நீண்ட இடைவெளி ஏன்?

வலுவான கதையில் என் திரையுலக வாழ்க்கை தொடங்கியதால், கொஞ்சம் சின்ன கதைகளை ஒப்புக்கொள்ள முடியவில்லை. அதனாலேயே ஒவ்வொரு படமும் ரொம்ப பார்த்து தேர்வு செஞ்சு, நிறைய நேரம் எடுத்து நடிக்கிறேன்.

நடிகர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து..

நடிகர் சங்கத்தில் தற்போது கட்டிடம்தான் பெரிய சவால். 60 வயதை தாண்டியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவங்களுக்கு நிறைய உதவிகள் தேவைப்படுது. அவங்களுக்கு மாதந்தோறும் உதவிகள் கொடுப்பதற்கு, நிரந்தரமான வருமானத்துக்குதான் கட்டிடம். இப்போது 2-வது மாடிக்கு தளம் போட்டுட்டு இருக்காங்க. 3 வருஷம்தான் பொறுப்புல இருக்கோம். அதற்குள், மனசாட்சிக்கு உட்பட்டு எவ்வளவு விஷயங்கள் பண்ண முடியுமோ பண்றோம். நிறைய பேர் பாராட்டுறாங்க. திட்டுறவங்களும் இருக்காங்க. திட்டுறதைப் பற்றி யோசித்தால், நல்லது செய்ய முடியாது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்