“கணவராக நடந்துகொள்வதும், நண்பராகத் தொடர்வதும் பாலாஜி கையில்தான் இருக்கிறது” - நித்யா

By சி.காவேரி மாணிக்கம்

‘கணவராக நடந்துகொள்வதும், நண்பராகத் தொடர்வதும் பாலாஜி கையில்தான் இருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார் நித்யா.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ் 2’. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் இந்த நிகழ்ச்சியில், ‘தாடி பாலாஜி’ என்று குறிப்பிடப்படும் பாலாஜியும், அவருடைய மனைவி நித்யாவும் போட்டியாளராகப் பங்கேற்றனர்.

இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து வாழ்வதால், நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்காததால், நித்யாவை ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் இருந்து வெளியேற்றி விட்டார்கள்.

 28 நாட்கள் ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் இருந்துவிட்டு வெளியே வந்த நித்யாவிடம், பாலாஜி பற்றிப் பேசினேன்...

பாலாஜிக்கும் உங்களுக்குமான அறிமுகம் எப்படி?

என் அக்காவின் நண்பர்தான் பாலாஜி. அக்காவின் கல்யாணத்துக்குப் பாலாஜி வந்த போது, ‘இவரை நன்றாகக் கவனித்துக்கொள்ள வேண்டும்’ என அக்கா சொன்னார். அப்போது தொடங்கியதுதான் நட்பு. அக்காவின் கல்யாணத்துக்குப் பிறகு பாலாஜியே என்னிடம் நேரடியாகப் பேசத் தொடங்கினார். ஜாலியாகச் சொன்னால் ‘பாலாஜி பிக்கப் & ட்ராப் சர்வீஸ்’ தொடங்கியது. அதற்காக ட்ரைவர் என்று சொல்ல முடியாது. காரை ட்ரைவர் தார் ஓட்டுவார். இருந்தாலும் இவரும் கூடவே வருவார். நான் கல்லூரி படிக்கும்போது தொடங்கிய இந்த சேவை, வேலைக்குச் சென்ற பிறகும் தொடர்ந்தது.

யார் முதலில் காதலை வெளிப்படுத்தியது?

பாலாஜி தான் முதலில் புரபோஸ் பண்ணார். ரெஸ்டாரன்ட், கேண்டில் லைட் டின்னர், பெரிய கிஃப்ட் கொடுத்து இப்படித்தான் எல்லாரும் புரபோஸ் பண்ணுவாங்க. ஆனால், இவர் எனக்கு சூப் வாங்கிக் கொடுத்து புரபோஸ் பண்ணார். எனக்கு அப்போது காய்ச்சல் அடித்துக் கொண்டிருந்தது. வெளியில் வரவே முடியாத சூழல். ஆனாலும், கட்டாயப்படுத்தி லாங் ட்ரைவ் அழைத்துக்கொண்டு போனார்.

போகும் வழியில் ஒரு சூப் கடையில் நிறுத்தி குடித்துக் கொண்டிருக்கும்போது ‘டக்’குனு சொல்லிட்டார். அவர் சொன்னபோது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு அவருடைய அன்பைப் பார்த்துவிட்டு நானும் ஓகே சொல்லிவிட்டேன். ஓகே சொல்லாமல் ஃபிரண்டாகவே இருந்திருக்கலாமோனு இப்போது தோன்றுகிறது.

ஏனென்றால், ஃபிரண்டாக இருக்கும்போது பாலாஜியுடன் மிகவும் ஜாலியாக இருக்கும். சீரியஸான விஷயங்கள் எதையுமே பேசிக்கொள்ள மாட்டோம். எப்போதுமே விளையாட்டுத்தனமாக கலாய்த்துக் கொண்டே இருப்போம். காதலி, மனைவி என்று வந்த பிறகுதான் பூகம்பம் வெடித்தது. காதலிக்கும்போது நேர்மறையான விஷயங்கள் மட்டும்தான் கண்ணில் படும். கல்யாணத்துக்குப் பிறகு எதிர்மறையான விஷயங்கள் தெரிய வந்தபிறகு கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும், இன்னும் அந்த அன்பு, பாசம் எதுவுமே பாலாஜியிடம் குறையவில்லை. 9 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தாரோ, இன்னும் அப்படியேதான் இருக்கார். சொல்லப்போனால், இப்போது அன்பு இன்னும் அதிகமாகிவிட்டது என நினைக்கிறேன்.

பாலாஜி உங்களை எப்படிக் கூப்பிடுவார்?

பாலாஜி என்னை ‘நித்திமா...’ என்று கூப்பிடுவார். ரொம்ப பாசத்தில் இருந்தால் ‘அம்மு’ என்று கூப்பிடுவார். நானும் ‘அம்மு’, ‘அஜ்ஜிமா’ என்று கூப்பிடுவேன்.

அந்த அன்பைக் கடந்த சில மாதங்களாக மிஸ் பண்ணியதாக உணர்கிறீர்களா?

நான் அப்படி நினைக்கவில்லை. நான் மிஸ் பண்ணதைவிட, அவர் உணர்ந்து கொள்வதற்கான காலகட்டமாகத்தான் இதைப் பார்க்கிறேன். ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து அவர் வந்தபிறகும், மறுபடியும் அவருக்கு ‘பிக் பாஸ்’தான். எந்தக் கடை முன்பும் நிற்காமல், நிறைய விஷயங்களைச் செய்யாமல், என்னையும் மற்ற ஆண்களுடன் இணைத்து சந்தேகப்படாமல் இருந்தால், நானும் போஷிகாவும் அவருடன் இணைந்து வாழத் தயார். மாறுவது அவர் கையில்தான் இருக்கிறது.

ஒரு இடைவெளிக்குப் பின் ‘பிக் பாஸ்’ வீட்டில் பாலாஜியுடன் இருந்தீர்கள். அப்போது உங்களின் மனநிலை எப்படி இருந்தது?

கணவராக இல்லாமல், சக போட்டியாளராக மட்டுமே பாலாஜியைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துதான் ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள்ளேயே போனேன். முதல் நாள் எப்படிப் போனேனோ, 28 நாட்களுக்குப் பிறகு வெளியே வரும்போதும் அதே மனநிலையில் தான் இருந்தேன். ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் இருக்கும்போது எல்லாரையும் போல அவரையும் நண்பராகத்தான் நினைத்துப் பழகினேன். ‘பிக் பாஸ்’ முடிந்து வெளியில் வந்தபிறகு கணவராக நடந்துகொள்வதும் இல்லை, நண்பராகத் தொடர்வதும் பாலாஜி கையில்தான் இருக்கிறது.

இருந்தாலும் பாலாஜி உங்களுக்கு ஊட்டிவிடுவது போன்ற நெருக்கமான சூழலில் உங்களுக்குள் இருந்த அன்பு வெளிப்படவில்லையா?

28-வது நாள் ‘ஐ லவ் யூ நித்யா’ என்று பாலாஜி சொன்னார், நானும் ‘சேம் ஹியர்’ என்று சொன்னேன். இதையே அவர் முதல்நாள் சொல்லியிருந்தாலும், அப்போதும் என் பதில் இதுவாகத்தான் இருந்திருக்கும். பாலாஜியை எனக்கு ரொம்பப் பிடிக்கும், இன்னமும் பிடிக்கும். ஆனால், கணவராக இருப்பதற்கான விஷயங்களை அவர் இன்னும் எனக்குத் தரவில்லை. கணவராக அவர்மீது இன்னும் நம்பிக்கை வரவில்லை.

நான் மன்னிக்கத் தயாராக இருக்கிறேன், என்னை மாற்றிக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன். நான் நம்புவதற்கான விஷயங்களை அவர் செய்தார் என்றால், அவரை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறேன்.

நித்யாவுக்கு ‘பிடிவாதக்காரி’ என்றொரு பெயரும் இருக்கிறது. போஷிகாவுக்காக இந்த விஷயத்தில் விட்டுக்கொடுத்துப் போகலாமே...

ஆமாம், பிடிவாதம் தான். ஆனால், சரியான விஷயங்களுக்கு மட்டுமே நான் பிடிவாதம் பிடிப்பேன். பாலாஜியைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளக் கூடாது என்று என்னுடைய அப்பா, அம்மா தடுத்தனர். அப்போது நான் பிடிவாதம் பிடிக்கவில்லை என்றால், இந்தக் கல்யாணமே நடந்திருக்காது. எனக்கு சில விஷயங்கள் வேண்டும் என்றால், மற்றவர்களைக் காயப்படுத்தாதவரை அதை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன். ஒருவேளை மற்றவர்களைக் காயப்படுத்தினால், அந்த சமயங்களில் விட்டுக் கொடுத்திருக்கிறேன்.

பிக் பாஸ் இறுதிப்போட்டியில் பாலாஜி இருப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறதா?

கண்டிப்பாக இருக்கிறது, என்னுடைய ஆசையும் அதுதான். இந்த மாதிரி வாய்ப்பு கிடைப்பது என்பது அரிதான விஷயம். வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய விஷயம். எனவே, பாலாஜி ஜெயிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. விஜய் தொலைக்காட்சி எல்லாருக்குமே நிறைய வாய்ப்புகள் கொடுத்து வளர்த்து விட்டிருக்கிறார்கள். அந்த வாய்ப்பை நாம் எப்படிப் பயன்படுத்திக் கொண்டு மேலே மேலே வளர்கிறோம் என்பதுதான் விஷயம். சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் எல்லாருமே அப்படி வளர்ந்தவர்கள்தான்.

ஆனால், நாங்கள் ‘ஜோடி நம்பர் ஒன்’னில் கலந்து கொண்டாலும், எங்களுடைய பர்சனல் பிரச்சினை காரணமாக அதில் அடுத்தடுத்து செல்ல முடியவில்லை. எனவே, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலும் எங்களுடைய சொந்தப் பிரச்சினையைக் கொண்டுவந்து, அவருக்கான வாய்ப்பைத் தவறவிட்டு விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன்.

 எனக்கு வளர்ச்சி இல்லையென்றால் கூட, பாலாஜிக்கு பெரிய பெரிய புராஜெக்ட்ஸ் கிடைக்க வேண்டும், அவர் ஆசைப்பட்டது போல் முழுநீளப் படத்தில் நடிக்க வேண்டும். என்னுடைய சொந்த வாழ்க்கை பற்றி சொல்லியோ, பாலாஜியைப் பற்றித் தவறாக சொல்லியோ அவருடைய வாய்ப்பு பறிபோகிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன்.

'காஷ்மோரா' படத்தில் நடிக்க விரும்பினேன்: விஜய் சேதுபதி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்