திருட்டு விசிடி விற்பனையை ரகசியமாக வீடியோ எடுத்த பார்த்திபன்

By செய்திப்பிரிவு

திருட்டு விசிடி, டிவிடி பிரச்சினையை தமிழ் சினிமா தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதைத் தடுக்க அரசு பல்வேறு சட்டங்களைக் கொண்டுவந்தது. எனினும், போதிய கண்காணிப்பு இல்லாமல் தொடர்ந்து கள்ளத்தனமாக புதிய திரைப்படங்களின் விசிடி, டிவிடிக்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

பலரும் நடவடிக்கை எடுக்கச் சொல்லி அரசிடம் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கும் வேளையில், நடிகர் பார்த்திபன் தானே திருட்டு விசிடிக்கு எதிரான நேரடி நடவடிக்கைக் களத்தில் இறங்கியுள்ளார். | வீடியோ பதிவு கீழே |

பார்த்திபன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' திரைப்படம் விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் நல்ல பாராட்டை பெற்று ஓடி வருகிறது. இந்தத் திரைப்படத்தின் திருட்டு விசிடிக்களை ஒழிக்கும் விதத்தில், சென்னை பர்மா பஜாரில் ஒரு கடையில், இயக்குநர் பார்த்திபன் தானே நேரில் சென்று கையும் களவுமாக ஒருவரை பிடித்துள்ளார். இதை வீடியோ பதிவாக எடுத்து தனது யூடியூப் சேனலிலும் பார்த்திபன் பதிவேற்றியுள்ளார்.

பார்த்திபனின் உதவியாளர் ஒருவர் கடையில் நிற்க, தூரத்தில் கேமராவுடன் இருக்கும் பார்த்திபன், உதவியாளருடன் செல்பேசியில் பேசுகிறார். சிடி வாங்குவதற்காக ஒருவர் வந்து, காசு கொடுத்து, அவருக்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படத்தின் திருட்டு விசிடி கைமாறும் போது, பார்த்திபன் தானே காரிலிருந்து இறங்கி, அந்தக் கடைக்குச் சென்று, சிடி விற்பவரை கையும் களவுமாக பிடிக்கிறார்.

மேலும், அந்தக் கடையில் சமீபத்தில் வெளியான அனைத்து தமிழ்ப் படங்களின் சிடிக்களும் கிடைக்கும் என்பதையும் பார்த்திபன் தெரிந்து கொள்கிறார். பார்த்திபனைக் கண்டதும் கூட்டம் சேர, தனக்குத் தெரிந்த அதிகாரியையோ நண்பரையோ போனில் அழைத்து அங்கு நேரில் வருமாறு அவர் கேட்கிறார். அண்மையில் நடந்த தனது திரைப்படத்தின் வெற்றிவிழாவில், பார்த்திபன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படத்தின் டிவிடியை பத்திரிக்கையாளர்களுக்கு எடுத்துக் காண்பித்து வருத்ததோடு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் தான் நடிகர் விஷால் இதேபோல் கேபிள் டிவியில் புதுப் படங்களை ஒளிபரப்பிய கேபிள் டிவி ஆப்பரேட்டரை கையும் களவுமாக பிடித்தார் என்பது நினைவுகூறத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE