‘நான் சமரசமற்ற படைப்பாளி கிடையாது’ என இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார். அவர் இயக்கிய ‘காலா’ படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது. ரஜினிகாந்த் நடித்துள்ள இந்தப் படத்தை, தனுஷ் தயாரித்துள்ளார். பா.இரஞ்சித் ‘தி இந்து’வுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி இது.
சமரசமற்ற படைப்பாளியாக கமர்ஷியல் சினிமாவில் இயங்குவது சாத்தியமா?
சமரசமற்ற படைப்பாளியாக நான் இல்லை. சமரசமுள்ள படைப்பாளியாகத்தான் இருக்கிறேன். ஆனால், சமரசமற்ற படைப்பாளியாக மாறவேண்டும் என்று விருப்பப்படுகிறேன். ஏனென்றால், நான் நினைப்பதையும் பேசுவதையும் படமாக்க சமரசமற்ற தன்மை இங்கு தேவைப்படுகிறது. சினிமா எனும் மிகப்பெரிய மீடியத்தின் வழி பேசும்போது, இங்கு இருக்கின்ற வியாபார யுக்தி, எந்த மக்கள் பார்க்கின்றனர் போன்ற விஷயங்கள் எல்லாம் இருக்கின்றன.
ஒரு ஓவியத்தை, சமரசமற்ற படைப்பாக என்னால் எப்போதும் பார்க்க முடியாது. நான் வரைகிறேன், பேசுகிறேன், என்னுடைய வார்த்தை, நான் எடுத்தாள்கிற மொழி என் எதிரில் இருப்பவர்களுடன் இணைய வேண்டும் என நினைக்கிறேன். என் எதிரில் இருப்பவன் அப்படியே எனக்கு எதிரான மொழி ஆளுமையுடன் இருக்கிறான்; அவனுக்கும் எனக்குமான கொள்கை, வாழ்க்கை, இன வேறுபாடுகள் முரணாக இருக்கும்போது, நானும் அவனும் பேசிக் கொள்வதற்கான மொழியை உருவாக்க வேண்டும் என நினைக்கிறேன். அந்த மொழிதான் சமரசம் என நான் நினைக்கிறேன். இந்த சமரசத்துக்குள் நான் பேசுவது எனக்கோ, பார்வையாளர்களுக்கோ பாதிப்பை உண்டாக்காது. கொள்கை அளவிலும் அது மிகவும் தீவிரமாகத்தான் இருக்கும் என நான் நினைக்கிறேன். அந்த சமரசத்தைத்தான் நான் விரும்புகிறேன்.
மற்றபடி வணிக ரீதியாகவோ, வாழ்க்கைச் சூழலை மாற்றிக் கொள்வதற்கோ, கதாநாயகத்தன்மையை மிகைப்படுத்திக் காட்டுவதற்கோ ஆன சமரசத்தை ஒருபோதும் நான் பண்ண மாட்டேன். நான் பேசுகிற அரசியலை, எதிரில் இருக்கிற மக்கள் புரிந்து கொள்கிற ஒரு மொழியை உண்டாக்குவதுதான் என்னுடைய வேலை. அந்த மொழி, சமரசமான ஒரு மொழியாக இருக்கும்.
‘மெட்ராஸ்’ படத்தில் நீங்கள் பேசிய அரசியலைவிட, ‘கபாலி’யில் குறைவாகத்தான் அரசியல் பேசியிருக்கிறோம் என உணர்ந்தீர்களா?
அது உண்மைதான். ஆனால், ‘கபாலி’யில் குறைவாகப் பேசிய அரசியலுக்குத்தான் பெரிய கோபங்களும், என் மீதான தாக்குதல்களும் நடைபெற்றது. தாக்குதல் என்றால், வார்த்தைகளால் தாக்குதல். நான் ‘அட்டகத்தி’ எடுத்தபோது, பெரும்பாலானவர்கள் அதைக் கவனிக்கவே இல்லை. நான் பேசுகிற, யோசிக்கிற விஷயங்களை ஒத்திருக்கிற முற்போக்காளர்கள் கூட அதைக் கவனிக்கவும் இல்லை, கொண்டாடவும் இல்லை. மக்களிடம் அது வந்தது, பார்த்தார்கள், பேசினார்கள், போய்விட்டது.
‘மெட்ராஸ்’ படம் வந்தபிறகு, அதில் பேசிய அரசியலை முன்னிட்டு ஒரு விவாதம் உருவானது. ‘இது ரொம்பத் தீவிரமான அரசியல் படம்’ என ஒருசிலர் சொன்னார்கள். ‘இது படமே கிடையாது’ என்று சிலர் சொன்னார்கள். ‘மெட்ராஸ்’ வெளியான பிறகுதான் ‘அட்டகத்தி’ நல்ல படம் என்று சொன்னார்கள்.
‘கபாலி’ வெளியான பிறகு, ‘மெட்ராஸ்’ தான் நல்ல படம் என்று பாதிபேரும், ‘அட்டகத்தி’ நல்ல படம் என்று பாதிபேரும் சொன்னார்கள். இப்போது ‘காலா’வைப் பார்த்துவிட்டு என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை. இதில் எனக்கு என்ன மகிழ்ச்சி என்றால், நான் ஒரேமாதிரியான படங்களை எடுக்கவில்லை. நான் இதுவரை எடுத்திருக்கிற நான்கு படங்களுமே வெவ்வேறு நிலத்தில் வாழ்கிற மக்களின் பிரச்சினைகளைப் பேசுகிறது. ஆனால், நான் எதிர்பார்க்கிற விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையையும் அரசியலையும் பொதுவெளியில் கொண்டுவந்து, ‘இதுவும் இயல்பான வாழ்க்கைதான்’ என்று நினைக்கிற இடத்துக்கு கொண்டுவர வேண்டும் என்றுதான் பணியாற்றுகிறேன்.
இன்னமும் சினிமாவுக்குள் தீண்டாமை, சாதி ஆதிக்கம் இருக்கிறதே...
சினிமா கதைகளில் இருக்கிறது. அதைப் பற்றித்தான் நாம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். சமூகத்தில் இருப்பதுதான் சினிமாவிலும் பிரதிபலிக்கும். இந்த சமூகமே சாதி முரண்பாடுள்ள சமூகமாக இருக்கிறது. மத ரீதியாக, வர்க்க ரீதியாக நிறைய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. இப்படி ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கிற சமூகம், நிச்சயம் சினிமாவிலும் பிரதிபலிக்கும்.
சாதிய அடையாளத்துடன் சினிமாவில் இயங்கும்போது நீங்கள் சந்திக்கக்கூடிய சவால்கள் என்னென்ன?
சாதிய அடையாளம் என்பது இங்கு முக்கியமானது. ‘நான் இந்த சாதி தான்’ என ஏற்றுக்கொண்டு, அதைப் பெருமைப்படுத்தும் வகையில் வாழ்கிறேனா அல்லது ‘சாதியே இங்கு தேவையில்லை. சாதியை ஒழிக்க வேண்டும்’ என்று பேசுகிறேனா எனப் பார்க்க வேண்டும். ‘நான் யார்?’ என்பதில் சினிமாவில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தது எனப் புரிந்துகொள்ள முடியவில்லை. நிறைய விஷயங்களைப் பேசவும் சொல்லவும் முடியாது.
இந்த மாதிரியான ஒரு பிரச்சினை இருக்கிறதா? நான் சாதி பற்றி சொன்னதற்காக எனக்கு ஏதாவது பிரச்சினை வந்ததா? என்றால், இன்றுவரைக்கும் வரவில்லை. காரணம், நான் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறேன். அதனால், எனக்கு அந்த மாதிரியான பிரச்சினைகள் வரவில்லை என நினைக்கிறேன். ஒருவேளை என்னுடைய படைப்புகள் நிராகரிக்கப்படும்போது, அடுத்த படைப்புக்காக நான் தேடும்போது, அந்த இடத்தில் அதைப்பற்றித் தெரிந்து கொள்ளலாம். தற்போது என்னுடைய படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படுவதால், வேறு வழியே இல்லாமல் இங்கு எதுவுமே நிகழவில்லை. ஒருவேளை படைப்புகளை ஏற்றுக் கொள்ளாமல் போனால், அதற்கான எதிர்வினையைத் தெரிவிக்கலாம்.
நான் சாதியைப் பற்றிப் பேசுவதால், சமூகத்தில் ஒரு விவாதம் நிகழ்கிறதா எனப் பார்க்கிறோம், அதை நோக்கித்தான் நகர்கிறோம். சின்ன வயதில் இருந்தே இந்த சாதி சமூகத்தில் பிறந்து, அதற்குள் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால், இது பழகிப்போன ஒன்று. இதை பெரிய விஷயமாகவும் நான் நினைக்கவில்லை.
சினிமாவால், சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறீர்களா?
அது ஒரு சதவீத நம்பிக்கை தான், பெரிதாக இல்லை. மாற்றத்தை உருவாக்குகிற சினிமாவை நான் எடுத்ததே கிடையாது. குறைந்தபட்சம் ‘இந்த மாதிரி ஒரு வாழ்க்கை இருக்கிறது’ என தன்னம்பிக்கை கொடுக்கும் சினிமாவைத்தான் எடுத்திருக்கிறேன். விளிம்புநிலை மக்கள் அதிகாரமற்றவர்கள், கலாச்சாரமற்றவர்கள், ஒழுங்கீனமற்றவர்கள், அழுக்கானவர்கள் எனத் தொடர்ந்து சினிமாவில் காட்டப்பட்டு வருகின்றனர். ஆனால், ‘நாங்கள் அப்படியெல்லாம் கிடையாது. இந்த மாதிரியான வாழ்க்கைச் சூழலில் தான் நாங்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்’ என்பதை உணர்த்துவதுதான் என் படங்களின் நோக்கம்.
வறுமை என்பது எல்லா இடங்களிலும் இருக்கிறது. பாரதிராஜா காட்டாததை விடவா ஒரு வறுமை இருக்கப் போகிறது? ‘கருத்தம்மா’ படத்தில் வருகிற அந்தப் பாடல் அற்புதமாக இருக்கும். அந்த வறுமையை மட்டுமே வைத்து இவர்கள் இழிவானவர்கள் என்று சொல்லக்கூடிய நிலை இருக்கக்கூடாது. அத்துடன், எனக்கான நிலம், மொழி பற்றியும் பேசவேண்டும் என்று நினைத்தேன். அப்படிப் பேசுவதன் மூலமாக விவாதம் உருவாகி இருக்கிறது. பெரிய அளவில் மாற்றங்கள் உருவாகுமா? என்று கேட்டால், நிச்சயம் என்னிடம் அதற்கான பதில் இல்லை.
‘பராசக்தி’யைப் பார்த்து வளர்ந்த சமூகம்தான் நாம். ‘பராசக்தி’ படம் ஏற்படுத்திய பாதிப்புகள், அதை ஒட்டி நிகழ்ந்த விவாதம்... இதெல்லாம் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியதா என்றால், நிச்சயமாக இல்லை. தொடர்ந்து அதைப் பிடித்துக்கொண்டு பேசுகிற அரசியல் தலைவர்கள், மாற்றத்தை முன்நோக்கி நகர்த்த வேண்டும். மக்களும் படத்தைப் பார்த்துவிட்டு, தங்களுடைய பிரச்சினைகளைக் களைந்து மாற்றத்தை நோக்கி நகர வேண்டும் என்று விரும்புகிறோமே தவிர, மாற்றத்தை உண்டாக்குமா என்றெல்லாம் தெரியாது. ஆனால், குறைந்தபட்சம் கேள்விகளை உருவாக்க முடியும். அந்தக் கேள்விகள், விவாதமாக மாறும் என நம்புகிறேன்.
பாலியல் சீண்டல்கள், வன்முறைச் சம்பவங்கள் நிகழும்போது, எல்லாத்துக்கும் சினிமா தான் காரணம் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
சினிமா என்பதை முக்கியமான மீடியமாக நான் நினைக்கிறேன். சினிமாவை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது மிக முக்கியமானது. சினிமாவும் சமூகமும் வெவ்வேறானது கிடையாது. சினிமாவில் இருப்பவர்கள், சமூகத்தில் இருந்துதான் வந்திருக்கின்றனர். சினிமாவும் சமூகத்தில் இருந்துதான் பிறக்கிறது. அப்படிப் பிறக்கும் சினிமாவில் இருந்துதான் சமூகத்துக்கும் பிரதிபலிக்கிறது. இது ஒரு வட்டம் மாதிரி. மக்கள், கலைஞர்கள், சினிமா - இந்த மூன்றுக்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது. மக்களிடம் இருந்து கலைஞர்கள், கலைஞர்களிடம் இருந்து சினிமா, சினிமாவில் இருந்து மறுபடியும் மக்கள் என்றுதான் இந்த வட்டம் சுழல்கிறது.
தலித் சார்ந்த படமாகவே எடுத்தால், ஒரே பிராண்டுக்குள் சிக்கிக் கொள்வது போல் ஆகாதா?
படம் முழுக்க நான் தலித் மக்களை மட்டுமே காட்சிப்படுத்தவில்லை. எல்லா மக்களையும் தான் நான் காட்சிப்படுத்துகிறேன். இதை ஒரு பிராண்டு என்று சொல்ல முடியாது. இந்த ஸ்பேஸை யாரும் பேசவில்லை என்றபோது, அதைப்பற்றிப் பேசுவதற்காக வந்தவன் நான். அதனால்தான் தொடர்ந்து அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன். இன்னும் நிறைய பேர் வந்து பேசும்போது, வெவ்வேறு பகுதிகள், கதைகளை நோக்கி நான் நகரலாம். இன்னும் இந்த வடிவத்துக்கான தேவை தீர்ந்துவிடவில்லை. அதனால்தான் வெவ்வேறு தளங்களிலும் இதைப்பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago