2023-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி உலக நாயகன் கமல்ஹாசனின் ‘KH 233’ என தற்காலிக பெயரிடப்பட்ட புதிய படத்தின் அறிவிப்பை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் அதிகாரபூர்வமாக வெளியிட்டது. அந்தப் படத்தை எச்.வினோத் இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. சினிமா ரசிகர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
படத்தின் முன்தயாரிப்பு பணிகள் தொடங்கிவிட்டதாகவும், அப்படத்துக்காக கமல்ஹாசன் துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்கு சென்றதாகவும், வெளியான செய்திகள் கமல் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைவரது புருவங்களையும் உயர்த்திப் பார்க்க செய்திருந்தது. ஆனால், 2024-ம் ஆண்டு ஜனவரியில் இந்தப் படம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது, அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.
உலக நாயகனுக்கு இது புதிதல்ல. திரைத் துறையில் முதல் முயற்சிகளுக்கான சோதனைக் களமாகும் அவரது ஒவ்வொரு புதிய திரைப்பட அறிவிப்புகளையும், இந்திய திரையுலகமே உற்றுநோக்கும். ஏதோவொரு காரணத்தால், அறிவிக்கப்பட்ட பல திரைப்படங்கள் கைவிடப்பட்டுள்ளன. இருந்தாலும், கமல்ஹாசன் நடிப்பில் அறிவிக்கப்பட்டு தடைபட்ட படங்கள் குறித்த பட்டியலை பார்த்தபிறகு, உருவாகும் ஏமாற்றம் கலந்த ஏக்கம், தூக்கத்தை கலைத்து விடுகிறது.
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என கமல்ஹாசன் பணியாற்ற வேண்டிய படங்கள் கைவிடப்பட்டும் போதெல்லாம், இந்த திரையுலகம் நிச்சயம் ஏதோ ஒன்றை இழந்திருக்கிறது என்ற எண்ணமே மேலோங்குகிறது. அதைவிட, கைவிடப்பட்ட அல்லது கிடப்பில் போடப்பட்ட அந்த படங்களில் அவர் இணைந்து பணியாற்றியிருக்க வேண்டிய இயக்குநர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் அந்த திரைப்படங்கள் மீதான ஈர்ப்பை அதிகமாக்குகிறது.
1982-ல், 15 நாட்கள் படப்பிடிப்புக்குப் பின்னர் கிடப்பில் போடப்பட்ட திரைப்படம் ‘ராஜா என்னை மன்னித்துவிடு’. இயக்குநர் ருத்ரய்யா இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த திரைப்படம், அமைதியாக வாழ்ந்து வரும் ஓர் அண்ணனுக்கும், நக்சல் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட தம்பிக்கும் இடையிலான உறவுமுறை சிக்கல்களைப் பேசும் கதைகளத்தை கொண்டதாக இருந்துள்ளது.
தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில், இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்தப் படத்துக்காக, இளையராஜா இசையில் பாடலொன்றும் பதிவு செய்யப்பட்டது. இந்தப் படம் கிடப்பில் போடப்பட்டதால், 1985-ல் மோகன் நடிப்பில் உருவான ‘அன்பின் முகவரி’ திரைப்படத்தில் அந்தப் பாடல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. படத்தில் கமலின் அண்ணனாக அவரது மூத்த சகோதரர் சந்திரஹாசனும், கமலுக்கு ஜோடியாக சுமலதாவும் நடித்துள்ளனர். துரதிருஷ்டவசமாக, உலக நாயகனை 82-ல் நக்சல்பாரியாக பார்க்கும் வாய்ப்பு கிட்டாமல் போய்விட்டது.
1981-ம் ஆண்டு வெளியான ‘டிக் டிக் டிக்’ திரைப்படத்துக்குப் பிறகு, இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில், கமல்ஹாசன் - ராதா நடிப்பில் ‘டாப் டக்கர்’ என்ற படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி நடந்தன. ‘சிவப்பு சட்டை’ என சுருக்கமாக கூறப்பட்ட அந்தப் படம், இயக்குநர் பாரதிராஜாவுக்கு தான் ஏற்கெனவே கமல்ஹாசனை நாயகனாக வைத்து இயக்கிய 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தைப் போலவே இருப்பது போன்ற உணர்வைக் கொடுத்துள்ளது. இதனால், கிட்டத்தட்ட 5,000 அடிகள் வரை படமாக்கப்பட்ட அந்தத் திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது. பின்னர், இந்த காம்போ முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் 1985-ல் மீண்டும் இணைந்தது. அதில் உருவானதுதான் ‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படம்.
அதே 1980-களின் மத்தியில், இயக்குநர் முக்தா சீனிவாசன், இன்றுவரை உலகின் சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் தவிர்க்கமுடியாத இடத்தை தக்கவைத்திருக்கும் ‘காட் ஃபாதர்’ திரைப்படத்தை தழுவி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனை தந்தையாகவும், உலக நாயகனை மகனாகவும் நடிக்கவைத்து ஒரு படத்தை எடுக்கவிருந்தார். இந்தப் படத்துக்காக இருவருக்கும் முன்பணமும் கொடுக்கப்பட்டு, இருவரது கால்ஷீட்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்தத் திரைப்படத்தில், சிவாஜிக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கமலுக்கு வலுவான பாத்திரம் இல்லை என்ற எண்ணம் அவரது வழிகாட்டிகளில் ஒருவரான அனந்துவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தப் படம் கைவிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் மட்டும் வெளிவந்திருந்தால், நடிகர் திலகத்தையும், கலைஞானியையும் ‘தேவர் மகன்’ படத்துக்கு முன்பாகவே ரசிகர்கள் கண்டு களித்திருப்பர்.
அதேபோல, 1980-களின் பிற்பகுதியில் ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்காக இயக்குநர் மணிரத்னமும், கமல்ஹாசனும் இணைந்து பணியாற்றத் தொடங்கினர். இளையராஜா இசையில், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் உருவாகவிருந்த அந்த படத்தில், ஸ்ரீதேவி, ரேகா, சத்யராஜ், பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பதாக இருந்தது. படத்துக்கான முதல்கட்டப் பணிகளைத் தொடங்கிய நிலையில், போதிய நிதியின்மையால், இந்த கதையை படமாக்கும் திட்டத்தை கமலும், மணிரத்னமும் கைவிட்டனர். பல ஆண்டுகளுக்குப் பின்னர், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் இரண்டு பாகங்களாக வெளிவந்தது.
இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரன் இயக்கத்தில் கமல்ஹாசன் 1990-களின் தொடக்கத்தில், 'அதிவீர பாண்டியன்' என்ற திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தார். ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு இந்தப்படம் உருவாக்கப்பட இருந்தது. ஆனால், கமல்ஹாசன் 1992-ல் இயக்குநர் பரதனுடன் இணைந்து கிராமத்துப் பின்னணியைக் கதைக்களமாக கொண்ட ‘தேவர் மகன்’ படத்தில் பணியாற்றத் தொடங்கிவிட்டார். இதனால், அந்தப் படம் அத்துடன் நின்றுபோனது. ‘தேவர் மகன்’ படத்தில் வரும், சாந்துப் பொட்டு பாடலுக்கான ஐடியாவை, கொடுத்தது கங்கை அமரன் தானாம். ‘அதிவீர பாண்டியன்’ படத்தில் வைப்பதற்கான ஐடியாவாக அதை கமலிடம் கங்கை அமரன் கூறியிருந்தாராம். அதிவீரபாண்டியன் உருவாகியிருந்தால், ‘விருமாண்டி’க்கு முன்பாகவே, கமல் ஏறு தழுவியிருப்பார்.
மலையாளத்தில் 1993-ல் வெளிவந்த ‘அம்மாயனே சத்யம்’ படத்தின் ரீமேக்கை தமிழில் எடுக்க நினைத்தார் இயக்குநர் பாலசந்திர மேனன். கமல்ஹாசன், எஸ்பி பாலசுப்ரமணியம் இணைந்து நடிக்கவிருந்தனர். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் படமும் கைவிடப்பட்டது. அந்தப் படத்துக்கு ‘கண்டேன் சீதையை’ என்று பெயரிடப்பட்டிருந்தது.
தனது முன்னாள் மனைவி சரிகா இயக்கத்தில், கமல்ஹாசன் 'அமர காவியம்' என்றொரு படத்தில் நடிப்பதாக இருந்தார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நக்மா மற்றும் ஷில்பா ஷெட்டி நடிப்பதாக இருந்தது. அந்த நேரத்தில், திரைப்பட இயக்கம் தொடர்பான தொழில்நுட்பம் குறித்து மேலும் கற்பதற்காக கமல்ஹாசன் அமெரிக்கா சென்றார். அதன்பின்னர், அந்தப் படம் வளராமலே போனது.
இந்திய திரை உலகின் மறக்கமுடியாத நாட்களில் 1997 அக்.16-ம் ஒன்று. தனது கனவுப் படைப்பான ‘மருதநாயகம்’ திரைப்படத்தின் பூஜைக்காக, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை, கமல்ஹாசன் சென்னைக்கு அழைத்து வந்திருந்த தினம் அது. இப்படத்தின் மூலம் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த முகமது யூசுப் கானின் வரலாற்றை ஆவணப்படுத்த எத்தனித்திருந்தார் கமல்ஹாசன். பெரும் பொருட்செலவில் உருவாகவிருந்த இந்தப் படத்துக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார். அதேநேரம், படத்தை இணைந்து தயாரிக்க ஒப்புக்கொண்டிருந்த பிரிட்டிஷ் நிறுவனம் பின்வாங்கியதால், படப்பிடிப்பு பணிகள் பாதிக்கப்பட்டன.
காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட பணிகள், ஒருகட்டத்தில் நின்றுபோனது. கண்ணில் எடுத்து ஒத்திக்கொள்ள வேண்டிய ஓர் படைப்பு, பிலிம் ரோல் பெட்டிக்குள் இன்னும் மூச்சிரைத்தப்படி சுவாசித்துக் கொண்டிருக்கிறது. யூடியூபில் இன்றைக்கு காணக்கிடைக்கும் இந்த திரைப்படத்தின் அந்த ஒருசில காட்சிகள் போதும், மருதநாயகம் எப்படிப்பட்ட திரைப்படமாக இருந்திருக்கும் என்பதை அறிந்துகொள்வதற்கு.
பிரபல தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் 1990-களில் கமல்ஹாசனை வைத்து பான் இந்தியா திரைப்படம் எடுப்பதில் ஆர்வமாக இருந்தார். இதற்காக, பல இயக்குநர்களைச் சந்தித்துப் பேசினார். இயக்குநர் ஏ.எம்.நந்தகுமாரின் 'மார்க்கண்டேயன்' என்ற கதை குஞ்சுமோனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. ஆனால், அந்த நேரத்தில் அவருக்கு தொடர்ச்சியாக ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக மார்க்கண்டேயன் திரை வடிவம் பெறவில்லை.
மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் வந்த காமேஷ்வரன் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து 'லண்டனில் காமேஷ்வரன்' என்ற படத்தை கமல் இயக்க நினைத்தார். ஆனால், மருதநாயகம் படத்தின் பாதிப்பு மற்றும் ஹேராம் படத்துக்கான பணிகள் உள்ளிட்ட காரணங்களால், அது நடக்கவில்லை. பின்னர், கமல்ஹாசன் எழுதி, தயாரிக்க இயக்குநர் மவுலியின் இயக்கத்தில், லண்டனில் காமேஷ்வரன் படம் மாதவன் நடிப்பில் ‘நளதமயந்தி’ என்ற பெயரில் 2003-ம் ஆண்டில் வெளியானது.
இப்படியாக 80-களில் துவங்கி 90கள் வரை உலக நாயகனின் பல திரைப்படங்கள் நின்றுபோனது. 2000-ம் ஆண்டுக்குப் பிறகும் அந்த துரதிர்ஷ்டம் கலைஞானியை தொடரவே செய்கிறது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் - பிரீத்தி ஜிந்தா நடிப்பில் 'ரோபோ' படத்தின் அறிவிப்பு வெளியாகி, பட்டித்தொட்டியெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் படத்துக்கான போட்டோ ஷூட்டும் நடத்தப்பட்டு, போஸ்டர்களும் வெளியாகின. பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இந்தப்படம் கிடப்பில் போடப்பட்டது. பின்னர், ஷங்கரின் இயக்கத்தில், 'எந்திரன்' என்ற பெயரில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இப்படம் வெளியானது.
இந்தி மற்றும் தமிழில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் 'நரன்' என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது. இப்படத்தை பி.எல்.தேனப்பன் தயாரிக்கவிருந்தார். அமிதாப் பச்சன் முக்கிய பாத்திரத்தில் நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்தன. பின்னர் பொருளாதார பிரச்சினை காரணமாக இப்படம் நிறுத்தப்பட்டது. பின்னர் இந்த கூட்டணி 2002-ல் வெளிவந்த ‘பஞ்சதந்திரம்’ படத்தில் இணைந்து பணியாற்றியது.
‘தசாவதாரம்’ படத்துக்குப் பிறகு, கமல்ஹாசன் இயக்கத்தில் வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட திரைப்படம் ‘மர்மயோகி’. இந்தப் படத்துக்காக கமல் நீண்ட தாடியையும் வளர்த்து வந்தார். மேலும், படத்தில், மோகன்லால், வெங்கடேஷ், ஹேம மாலினி, த்ரிஷா, ஸ்ரேயா, சுஷ்மிதா சென் உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் படத்தை பிரமீட் சாய்மிரா தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது. 2008-ல் இப்படத்துக்கான போட்டோ ஷூட்டெல்லாம் ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்றது. அந்த ஆண்டு பிரமீட் சாய்மிரா நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்த ‘குசேலன்’ திரைப்படம் தோல்வியை தழுவியது. இதைத்தொடர்ந்து ‘மர்மயோகி’ திரைப்படத்தில் இருந்து அந்நிறுவனம் வெளியேறியதால், படம் கிடப்பில் போடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, 'தலைவன் இருக்கிறான்', மிஷ்கின் இயக்கத்தில் 'புத்தம் சரணம்', 'யாவரும் கேளீர்', 'பரமபதம்', 'அம்மா அப்பா விளையாட்டு', 'சபாஷ் நாயுடு', தேவர் மகன், வேட்டையாடு விளையாடு , பஞ்சதந்திரம், வசூல் ராஜா உள்ளிட்ட படங்களின் இரண்டாம் பாகங்கள், 'கேஜி', 'கிருஷ்ண லீலா' என ஏராளமான படங்கள் அறிவிப்பு வெளியாவதும், போட்டோ ஷூட் நடப்பதும், பொருளாதார பிரச்சினைகளால் கைவிடப்படுவதுமாக, உலக நாயகன் கேரியரில் வந்த வேகத்தடைகள் ஏராளம்.
ஆனால், அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதாது, படத்துக்குப் படம் பார்வையாளர்களுக்கு புதுப்புது அனுபவங்களை கடத்தும் அவரது முயற்சிகள் ஒருபோதும் தடைபட்டதே இல்லை. அடுத்த நொடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்களை அறிவதற்கு நம்மை அழைத்துச் செல்லும் கலைஞானி கமல்ஹாசனின் பாதையில் வந்த எல்லா தடைக்கற்களும் படிகற்களே!
நாயகன், மகாநதி, குணா, தேவர் மகன், விருமாண்டி, குருதிப்புனல், இந்தியன், ஆளவந்தான், அன்பே சிவம், தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் வந்த அவரது தோற்றங்கள் நினைவிலிருந்து எப்போதும் அகலாதவை. ஒருவேளை, கைவிடப்பட்ட அல்லது ஏதோ சில காரணங்களுக்காக நிறுத்தப்பட்ட மேலே குறிப்பிடப்பட்டுள்ள திரைப்படங்கள் எல்லாம் வெளிவந்திருந்தால், சினிமா என்று சொன்னாலே அது கமல்ஹாசன் பற்றிய நினைவாக மட்டுமே இருந்திருக்கும் என்பதே நிதர்சனம்.
இன்று: நவ.7 - கமல்ஹாசன் பிறந்தநாள்
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago