அமரன் Review: சிவகார்த்திகேயனின் ‘புதிய’ பாய்ச்சல் எப்படி?

By சல்மான்

2014-ம் ஆண்டு காஷ்மீரில் தீவிரவாதிகள் உடனான மோதலில் வீரமரணம் அடைந்த சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியாகியுள்ள படம் ‘அமரன்’.

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க, சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார் என்ற அறிவிப்பு வந்ததுமே இப்படத்துக்கான எதிர்பார்ப்பும் அதிகமானது. அது படத்தின் டிக்கெட் முன்பதிவிலும் எதிரொலித்ததை பார்க்க முடிந்தது. இத்தகைய எதிர்பார்ப்புடன் தீபாவளி ரேஸில் களமிறங்கிய ‘அமரன்’ அதை பூர்த்தி செய்ததா என்று பார்க்கலாம்.

படத்தின் ஒன்லைன் ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்ததுதான். சென்னையை அடுத்த தாம்பரத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன் (சிவகார்த்திகேயன்) என்ற இளைஞர், ராணுவத்தில் சேர்ந்து கேப்டன், பின்னர் மேஜர் என படிப்படியாக பெரிய பொறுப்புகளை அடைந்து காஷ்மீரில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட 44-வது ராஷ்டிரிய ரைபிள்ஸ் குழுவில் இணைகிறார். முன்னதாக தனது நீண்டநாள் காதலியான இந்துவின் (சாய் பல்லவி) பெற்றோரை சமாதானம் செய்து திருமணம் செய்து கொள்கிறார். இருவருக்கும் இடையேயான காதல் வாழ்க்கை, இன்னொரு பக்கம் காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான முகுந்தின் அதிரடிகள், இறுதியில் நாட்டைக் காக்க வீரமரணம். இதுதான் ‘அமரன்’ படத்தின் கதை.

பொதுவாக ‘பயோபிக்’ என்று வரும்போது படம் வெளியாவதற்கு முன்பே அதன் கதை ஆடியன்ஸுக்கு தெரிந்திருக்கும். அதுவும் இந்த சமூக வலைதள காலகட்டத்தில் ட்ரெய்லரை வைத்தே ‘டீகோடிங்’ என்ற பெயரில் ரசிகர்கள் அக்குவேறு ஆணிவேறாக கதையை பிரித்து மேய்ந்துவிடுவார்கள். அதையும் தாண்டி ஒரு பயோபிக்கை கையில் எடுத்துக் கொண்டு அதில் வெற்றி பெறவேண்டும் என்றால் அதற்கு ரசிகர்களை கட்டிப் போடும் திரைக்கதையால் மட்டுமே முடியும். அந்த வகையில் தான் எடுத்துக் கொண்ட கதைக்களத்துக்கு நியாயம் செய்யும் ஒரு நேர்த்தியான திரைக்கதையுடன் களமிறங்கி இருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.

படத்தின் முதல் பாதி முழுவதுமே முகுந்த் - இந்து இடையேயான காதல் காட்சிகளைக் கொண்டே நகர்கிறது. அவை எந்த இடத்திலும் ஓவர் டோஸ் ஆகிவிடாதபடி சிறப்பாகவே எழுதப்பட்டிருக்கின்றன. படத்தின் ஆரம்பத்தில் சாய் பல்லவியின் அறிமுகக் காட்சி தொடங்கி கேரளாவில் சாய் பல்லவி வீட்டுக்கு சிவகார்த்திகேயன் வந்து அவரது பெற்றோரை சமாதானப்படுத்தும் காட்சிகள் வரை ‘காதல்’ காட்சிகள் ஈர்க்கின்றன. இது ‘போர்’ தொடர்பான படத்தைத் தாண்டி ஒரு ‘காதல்’ படம் என்று படக்குழு விளம்பரப்படுத்தியதற்கான நியாயத்தை இந்த காட்சிகளில் உணர முடிகிறது. படத்தின் பலமே இவைதான் என்று சொல்லக்கூடிய அளவுக்கு நேர்த்தி.

சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் நிச்சயம் ஒரு புதிய பாய்ச்சல் என்று சொல்லலாம். இதற்கு முன்பும் அவர் சில சீரியஸ் கதாபாத்திரங்களை பரிசோதனை முயற்சியாக செய்திருந்தாலும், இதில் அவரின் நடிப்பில் வெளிப்படும் முதிர்ச்சி குறிப்பிடத்தக்கது. உடல் ரீதியாகவும் நடிப்பிலும் அவர் காட்டியிருக்கும் புதிய பரிணாமம் வியப்பை தருகிறது. ஹீரோவை விடவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் சாய் பல்லவிக்கு. முகுந்தின் மனைவி இந்து ரெபக்கா வர்கீஸ் என்றால் இனி சாய் பல்லவியின் முகம்தான் நினைவுக்கு வரும் என்ற அளவுக்கு வெகு சிறப்பான நடிப்பு.

பொதுவாக இப்போதெல்லாம் பெரிய பேனர்களில் இருந்து வெளியாகும் படங்களில் இருக்கும் பெரிய பிரச்சினையே ஸ்டார் வேல்யூவுக்காக ஒவ்வொரு மொழியிலிருந்து ஒரு நடிகரை போட்டு, அவர்களும் வாங்கிய சம்பளத்தை விட ஓவர் ஆக்டிங் செய்து பாடாய் படுத்தி விடுவார்கள். அப்படியான எந்த ரிஸ்க்கையும் எடுக்காமல் இருந்ததற்கே படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசனையும், இயக்குநரையும் மனதார பாராட்டலாம். சிவகார்த்திகேயனின் பெற்றோராக வருபவர்கள், சாய் பல்லவியின் தந்தை மற்றும் அண்ணன்கள், மகளாக நடித்திருக்கும் அந்த சிறுமி என அனைவருமே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தது ஆறுதல்.

படத்தின் பிரச்சினையே ராணுவம் தொடர்பான காட்சிகளில்தான் இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. காரணம் அவற்றில் எந்தவித டீட்டெய்லிங்-கும், நுணுக்கமும் இல்லை. காதல் காட்சிகளுக்காக மெனக்கெட்ட படக்குழு படத்தின் மையக்கருவான ராணுவம் தொடர்பான காட்சிகளில் கோட்டை விட்டு விட்டதோ என்று தோன்றுகிறது. கிட்டத்தட்ட இந்தியில் இதே கதைக்களத்துடன் வெளியான ‘ஷெர்ஷா’ திரைப்படமும் முதல் பாதி காதல் இரண்டாம் பாதி யுத்தம் என்று நகரக்கூடியது. ஆனால் அப்படத்தில் இறுதி 30 நிமிடங்கள் பார்ப்பவர்களை உணர்ச்சிப் பிழம்பாக்கி விடும். ஆனால் இங்கு ராணுவம் தொடர்பான காட்சிகள் எந்தவித ஆழமும் இன்றி அடுத்தடுத்து நகர்வது, எமோஷனல் தருணமாக இருக்க வேண்டிய கிளைமாக்ஸை நீர்த்துப் போக செய்து விட்டது. தீவிரவாதிகள் தொடர்பான காட்சிகளில் அவசியமே இல்லாமல் இருந்த விரிவான விளக்கங்கள், ராணுவம் தொடர்பான காட்சிகளில் இல்லாமல் போனது பெரும் குறை.

படத்தின் இன்னொரு ஹீரோ ஜி.வி.பிரகாஷ். பாடல்கள், பின்னணி இசை என எல்லா பக்கமும் புகுந்து விளையாடியுள்ளார். சதீஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு காதல் காட்சிகளில் ரம்மியமாகவும், ஆக்‌ஷன் காட்சிகளில் தீவிரத்தை உணர்த்துகிறது. அன்பறிவ்-ன் ஸ்டண்ட் காட்சிகள் சிறப்பு.

சொல்லப்படவேண்டிய ஒரு கதையை கையில் எடுத்துக் கொண்டு அதை முடிந்தளவு சமரசங்கள் செய்யாமல் திரையில் கொண்டு வந்த விதத்தில் ஜெயித்திருக்கிறார் இயக்குநர். எனினும் முதல் பாதி காதல் காட்சிகளில் இருந்த நேர்த்தியும் மெனக்கெடலும் இரண்டாம் பாதி ராணுவம் தொடர்பான காட்சிகளிலும் இருந்திருந்தால் இந்த ‘அமரன்’ இன்னும் கொண்டாடப்பட்டிருப்பார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

மேலும்