“படவேலைகளை முடக்குவது பெரும் இழப்பை ஏற்படுத்தும்” - தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்புக்கு நடிகர் சங்கம் கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: மறுஅறிவிப்பு வரும் வரை நவம்பர் 1 முதல் புதிய படங்களின் வேலைகளைத் தொடங்க வேண்டாம் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிவிப்புக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நடிகர் சங்கம் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிக்கையில், நவம்பர் 1 முதல் புதிய தமிழ்த் திரைப்படங்களுக்கான பணிகள் எதையும் தொடங்க வேண்டாம் என தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த தமிழ்த் திரைத் துறையிலும் மறுசீரமைப்பை ஏற்படுத்த பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வரும் காரணத்தால், 'புதிய படங்களின் படப்பிடிப்பு இல்லை' என்ற முந்தைய தீர்மானம் தளர்த்தப்பட்டு, கடந்த மாதம் கூட புதிய படங்களை தொடங்கி படப்பிடிப்புகளும் நடந்து வரும் நிலையில், தற்போது மீண்டும் படப்பிடிப்பு பணிகளை முடக்குவதாக அறிவிப்பு வெளியானது குழப்பத்தை விளைவிக்கிறது.

இந்த தன்னிச்சையான முடிவினால் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாகப் போவது தமிழ்த் திரைத்துறை தொழிலாளிகள் மட்டுமல்ல. முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களுக்கும் அது பெரும் இழப்பையே ஏற்படுத்தும் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டி உள்ளது.

அனைவரும் ஒன்றிணைந்து உரையாடல் மூலமாக ஒரு சிக்கலுக்கான ஒருமித்த தீர்வு காண முற்படும் வேளையில், அந்தத் தீர்வு எட்டப்படும் தொலைவில் இருக்கும் போது, அந்த முயற்சியை விழலுக்கு இறைத்த நீராக்கும் விதமாக, வேலைநிறுத்தம் போன்ற அவசியமற்ற தீவிரமான முடிவுகள், தீர்வு காணும் முயற்சிக்கு தனிப்பட்ட காரணங்களுக்காக சிலரால் இடப்படும் முட்டுக்கட்டையாகவே கருதப்படும்.

அத்தகைய செயல்பாட்டை தென்னிந்திய நடிகர் சங்கமும் ஒருபோதும் ஆதரிக்காது. அதேசமயம், தமிழ்த் திரைத்துறை தொழிலாளர்களின் நன்மைக்கான எந்த நடவடிக்கையிலும் ஒன்றிணைந்து, ஒற்றுமையாக செயலாற்ற தென்னிந்திய நடிகர் சங்கம் எப்போதுமே முன்னிலை வகித்துள்ளது. இனியும் அந்த நிலைப்பாடு தொடரும்.

ஆகவே, இந்த சந்தர்ப்பத்திலும் திரைத்துறை சிக்கல்களுக்கு தீர்வு காண்பதில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஒத்துழைப்பு முழுமையாக உண்டு, முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், மறுசீரமைப்புக்கும் மட்டுமே தொழிலாளர் வாழ்வுரிமையை ஒடுக்கவும், வேலைகளை முடக்கவும் அல்ல” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “திரைத்துறை சார்ந்த அனைத்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறுசீரமைப்பு ஏற்படுத்துவதற்கு ஏதுவாக தயாரிப்பில் இருக்கும் படங்களின் படப்பிடிப்பு மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும் நவம்பர் 1 முதல் புதிய படங்களைத் தொடங்க வேண்டாம் என்றும் ஏற்கெனவே கூறியிருந்தோம்.

தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் 24 சங்கங்களை உள்ளடக்கிய பெப்சியில் பல யூனியன்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளது. இன்னும் சில யூனியன்களிடம் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. முழுமையாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கிறது. இதனால் தயாரிப்பாளர் சங்கத்தின் மறுஅறிவிப்பு வரும் வரை புதிய படங்களின் வேலைகளைத் தொடங்க வேண்டாம் என்ற நிலைப்பாடு தொடர்கிறது” என்று கூறப்பட்டிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்