தீபாவளிக்கு வெளியாகும் படங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது, சிவகார்த்திகேயனின் ‘அமரன்’. காஷ்மீரில் வீரமரணமடைந்த தமிழக ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் ‘பயோபிக்’ இது. படத்துக்காக முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபக்காவாக மாறியிருக்கிறார், சாய் பல்லவி. காதலும் காஷ்மீரில் ஆக்ஷனும் என மிரட்டுகிறது படத்தின் டிரெய்லர். படம் பற்றி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியிடம் பேசினோம்.
ஷிவ் அரூர் எழுதிய ‘இண்டியா’ஸ் மோஸ்ட் ஃபியர்லஸ்’ புத்தகம்தான் ‘அமரன்’ உருவாகக் காரணமா?
ஆமா. சோனி பிக்சர்ஸ் அந்தப் புத்தகத்தோட உரிமையை வாங்கி வச்சிருந்தாங்க. வீரமரணமடைந்த சில இராணுவ வீரர்களோட தீரமான போர் சம்பவங்களை உள்ளடக்கிய டாக்குமென்ட் அது. ‘அதுல ஒரு தமிழ் வீரர் பற்றி, 11 பக்கத்துல ஒரு பதிவு இருக்கு. அவர் பற்றி தமிழ் அல்லது தெலுங்குல படம் பண்ணலாம்னு சோனி நிறுவனம் நினைக்குது’ன்னு எனக்குச் சொன்னாங்க. அது மேஜர் சரவணனா இருக்கும்னு நான் நினைச்சேன். அப்புறம்தான் அது முகுந்த் வரதராஜன்னு தெரியவந்தது. அவர் நடத்திய 2 ஆபரேஷன்கள் பற்றிய தகவல்கள் மட்டும் அந்தப் புத்தகத்துல இருந்தது. பயோபிக் படம் எடுக்கிறோம்னா, நிஜத்தை பிரதிபலிக்கணும், சுவாரஸியமான சினிமாவாகவும் வரணும். அதனால நிறைய ஆய்வு பண்ண வேண்டியிருந்தது. அதுமட்டுமில்லாம சில கற்பனையான விஷயங்களையும் சேர்த்தோம்.
கமல்ஹாசனுக்கும் இந்தப் படத்துக்கும் என்ன தொடர்பு?
» நஸ்ரியா - பசில் ஜோசப்பின் ‘சூக்ஷமதர்ஷினி’ படம் நவ. 22-ல் ரிலீஸ்!
» “இதுவரை என் ஊதியம் பற்றி மனைவி கேட்டதில்லை” - நடிகர் யஷ் நெகிழ்ச்சி பகிர்வு
முதல்ல சோனி பிக்சர்ஸ் என்னை ஒப்பந்தம் பண்ணினாங்க. கமல்ஹாசன் சாரை எனக்கு தெரியுங்கறதால ‘ஷோ ரன்னரா’கத்தான் அவர் முதல்ல வந்தார். அவர் வந்தா இது பெருமையான படமா இருக்கும்னு சோனி நினைச்சாங்க. பிறகு கமல் சாரும் சோனியும் இணைஞ்சு ‘ஜாயின்ட் வென்சர்' முறையில இதை தயாரிக்க முடிவு பண்ணினாங்க. இந்தக் கதைக்கு புதுமுகத்தை நடிக்க வச்சா நல்லாயிருக்கும்னு கமல் சார் சொன்னார். ஆனா, அது சரியா வருமான்னு யோசிச்சோம். நடிகர் சிவகார்த்திகேயனை, எனக்கு 10 வருஷத்துக்கு மேல தெரியும். அவரை நடிக்க வைக்கலாம்னு நான் நினைச்சேன். கதை சொன்னேன். கேட்டதுமே ஆர்வமாகி பண்றேன்னுட்டார்.
ஜாலியான காமெடி ஆக்ஷன் படங்கள் பண்ணிட்டு இருக்கிறவர் சிவகார்த்திகேயன். இந்த சீரியஸ் கதைக்குள்ள அவரை எப்படி மாற்றியிருக்கீங்க?
ரொம்ப பணிவா இருக்கிறதுதான் சிவகார்த்திகேயனோட இயல்பு. ஒரு கம்பீரமான ராணுவ வீரரா மனரீதியாகவே மாறுறதுக்கு ரொம்ப பயிற்சி எடுத்தார். நிஜமான ராணுவ பயிற்சிங்கறது ரொம்ப கடுமையா இருக்கும். அதை நம்ப வைக்கறதுக்காக உடலை மாற்றினார். இதுல அவருக்கு 3 வெவ்வேறு தோற்றம் இருக்கு. என்னை பொறுத்தவரை, நான் ‘ஸ்கிரிப்ட்’டை நம்பறவன். நல்லா எழுதப்பட்ட திரைக்கதை இருந்தா, அதுல எல்லா ‘டீட்டெய்லு’மே இருக்கும். முடிஞ்சவரைக்கும் சிவகார்த்திகேயனுக்கு, அது எல்லாத்தையும் கொடுத்துட்டேன். அதனால அவருக்கே என்ன பண்ணணும்னு தெரியும். ரொம்ப மெனக்கெட்டிருக்கார். அவர் நடிப்புக்கும் நல்ல பெயர் கிடைக்கும்னு நினைக்கிறேன்.
சாய் பல்லவி எப்படி இந்த கேரக்டருக்கு பொருந்தியிருக்காங்க?
மேஜர் முகுந்த் வரதராஜனோட மனைவி, இந்து ரெபக்கா வர்கீஸ் கேரக்டருக்கு அவங்கதான் சரியா இருப்பாங்கன்னு நினைச்சோம். அருமையா நடிச்சிருக்காங்க. சாய் பல்லவியோட கேரக்டர் அறிமுக டீஸரை பார்த்துட்டு இந்து ரெபக்கா, எனக்கு மெசேஜ் அனுப்பி இருந்தாங்க. அதுல ‘இதுல என்னையே திரும்பிப் பார்க்கிறேன். பழைய நினைவுகள் வந்து மீண்டும் அதுக்குள்ள வாழற மாதிரி இருக்கு. இந்த ஒன்றரை நிமிட டீஸரே குறும்படம் போல இருக்கு, சாய் பல்லவிகிட்ட, நான் நன்றி சொன்னதா சொல்லிருங்க’ன்னு தெரிவிச்சிருந்தாங்க.
காஷ்மீர்ல படப்பிடிப்பை நடத்தி இருக்கீங்க… ராணுவ ஒத்துழைப்பு இருந்ததா?
இந்தக் கதைக்கு காஷ்மீர் எங்களுக்கு அவசியமா பட்டது. அதுக்காக பாதுகாப்பு துறையில நிறைய அனுமதி வாங்கினோம். அவங்களுக்கு ஸ்கிரிப்ட்டை முதல்ல அனுப்பி, அதுக்கு ஒப்புதல் கொடுத்து, அதுல வர்ற லொகேஷனை பார்க்க வச்சு, அப்புறம் ஷூட்டிங் நடத்தறதுக்கு நிறைய உதவிகள் பண்ணினாங்க. ராணுவத்தோட இணைஞ்சுதான் ஷூட் பண்ணியிருக்கோம். மேஜர் முகுந்த் பணியாற்றிய அதே இடத்தைதான் படத்துல அவர் அலுவலகமா காட்டியிருக்கோம். இந்தப் படத்தை அவங்க பெருமையா பார்க்கிறாங்க.
போர் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படமா?
இது போர் பற்றிய படம், யுத்தக்களத்துல நடக்கிற படம்னு நினைக்கி றாங்க. அப்படியில்லை. ஆனா அதுவும் இருக்கும். ஒரு ராணுவ வீரரோட வாழ்க்கை பயணம்தான் கதை. அதுல குடும்பம் இருக்கு, அவங்க எப்படி அந்த வாழ்க்கையை எடுத்துக்கிறாங்க, காஷ்மீருக்குன்னு ஒரு சூழ்நிலை இருக்கு. அதுல ராணுவத்தோட ரோல் என்ன? உள்ளூர் மக்கள் எப்படி நடந்துக்கிறாங்கன்னு கதை போகும். மேஜர் முகுந்த் வரதராஜன் எதையெல்லாம் கடந்து வந்தாரோ அதெல்லாம் படத்துல இருக்கும்.
‘அமரன்’ தான் இந்தப் படத்துக்கு எழுதப்பட்ட முதல் வார்த்தைன்னு சொல்லியிருந்தீங்க…
ஆமா. ‘அமரன்’ன்னா போர் வீரன், மரணமில்லாதவன்னு சொல்வோம். இந்தியில அமர் ஜவான் அப்படிங்கற வார்த்தை இருக்கு. மரணமில்லாத வீரன்னு சொல்வாங்க. இந்த வார்த்தையை ‘ஒர்க்கிங் டைட்டிலா’ வச்சுக்கலாம்னு நினைச்சுதான் ஆரம்பிச்சோம். அப்புறம் அதை மாற்ற முடியலை. பிறகு கார்த்திக் நடிச்ச ‘அமரன்’ படத்தை இயக்கிய ராஜேஷ்வர் சார்கிட்ட தலைப்புக்கு அனுமதி வாங்கி பயன்படுத்தி இருக்கோம். இந்தப் படத்துல ராகுல் போஸ், புவன் அரோரா, கீதா கைலாசம் முக்கியமான வேடங்கள்ல நடிச்சிருக்காங்க. நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்தி இருக்கோம். சாய் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். அவருக்கு இதுதான் முதல் படம். அதே போல ஜி.வி.பிரகாஷ்குமார் இசையும் அருமையா வந்திருக்கு.
முக்கிய செய்திகள்
சினிமா
40 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago