பெரியாருக்கு சினிமா பிடிக்காது. ‘சினிமா இந்த நாட்டைப் பிடித்த நோய்’ என்று சாடியுள்ளார். அப்படிப்பட்ட பெரியார் ஒரு சினிமாவின் வெற்றி விழாவுக்கு வந்து அதில் பங்காற்றிய கலைஞர்களுக்கு தன் கையாலேயே விருது வழங்கி கவுரவித்தார். அந்தப் படம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நடித்த ‘சூரியகாந்தி’. அந்தப் படத்தை இயக்கி, பட விழாவுக்கு பெரியாரை வரவழைத்தவர் மறைந்த முக்தா சீனிவாசன்!
‘சூரியகாந்தி’ பட விழாவில் பெரியார் கலந்து கொள்ள சம்மதித்ததற்கு காரணம் உண்டு. சமூகத்தில் எல்லாத் துறைகளிலுமே, குறிப்பாக சினிமா துறையில் ஆணாதிக்கம் அதிகம். படங்கள் உருவாக்கத்தில் மட்டுமல்ல, கதைக்களமே நாயகனை சுற்றிதான் அமைந்திருக்கும். அதுவும் 45 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும்? அந்த காலகட்டத்தில் 1973-ல் வெளியான ‘சூரியகாந்தி’ திரைப்படம் நாயகியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.
வேலைக்கு சென்று அதிகம் சம்பாதிக்கும் மனைவி, தாழ்வு மனப்பான்மை கொண்ட கணவனால் சந்திக்கும் பிரச்சினைகளை எதிர்கொண்டு நிமிர்ந்து நின்று வெற்றி பெறுவதுதான் கதை. ‘பெண்களுக்கு சமூக விடுதலை வேண்டுமானால் அவர்களுக்கு பொருளாதார விடுதலை வேண்டும்’ என்று குரல் கொடுத்த பெரியார், பெண்ணுரிமையை வலியுறுத்தும் ‘சூரியகாந்தி’ பட விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார் முக்தா சீனிவாசன். பெரியாரை சந்தித்து ‘சூரியகாந்தி’ படத்தின் கதையை சொன்னார். கதையைக் கேட்ட பெரியாருக்கு அது பிடித்துப் போகவே விழாவில் கலந்து கொள்ள சம்மதித்தார். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி தலைமையில் நடந்த விழாவில், ஜெயலலிதா, முத்துராமன், முக்தா சீனிவாசன் உட்பட படத்தில் பங்களிப்பு செய்த கலைஞர்களுக்கு விருது வழங்கி பெருமைப்படுத்தினார் பெரியார். அவர் கலந்து கொண்ட ஒரே சினிமா விழா இதுதான்!
ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட்டாக இருந்த முக்தா சீனிவாசன், கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்டபோது கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். சிறை யில் கம்யூனிஸ்ட்களுக்கும் சிறைக்காவலர்களுக்கும் தகராறு ஏற்பட்டு கலவரமானது. போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
ஒரு மரத்துக்குப் பின்னால் மறைந்து நின்றதால் முக்தா சீனிவாசன் தப்பினார். அந்த சமயத்தில் மாடர்ன் தியேட்டர்ஸில் டைப்பிஸ்டாக இருந்த அவரது அண்ணன் ராமசாமி, தங்கள் குடும்ப நிலையையும் தம்பியின் நிலையையும் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவன உரிமையாளர் டி.ஆர்.சுந்தரத்திடம் சொல்லி வருத்தப்பட்டார். டி.ஆர். சுந்தரம் தனது செல்வாக்கால் முக்தா சீனிவாசனை சிறையில் இருந்து விடுவித்து தன்னுடன் அழைத்துச் சென்றார். மாடர்ன் தியேட்டர்ஸில் உதவி இயக்குநராக கலையுலக வாழ்க்கையைத் தொடங்கிய முக்தா சீனிவாசன் தனது திறமையாலும் உழைப்பாலும் இயக்குநராக உயர்ந்தார். அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் முகாம், சிவாஜி கணேசன் முகாம் என்று சினிமாத்துறையில் ஆரோக்கியமான போட்டி நிலவியது. முக்தா சீனிவாசன் சிவாஜி முகாமைச் சேர்ந்தவர். அவரை வைத்து தனது அண்ணன் ராமசாமியின் தயாரிப்பில் நிறைகுடம், அருணோதயம், அன்பைத் தேடி, பரிட்சைக்கு நேரமாச்சு, இரு மேதைகள் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். சிவாஜி கணேசன் நடித்த ஒரு படத்தை முக்தா சீனிவாசன் இயக்கிக் கொண்டிருந்தார். சிவாஜி எப்போதுமே குறித்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வருபவர். முக்தா சீனிவாசனும் நேரம் தவறாமையை கடைபிடிப்பவர்தான். என்றாலும் ஒருநாள் படப்பிடிப்புக்கு தவிர்க்க முடியாத காரணத்தால் முக்தா சீனிவாசன் வருவதற்கு தாமதமாகிவிட்டது. வழக்கம்போல ஸ்டூடியோவுக்கு வந்த சிவாஜி, முக்தாவுக்காக காத்திருந்தார். உள்ளே சிவாஜி காத்திருப்பதை அறிந்த முக்தா, ஸ்டூடியோவுக்கு பின்புறமாகச் சென்று, தான் முன்னரே வந்துவிட்டதைப்போல, உள்ளேயிருந்து வந்து சிவாஜியைப் பார்த்து, ‘வாங்கண்ணே, எப்ப வந்தீங்க?’’ என்று வரவேற்றார். இந்த எளிமையும் தொழில் மீதான பயபக்தியும்தான் முக்தா சீனிவாசனை வெற்றிகரமான இயக்குநர் ஆக்கியது.
காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தாலும் கட்சி வேறுபாடு இல்லாமல் எல்லாரிடமும் நட்போடு பழகும் குணம் கொண்டவர் முக்தா சீனிவாசன். எம்.ஜி.ஆரை வைத்து அவர் படம் எடுக்கவில்லை. என்றாலும், எம்.ஜி.ஆர் நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் படங்களான மாடர்ன் தியேட்டர்ஸின் ‘மந்திரி குமாரி’ படத்திலும், கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரித்த ‘மதுரை வீரன்’ படத்திலும் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். எம்.ஜி.ஆருக்கும் முக்தா சீனிவாசன் மீது அன்பு உண்டு. பொங்கல் பண்டிகை நாளில் தன்னை பார்க்க வருவோருக்கு பணமும் உடைகளும் கொடுப்பது எம்.ஜி.ஆரின் வழக்கம். முக்தா சீனிவாசன் மீது கொண்டிருந்த அன்பால் அவருக்கு ஆண்டுதோறும் கதர் வேட்டி, சட்டைகளை எம்.ஜி.ஆர் அனுப்பி வைப்பார்.
சினிமாவும் சினிமாத்துறையும் எப்போதுமே பரபரப்பும் திருப்பங்களும் நிறைந்ததுதானே. முக்தா சீனிவாசனும் அப்படி ஒரு பரபரப்பை கிளப்பினார். 1975-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடித்த ‘இதயக்கனி’ படம் பிரம்மாண்ட வெற்றி பெற்று அதற்கான விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்.டி.ராமாராவ், இயக்குநர் கே.பாலச்சந்தர், சவுந்தரா கைலாசம் (மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தின் மாமியார்), சவுகார் ஜானகி, நடிகை ராதா சலுஜா, முக்தா சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அந்த விழாவில் ‘‘மற்ற நடிகர்களின் 25 படங்கள் பெறும் வசூலை எம்.ஜி.ஆர் நடித்த ஒரே படம் பெற்றுவிடுகிறது. ‘இதயக்கனி’ படம் அரசுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் (இப்போதைய மதிப்பில் பல கோடிகள்) வரி செலுத்தியுள்ளது. இதன்படி, சர்க்காருக்கு மிகச் சிறந்த நண்பராக இருப்பவர் எம்.ஜி.ஆர்தான்’’ என்று சிவாஜி கணேசன் முகாமைச் சேர்ந்த முக்தா சீனிவாசன் பேசியது அன்றைய திரையுலகில் பரபரப்பு செய்தியானது! 1979-ல் முதல்வர் எம்.ஜி.ஆர் வழிகாட்டுதலின்படி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை தொடங்கிய பெருமையும் முக்தா சீனிவாசனுக்கு உண்டு!
எம்.ஜி.ஆர் நடித்த ‘மந்திரி குமாரி’ படத்துக்கு கதை வசனம் கருணாநிதி. அந்தப் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய முக்தா சீனிவாசன், தனக்கு திரைக்கதை இலக்கணத்தை கற்றுக் கொடுத்த ஆசான் கருணாநிதி என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்தா சீனிவாசன் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். 1990-களின் ஆரம்பத்தில் ஒரு நூல் வெளியீட்டு விழா. நூலை கருணாநிதி வெளியிட்டார். அந்த நூலையும் நூலாசிரியரையும் வெகுவாகப் பாராட்டி புகழ்ந்தார். அவர் பேசும்போது, ‘‘இந்த நூலோடு (புத்தகம்) மட்டுமல்ல, அந்த நூலோடும் (பூணூல்) எனக்கு தொடர்பு உண்டு’’ என்று குறிப்பிட்டபோது விழா அரங்கமே சிரிப்பாலும் கரவொலியாலும் அதிர்ந்தது. கருணாநிதி குறிப்பிட்ட அந்த நூலின் ஆசிரியர் அமரர் முக்தா சீனிவாசன்!
படங்கள் உதவி : எஸ்.வி. ஜெயபாபு
முக்கிய செய்திகள்
சினிமா
32 mins ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago