‘அளந்து சிரிக்கணும் அமைதியா பேசணும்னுதான் விதி இருக்கு..!’ - பிரியா பவானி சங்கர் நேர்காணல்

By செ. ஏக்நாத்ராஜ்

ஜீவா-பிரியா பவானி சங்கர் நடித்திருக்கும் சயின்ஸ் பிக்‌ஷன் த்ரில்லர், ‘பிளாக்’. பொடென்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பாலசுப்ரமணி இயக்கி இருக்கிறார். வரும் 11-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் புரமோஷனில் பரபரப்பாக இருக்கும் பிரியா பவானி சங்கரிடம் பேசினோம். “நிறைய த்ரில்லர் கதைகளைப் பார்த்திருப்போம். அதுல இருந்து வேறுபட்ட படமாக இது இருக்கும். இந்தப் படத்தை புது முயற்சின்னும் சொல்லலாம். ‘டிமான்ட்டி காலனி’ ஷூட்டிங் நடந்த அதே நேரத்துலதான் இந்தப் படத்தோட ஷூட்டிங்கும் நடந்தது. படம் ஆரம்பிச்சு 5 நிமிஷத்துக்குப் பிறகு நானும் ஜீவாவும்தான் முழுவதும் வருவோம். கணவன்- மனைவியா நடிச்சிருக்கோம். ஒரு இரவுல நாங்க ரெண்டு பேரும் எதிர்கொள்கிற பிரச்சினைதான் கதை.

த்ரில்லர் கதைன்னா, இரவுல நடக்கிற மாதிரிதான் இருக்கும். இதுவும் அப்படித்தானா?

அப்படித்தான். ஒரே இரவில் நடக்கும் கதை. ராத்திரி ஆரம்பிச்சு காலையில முடியறது மாதிரி திரைக்கதை இருக்கும். முழு கதையும் சென்னையில தான்நடக்குது. அதனால ஊர் அடங்கினதுக்குப் பிறகு ஷூட்டிங்கை தொடங்கி விடிஞ்சதும் முடிச்சிருவோம். இரவு ஷூட்டிங், புது அனுபவமா இருந்தது.

ஜீவாவோட உங்களுக்கு இது 2 வது படம்…

முதல்ல ‘களத்தில் சந்திப்போம்’ படத்துல நடிச்சோம். அப்ப இருந்தே அவர் நண்பர். அவரை எல்லோருக்குமே பிடிக்கும். அவரை பிடிக்காதவங்க யாரும் இருக்க மாட்டாங்க. இந்தப் படத்துல மொத்த கதையும் எங்களைச் சுற்றிதான் நடக்கறதால, எங்களுக்குத்தான் காட்சிகள் அதிகம். அதனால ஜாலியா நடிச்சோம்.

புது இயக்குநர்கள் படத்துல நடிக்கும்போது, ஏதாவது கஷ்டத்தை உணர்றீங்களா?

நான் அறிமுகமானதே புது இயக்குநர் படத்துலதானே. ‘மேயாத மான்’ பண்ணும்போது ரத்னகுமார் அறிமுக இயக்குநர் தான். இன்றைக்கு புது இயக்குநர்கள் நிறைய திறமையோடும், சினிமா பற்றி நல்லா புரிஞ்சுகிட்டும் தெரிஞ்சுகிட்டும் வர்றாங்க. ஸ்கிரிப்டை நம்பிதான் நடிக்கப் போறோம். புது இயக்குநருக்கு ஏதாவது சிக்கல் இருக்குதுன்னா, மற்றவங்க அதை சரி பண்ணிடுவாங்க. அதனால புதியவர்கள் இயக்கத்துல நடிக்கிறதுல எந்த கஷ்டமும் இல்லை.

நாயகியை மையப்படுத்திய கதைகள் இப்ப அதிகமா வரத் தொடங்கியிருக்கு. உங்களுக்கு அப்படி ஏதும் வந்ததா?

ஒரு நாலு வருஷமா அப்படியான கதைகள் வந்துட்டுதான் இருக்கு. ஒரு பதினைஞ்சு வருஷம் அல்லது அதுக்கும் மேல சினிமாவுல நடிச்சு தங்களுக்குன்னு ஒரு மார்கெட் வச்சிருக்கிற ஹீரோயின்கள், நாயகியை மையப்படுத்திய ஒரு படத்துல நடிக்கிறதுக்கும் நாலு வருஷமா நடிச்சிட்டிருக்கிற ஒரு நடிகை பண்றதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அவங்க பண்றாங்க அப்படிங்கறதுக்காக நானும் அதுபோன்ற கதைகளை ஏத்துக்கிட்டா அது சரியா வராது. நான் ஒகேன்னு சொல்லி அதுல நடிச்சா எனக்கு சம்பளம் கிடைச்சிடும். ஆனா, ஒரு தயாரிப்பாளர், ஊர்ல இருக்கிற சொத்துகளை வித்துட்டு வந்து, காசு கொடுக்கிறார்ங்கறதுக்காக அதை வாங்கிவச்சுகிட்டு நான் படம் பண்ணிடலாம். ஆனா, தியேட்டருக்கு யார் வருவாங்க? அதனால, தயாரிப்பாளரை நஷ்டப்படுத்துற மாதிரி பண்ணிடக் கூடாதுன்னு நினைக்கிறேன். ஆனா, நான் நடிச்சாதான் சரியா இருக்கும்னு ஒரு கதை வந்தா, அதுல கண்டிப்பா நடிப்பேன்.

‘கிரே கேரக்டர்’ல நடிக்க ஆசை இருக்குன்னு முன்னால ஒரு முறை சொல்லியிருக்கீங்க... ஏன் அப்படியொரு ஆசை?

நடிப்புல வெரைட்டி காட்ட முடியுமே! பொதுவா ஹீரோயின் கேரக்டர்னா, ஒரு லிமிட்டுக்கு மேல நீங்க ஒண்ணும் பண்ண முடியாது. ஏன்னா, நாயகியாக இருக்கிற பெண்கள் அளந்துதான் சிரிக்கணும், அமைதியாதான் இருக்கணும்னு விதி இங்க இருக்கு. அதே போல ஹீரோவுக்கும் சில விதிமுறைகள் இருக்கு. அவர் நீதி, நேர்மையை தவறக் கூடாதுங்கற மாதிரி. ஆனா, வில்லன்களுக்கு அந்த லிமிட் ஏதுமில்லை. நடிப்புல நிறைய பரிசோதனை முயற்சிகளை பண்ணலாம். பெண்கள் நெகட்டிவா பண்ற கேரக்டரை நம்ம இயக்குநர்கள் எப்பவாவதுதான் எழுதுவாங்க. அப்படியொன்னு வந்தா மிஸ் பண்ணக் கூடாதுன்னு நினைக்கிறேன்.

சினிமாவுல ஒவ்வொரு ஸ்டெப்பா வச்சுதான் இந்த இடத்துக்கு வந்திருக்கீங்க.. ‘இன்டஸ்ட்ரி’யை எப்படி கத்துக்கிட்டீங்க?

சினிமாவுல என்னை முன் நகர்த்திக் கூட்டிட்டு போறதுக்கோ, எனக்காக ஒரு விஷயம் பண்ணிக் கொடுக்கிறதுக்கோ இங்க யாருமில்லை. இது எனக்கு முதல் படத்துலயே தெரியும். இப்படி வளர்ந்து வர்றது எனக்கு பெருமையா இருக்கு. அதோட ‘செல்ஃப் மேடு’னு இங்க யாரும் இல்லை. யாராவது, ஏதாவது ஒரு வகையில சின்ன சின்னதாக உதவி பண்ணியிருப்பாங்க. அப்படி எனக்கும் பண்ணியிருக்காங்க.

‘தூத்தா’ங்கற வெப் தொடர்ல நடிச்சீங்களே… அதோட 2-ம் பாகம் வருதுன்னு சொன்னாங்க…

தெலுங்குல உருவான வெப் தொடர். அமேசான் பிரைம்ல வெளியாகி இந்தியா முழுவதுமே நல்லா ஹிட்டாச்சு. போன வருஷம் அமேசான் பிரைம்ல வெளியான தொடர்கள்ல அது டாப் 3-ல இருந்தது. அதுல என் நடிப்பும் பாராட்டப்பட்டது. அதோட தொடர்ச்சியா இரண்டாம் பாகம் உருவாகுது. நானும் இருக்கிறேன். அறிவிப்பு வெளியாகிடுச்சு. ஷூட்டிங் சீக்கிரமே தொடங்கப் போகுது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

மேலும்