“இந்தியாவின் ‘ஸ்பைக்லி’யாக மாற விரும்புகிறேன்” - பா.இரஞ்சித் சிறப்புப் பேட்டி

By சி.காவேரி மாணிக்கம்

கமர்ஷியல் சினிமாவில், பொழுதுபோக்கு அம்சங்கள் தாண்டி சமூக அரசியல் பேசுபவர் இயக்குநர் பா.இரஞ்சித். தன்னுடைய ‘நீலம் பண்பாட்டு மையம்’ மூலம் ‘பரியேறும் பெருமாள்’ படத்தைத் தயாரிப்பதோடு, ‘காஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்’ போன்ற நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். சமூகம், அரசியல் குறித்து அவர் ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி...

தலித் அரசியலைத் தாண்டி, தமிழக மக்கள் நலன் சார்ந்து என்ன செய்ய திட்டம்?

தலித் அரசியலே தமிழக மக்களுக்கான நலன் தான். தமிழர்கள் வேறு, தமிழகத்தில் இருக்கிற தலித்துகள் வேறு கிடையாது. எல்லாருமே தமிழர்கள் தான். தமிழர்களுடைய அடிப்படைப் பிரச்சினையாக நான் சாதியைப் பார்க்கிறேன். சாதியின் முரண்களைக் குறைப்பதன் மூலமாக, சாதி ஒழிப்பை நிகழ்த்துவதன் மூலமாக, சாதி ரீதியாக நாம் பிளவுபடுவதைத் தடுப்பதன் மூலமாக நாம் தமிழர்களாக மிகப்பெரிய தமிழ் அரசியலை நோக்கி நகர முடியும் என்பது முக்கியமான விஷயம். சாதி ரீதியாக நமக்குள் இவ்வளவு பெரிய பிளவுகள் இருக்கும்போது, ஒற்றுமை என்பது வெறும் மாயையாகத்தான் இருக்கும். ஒற்றுமையை உருவாக்குவதற்கு அடிப்படை சாதி தான். இதுவே தமிழர்களின் நலனைச் சார்ந்தது தான். தமிழர்களுக்குள் இருக்கிற சாதி மனப்பான்மையை நாம் எப்படி ஒழிக்கலாம் என்ற தமிழர்களின் பிரச்சினையைத்தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன்.

உங்களைச் சுற்றி நிறைய இளைஞர்கள் கூடி வருகிறார்கள். அவர்களின் எழுச்சியை என்னவாக மாற்றப் போகிறீர்கள்?

அவர்கள் அரசியல் விழிப்புணர்வு அடைய வேண்டும் என விருப்பப்படுகிறேன். நிறைய போராட்டங்கள் இங்கு நடைபெறுகின்றன. ஒவ்வொரு முறையும் ஒரு சூழ்நிலைக்கான வெளிப்பாடாகத்தான் போராடுகிறோம். இப்படி ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்றுக்காகப் போராடிவிட்டு, பிறகு மறந்து விடுகிறோம். அப்படி இல்லாமல், சமூக விழிப்புணர்வு கொண்ட இளைஞர்களை உருவாக்க வேண்டும்.

‘தான் யார்? என்ன மாதிரியான சமூக சிக்கல்களுக்குள் நாம் வாழ்கிறோம்? தனிமனிதர்கள் இரண்டு பேர் ஏன் இங்கு சமமாக இல்லை? இரண்டு பேருக்குமான முரண்கள் என்ன? தமிழர்களாக இருந்தாலும், நமக்குள் ஏன் இவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றன? சாதி, மத முரண்பாடுகள் இந்த அளவுக்கு இருக்க என்ன காரணம்? ஏன் நம்முடைய நிலமும் மொழியும் பறிக்கப்படுகிறது?’ போன்ற சமூக சிக்கல்களைப் புரிந்து கொள்கிற இளைஞர்களை உருவாக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வை என்னால் ஏற்படுத்த முடியும் என நம்புகிறேன். என்னைப் பின்தொடர்பவர்களுக்கு நிச்சயம் அதை நான் சொல்லிக் கொடுப்பேன்.

விளிம்பு நிலை மக்களுக்கான தேசிய அளவிலான பிம்பமாக நீங்கள் மாறி வருவதை உணர்கிறீர்களா?

அப்படி எதுவும் நான் இன்னும் செய்துவிடவில்லை. 4 படம் எடுத்திருக்கிறேன், அவ்வளவுதான். என்னுடைய குரல், அம்பேத்கரை ஒட்டியிருக்கிறது. அம்பேத்கர் பேசாத அரசியலை நான் இன்னும் பேச முற்படவில்லை. ஆனால், இந்த நேரத்தில் தீவிரமாக அம்பேத்கரைப் பற்றிப் பேசுவார்கள். இன்றைக்கு இந்தியா முழுவதும் அம்பேத்கரை முன்னிறுத்திக் கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. மிகப்பெரிய முன்னெடுப்பு நிகழும்போது, அது தமிழகத்திலும் எதிரொலிக்கும். ஏற்கெனவே இங்கு மிகத் தீவிரமாகத்தான் அது இயங்கிக் கொண்டிருக்கிறது.

போராட்ட வடிவத்தை மாற்றியமைக்கும் உங்கள் உத்தி கவனிக்க வைக்கிறது. அரசியல் செயல்பாடுகள், தேர்தல் அரசியலுக்குள் எடுபடுமா?

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மிகப்பெரிய வெற்றியே, தன்னுடைய போராட்ட வடிவத்தை மாற்றியதுதான். திராவிட இயக்கங்கள் கலை, இலக்கியத்தைக் கைப்பற்றியதுதான் முக்கியமானது. ஏனென்றால், கலை, இலக்கியம் தான் திராவிட இயக்கங்களுக்கு முன்னால் பிராமணர்கள் கையில் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்ததுதான் திராவிட இயக்கத்தின் மிகப்பெரிய வெற்றி என நினைக்கிறேன். இன்றுவரைக்கும் அது தொடர்கிறது. எனவே, போராட்ட வடிவத்தை மாற்றுவது என்பது முக்கியமானதாகத்தான் நான் பார்க்கிறேன். பண்பாட்டுத் தளங்களில் மாற்றங்கள் உருவானால்தான், நம்மால் எளிதாக வெளிவர முடியும். நம்முடைய வாழ்க்கை என்பதே, பண்பாட்டுச் சூழலோடுதான் நாம் நெருக்கமாக இருக்கிறோம். பண்பாடு, கலாச்சாரம் என்பது இங்கு சாதியாகவும் மதமாகவும் இருக்கும்போது, அதற்குள் நாம் மாற்றத்தை உருவாக்க முயல வேண்டும்.

‘காஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ என தனியிசைக்கு தனிப்பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறீர்கள். அதன் அடுத்தகட்டம் என்னவாக இருக்கும்?

‘நீலம் பண்பாட்டு மையம்’ மூலமாக கலை, இலக்கியச் சூழலில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க வேண்டும் என நினைக்கிறேன். கலை என்பது மிக முக்கியமான கருவியாக எனக்குத் தோன்றுகிறது. கலை மட்டுமே தனிமனிதனுடன் எளிதாக உரையாடுகிற கருவி. அது ஒளி, ஒலி, பண்பாட்டுச் சூழலாக மாற்றத்தை உருவாக்கும் என நம்புகிறேன். ஆனால், அது மாஸ் புரொடக்‌ஷனாக இங்கு மாறவேண்டும். நான் ரொம்ப சிறியதாக ஆரம்பித்திருக்கிறேன். அது பெரியதாக விரிவடைய விரிவடைய... நிச்சயம் இளைஞர்களிடம் பெரிய அளவில் மாற்றத்தை உருவாக்கும் என நம்பிக்கை இருக்கிறது. அதை நோக்கிய முன்னெடுப்பைச் செய்யும் யோசனை இருக்கிறது.

திருமாவின் அரசியல் செயல்பாடு குறித்து உங்கள் பார்வை என்ன?

இந்திய அளவில் மிகத் தீவிரமாக தலித் கொள்கையை மிக அருமையாக முன்னெடுப்பவர் திருமாவளவன். இந்திய அளவில் தலித் கட்சிகள் எத்தனை இருக்கிறது என விரல்விட்டு எண்ணிவிடலாம். தென்னிந்தியாவில் இருக்கக்கூடிய மிகப்பெரிய தலித் கட்சி என்றால், அது விடுதலைச் சிறுத்தைகள் தான். தமிழகச் சூழலில் பாப்புலாரிட்டியை அடைந்த கட்சி. பூவை மூர்த்தியார் இருக்கும்போதெல்லாம், நாளிதழ்களில் தலித் பற்றிய செய்திகளே வராது. போராட்டம், மாநாடு என எந்த செய்தியுமே வராது. ஆனால், எல்லோருடைய இல்லங்களிலும் ஒளிபரப்பாகக் கூடிய தொலைக்காட்சிகளில் திருமாவின் குரல் ஒலித்தது. அதை முக்கியமான குரலாகப் பார்க்கிறோம். இங்கிருக்கும் ஆதிக்கத்துக்கு எதிராக மிகக் கம்பீரமாக ஒலித்த குரல். நிச்சயம் இந்தக் குரலின் வலிமை அதிகம்.

அமெரிக்கக் கறுப்பின மக்களின் விடுதலைக்காகத் திரைப்படங்கள் மூலமாகப் போராடியவர் ஸ்பைக்லி. ‘இந்தியாவின் ஸ்பைக்லி’ என உங்களைச் சொல்லலாமா?

ஸ்பைக்லி மிகத் தீவிரமான படங்களும் எடுத்திருக்கிறார், அதேசமயம் கமர்ஷியல் படங்களும் எடுத்திருக்கிறார். ஸ்பைக்லியை நான் பின்தொடர்கிறேனா அல்லது ஸ்பைக்லி மாதிரி நானா என்றெல்லாம் தெரியாது. அவர் எடுத்த ‘மால்கம் எக்ஸ்’ படமெல்லாம் ரொம்பக் காத்திரமாக இருக்கும். ஸ்பைக்லியாக மாற எனக்கு ஆசை தான். அதற்கான வாய்ப்பை நான் தான் உருவாக்க வேண்டும். நிச்சயமாக உருவாக்கி, அந்தக் கட்டத்துக்குப் போவேன். ஏனென்றால், கறுப்பர்களுடைய சமூக எழுச்சிதான், ஒட்டுமொத்த உலக சமுதாயத்தின் எழுச்சிக்கான முன்னுதாரணமாக நான் நினைக்கிறேன். கலை, இலக்கிய ரீதியாக இன்றைக்கு உலகத்தையே ஆண்டு கொண்டிருப்பவர்கள் கறுப்பர்கள் தான். அவர்களைத்தான் நான் பின்பற்றுகிறேன். ஸ்பைக்லியாக நான் மாற வேண்டுமென்றால், சமரசமற்ற சினிமாவை நோக்கி நான் நகர வேண்டும், நிச்சயமாக நகர்வேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்